October 2026

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் செய்கிறவரும் வாக்குத்தத்தத்தை பிள்ளைகளுக்கும் உரித்தாக்குகிறவருமாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துகள். (யாத். 3:16; 20:6 அப். 2:39)

'எழும்பும் புதிய தலைமுறைக்கு  சபையின் பொறுப்பு" என்பதே இம்மடலின் தலைப்பு.

அப்போஸ்தலர் 2:17 - 'கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்..."  

சபை துவக்கப்பட்டபோது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகச் சொல்லப்பட்ட விஷயம்: குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.  தீர்க்கதரிசனம் மற்றவர்களுக்கு பக்தி விருத்தியை உண்டாக்குகிறது. 1கொரிந்தியர் 14:3  பக்தி விருத்தி என்கிற சொல்லுக்கான கிரேக்க மூல சொல் oikodomeo (ஓய்கோடோமியோ); அதன் பொருள் "கட்டி எழுப்புதல்"  என்பதாகும். 

குமாரரை குமாரத்திகளை தீர்க்கதரிசனம் சொல்லவைப்பது,  பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றால், கட்டி எழுப்புகிறவர்களாக அவர்களை உருவாக்குவது என்று பொருள். 

ஆனால் இன்றைய நிலவரம் என்ன? நேபாளத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை 22 பேர் பலி, தலைநகர் முழுவதும் ஊரடங்கு, பல கட்டடங்கள் பொது சொத்துக்கள் உடைக்கப்பட்டன, பிரதமர் வீடு எரிக்கப்பட்டது, முன்னாள் பிரதமரின் மனைவி கொல்லப்பட்டார் மற்றும் முன்னாள் பிரதமர் தாக்கப்பட்டார்.

தமிழகத்தில் ஒரு சினிமா பிரபலம் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். முதல் மாநாட்டிலே லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடினார்கள்; அங்கு இருந்த நாற்காலிகள்  உடைக்கப்பட்டன. இரண்டாவது மாநாடு நடத்த முயன்றபோது, தமிழகத்திலிருந்து யாருமே நாற்காலியை கொடுப்பதற்கு முன்வரவில்லை. எனவே, பக்கத்து மாநிலத்திலிருந்து நாற்காலிகளை வரவழைக்கவேண்டியதாயிற்று. இருப்பவர்கள் சரியில்லை, நான்தான் சரி என்று புதிதாய் வந்திருக்கிறவரால், தன்னுடைய ஆதரவாளர்கள்  நாற்காலிகளை உடைப்பதைத் தடுக்கமுடியவில்லை. 

அயர்லாந்தில், அங்கு வாழும் ஆசிய மக்கள் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். காரணம், வெள்ளைக்கார இளைஞர்கள் ஆசியர்களைக் குறி வைத்துத் தாக்கியச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதே. அது உள்;ரோ, பக்கத்து நாடோ, ஐரோப்பாவோ இன்றைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் உடைக்கிறவர்களாக, தாக்குகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களை கட்டி எழுப்புகிறவர்களாக உருவாக்கும் பொறுப்பு சபைக்கு உண்டு. 

குடும்பத்திலும் இதை காண முடியும். ஒரு குடும்பத்திலே ஒரு வாலிபனை தாய் கண்டித்தார்கள். கோபப்பட்ட வாலிபன் வீட்டின் கதவை உடைத்துவிட்டான். அந்த வாலிபன் இரட்சிக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்டு ஊழியத்திலும் ஈடுபடுகிற வாலிபன் தான். 

பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இந்த தலைமுறையைக் கட்டி எழுப்புகிறவர்களாக உருவாக்குகிறவர்களாக எழுப்புவது தான். அதற்கு நேராகத் தான் சபை இந்த தலைமுறையை வழிநடத்தவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றாலே ஆடுவது, பாடுவது, பரவசம் ஆவது என்பதிலேயே இந்தத் தலைமுறையைக் கொண்டுபோகிறவர்கள், அவர்களுக்கு கேட்டையே விளைவிக்கிறார்கள். ஆராதனை அலை நல்லது, வரவேற்கக் கூடியது; ஆனால், அந்த அலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படவேண்டும். அந்த அலையில் சறுக்கி விளையாடுவதோடு விட்டுவிடக்கூடாது.

அப்போஸ்தலர் 7: 58:- அவனை நகரத்துக்கு புறம்பே தள்ளி, அவனை கல்லெறிந்தார்கள்: சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களை கழற்றி சவுல் எனப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.

சவுல் எனப்பட்ட பவுல் ஒரு வாலிபன். அவன் கொலைகாரனாக, சபையை துன்பப்படுத்துகிறவனாக, கிறிஸ்தவர்களை அடிக்கிறவனாக, சிறையில் தள்ளுகிறவனாக இருந்தான். அப்படிப்பட்டவன் கட்டி எழுப்புகிறவனாக மாற்றப்பட்டான். 

2கொரிந்தியர் 10:8:- 'மேலும் உங்களை நிர்மூலமாக்குகிறதற்கு அல்ல, உங்களை ஊன்றக் கட்டுவதற்கு கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை குறித்து, நான் இன்னும் சற்று அதிகமாய் மேன்மை பாராட்டினாலும் நான் வெட்கப்படுவது இல்லை."

உங்களை ஊன்றக் கட்டுவதற்கு கர்த்தர் எங்களுக்கு கொடுத்த அதிகாரம். சபையை இடித்துப் போடுகிறவனாக இருந்த சவுல் என்கிற பவுல், பின் நாட்களில், சபையை ஊன்றக் கட்டுகிறவனாய் மாறினான். இந்த மாற்றம் எப்படி வந்தது?

கிறிஸ்து அவனை சந்தித்தார். அப்போஸ்தலர் 9:5:- 'அதற்கு ஆண்டவரே நீர் யார் என்றான். அதற்கு கர்த்தர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம் என்றார்"

கர்த்தர் தன்னை பவுலுக்கு, நீ துன்பப்படுத்துகிற இயேசு, என்று  அறிமுகம் செய்து கொண்டார். ஒவ்வொருவருக்கும் தன்னை ஒவ்வொரு விதமாக ஆண்டவர் வெளிப்படுத்தினார்; இருக்கிறவராக இருக்கிறேன் என்றார், காண்கிற தேவனாக வெளிப்பட்டார், சர்வ வல்லவராக சந்தித்தார்; ஆனால், துன்பப்படுத்தப்பட்டவராக, அதுவும் பவுலால் துன்பப்படுத்தப்பட்டவராகத் தன்னை காட்டிக்கொள்கிறார். சரீரமாகிய சபை துன்பப்பட்டால், தலையாகிய கிறிஸ்துவுக்கும் அது துன்பம்தானே. சவுல் என்கிற வாலிபனை ஸ்தேவானின் பிரசங்கம் மாற்ற முடியவில்லை, ஸ்தேவானுடைய மன்னிக்கிற ஜெபம் மற்றும் இறுதி ஜெபம் மாற்ற முடியவில்லை. ஆனால், சபைக்கு வந்த துன்பம் பவுலை மாற்றியது. சபை துன்பப்பட்டதனால்தான் அது கிறிஸ்துவுக்குத் துன்பமாக மாறியது. ஆகவேதான,; அவர் துன்பப்படுத்தப்பட்ட இயேசுவாக தன்னை பவுலுக்கு வெளிப்படுத்தினார். பவுல் இடிக்கிறவனாக இருந்தவன்  கட்டி எழுப்புகிறவனாய் மாற்றப்பட்டான். இப்பொழுது சபைக்கு ஏற்பட்டிருக்கிற துன்பங்களுக்காய், பாடுகளுக்காய் மற்றும் உபத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம். ஏனென்றால், இதுதான் துன்பப்படுத்தப்பட்ட இயேசுவாக அவரை, பல இளம் தலைமுறையினருக்கு வெளிப்படுத்தும். அவர்கள் கட்டி எழுப்புகிறவர்களாக மாறிப் போவார்கள். ஆகவே, துன்பத்தைக் கண்டு பயப்படவேண்டாம். துன்பமே இல்லை, என்கிற கவர்ச்சியான உபதேசங்கள் இந்த தலைமுறையை காந்தம் போல் இழுக்கின்றன. உனக்கு எப்போதும் செழிப்புதான், நீ ராஜரீக ஆசாரியக் கூட்டம், ராஜரீகம் என்றால் அதற்கு ஆடம்பரம் என்பது போன்ற ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உபதேசங்கள், அப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்கள், அப்படிப்பட்ட பாடல்கள், அப்படிப்பட்ட சபைகள், காளான் போல எங்கும் பெருகிவிட்டன. உள்ளங்கையிலேயே மொபைல் போன் மூலமாக, இந்த உபதேசங்கள் எல்லாம் இந்தத் தலைமுறையைப் பிடித்து இழுக்கின்றன. ஆனால், இவை இந்தத் தலைமுறையை கட்டி எழுப்புகிறவர்களாக உருவாக்க முடியாது. சபைக்கு வருகிற துன்பங்கள் தான் அதை செய்ய முடியும்.

ஆகவே, இந்த ஒன்றிய ஆட்சி போய்விட்டால், துன்பமே இருக்காது, என்று எண்ணுவது சரியல்ல. இந்த கட்சி இப்போதைக்கு போவது போல் இல்லை; இனி வரப் போகிற துன்பங்களுக்காகவும் ஸ்தோத்திரம். தமிழ்நாட்டிலே துன்பங்கள் குறைவு, அவை ஒரு வேளை அதிகமாகிவிட்டால், அதற்காகவும் ஸ்தோத்திரம்.

கட்டி எழுப்புகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று  2கொரிந்தியர் 10 படம் பிடித்துக் காட்டுகிறது:-

வசனம் 1 முதலாவதாக, 'உங்கள் மேல் கண்டிப்பாயும்                                        இருக்கிற பவுலாகிய நான்.." கண்டிப்பு கட்டி எழுப்பும். 

வசனம் 2  அதை ஆமோதிக்கிறது. 'சிலரை குறித்து நான் கண்டிப்பாக                                         இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு..."

வசனம் 3    இரண்டாவதாக, 'மாம்சத்தின் படி                                                                                              போர்  செய்கிறவர்கள் அல்ல". 
 
வசனம் 4    எங்களுடைய போர் ஆயுதங்கள் மாம்சத்துக்கு                                           ஏற்றவைகளாய் இராமல் தேவ பலம் 
     உள்ளவைகளாய் இருக்கிறது"

அப்போதும் கிறிஸ்தவத்துக்கு அரசு அனுமதி இல்லை, சபை நடத்த அரசு அனுமதியில்லை, சுவிசேஷம் சொல்ல அரசு அனுமதி இல்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையைத்தான் சபை முதல் 300 ஆண்டுகள் சந்தித்தது. அனுமதி இல்லாத நிலை மட்டுமல்ல, ஊழியம் செய்தாலே, ஆண்டவரை ஆராதித்தாலே கைது, அடி, உதை, கொலை, சிறை மற்றும் புறக்கணிப்பு இவையெல்லாம் இருந்தன. ஆட்சி மாறவேண்டும் என்று ஜெபிக்க பவுல் சொல்லவில்லை. அரசாங்கம் நமக்கு அனுமதி கொடுக்க வேண்டும், அதற்காக நாம் மனு கொடுப்போம், அதற்காக நாம் ஒரு ஊர்வலம் போவோம், கூட்டத்தை கூட்டுவோம் என்று சொல்லவில்லை. நாம் மாம்சத்தின்படி போர் செய்கிறவர்கள் அல்ல.

மாம்சீக ஆயுதங்கள் நம் ஆயுதங்கள் அல்ல. தேவ பலமுள்ள ஆயுதங்கள் ஆவிக்குரிய ஆயுதங்கள். இந்த ஆவிக்குரிய ஆயுதங்கள்தான் மற்றவர்களை கட்டி எழுப்பும்.

மூன்றாவதாக, வசனம் 13:-  'நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்டாமல், உங்களிடம் வரைக்கும் வந்து எட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவு பிரமாணத்தின்படியே மேன்மை பாராட்டுகிறோம்"

வசனம் 15:- 'எங்கள் அளவை கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்"

ஒரு அளவுப் பிரமாணம் பவுலுக்கு இருந்தது. எது தன்னுடைய எல்லை? எந்த எல்லை வரை போகலாம்? போக வேண்டும், என்று அவன் அறிந்து இருந்தான். அது மற்றவர்களை கட்டி எழுப்பியது.

நான்காவது, வசனம் 18:- 'தன்னைத்தான் புகழ்கிறவன் உத்தமன் அல்ல: கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்"

புகழை நாடிப் போகவே இல்லை. புகழை நாடுகிறவனின் கட்டியெழுப்புகிற திறன் குறைந்து விடும். சில பட்டங்கள், சட்டப்பூர்வமாக, அரசுத் தொடர்பு போன்ற காரியங்களில் தேவைப்படுகிறது. ஒரு சபைக்கு பாஸ்டராக இருக்க, சிலருக்கு சில நேரங்களில் ரெவரென்ட் பட்டம் தேவைப்படுகிறது;பல பாஸ்டர்களுக்கு தலைவராய் இருக்கிறவர்களுக்கு, சில நேரங்களில், பிஷப் பட்டம் தேவைப்படுகிறது; ஒரு முதுகலை இறையியல் படிப்பு இருக்கிற வேதாகமக் கல்லூரியை நடத்துகிறவருக்கு, சில நேரங்களில் டாக்டர் பட்டம் தேவைப்படுகிறது;  அது தேவை என்கிற அளவில்தான், பயன்படவேண்டும். புகழுக்காக ஒரு பட்டத்தை பெறுவதும் கொடுப்பதும்  கட்டி எழுப்புகிற திறனை குறைத்து விடும். இன்னும் பல பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன, வாங்கப்படுகின்றன, விளம்பரங்கள் மனிதருக்குச் செய்யப்படுகின்றன. இவை எல்லாமே பிறரைக் கட்டி எழுப்புகிறத் திறனைக் குறைத்துவிடும் என்று பவுல் அறிந்திருந்தான்.

அப்போஸ்தலர் 2: 17 சொல்லுகிற இன்னொரு விஷயம்:-  'உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்."

தரிசனம் பெற்ற இளம் தலைமுறையினரை உருவாக்குவது சபையின் பொறுப்பு. ஆவியானவர் அதை செய்தாலும், சபை ஆவியானவரோடு இணைந்து கரம் கோர்த்து செயல்படாவிட்டால் அது நடக்காமல் போய்விடலாம்.

அதே சவுல் என்கிற வாலிபன் அப்போஸ்தலர் 26:19-ல்  பரம தரிசனத்தைப் பெற்றவனாய் உருவாகிவிடுகிறான். 

தரிசனத்திலே இரண்டு வகை உண்டு; ஒன்று வந்து போகிற தரிசனம், அது மின்னலைப் போல வந்து போகிறது. அப்படிப்பட்ட தரிசனங்களையும் பவுல் கண்டான். அப்போஸ்லர் 16-ல், ஒரு மக்கேதோனியன்  வந்து, 'எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டதாக ஒரு தரிசனம் கண்டான். இப்படிப்பட்ட தரிசனங்கள், மின்னலைப் போன்ற தரிசனங்கள். வந்து போகிற தரிசனங்கள். இவைகளும் தேவை, இவைகளும் பரிசுத்த ஆவியின் மொழிதான். ஆனால், கண்முன்னே நிலைத்து நிற்கிற, மலை போன்ற தரிசனங்கள்தான் பிரதானமானது.

 இந்த பரம தரிசனத்திலே அப்போஸ்தலர் 26:16- 18 வரை:-
  நான் என்ன செய்கிறேன்? என்ற வெளிப்பாடு
கர்த்தர் யார்? என்ற வெளிப்பாடு
  நான் என்ன ஆக வேண்டும்? என்கிற வெளிப்பாடு.
  நான் என்ன செய்ய வேண்டும்? என்கிற வெளிப்பாடு.
  இவைகளின் கலவை தான் பரம தரிசனம்.

தரிசனத்தின் முதல் பகுதி, நான் என்ன செய்கிறேன்? என்ற வெளிப்பாடு முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம், என்று கர்த்தர் சொன்னார் இந்த தலைமுறை முள்ளில் உதைத்து கொண்டிருக்கிற தலைமுறை. இன்றைய தலைமுறை தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாது இருக்கிறார்கள். அதை சமூக ஊடகத் தலைமுறை என்று கூட அழைக்கலாம். லைக்குகள்,  வியூக்கள், ரீல்கள் மற்றும் ஷாட்ஸ்கள்,  இன்ஸ்டாகிராம்  இவற்றைப் பிடித்துக்கொண்டு போகிற ஒரு தலைமுறை. Screen Addiction  எனப்படுகிற ஊடகத் திரைக்கு அடிமைப்பட்ட ஒரு தலைமுறை. ஊடகத்திலே நல்ல காரியங்களும் இருக்கின்றன; ஆனால், கெட்ட காரியங்கள் தான் அதிகம். தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகப் பண்ணப்படுகிற கோமாளித்தனங்கள், ஆபத்தான விஷயங்கள், சர்ச்சையைக் கிளப்புகிற விஷயங்கள் இவற்றில் இன்றைய தலைமுறை சிக்கியிருக்கிறது.

இரண்டாவதாக, நட்பு என்றால் என்னவென்று தெரியாத ஒரு மாயையிலே இன்றைய தலைமுறை சிக்கியிருக்கிறது. ஃபேஸ் புக் பிரெண்ட்ஸ் என்பது நட்பையே மிக துச்சமாக அழைக்கிற ஒரு காரியம். நட்பு  என்றால் என்னவென்று புரியாமல், கற்பின் முக்கியத்துவமும் புரியாமல் குழம்பிக் கிடக்கிறத் தலைமுறை.  

மூன்றாவதாக, இந்தத் தலைமுறைக்கு யாரை பின்பற்றவேண்டும்? என்று தெரியவில்லை; யார் கிடைத்தாலும் பின்பற்றுகிறார்கள். Follow என்பதும் சமூக ஊடகத்திலே மலிவாகப் போய்விட்டது. மலிவான அரசியல்வாதிகளையும், மோசமான ரவுடிகளையும், ஆபத்தான ஜாதி வாதிகளையும் மதவாதிகளையும், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாத வாண வேடிக்கை நடிகர்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றுகிற தலைமுறை.

நான்காவதாக, தன்னை யார் என்று தெரியவில்லை. Identity crisis உசளைளை என்று சொல்வார்கள்; அடையாளப் பிரச்சனை. சிலர் மிக மோசமாகக் குழம்பி, தான் ஆணா பெண்ணா? என்று கூட உணராமல் போய்விடுகிறார்கள். இவற்றிலிருந்து இவர்களை விடுவித்து, தெளிவுக்கு கொண்டு வர அனனியாக்கள் தேவை.

அப்போஸ்தலர்  ஒன்பதாம் அதிகாரத்தில் அனனியா என்கிற சீஷனை ஆண்டவர் பயன்படுத்தி பவுலுக்கு தரிசனத்தை கட்டளையிட்டார். 'அனனியா என்பவன் வந்து ஜெபிப்பான்" என்கிற தரிசனம் வந்து போகிற தரிசனம், மின்னல் தரிசனம். அனனியா வந்து ஜெபித்த பிறகு பவுல் பெற்ற தரிசனம், நிலையான தரிசனம், மலை போன்ற தரிசனம். அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொள்ள பயந்தபோது, அனனியா என்கிற சாதாரண சீஷன் பவுலை ஏற்றுக் கொண்டான். அப்படி பரந்த, விசாலமான புதிய தலைமுறையினரை ஏற்றுக் கொள்ளக்கூடிய இதயம் கொண்ட, சாதாரண விசுவாசிகள் சபைகளில் தேவை. 

தரிசனத்தின் இரண்டாம் பகுதி கர்த்தர் யார் என்கிற வெளிப்பாடு. 'கர்த்தர் தேவப்பிள்ளைகளின் துன்பத்திலே பங்கெடுக்கிறவர். சரீரம் துன்பப்பட்டால் தலையும் துன்பப்படும். கிறிஸ்து தலை" என்கிற வெளிப்பாடு.

தரிசனத்தின் மூன்றாவது பகுதி:- நான் என்ன ஆக வேண்டும்? என்கிற காரியம். 'உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துவதற்காக" (வசனம் 16) நான் ஊழியக்காரன், நான் சாட்சி, என்கிற வெளிப்பாடு.

தரிசனத்தின் கடைசி பகுதி:- நான் என்ன செய்ய வேண்டும்? யாருக்கு செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும? எங்கே செய்ய வேண்டும்? என்கிற விவரம்.

இத்தனை காரியங்கள் அடங்கிய வெளிப்பாடு தான் பரம தரிசனம். அந்த பரம தரிசனத்தை பவுல் நிறைவேற்றுவதற்கு பர்னபா பெரிய துணையாக மற்றும் தூணாக நின்றான். தன்னோடு சேர்த்துக்கொண்டு ஊழியத்தில் வாய்ப்புகளைக் கொடுத்து அவனை உற்சாகப்படுத்தினான். 

பவுலுக்கு அங்கீகாரத்தைக் கொடுத்து, அவனுக்கு ஆலோசனைகளைக் கொடுத்து, தரிசனம் நிறைவேற உதவி செய்தவர்கள் பேதுருவும் யோவானும். இன்றைக்கு தரிசனம் பெற்ற தலைமுறையை உருவாக்க பர்னபாக்களும் பேதுருக்களும் யோவான்களும் தேவை!

ஜென் இசட் தலைமுறையை - மறு
ஜென்ம வாழ்வினில் நடத்துவோர் தேவை
உடைக்க உத்வேகம் கொண்டோரை
படைப்பாளியாக உருவாக்குவோர் தேவை

பிரசங்கிக்கும் சபை ஜெபிக்கும் சபையை விட
பாடுபடும் சபையே பவுல்களை பிடிக்கும்
தாராள உள்ளம் துணிவு கொண்டோர்
சாதாரண அனனியாக்கள் செயல்பட்டால்
தரிசனத் தலைமுறையை தயாரித்து விடலாம்

பரிவுள்ள பர்னபாக்கள் பவுல்களை ஏற்றால்
சரியான வாய்ப்பு சந்ததிக்கு வாய்க்கும்
அங்கீகாரம் ஆலோசனை  பேதுருக்கள் அளித்தால்
அம்புகளாக அடுத்த தலைமுறை பாயும்.

                                                                            அன்பரின் அறுவடைப் பணியில் 
                                                                        அன்பு சகோதரன் ஆ. பிரைட் கென்னடி

SEP 2025

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  

நமக்கு முன்பாகப் புறப்பட்டு, 'முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலினால் நம்மை எழுப்புகிறவரும்" (2 சாமு. 5:24), 'நீ எங்கே இருக்கிறாய்?" (ஆதி. 3:9) என்றும், 'இங்கே உனக்கு என்ன காரியம்?" என்றும் (1 இராஜா. 19:9), 'நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றும் நமது இருப்பிடங்களை உணரச் செய்கிறவரும், நமது நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்துகிறவரும் (சங். 17:5), நமது ஆத்துமாவை மரணத்துக்கும், நமது கால்களை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவருமாகிய (சங். 56:13) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்! 'சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற" அவருக்குள் நம்மை பரிபூரணமுள்ளவர்களாகப் பாதுகாத்துவருகின்ற தேவனுக்கே (கொலோ. 2:10) எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக!

பிரியமானவர்களே! கிருபையினாலே ஆயுசுநாட்களை அவர் நமக்குக் கூட்டிக்கொடுத்தாலும், காரணங்களுடனேயே அவைகள் நமக்கு நீட்டித்தரப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தின்போதும், நம்முடைய வாழ்க்கைக்காக நாம் என்ன என்ன காரியங்களைச் செய்யவேண்டும்? என்ற எண்ணங்களால் மாத்திரமே நம்முடைய சிந்தையை முழுவதும் நிறைத்துவிட முற்படாமல், 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்" (மத். 6:33) என்ற வார்த்தைக்கு இணங்கி வாழ்க்கையைத் தொடங்குவோமென்றால், அந்த நாளின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் என்பது திண்ணம். இத்தகைய காரணங்களைப் புரிந்துகொண்டவர்களாக, தேவனுடைய இராஜ்யத்திற்கடுத்தவைகளால் நமது சிந்தைகளை நிரப்பி, நம்முடைய தேவைகளும் சந்திக்கப்பட தேவன் உதவிசெய்வாராக! 

தேவ இராஜ்யத்தின் தேவை அதிகரித்துவரும் இந்நாட்களில், நமக்கு நியமிக்கப்பட்டவைகளை நிறைவேற்ற பொறுமையோடு நாம் ஓடிக்கொண்டிருந்தாலும், தேவ இராஜ்யத்தின் சேவைக்காக எழும்பும் இளந்தலைமுறையினை உருவாக்கும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தபோது, 'நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" என்று ஏசாயாவின் மூலமாக கர்த்தர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்; பதிலாகப் பதினைந்து வருடங்களையும் கூடப் பெற்றுக்கொண்டான் (2 இராஜா. 20:1-3,6). ஆனால், அவன் செய்துவிட்ட தவறினிமித்தம், 'இதோ நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (2 இராஜா. 20:17,18) என்று சொல்லப்பட்டபோதோ, அச்செய்தி அவனை உடைக்கவில்லையே! அவனுடைய கண்களில் அது கண்ணீரை உண்டாக்கவில்லையே!! மாறாக, 'நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான"; என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே" (2இராஜா. 20:19) என்று எசேக்கியா கூறும் வார்த்தைகள், எத்தனை பரிதாபகரமானவை! 

இன்றைய நாட்களிலும், தன்னுடைய வாழ்க்கையை மாத்திரமே கருத்தில் கொண்டு, வருங்காலத்தினரைக் குறித்து கனவிலும் கரிசனையின்றி வாழும் மனிதர்கள் அநேகர். 'உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்" (லூக். 2:29) என்ற சந்தோஷமானதோர் முடிவினை, நம்முடைய உதடுகளினால் உச்சரிக்கும் பாக்கியத்தினை கர்த்தர் நமக்குத் தந்திருந்தாலும், வருங்காலத்தினருக்கு வருத்தங்களை வைத்துவிட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதிலும், வருங்காலத்தினரை தங்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக வடிவமைத்து விட்டுச் செல்லும் சிற்பிகளாக நாம் காணப்படவேண்டும் என்பதிலும் நம்முடைய பங்கு அதிகமல்லவா! 

  இன்றைய நாட்களில், கிறிஸ்தவ சமுதாயத்தில், இளம் தலைமுறையினரை உருவாக்கும் பொறுப்பு இரண்டு இடங்களில் விடப்பட்டிருக்கின்றது; ஒன்று வீடு; மற்றொன்று சபை. இவ்விரண்டும் பிரதானமானவைகள். இடையிடையே வந்துசெல்லும் கூட்டங்கள், முகாம்கள் போன்றவைகளில் இளைய தலைமுறையினர் சற்று தங்கி தாபரித்தாலும், தாகம் தீர்த்துக்கொண்டாலும், தங்கள் வாழ்க்கைக்கேற்ற காரியங்களைக் கற்றுக்கொண்டாலும், ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலேற்றிக்கொண்டாலும், தொடர்ந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யவிருக்கும் வாகனங்கள் வீடும் சபையுமே என்பதை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. எத்தனை தூரத்தில் அவர்கள் வாழ்ந்தாலும், இவ்விரு முனைகளோடு கூடிய தொடர்பு, அவர்களது வாழ்க்கையில் துரு ஏறாமல் பாதுகாத்துக்கொள்ள பெலம்பொருந்தியது. என்றபோதிலும், இவ்விரு துருவத்தினைத் தொடாமலும் மற்றும் தொடப்படாமலும், 'தன் இக்ஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்" (நீதி. 29:15) என்பதே சாலொமோனின் வார்த்தைகள். இன்றைய நாட்களில், வீட்டிற்கும் சபைக்கும் வெட்கத்தைக் கொண்டும் வரும் தலைமுறையினர், வீட்டாலும், சபையாலும் 'தன் இக்ஷ்டத்துக்கு விடப்பட்டவர்களே!" 

'ஏலியின் குமாரர் (ஆசாரியர்கள்) பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை" (1 சாமு. 1:12); இவர்கள் ஆசாரியனுடைய குமாரர்கள் என்பது ஆச்சரியம்! ஆலயத்தில் அவர்கள் பணிவிடையும் செய்துகொண்டிருந்தார்கள் என்பது அடுத்த ஆச்சரியம்!! இப்படிப்பட்ட இடத்தில் விடப்பட்டதாலேயே 'சாமுவேலும் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான்" (1 சாமு. 3:7); தேவனுடைய ஆலயத்தை நம்பி விடப்பட்ட பிள்ளையிடம், ஆசாரியனாகிய ஏலிகூட கர்த்தரைப் பற்றி கற்றுக்கொடுக்கவில்லையோ! ஏலியின் குமாரர்கள் ஆலயத்தில் செய்யும் அட்டகாசங்களைத்தான் ஒருவேளை அவன் பார்த்துக்கொண்டிருந்திருப்பானோ! ஆலயத்திலிருந்த ஆசாரியர்கள் அவமாய்ப் போனதினால்தான், தேவனே சாமுவேலோடு நேரடியாகப் பேசும் நிலை உண்டாயிற்றோ! பிரியமானவர்களே! நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக அவர் மாற்றியிருக்க (வெளி. 1:6), சாமுவேல் போன்ற இளந்தலைமுறையினருக்கு முன்பாக மாதியாக வாழ்ந்து, ஆண்டவரைக் காண்பிக்கும் பொறுப்பு நமக்கு அதிகம் உண்டல்லவா! 

கர்த்தருக்கென்று ஜனங்கள் கொண்டுவரும் பலியை தங்கள் கரங்களிலிருக்கும் ஆயுதங்களால் குத்தி பலவந்தமாய் எடுத்துக்கொள்வதையும் (1 சாமு. 2:13,14), ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே ஆசாரியர்களான ஏலியின் குமாரர் சயனிப்பதையும் (1 சாமு. 2:22) வருஷந்தோறும் சீலோவிற்கு கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படியாக வந்துசென்ற எல்க்கானாவும் அன்னாளும் அறியாமலிருந்திருப்பார்களோ! என்றபோதிலும், ஆசாரியர்களின் அக்கிரமங்களைப் பார்த்து அல்ல, ஆண்டவரை மாத்திரமே பார்த்தவர்களாக, குழந்தையாயிருந்த தங்களுடைய பிள்ளையை அவர்கள் ஆலயத்தில் கொண்டுவந்து விட்டது, தேவனுடைய ஆலயத்தின் மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் உச்சத்தை எத்தனையாய் வெளிப்படுத்துகின்றது.  ஆசாரியர்கள் எப்படிப்பட்டவர்களாகக் காணப்பட்டபோதிலும், 'சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்" (1 சாமு. 2:21) என்றுதானே வேதம் வர்ணிக்கின்றது. ஒருபுறம், தேவாலயத்தினைக் குறித்த ஜனங்களின் நம்பிக்கை இத்தகையதாயிருக்க, மறுபுறமோ, ஆசாரியர்களான ஏலியும் குமாரர்களும் தேவாலயத்திற்கு வந்துசெல்லும் ஜனங்கள் மீது பொறுப்பற்றவர்களாகக் காணப்படுவது எத்தனை வேதனையானது? 'நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்" (1 சாமு. 2:29) என்ற தேவனது வார்த்தைகள், தேவனை மாத்திரமல்ல, ஆலயத்திற்கு வந்துசெல்லும் மற்றவர்களைக் குறித்தும் ஏலி கரிசனையற்றிருந்ததற்கான காரணத்தைத் தெரியப்படுத்துகின்றதே! போரில் வீழ்ந்ததும், பிடரி முறிந்ததும்தானே அவர்களது முடிவாயிருந்தது. இவைகள் நம்மை எச்சரிக்கத்தானே எழுதப்பட்டிருக்கின்றன. 

இன்றைய நாட்களில், தன்னிடத்தில் வந்துசெல்லும் ஜனங்களின் உதவிகளையும் மற்றும் ஒத்தாசைகளையும் பெற்றுக்கொள்ள மாத்திரமல்ல, அவர்களுக்கு தான் செய்யவேண்டிய பொறுப்பினையும் கூடவே சபை உணர்ந்துகொள்ளுமென்றால், சபையின் சரித்திரம் வெற்றியாகத் தொடரும்.  சாமுவேலைப் போன்ற எத்தனையோ இளைஞர்களை, சபையினை நம்பி தேவன் கொடுத்திருக்கின்றாரே! தேவ சந்நிதிக்கு வந்து செல்லும் இவர்களைக் குறித்து பொறுப்பற்றதாகச் சபை காணப்படுமென்றால்,  தேவனை அவர்களுக்குக் காண்பிக்கத் தவறுமென்றால், பொறுப்பற்றோரை அகற்றி, சாமுவேலைப் போன்ற இளைஞர்களை தேவனே தெரிந்துகொண்டு பொறுப்பிலேற்றும் நாட்கள் தூரத்திலில்லை.

பொறுப்பற்றவர்களாகக் காணப்படுவோரின் நிலையும் மற்றும் எதிர்காலமும் இப்படியிருக்குமென்றால், எழுந்துவரும் புதிய தலைமுறையினரின் மீது பொறுப்பினை உணர்ந்து செயல்படத் துடிக்கும் சபை எப்படிச் செயல்படவேண்டும்? 

1. அசைக்க இயலாத அடித்தளம் : எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாச்சாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன் என்றும், போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது (1 கொரி. 3:10,11) என்றும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எழுதுகின்றார் பவுல்,  அவ்வாறே, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் (நீதி. 22:6) என்று தேவன் தனக்கு அருளிய ஞானத்தில் எழுதுகின்றார் சாலொமோன். இவ்வசனங்கள் கற்றுத்தரும் சத்தியம் என்ன? அசைக்க இயலாததோர் ஆழமான அஸ்திபாரம் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டுவிடவேண்டும் என்பதுதானே. இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கைக்கு இவ்வசனங்கள் எத்தனை முக்கியத்துவமானவைகள். 

கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவருடையவர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரை, எத்தனை உயரமான மற்றும் அலங்காரமான மேடைகளில் ஏற்றுகின்றோம் என்பதல்ல; மாறாக, எத்தனை ஆழமான ஆவிக்குரிய சத்தியங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றோம், அவைகளில் அவர்களை வழிநடத்துகின்றோம் மற்றும் நிலைத்திருக்கச் செய்கின்றோம் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அசையாததோர் அஸ்திபாரத்தை நாம் அமைத்துக்கொடுக்கமுடியும். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (மத். 7:25) என்று நாம் உருவாக்குபவர்களைக் குறித்து சொல்லப்படட்டும். 

2. வருங்காலத் தலைமுறைக்கு வாழுவோரே வழிகாட்டிகள் : சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே (கலா. 4:12) என்றும், நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1கொரி 11:1) என்றும், தன்னையே மாதிரியாக முன்வைத்து வாழுந்தலைமுறைக்கு வழிகாட்டுகின்றார் பவுல். ஆம், போதிப்பதாலும், கூட்டங்களையும் மற்றும் முகாம்களையும் நடத்துவதாலும் மாத்திரமல்ல, கூடவே, நம்மையே இத்தலைமுறைக்கு மாதிரியாக முன்னிறுத்தும் பொறுப்பும் நமக்கு உண்டல்லவா. நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி (தீத். 2:7) என்பதும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (1 தீமோ. 4:12) என்பதும்தானே உடன் ஊழியருக்கும் பவுல் கூறும் அறிவுரை. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது (மத். 5:16) என்று கிறிஸ்துவும் போதித்தாரே.     

மேலும், 'இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்" என்று போதித்ததைத் தொடர்ந்து, 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத். 18:5,6) என்ற இயேசு கிறிஸ்துவின் போதனை, எழுந்துவரும் இன்றைய இளையதலைமுறையினருக்கு முன், இடறலற்றவர்களாகவும் மற்றும் மாதிரிகளாகவும் நாம் வாழவேண்டியதின் முக்கியத்தை எத்தனையாக எடுத்துக்கூறுகின்றது. இத்தகைய தரத்திலிருந்து தவறிவிடாமல், தலைமுறையினரைத் தன் பக்கமாகத் தக்கவைத்து, தற்காக்கும் பொறுப்பு சபைக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாதே! 

3. அழைப்பையும் மற்றும் ஆவியின் வரங்களையும் பற்றிய அறிவு : இன்றைய நாட்களில், இரட்சிக்கப்பட்டபோதிலும், அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும், ஊழியர்கள் தங்கள் கரங்களை வைத்ததினால் வாழ்க்கையில் வரங்களைப் பெற்றுக்கொண்டபோதிலும், தங்களது அழைப்பையும் மற்றும் ஆவிக்குரிய வரங்களையும் பற்றிய தெளிவான அறிவு இல்லாததினால், எழுந்துவரும் இளந்தலைமுறையினர் அநேகரது வாழ்க்கையின் விளக்கு வெளிச்சம் தரவேண்டிய அளவிற்கு வெளிச்சம் தரவில்லை. நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன் (2 தீமோ. 1:6) என்று தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டி எழுதுகின்றார் பவுல்.  இத்தகைய நினைப்பூட்டுதலை, இளந்தலைமுறையினருக்குக் கொடுக்கவேண்டிய பொறுப்பும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது என்ன? என்பதை அறிந்துகொள்ளும் பொறுப்பும் சபைக்கு உண்டல்லவா!  வாலவயதினரின் சரீர பெலனை மாத்திரம் பயன்படுத்திக்கொள்வதாகச் சபை காணப்படாமல், அவர்களிடம் உள்ள உன்னதத்திற்கடுத்தவைகளையும் உணர்ந்து சபை பயன்படுத்தத் தொடங்குமென்றால், அவர்களால் சபையின் பெலன் பெருகுவது நிச்சயம். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங். 127:4,5). யோசேப்பைப் போன்ற, தானியேலைப் போன்ற, நெகேமியாவைப் போன்ற தேவ ஆவியைப் பெற்ற இளைஞர்கள் அந்நிய தேசத்திலும் அணைந்துபோகாமல் தேவனுக்காக நிற்கக்கூடியவர்களல்லவா!

4. உதவியாளர்களாக மாத்திரமல்ல உடன் ஊழியர்களாக :  இறுதியாக, இன்றைய நாட்களில் சபைக்கு இருக்கும் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்று, புதிதாக எழும்பிவரும் கிறிஸ்துவை அறிந்த இளம் தலைமுறையினரை சுவிசேஷகர்களாகவும், நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும், சபை மேய்ப்பர்களாகவும் மற்றும் பிற ஊழியங்களைச் செய்பவர்களாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தாலந்துகளையும் வரங்களையும் அறிந்தவர்களாக அவர்களை உருவாக்குவது. இத்தொடர்பணியில் சபை தவறுமென்றால், தொடர் பயணமே தடைபட்டுவிடக்கூடும்.  

மோசேயின் கரங்களில் யோசுவா என்னும் இளைஞன் கொடுக்கப்பட்டிருந்தான். மோசேக்கு உதவியாயிருந்தது மாத்திரமல்ல, கர்த்தர் செய்யும் அநேக அற்புதங்களையும் கண்கூடாகக் காணும் சிலாக்கியமும் யோசுவாவுக்குக் கிடைத்திருந்தது. மோசே மலை உச்சியிலே கோலைப் பிடித்துக்கொண்டு நின்றபோது அமலேக்கோடே யுத்தம் செய்தவன் யோசுவா (யாத்.17:9,10);, நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுக்கும்படியாக மோசேயை தேவன் அழைத்தபோது, மோசேயோடுகூட தேவ பர்வதத்தில் ஏறிப்போனவன் யோசுவா (யாத். 24:12,13), ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தவன் யோசுவா (யாத். 33:11), கானானை சுற்றிப் பார்த்த மனிதர்கள் துர்ச் செய்தியைப் பரம்பச் செய்தபோது தனது வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டவன் யோசுவா (எண். 14:6); இப்படிப்பட்ட யோசுவாவை, மோசேயின் ஓட்டத்தினைத் தொடரும்படியாக தேவன் தெரிந்துகொண்டாரே! இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட தொடரோட்டத்திற்கு ஆயத்தமாயிருக்கும் இளைஞர்களை ஊழியர்களாக தேவன் உயர்த்தக்கூடுமல்லவா! அத்தகைய வாலிபர்களை அடையாளம் கண்டுகொண்டு, தேவ இராஜ்யத்தின் பணிக்காக அவர்களை பயிற்றுவிப்பது எத்தனை அவசியமானது. இக்கடைசி நாட்களில், சபை இதனைப் புரிந்துகொள்ளுமென்றால், வாலிபர்கள் பலரை கிறிஸ்துவின் வீரர்களாக்கிவிடுமே! தேவ ஜனத்தை தொடர்ந்து வழிநடத்துபவர்களாகவும் அவர்களை மாற்றிவிடுமே! இயேசு கிறிஸ்து சீஷர்களிடத்தில் பணியினை ஒப்புவித்ததுபோல, பவுல் தீமோத்தேயு போன்ற உண்மையுள்ள மனிதர்களிடத்தில் ஊழியத்தை ஒப்புவித்ததைப் போல ஊழியர்கள் பலர் உருவாகவும் காரணமாகிவிடுமே! இத்தகைய பொறுப்பினை உணர்ந்து சபை செயல்படுமென்றால், 'தலைவர்களற்ற நிலையும், மேய்ப்பர்களற்ற நிலையும்" தேவ ஜனத்திற்கு உருவாகாது என்பது நிச்சயம். இதனைப் உணர்ந்துகொண்டவர்களாக வரும் நாட்களில் செயல்பட கர்த்தர் உதவிசெய்வாராக!  


முசுக்கொட்டை இரைச்சல் கேட்டு விட்டால் 

முன்னே அவர் புறப்பட்டு விட்டார் 

'என்ன காரியம் இங்கே' எனக் கேட்பதற்குள் 

எழுந்து செல்வது நம் கடமை அல்லவா


இக்கால இளைஞர்களை இக்ஷ்டத்துக்கு விட்டுவிட அல்ல

இராஜ்யத்தின் இராணுவத்தில் இணைப்பதுதானே நம் கடமை

அலங்கார மேடைகள் மாம்சத்துக்கு மகிழ்ச்சி தரலாம் - ஆனால்

ஆழமான சத்தியங்களே அவர்கள் ஆத்துமாவுக்கு அஸ்திபாரம்


வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாதிரிகள் நாம்

வருங்காலத் தலைமுறையை வடிவமைக்கும் சிற்பிகள் நாம்

உடனிருக்கும் தலைமுறையை ஊழியராய் உருவாக்கிடுவோம்

உன்னதத்தின் தலைமுறையாய் உலகத்தில் பரம்பச்செய்வோம் 



அன்பரின் அறுவடைப் பணியில் 

சகோ. P.J. கிருபாகரன்


 


 


August


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கி, பகலுக்குப் பகல் வார்த்தையைப் பொழியவும், இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கும்படிச் செய்தவருமாகிய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகள். 


தேவன் மனிதனோடு பேசுவது மாத்திரமல்ல, தானே தன்னுடைய விரல்களினால் எழுதிக்காட்டுபவர். யாத். 31:18-ன்படி, 'தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்". அவைகளை மோசே இஸ்ரவேல் புத்திரரின் அருவருப்பான ஆட்டத்தினைக் கண்டு உடைத்துப்போட்டா



லும், மீண்டும் அவைகளை எழுதிக்கொடுத்தார் (யாத். 34:1; உபா. 9:10). அவைகள் தேவ ஜனங்கள்
வாழும் வகையைக் கண்டுகொள்வதற்கு உதவியாகத்தரப்பட்டது.
அதேவிதமாக, தண்டனையாக அவர் பெல்ஷாத்சாரின் துணிகரமானக் காரியங்களை உணர்த்துவித்து, நியாயத்தீர்ப்பை எழுதிக் காட்டினார் (தானி. 5:5). அந்த எழுத்துகளை அநேகரால் வாசிக்கக்கூட இயலவில்லை. அது SMS-ஐப் போன்றது. அதின் அர்த்தத்தினை வரம் பெற்றவனும், வயதானாலும் தேவனோடு நெருக்கமாய் வாழ்ந்தவனுமாகிய தானியேல் விளக்கிச் சொன்னபோது, அதன்படியே நடக்கவும் செய்தது (தானி. 5 அதி). 

சில வேளைகளில், அவர் தம் வார்த்தைகளை தீர்க்கன் ஒருவனின் வாயில் போட்டு, அதனை அவனுடைய உதவியாளனைக் கொண்டு எழுதிக் கொடுத்தார். 

'கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்". (எரே. 30:1,2)

மாம்சத்தில் வெளிப்பட்ட நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், மக்களுக்கு விளக்கிக் கூற தரையில் எழுதினார் என்றே வாசிக்கிறோம் (யோவான் 8:8). 

வெளிப்படுத்தின விசேஷத்தில், 'நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது" (வெளி. 1:19) என்று Dictate  பண்ணுகிறதையும், பின்னர் 7 சபைகளுக்கும் செய்தியினை அனுப்ப யோவானுக்கு DICTATE பண்ணுவதனையும் காண்கிறோம் (வெளி. 2:1, 8, 12, 18; 3:1, 7, 14). அது எல்லா சபைகளிலும் வாசிக்கப்படவேண்டும் என்பதனை உணர்த்தும் வண்ணம், 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது" என்றும் கட்டளையிடுகிறார் (வெளி. 2:7, 11, 17, 29; 3:6, 13, 22).

இவைகள் நமக்கு உணர்த்தும் காரியங்கள், அந்த வகையறுத்தலும், செய்தியும் இன்றைய சபைகளுக்கும் பொருந்தும் அல்லவா! அதே எண்ணத்தில்,  ஆண்டவர் இன்றைக்கு உள்ள சபைகளுக்கு எழுதுவார் என்றால், அந்தக் கடிதம் எப்படி இருக்கும்? என்று மனதில் சிந்தித்தவனாகவும், ஆவியில் ஏவப்பட்டவனாகவும், மிகுந்த பாரத்தோடு எனக்குத் தோன்றிய வண்ணம் எழுத முற்பட்டேன்; அவைகள் சிலருக்கு ஏளனமாகத் தோன்றலாம். ஆனால், அவை இந்நாட்களின் நிலமையை உணர்த்துவிக்கப் பலம் பெற்றவை என்பதனை அறிந்தவனாக (ஒருவேளை இதனை அதிகப் பிரசங்கித்தனம் என்று சிலர் அழைக்கலாம்) இந்த மடலை சமர்ப்பிக்கிறேன். 

தேவன், 'அவருடைய வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் நம்மைப் பட்சித்தது" (யோவான் 2:17) என்று நம்மையும் குறித்து சொல்லவைப்பாராக.

1. குளிர்ந்து வெறுமனே அசதியோடு இயங்கும் சபை (Cold & Liturgical Churches)
 
நீ ஆரம்பித்தது நன்றாய் இருந்தது; நானும் அதில் மகிழ்ந்தேன். ஆனால், இன்றோ 'குளிர்ந்த ஆவியோடு என்னை ஆராதிப்பதும், ஏனோ தானோ என்று என் சமுகத்திற்கு வருவதனையும்    மிகுந்த வேதனை அடைகிறேன்". விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே தேவபயத்தோடு நடப்பதனைக் காண்கிறேன்; அவர்கள் தங்கள் சுதந்தரத்தினைப்   பெற்றுக்கொள்வார்கள். தங்களுக்குக் கிடைத்தக் கொஞ்ச வெளிச்சத்திலாகிலும் எனக்குப் பயப்படும் பயத்தோடு நடந்தார்களே!

2. பாரம்பரியமும் பழமையான மரபு வழிபாடும் செய்யும் சபை (Traditional and Orthodox Churches)
பழைய ஏற்பாட்டில் நிழலாகச் சொல்லப்பட்டவைகளை அறிந்து ஆராய்ந்த நீ, அதனை ஆவிக்குரிய வெளிச்சத்தில் காணத் தவறிவிட்டாய். அது உன்னை வேஷங்களைப் போடவைத்து, பலவித வண்ண வண்ண உடைகளை நேர்த்தியாய், வேளைக்கு வேளை மாற்றினால்தான் பக்தி என்ற தவறான எண்ணத்தில் நீ வாழ்கிறாய். அவைகளை நான் வெறுக்கிறேன். நீ வாழும் இந்திய தேசத்திற்கும் அவை ஒவ்வாதவைகள். ஏனெனில், இங்கே மதக் குருவை 'தியாகத்தோடு வாழ்பவனாகக் காணவே மக்கள் விரும்புகிறார்கள். எனவே, உன்னுடைய வேத (பழைய ஏற்பாடு) அறிவே அவர்களுக்கு இடறலாகப் போய்விட்டதே! 

மாய்மாலத்தை வெறுக்கும் நான் அதற்குரிய தண்டனைகளை என்னுடைய வீட்டிலேயே துவக்கப்போகிறேன்; எனவே, மனந்திரும்பு. 

உன்னிலும் (விசேஷமாகக் கற்காதவர்கள்) இதுதான் தேவனை நெருங்கிச்சேர வழி என்று நினைத்துவிட்டார்கள்; அதற்கு, அவர்கள் பொறுப்பல்ல. எனவே, அவர்களுக்குரிய சிறிய பங்கை நான் வரும்போது என்னிடத்தில் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 

3. பெயரளவில் ஆவிக்குரிய சபைகள் (So-called Spiritual Churches)

ஆவியில் களிகூர்ந்துதான் ஆரம்பித்தாய்; ஆனால், பின்னர் உன்னுடைய உள்ளான அசுத்தங்களை மறைக்கவே அதை உடுப்பாக்கிக்கொண்டாய். உன் ஆவியின் பெலன் வீணாக்கப்படுவதோடு, அர்த்தமற்றதாகிவருகிறதே. இதை நீ அறியாமல் இருப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. கூடவே, உன்னுடைய சந்ததியில் அநேகர் 'மறுபடியும் பிறக்கவில்லை". நீயோ அவர்களை உயர்தலங்களில் சபையில் உலாவச் செய்திருக்கிறாய். 

உன்னைக் குறித்து நான் வைத்திருந்த தீர்மானங்கள் எல்லாவற்றிலும், நீயே மண்ணைப் போட்டுக்கொண்டாய். ஆயினும், உன்னை உயிர்ப்பிக்கவேண்டும் என்றே நான் பிரயாசப்படுகிறேன். அதற்காக ஆவியின் பின்மாரி நாட்களில் நீயும் ஆசீர்வதிக்கப்படலாம். 

4. சுவிசேஷ சபை (Evangelistic Church)

சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இந்நேரம் வரைக்கும் அதற்கு உடன்பட்டது மாத்திரமல்லாமல், மற்றவர்களுக்கும் அதனைப் பகிரவேண்டும் என்று நீ வாஞ்சிக்கிறாய். 

ஆனால், சுவிசேஷ பூரணத்தை அனுபவிக்கும் ஆவல் உன்னிடத்தில் இல்லாததனைக் கண்டு எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. புறஜாதியாரைக் கீழ்ப்படியப்பண்ணும் தேவ ஆவியின் பெலத்தையும், வரங்களையும் நீ வாஞ்சிக்கவேயில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு. 

சுவிசேஷத்தினைப் பரப்ப நான்; வைத்திருக்கும் இந்த முறையினை நீ அறிந்தால் எத்தனை நலமாயிருக்கும். ஆயினும், சுவிசேஷ விசேஷத்தில், நீ மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டியதை அறிந்திருப்பதனை நினைத்து, உன் நாமம் ஜீவபுஸ்தகத்தில் உள்ளது என்ற சந்தோஷம் உனக்கு எப்போதும் உண்டு. 

5. ரோமன் கத்தோலிக்கச் சபை (Roman Catholic Church)
                உன்னுடைய சமூகச் சேவைகள் உன்னைப் பெருமைகொள்ளச் செய்திருக்கிறதையும், அதின் நிமித்தம் நான் இடையிடையே உன்னை உயிர்ப்பித்து கண்களைத் திறக்க முயன்றும், நீயோ, 'எனக்கு ஒரு குறைவும் இல்லை" என்றும், 'யாரும் எனக்குப் போதிக்கவேண்டியது இல்லை" என்றும் இறுமாப்படைந்தது எனக்கு வேதனை அளிக்கிறது. 

உன்னிலேயும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல், தன்னை பரிசுத்தத்தோடுக் காத்துக்கொள்பவர்கள் உண்டு. அவர்களை நான் வெளியேதான் வரச்சொல்லவேண்டிய நிலைமையில் நீ உன்னையேக் கெடுத்துக்கொண்டாய். உனக்குப் பெரியதொரு நியாயத்தீர்ப்பை வைத்திருக்கிறேன். என் பரிசுத்தவான்கள் பலரை நீ கொன்று குவித்ததனை என்னால் மறக்கமுடியவில்லை. உலகத்தின் மார்க்கத்தோடே உனக்கு பெரிய உறவு உண்டு. ஆளுகிறவர்களும் போலியான உன்னுடையவைகளை நம்பி உனக்கு மதிப்பு கொடுப்பதனை நீ தவறாகவே உபயோகிக்கிறாய். 



உனக்கு வைத்திருக்கும் ஆக்கினையை நீ அறிந்தால் நலமாயிருக்கும். 

6. பொழுது போக்கிற்கான சபை (Entertaining Church)

சபை என்ற பெயரில் மக்களைக் கூட்டி, உல்லாசமான வார்த்தைகளையும் இச்சகமான வார்த்தைகளையும் பேசுவதே உன் கிரியை.  சபை கூடிவருவதில் உன் நோக்கமே வேறு. வாலிபர்களைச் சேர்க்கவே இப்படிச் செய்கிறேன் என்று நீ என் வார்த்தைகளைத் திரித்துக் கூறி, அநேகரை கேட்டுக்கு நேராக வேகமாக நடத்திச் சென்றுகொண்டிருக்கிறாய்.

உன்னை சபை என்றே நான் ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என் நாமத்தினை நீ வீணாய் உபயோகிக்கிறாய்; அதற்குரிய பலனை நீ அடைந்தே தீர்வாய். 

7. உள்ளான பார்வை மாத்திரம் கொண்ட சபை  (Inward Looking Church)

எந்த வேலையும், கவலையும் உனக்கு உன்னைப் பற்றியதே. சபைக் கட்டிடத்தினை எப்படி அலங்கரிக்கவேண்டும் என்பதே உன் சொப்பனம். மக்களின் காணிக்கையை விரயமாக்கி, உனக்குப் பெயர் உண்டாக்கவேண்டும் என்பதிலே உன் கவனம் யாவும் அடங்கும். 

ஆராதனை செய்கிறாய்; ஆனால், உன் தற்பெருமையைத்தான் ஸ்தோத்திரபலி என்ற பெயரில் கக்கிக்கொண்டிருக்கிறாய். இதனால், உனக்குள்ளே ஏராளமான குழுக்கள் தோன்றி, ஒருவருக்கொருவர் தாக்கி அழிவதே உனக்குக் கிடைத்த பரிசு.

ஆயினும், உன்னில் சிலர் இருதயத்தில் மிகுந்த வேதனைகொண்டு, என் சமுகத்தில் அழுது புலம்புவதனையும் என்னால் கேட்கமுடிகிறது. அவர்கள் நிமித்தம் உன்னை அதிகமாய் சிட்சிக்கவில்லை; ஆயினும், எதுவரை பொறுமையாய் இருப்பேன். உன் மக்களும், செல்வமும், கிருபைகளும் மூலையில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. என் நோக்கத்தைக் குறித்து உனக்குக் கவலையில்லையோ! 

உன்னைச் சுற்றி நடப்பவைகளைப் பார். அதனை அறிந்து செயல்பட நினைப்பவர்களை நீ உன்னுடைய அதிகாரத்தால் அடக்கிவைக்கிறாய். அழியும் ஜனத்திற்காக உன்னைக் கணக்குக் கேட்கும் நாளில் நீ என்ன செய்வாய்? விழித்துக்கொண்டு செயல்பட்டால் வாடாத கிரீடத்தினை உனக்குத் தருவேன். 

8. சமூக சேவையை மாத்திரம் கொண்ட சபை  (Active in Social Work)

உன் கிரியைகள் உன்னை இரட்சிக்காது. ஆனால், நீயோ அது உனக்குப் போதும் என்றும், புறஜாதியாரைப் போன்று பாவம், புண்ணியம் என்ற வார்த்தைகளைக் குறித்து நீ தெளிவற்றும் இருக்கிறாய், பாவமும் செய்கிறாய். அதைவிட அதிகமாக, புண்ணியம் செய்தால் பரலோகம் சென்றுவிடுவேன் என்பதே உன் எண்ணம். இதற்குக் காரணம், என் வசனங்களை ஒழுங்காக நீ படிக்கவில்லை. அதின் வெளிச்சத்தினை நீ நாடவும், என் நாமத்தை அறிந்து அதினால் கிடைக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் நீ விரும்பவில்லையே! 

உனக்கும் புறமார்க்கத்தவர்களுக்கும் வித்தியாசமில்லை. உன்னையும், உன்னுடைய தர்மங்களையும் அவர்கள் பாராட்டவேண்டும் என்பதே உன் பிரதான நோக்கமாயிருக்கிறதே. 

என் வேதத்தினை அந்நிய காரியமாக எண்ணாதே! அது உன்னை ஒரு நாளில் நியாயந்தீர்க்கும். 'ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்" (1கொரி. 16:22) என்பதனை மறவாதே. 

9. பணமே பிரதானம் என்று வாழும் சபை (Money-centered and Backslidden Church)


'ஐசுவரியமும் கனமும் என்னால் வருகிறது என்று நீ அறிந்தபோதிலும், இறுமாப்படைந்து, நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்து, சகலவித நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாய்த் தருகிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தினால் எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்ளுவேன் என்று கூறி, பிரசங்கத்தை எல்லாம் அதைச் சுற்றியே தயாரித்து ஜனங்களுக்குத் தந்தாய். நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நண்பரைச் சேர்த்து, நன்மை செய்து, நற்கிரியைகளையும் இணைத்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தவறி, உன்னை ஐசுவரியவானாகக் காண்பிக்க, கடனையாகிலும் வாங்கியோ, மாதத்தவணையிலாவது பொருள்களை வாங்கிக் குவித்தோ, அவைகளால் ஆளப்பட்டு, சிக்குண்டு கிடக்கிறாய். அதுவும், உன் கண்களுக்கு மறைக்கப்பட்டிருப்பதால், உன்னை நான் தொடும்படிக்கும், நீ விடுதலையாகிவிடும்படிக்கும் என்னிடத்தில் ஓடிவந்துவிடு. 

10. பெரிய பட்ஜெட்டையும், தவறான இலக்கையும் கொண்ட சபை (Church with Big Budget and Infrastructure)

ஜனத்தினைப் பிழிந்து, நான் கட்டளையிடாததை நான் சொன்னேன் என்று கூறி, உன் விருப்பங்களை நிறைவேற்ற, அதற்கேற்ற வசனங்களைத் தேடிக் கண்டுபிடித்து (அரைகுறையாக), சாலொமோன் செய்ததுபோல, கண்ணீரோடு கர்த்தரை சேவிக்க ஜனத்தை ஏவிவிட்டாய் என்று நான் உன்மேல் குற்றம் சுமத்துகிறேன். 

என் காலத்தில் அதை செய்துமுடிக்கவேண்டும் என்று கமிட்டியார் கூடி உனக்குத் தவறானவைகளைச் செய்யத் தூண்டினபோது, அதுவே உன் கனவாகவும் இருந்தபடியால், அவர்கள் ஆலோசனைக்கு இணங்கி நடந்தாய் அல்லவா! 

உன்னையும், உன்னைச் சார்ந்தவர்களையும் பூமிக்கடுத்தவைகளை அல்ல, மேலானவைகளையே அதிகம் நாடவைக்கவேண்டும் என்ற சிந்தை மாறி, இன்று உன் நேரமும், பெலனும், யுக்திகளும் அதற்காகவே செலவிடப்படுவதினால், என் பாதம் அமரும் பாக்கியத்தினை நீ இழந்தாய். 

திரும்பி வா. நாம் இணைந்து மக்களைக் கட்டுவோம். கட்டிடம் தேவைதான்; ஆனால், நான் விரும்பும் விதத்தில் அது அமையவேண்டும்.

சுவிசேஷம் சொல்லவே உனக்கும் உன் ஜனத்துக்கும் நேரம் இல்லாதபடிச் செய்த உன் பொல்லாத செய்கையை நான் வெறுக்கிறேன். நீயோ, 'கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்" என்று உன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாயே. 

11. துர் உபதேச சபை (Cult Church)

தாங்கள் சொல்லுவதும், சாதிப்பதும் என்ன என்றே தெரியாதவர்கள் உன்னிலிருந்து எழும்பி, ஓர் சத்தியத்திற்கு எல்லாவற்றிலும் மேலாக முக்கியத்துவம் தந்து, தங்களையே தேறினவர்களாகக் காண்பித்து, மற்றவர்களைக் குறித்தத் தவறான எண்ணங்களை மக்கள் மனதில் பதியவிட்டு, தனிக் குழுவாகி, தனிச் சபையாகி, தன்னிச்சையாய் நடந்து, அதனைப் பரப்புவதனையே தலையாயக் கடமையாக்கிக்கொண்டார்களே! 


அவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும் என்பதுதானே என் ஊழியக்காரன் கொடுத்த ஆலோசனை. அரிபிளவுபோல அது பரவுமே. அதிசீக்கிரமாக முளைக்கும் களைகளுக்கு நீரை வார்த்ததுபோல, நேரம், பணம், ஈர்ப்பு அனைத்தையும் அந்த கொள்கையைப் பரப்புவதற்கே என்று காண்பித்து, அநேகரை நீதி பாதையினின்று திசைதிருப்புவதில் வெற்றியும் கண்டு, முடிவில் அழிவைச் சந்திக்க நீ பயப்படாமற்போனதென்ன? உருவின பட்டயத்தை உடையவர் நான் என்று அறியமாட்டாயோ! வைராக்கியம் பாராட்டும் நீ, என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து அல்லவோ மேன்மை பாராட்டியிருக்கவேண்டும்; மாறாக, வெறிகொண்டவனைப்போல நடந்துகொள்கிறாயே! என் பட்டயம் யுத்தம் செய்யவேண்டுமோ!

12. உயர் நிலையிலேயே வைத்துக்கொள்ள முயற்சிக்கும் சபை 
( Status Keeping Church)

ஏராளமான உந்துவிக்கும் பிரசங்கங்கள் (motivational talk);  ஆனால், அவை வேதத்திலிருந்து புறப்படுகிறவைகள் அல்ல; மாறாக, உலக ஞானத்தில் இருந்து புறப்படுகிறவை.


சாதக முறை (Positive approach) பிரசங்கங்கள், வேதத்திலிருந்துதான்; ஆனால், வேதம் சொல்லும் 'கருப்பொருளைப்" புரிந்துகொள்ளாதபடி கண்சொருகிப்போனதினால், தன் தவற்றைப் புரிந்துகொள்ளக்கூடாதது. 

அனைவரையும் நன்றாக உடுத்திக்கொண்டு வரச்செய்து, ஏழைகளை அற்பமாக எண்ணி, வேறு ஒரு இனத்தார் என்று காண்பிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி, அப்படிப்பட்டவர்களை மாத்திரம் கனம்பண்ணி, வெறும் பந்தாக்களாகவே வாழ்கிற மக்களால் அதே மனதுடையவர்களை மதித்து, கவுரவப்படுத்தி, மனிதர் புகழ்பாடி, தேவனையும் கூடவே வம்புக்கு இழுத்து, யார் பெரியவன் என்பதில் கவனமாய் இருக்கிற இந்த கேடுகெட்ட சபையை நான் புறக்கணிக்கிறேன். 

13. சமூகக் கூடுகை சபை (‘Social Gathering’ Church)

தேவனைச் சந்திக்கவோ, தேவ வார்த்தையைக் கேட்கவோ விருப்பமற்று, தெரிந்தவர்களைச் சந்திக்க, சம்பந்தம் கொள்ள, நேரத்தைப் போக்கடிக்க, fellowship  என்ற பெயரில் வம்பளக்க, நவீனக் காரியங்களையும் மற்றும் புதுப் புதுப் பொருட்களையும் அறிமுகப்படுத்த உபயோகப்படும் பிளாட்பாரமாகவே சபை என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சபையா நீ? 

புசிக்கவும், குடிக்கவும் வீடுகள் இல்லையா? கள்ள உறவுகள் பிறப்பதற்கு நீயே காரணமாகலாமா? பொதுக் கூட்டங்கள் பலவற்றில் உனக்குக் கனம் கொடுக்கப்படும் என்பதற்காகவே அலைந்து திரியும் நீ, தேவனைத் தேடுவதுபோல் நடிக்கத் தேவை உள்ளதோ? சபையை LIONS Club  ஆகவோ, Rotary Club  ஆகவோ மாற்ற, என் இரத்தம் சிந்தி மீட்ட சபையை நீ உன்னுடைய இலாபத்திற்காக மாற்றிவிட்டாயே!

என்னைத் தேடுபவர்களுக்கும், தேடாதவர்களுக்கும் வித்தியாசத்தை காண்பிக்கும் நாள் அதிசீக்கிரம், ஜாக்கிரதை!!

14. கதாநாயக வழிபாட்டுச் சபை (Hero Worship Church)

தேவன் அமரவேண்டிய இடத்தில் மனிதன் உட்கார்ந்து, அவனுடைய ஆவியே அநேகரை கட்டிப்போட நீ உன்னை ஒப்புக்கொடுத்தாய். 

அவனா உங்களுக்காக சிலுவையில் அறையுண்டு இரத்தம் சிந்தினான்? பாவமில்லாத மாசற்ற இரத்தம் சிந்தி உன்னை மீட்டவர் நான் அல்லவோ! மனிதனை மதிக்கவேண்டும்; ஆனால், தொழுகையோ, துதிபாடலோ அவனுக்குரியது அல்லவே! என் வார்த்தைகளைத் தள்ளி, அவனுடைய கற்பனைகளையே உபதேசிக்கக் கற்றுக்கொண்டு, தனிமனித வழிபாடு எப்படி சரி என்கிறாய்? 

புல்லுக்கு ஒப்பானவனும், புகைக்குச் சமானமான அவனையா பற்றிக்கொள்கிறாய்?  அவன் வாக்குத்தானே உன்னை வழிகாட்டுகிறது. உன் கண்களைத் திருப்பு.


உன்னை என்னிடத்தில் வழிநடத்தத் தவறிவிட்ட அவனும், அவனைப் பின்பற்றும் நீயும் ஒருமிக்க விழுவீர்களே! நாசியில் சுவாசமுள்ள மனிதன் உன்னை கறளைச்செடியாய் மாற்றிவிடுவேன்; கொண்டல் காற்றுப் பறக்கடிப்பதுபோல உங்களைப் பறக்கடிப்பேன்; கவனம். 

15. பின்மாறிப்போன சபை (Backslidden Church)

ஒருகாலத்தில் பிரகாசிக்கப்பட்டிருந்த உன்னை இப்படி மாற்றிக்கொள்ளச் செய்தது எது? யார்? உலக சிநேகமா? சுகபோகமா? கள்ளத் தொடர்புகளா? 

ஆவிக்குரிய விபச்சாரம் என்பது என்னையும், உலகத்தையும் நேசிப்பதினால் என்பதனை, நான் இந்த பூமியில் இருந்த நாட்களில் உரக்கச் சொன்னேன் என்பதனை நினைத்துப் பார். 

ஓடி ஓடி களைத்துவிட்டாயோ! அல்லது யாரையாவது பார்த்து இடறிவிட்டாயோ! உலகமும் அதின் இச்சைகளும் அழிந்துபோகுமோ! ஜெபக்குறைவும், தேவ அன்பின் மேல் சந்தேகமும், தேவ பிள்ளைகளோடுள்ள ஐக்கியக் குறைச்சலும், இரகசியப் பாவமும், அறிக்கைசெய்து விட்டுவிடக்கூடாத உறவுகளும், தகாத சம்பாஷனைகளில் ஏற்பட்டக் களிப்பும், பாவத்தின் மேல் வெறுப்பைத் தராத கிருபையின் செய்கைகளும் உன்னை இந்த நிலையிலே வைத்துவிட்டதோ!

ஆரம்ப நாட்களை நினைத்துப் பார்; மீண்டும் தூசியை விட்டு எழும்பு; மரித்தோரை விட்டு உன் படுக்கையை மாற்று; ஆரோக்கியமான சூழ்நிலைக்கு உன்னை விட்டுக்கொடு; காலையில் தரப்படும் கிருபையை வாஞ்சித்து காத்திருந்து பெற்றுக்கொள்; உனக்கு இன்னமும் வேலை இருக்கிறது. 

16. தனிப்படுத்திக்கொண்ட சபை (Secluded Church)

இயேசுவாகிய என் சரீரத்தினைக் குறித்த விளக்கமே தெரியாமல், தாங்கள் மாத்திரம்தான் பிரித்து எடுக்கப்பட்டவர்கள் என்றும், உலகத்தால் கறைபடாதபடிக் காக்கிறவர்கள் என்றும் தம்பட்டம் அடித்தே நீ உன்னைக் கெடுத்துக்கொண்டாய். 

மற்றவர்களை அணுகவோ அல்லது சுவிசேஷத்தினைச் சுமந்து செல்ல ஜனங்களை (விசுவாசிகளை) ஊக்கப்படுத்தவோ நீ பேசுவதேயில்லை. “GROW While you Go”  என்ற தத்துவம் உனக்குத் தெரியாத புதிர். 

உள்ளேயே அநேக அசுத்தங்கள் இருந்தும், வெளி உலகுக்கு அவைகள் வந்துவிடக்கூடாது என்பதில்தான் உன் கவனம். ஆவியில் நிறைந்துத் துள்ளினால், நீ ஆவியின் நிறைவைப் பெற்றிருக்கிறாய் என்று நினைத்து உன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய். உனக்குள்ளும் அநேக பரிசுத்தவான்கள் உண்டு; ஆனால், பணக்காரியங்களைக் குறித்து, அதனை பல காரியங்களுக்குப் பயன்படுத்தி, பரலோகத்தை மகிழச்செய்ய நீ தவறிவிட்டாய். மாறாக, உன்னுடைய காணிக்கைகளை நீயே சாப்பிட்டு ஏப்பம்போடுகிறாய். 

வருகையைக் குறித்துப் பேசும் உனக்கு, இந்த இராஜ்யத்தின் சுவிசேஷம் கடைசி மனிதனை அடைந்தால் மாத்திரமே சாத்தானுடைய இராஜ்யத்திற்கு முடிவு உண்டாகும் என்பது ஏன் விளங்கவில்லை? 

உன் எக்காளத்தினை வாயிலே வை, ஊது, எச்சரி. எழுந்து சென்று எல்லாரையும் அறியப்படாத மக்களுக்கு நற்செய்தி சொல்லச் செய்திடு. 

17. அனலற்ற பிரசங்கங்களால் நிறைந்த பிரசங்க பீடங்களைக் கொண்ட சபை  (DRY Church)

உயிர் தந்த நான் சொன்ன வார்த்தைகள், கேட்கும் மனிதனை அனல்கொள்ளச் செய்யும். ஆனால், உன்னுடைய வேத அறிவும் பிரசங்கக் குறிப்புகளும் அபாரம்; ஆனால், அவைகள் ஜீவனில்லாமல் பிரசங்கிக்கப்படுவதால் (ஏனெனில் நீ ஆவியானவரின் அபிஷேகத்தினை நம்புகிறதில்லை. அவருடைய அருட்கொடைகளையும் கேலிசெய்கிறாய்), உன்னைக் கேட்பவர்கள் தூங்கிவிழுகிறார்கள். சபை கூடிவருதலுக்குத் தவறாமல் வருகிறார்கள், போகும்போது இன்னும் வறண்டுபோய்த் திரும்புகிறார்கள்; இதிலேயும் நீ உணர்வடைவதில்லை. 

உன் ஜனங்கள் அறிவில் தேறினவர்கள்; ஆனால், அன்பில் பாஸ் (pயளள) மார்க் தானும் வாங்கவில்லை. என்னே! அன்பற்ற அவர்கள் ஆத்தும பாரம் கொள்வது எப்படி?   

'உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்" என்றான் என் தாசன் தாவீது. உன்னில் அந்த உற்சாக ஆவியில்லாமல்போனதால், நீ சந்திக்கிற மக்களையும் அது கவருவதில்லை. எதுவரைக்கும் இது இப்படி இருக்கும்? வறண்ட நிலத்தில் ஆறுகளையும் தண்ணீரையும் ஊற்றுகிற நான் உன்னை ஆனந்த தைலத்தால் நிரப்பத் துடிக்கிறேன். கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் பாரேன்.

18. உந்தும் சக்திகள் (ஆனால் அது உலகத்தின் முறை) கொண்ட சபை) (Church with using Positive Thoughts)

வியாபார முறையினை நீ கற்றதனைக் காட்டிலும், என்னுடைய சத்திய வேதம் காட்டும் சத்தானவைகளைப் போதித்து, சிட்சித்து, சீர்படுத்தி, பலப்படுத்தி, ஸ்திரப்படுத்த உன்னுடையவர்களை நீ பயிற்சிப்பித்திருந்தால் எப்பொழுதோ உன் ஜனங்கள் ஆவிக்குரியவர்கள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். மாறாக, இன்றோ, குறைதனைச் சுட்டிக்காட்டுதலை விரும்பாமல், அழுக்கோடும், அவல நிலையோடும், தன்னிச்சையாகத் திரியவும், தனக்கானவைகளையேச் சிந்திக்கவும் ஆரம்பித்து, தன்னை சமுதாயத்திலும், சங்கத்திலும், வேலை ஸ்தலங்களிலும் உயர்த்திக்கொள்வதனையே வாஞ்சித்து, என் வேதத்தினைப் படிப்பதனைக் காட்டிலும் வல்லுநர்களின் புத்தகங்களையே அதிகம் விரும்பிப் படித்து, (Success stories) வெற்றி தரும் வாழ்வு போன்ற உலக வெற்றியையோ, வியாபார வெற்றியையோ போதிக்கும் புத்தகங்களுக்கு அடிமையாய்ப் போனார்கள்.
 
நான் எழுதிக்கொடுத்தவைகள் ஞானமுள்ளவைகள் என்றும், பேதையையும் அது ஞானி ஆக்கும் என்பதும் உனக்கு அந்நியக் காரியமாகிவிட்டதோ? 

ஜனங்கள் அதினால் உற்சாகம் அடையக் காரணம், அவர்கள் மண்ணுக்குரியவைகள் மேல் மிகுந்த நாட்டம் உடையவர்கள். நீ போடும் தீனி அவர்களுக்கு Boost - ஐக் கொடுக்கிறது. நீயும் உன் போதனைகளும் பதருக்குச் சமம். என் வார்த்தைகளோ கோதுமை மணிகளுக்குச் சமம். என் வார்த்தைக்குத் திரும்பு (Back to the Bible); அதுவே உன்னை நியாயம்தீர்க்கும் என்பதனை மறவாதே.  

19. ஜெபித்து ஒழுங்கோடு முன்னேறும் சபை 
(Praying & Systematically Progressing Church)

நான் பூவுலகில் இருந்தபோது, என் ஜெப நேரத்தினைத் திருட சூழ்நிலைகளுக்கோ (கெத்சமெனேயிலும்), வேலை களைப்புக்கோ (ஊழியம் செய்துமுடித்து, ஜனங்களை போஷித்த பின்னரோ) ஒருபோதும் விடவில்லை. கற்றுக்கொடுங்கள் என்று என்னுடன் நடந்தவர்களே கேட்டார்களே! 

என் உறவு பிதாவிடத்தில் இல்லாமல் போனால், என் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும் அல்லவா! என் ஊழியம் தேவ உறவில் நடந்தது; அதனை என்னுடைய அப்போஸ்தலர்களும் அறிந்து அப்படியே செயல்பட்டனர். 

இந்த இரகசியத்தினை நீ புரிந்துகொண்டு முயற்சிக்கிறாய்; உன்னை வாழ்த்துகிறேன். ஆயினும், உன் ஜெபத்தினை நான் கேட்டு, கிரியைசெய்வதனை உற்றுநோக்கி, அதோடு காணாதவர்களத் தேடும் பணியினை நிறைவேற்றுவதில் நீ தீவிரம் காட்டவில்லையே என்று உன் பேரில் எனக்குக் குறைவுண்டு.

கிளிப்பிள்ளைப் போல மாறிவிட்ட உன் ஜெபத்தினை மாற்றி, ஆவியின் உந்துதலால், பாரப்படுத்தப்படும் காரியங்களுக்காகப் போராடவும், ஆவி மண்டலங்களை அசைக்கத்தக்கதாக ஆவிகளைப் பகுத்தறியவும் கவனம் செலுத்து. அதுதான் ஆகாய மண்டலத்தில் உன் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு உன்னைக் காத்து, உனக்கு உத்தரவைக் கொண்டுவரும். வரும் உத்தரவுகளை துரிதப்படுத்த நீ ஜெபிக்கவேண்டியதில்லை, அதனை மிகாவேலும், காபிரியேலும் பார்த்துக்கொள்வார்கள். 


இடைவிடா ஜெபம் உன்னிலிருந்து எழும்பிக்கொண்டேயிருக்கட்டும். உன் ஜெப பலிபீடம் விறகில்லாமல் அணைந்துபோகவிடாதே! அது ஜெபமாநாடுகளுக்குப் போவதால் நடப்பதில்லை; மாறாக, உன் உறவின் வலிமை என்னோடு இருப்பதனையேச் சார்ந்தது. 

20. மினரி தரிசனமுள்ள சபை (Mission-Minded Church)

என்னுடைய கடைசிக் கட்டளையை நிறைவேற்றுவதை தலைமேல் கொண்டு, அதனை நிறைவேற்றத் தேவைப்படும் தியாகம், ஜெபம், சபையில் அனைவரையும் அதில் ஈடுபடுத்த முயற்சி, அனைவரும் சேர்ந்துதான் இதனை நிறைவேற்றமுடியும் என்ற அசையா நம்பிக்கையே உனக்கு அஸ்திபாரமாக உள்ளதனைக் கண்டு நான் களிகூருகிறேன். 

என்னுடைய சித்தமும், இதய ஏக்கமும், அனைவரும் தேவனுடைய சத்தியத்தினை அறியவேண்டும் என்பதனை நான் என் சீஷர்களுக்கு வெளிப்படுத்தினேன். அதுவே அவர்கள் அனைவரும் இரத்தசாட்சிகளாக மரிக்கும் வரை கொண்டுசென்றது. 

தூரப்பார்வையும், தூய்மையும், தூய ஆவியானவரின் நிறைவும், வழிநடத்தலும், இன்னும் என்னத்தை இழக்கலாம் தேவப் பணிக்காக என்ற நினைவுகளும், உன்னை நுகர்வோர் மனப்பான்மை (Consumerism mentality). பொருட்களை மற்றும் சேவைகளை அதிக அளவில் வாங்குவதனை நோக்கமாகக் கொண்ட ஒருமன நிலையில் இருந்து நீ விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய். ஆதலால், உலகின் விளம்பரங்கள் உன்னைக் கவர்ந்திழுப்பதுமில்லை, கவலைகொள்ளச் செய்வதுமில்லை, கடன்காரனாக மாற்றுவதும் இல்லை.

இதனால், என்னையேச் சார்ந்து வாழும் வாழ்வும், முன்னேற்றமும், வாழ்வின் நோக்கமும் உனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகிறது. அதனைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். 

இது உன்னை உபத்திரவத்திலும், அவமானத்திலும், வறுமையிலும், கேலி கிண்டலிலும் தள்ளும் என்பதனை உணர்ந்தும், கலங்காமல் உன் அர்ப்பணத்தையும், என்னுடைய இதயத் துடிப்பை நிறைவேற்றவேண்டி நீ எதையும் சகிக்க நினைப்பதனையும் நினைத்து உன்னைக் குறித்துப் பெருமையடைகிறேன். 


சிலுவையை மேன்மை பாராட்டும் மக்களை நீ உருவாக்கிவருகிறாய். தனக்கு இலாபமாயிருப்பவைகளை, கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவின் சபைக்காகவும் குப்பை என்று எண்ணுகிறவர்களையும், இரத்தம் சிந்தியாகிலும் இந்தியா இயேசுவைக் காணவேண்டும் என்ற வாலிப ஆண் மற்றும் பெண் அனைவரையும் நீ முறையாகப் பயிற்றுவிக்கிறாய். ஏழைகளுக்குப் படிப்புச் சொல்லித்தந்து, பணித்தளத்திற்குச் செல்ல அவர்களை உந்துவிக்கிறாய். சிறுவர்களுக்குப் பால வயதிலேயே மிஷனரிகளின் வாழ்க்கையைச் சொல்லித் தந்து, இயேசுவுக்காய் நீ என்ன செய்கிறாய்? என்று அவர்களைப் பார்த்து கேட்கிறாய்.

உன் கண்ணீரின் ஜெபமும், இடைவிடாப் பிரயாசமும், தியாகமும் என்னையே 'திகைக்கவைக்கும் அளவிற்கு" (அன்றைக்கு விசுவாசத்தினை கானானியப் பெண்ணின் இடத்தில் கண்டபோதும், நூற்றுக்கு அதிபதியின் பதிலைக் கண்டு பாராட்டினபோதும்) உயர்ந்து நிற்கிறாய். உன் சந்ததியாரோடும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் நீ உரையாற்றும்போது, அது பெரும் தாக்கத்தினை உண்டாக்கியுள்ளது. அதுதானே நான் சென்ற பாதை. என்னைத் தொடர்ச்சியாகப் பின்பற்றிவிடு, இறுதிவரை.......


பாழும் உலகில் பற்பலச் சபைகள் 
பாசத்திற்கு ஏங்கி நிற்போரைத் தேற்றவில்லை



கொஞ்ச பெலன் இருந்தும் புறப்படப்பண்ணும் சபை உண்டு
கெஞ்சும் ஜெபம் செய்து சபை நடுவில் நான்


பெருமை சேர்க்கிறோம் எனக் கூவி
பெருமையை இழக்கப்பண்ணும் சாட்சியைக் கூவினர்


உலகின் இன்பமும் இழுப்பும் சபையை விடவில்லை
உலக இரட்சகர் இந்தியாவில் விலைபோகவில்லையோ


கூட்டம் ஒன்று உண்டு கூரையைப் பிரிக்க
கூச்சமில்லாமல் இயேசுவிடம் கொண்டு சேர்க்க


எழும்புகிறது உலர்ந்த எலும்புகள் சேனையாய்
எதற்கும் பயப்படா தேவ சேனை ஒன்று 



                                                                      அன்பரின் அறுவடைப் பணியில் 
                                                                      அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்