Jan 2026

 


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

நம் காலங்களைத் தன் கையில் வைத்திருப்பவரும் (சங். 31:15), சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாகச் செய்கிறவருமாகிய ஆண்டவருடைய ஒப்பற்ற நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துகள் (பிர. 3:11). அவரை பின்பற்றிச் செல்வதற்கு ஒப்புக்கொடுத்திருக்கிற நம்மை அவரே நடத்திச்செல்வார் (ஏசா. 58:11). சவால்களை மேற்கொள்ள அதுவே சாலச் சிறந்தது என்பது நாமறிந்ததே. ஆகையினால், குழப்பங்களையும், ஐயங்களையும், அச்சங்களையும் தவிர்ப்போம்; ஜெயகிறிஸ்துவாக அவர் நம்முன் செல்ல ஆயத்தமல்லவா! 

     குருடரைக்கூட அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குகிறவர் (ஏசா. 42:16). 

         நம்முடைய நம்பிக்கை நம் மீதிலோ (2 கொரி. 1:9) அல்லது நம்முடைய சொந்த பெலத்தின் மேலோ (சங். 20:7), ஐசுவரியத்தின் மேலோ (1 தீமோ. 6:17) இல்லாமல், ஜீவனுள்ள தேவன் மேலேயே எப்பொழுதும் இருப்பதாக. அவர் நமக்கென்று உண்டாக்கிவைத்திருக்கிறவைகள் நம்முடைய நினைவுகளைக் காட்டிலும் மேலானவை (ஏசா. 55:9). 

            உலகத்திற்கு வெளிச்சமாகக் கொடுக்கப்பட்ட தேவ மக்களால் நிரம்பிய சபை, இன்று அநேக நேரங்களில் மங்கி எரிகிறது; தேவ தயவுதான் அதனை அணைந்துபோகாமல் காத்துவருகிறது. இந்த வெளிச்சம் மங்கிப்போனதற்கான காரணங்களை உற்று நோக்குங்கால் பல உண்மைகள் தெரியவருவதோடு அதனை மீண்டும் ஒளி பெறச் செய்யவேண்டிய காரணங்களும் நமக்கு நன்றாக விளங்கக்கூடும். கொழுந்துவிட்டு எரியச் செய்கிற ஆவியானவர் சபையில் கிரியை செய்யக்கூடாதபடி, வேறு ஆவிகள் கிரியை செய்ய இடம் கொடுக்கப்படும்போது, அது ஆவியின் கிரியைகளையும், கிருபைகளையும் அழித்துப்போட வல்லதாக இருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. 

  எனவே, தேவப் பிள்ளைகள் இன்றைக்கு ஆவிதனை பகுத்து அறியத்தக்கவர்களாகி, ஜாக்கிரதையாய் சபையின் ஒளியை அணைக்க வல்ல சக்திகளை அடையாளம் கண்டு, அதில் அகப்பட்டுக்கொண்டோரை விடுவிக்கவேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு; தேவ ஒத்தாசையோடு செயல்படுங்கள்; ஜெபித்து முன்னேறுங்கள்; மற்றவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். 

        சபையில் நடமாடும் பொல்லாத ஆவிதனையோ, அசுத்த ஆவிதனையோ அடையாளம் கண்டுகொள்வது அநேக வேளைகளில் எளிது. ஏனெனில், அது பொல்லாப்பை உண்டுபண்ணி விரோதங்களை எழுப்பிவிடும் (நியா 9:23), பிரிவினை தலைவிரித்து ஆடும், கோள் சொல்லுதலும், புறங்கூறுதலும் எல்லா இடங்களிலும் செழித்தோங்கும் (நீதி 17:9, 11:13). கொலைவெறியும் சண்டையும், சச்சரவும், ஒத்துப்போகாமையும், எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்கும் சுபாவமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படும். ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதனையே பாவம் என்ற உணர்வைத் தூண்டிவிட்டு, இல்லாத பொல்லாதவைகளை ஏவிவிட்டு பகையென்னும் தீயை எரியச்செய்து அது அணையாதபடிக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டேயிருக்கும். எனவே, அப்படிப்பட்ட ஆவி சபையில் கிரியை செய்யும்போது ஆண்டவரின் பேரில் அன்பு கொண்டவரும், அவருடைய சரீரமான சபையை நேசிப்போரும், தேவ இராஜ்யத்தினைக் குறித்து அக்கறை கொண்டோரும் இதனை எளிதாகக் கண்டுகொள்வார்கள். 

    அசுத்த ஆவியின் சுபாவங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்ல. நிர்வாணமாக்குதல், சுத்தமாக இருக்கவிடாமல் கட்டிப்போடுதல், தன்னையும் மற்றவர்களையும் காயப்படுத்துதல், அசுத்தத்தை நடப்பிப்பதற்கு அசுசிப்படாதிருத்தல், கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுதல், மற்றவர்களின் மனதில் அசுத்த எண்ணங்களைத் தூண்டிவிடும் காரியங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், மற்றவர்கள் அசுத்தத்தில் விழும்போது ஆனந்தம் கொண்டு 'சபா~;" போடுதல், பாவத்தை விட்டு ஓயாத அவயவங்களாக தன்னுடைய அவயவங்களை (கண், காது, நாக்கு போன்றவை) மாற்றிக்கொள்ளுதல் போன்றவை இந்த அசுத்த ஆவியினை அடையாளம் கண்டுகொள்ளப் போதுமானவை.

        ஆனால், வஞ்சிக்கிற ஆவியின் நடமாட்டத்தையோ, செயல்பாடுகளையோ புரிந்துகொள்வது ஆவிக்குரிய பழக்கமில்லாதவர்களுக்கோ, தேவனோடு நெருங்கி நடக்காதவர்களுக்கோ, தேவப் பிரசன்னத்தை நாடுவதற்குத் தன்னை விட்டுக்கொடுக்காதவர்களுக்கோ எளிதல்ல. 

  உலகத்தின் ஆவியும் இன்று சபைகளை நிரப்பிவருகிறது. அது பிதாவினிடத்திலிருந்து வரவில்லை; ஆகையால், (1யோ 2:15,16) சில வேளைகளில் அதன் இழுப்பு அதிகமாக இருந்தபோதிலும் எதிர் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொண்டோருக்கு அதனை மேற்கொள்வது எளிதானதே. உலகின் வழியில் சென்றுதான் உலக மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியும் என்ற வாதம் உலக இன்பங்களை அனுபவிக்கத் துடிக்க முயல்வோரின் சாக்குப் போக்கே. இயேசுவும் 'நான் உலகத்தான் அல்லாததுபோல நீங்களும் உலகத்தார்கள் அல்ல" (யோ 17:16). உலகம் உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும் (யோ 16:1, 19) என்று கூறி தம்முடைய நிலையையும், நம்முடைய நிலையையும் ஆணித்தரமாகக் கூறி தெளிவுபடுத்தியதோடு நம்மைக் காக்க உலகத்தின் ஆவியைத் தராமல் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையே தந்தருளியிருக்கிறார் (1 கொரி 2:12). பவுலும் இதனைக் காண்பிக்க எண்ணி, நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம் (1 கொரி 4:9) என்றதோடு நில்லாமல், 'அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்" (கலா 6:14) என்று கூறுகிறார். எனவே உலகத்தின் ஆவி எத்தனைதான் ஆவிக்குரிய வேடம் அணிந்தாலும் அது பட்சிக்கிற ஓநாய் ஆட்டுத் தோலைப் போர்த்தியதற்குச் சமானம். அதனுடைய பசியினையும் ஆகாரத்தையும் கவனித்தாலே அது ஆட்டுக்குட்டியா? ஓநாயா? என்பது விளங்கிவிடும். அது புல் போன்ற மென்மையானவைகளை வாஞ்சிக்காமல் மாம்சத்தையே தேடும் அல்லவா? அது இரவிலேயோ அல்லது மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கும்போதுதானே கிரியை செய்யும். அது மந்தையின் பெருக்கத்தினை அல்ல அழிவையேதான் நாடும். அப்படியே மந்தை பெருகினாலும் அதின் இரை அந்த மந்தையின் இரத்தத்தினை உறிஞ்சிக் குடிப்பதில் தான் கவனமாக இருக்கும். அதனுடைய பற்களும் கோரமானவைகள் அல்லவா. 

       அது சில நேரங்களில் நன்றாக நடந்து நீதியின் வழியில் நடந்தோரையும் பற்றிக்கொள்ளும் (அப் 20:29-30). இதற்கு இரையாகிப் போனவர்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை. இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேடம் தரிக்காமல் இருக்க புதிதாக்கப்பட்ட மனமும் மறுரூபமாகவேண்டும் என்ற வாஞ்சையும்தான் காரணம். தேவன் அதனை உங்களுக்கு அருளிச்செய்வாராக. 

   அன்று ஏதேன் தோட்டத்தில் இந்த வஞ்சக ஆவியின் செயல்பாடு வெளிப்பட்டது. 'ஆகிலும் சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல..." (2 கொரி 11:3). கடைசி காலத்தில் இதனுடைய நடப்புகள் மிகுதியாகும் என்பதனையும் வேதம் சொல்லுகிறது. 'ஆவியானவர் வெளிப்படையாகச் சொல்லுகிறபடி பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்டவருடைய மாயத்தினால் சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்" (1 தீமோ 4:1). ஏனென்றால், இரட்சிக்கப்படத்தக்கதாய் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால்... அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்;தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார் (2 தெச 2:10,12). அது அந்திக்கிறிஸ்துவின் வருகைக்குச் சாதகமாக சகல வல்லமைகளோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும் கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்" (2 தெச 2:9,10).

    அந்திக்கிறிஸ்துவுக்கு உறுதுணையாக வரப்போகும் கள்ளத் தீர்க்கதரிசியும் பூமியின் குடிகளை மோசம்போக்குவதையே குறியாகக் கொண்டு செயல்படும்; அதற்காக அற்புதங்களை நடப்பிக்கும் (வெளி 13:13,14). அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள் ராஜாக்களையும் வஞ்சிக்கும் வல்லமை பெற்றவை, அவை குறிப்பாக வாயிலிருந்து புறப்படுபவைகளே (வெளி 16:13,14).

     எப்படி பொய்யுரையாத தேவன் பொய்யை விசுவாசிக்கத்தக்க வஞ்சகத்தை அனுப்புவார் (2 தெச 2:12) என்பது விளங்கவில்லையே என அங்கலாய்ப்போருக்காக தேவன் பழைய ஏற்பாட்டில் ஒரு சம்பவத்தை எழுதிவைத்துள்ளார். தேவன் அனுமதிக்கிறார் என்பது தெளிவு. 

     1 இராஜா 22-ம் அதிகாரத்தில் ஆகாபின் மரணத்திற்கு காரணமான யுத்தத்தையும் தீர்க்கதரிசனங்களையும் உற்று நோக்குங்கால் இதனைப் புரிந்துகொள்வது எளிது. விக்கிரக ஆராதனைக்குத் தன்னை விற்றுப்போட்டு, தேவனுக்கு விரோதமாக ஜனங்களைத் திரும்பப் பண்ணின அவனுடைய முடிவை தேவன் தீர்மானித்து அதனை நிறைவேற்றுவதற்கு அவனாகத் தேடிப்போன ஓர் யுத்தத்தின் செய்தி இந்த அதிகாரத்தை நிரப்புகிறது. 

     அதிலே வஞ்சக ஆவி எப்படி கிரியை செய்கிறது என்பதனை உண்மை தீர்க்கதரிசியாகிய மிகாயா விளக்குகிறான் வச 19-28 வரை படித்துப்பாருங்கள். ஆகாபை வழி தடுமாறச் செய்ய உதவினவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளே. ஒரு ஆவி (பொய்யின் ஆவி) 400 பேர் மூலமாக செயல்படமுடியும் என்பதும், அதுவும் தாங்கள்தான் ஆவியானவருக்குச் சொந்தக்காரர்கள் மற்றவர்களிடம் கிரியை நடப்பிப்பதற்கு தங்களைக் கேட்டுக்கொண்டுதான் அவர் செயல்படுவார் என்பது போல பேசும் கள்ளத் தீர்க்கதரிசிகளின் தலைவன் சிதேக்கியாவும் (வச. 24) இன்றைய சூழ்நிலைக்கு எத்தனையாய்ப் பொருந்துகின்றனர். 

     சாத்தான் தான் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமானவன் என்பதும், தன் சொந்தத்தில் எடுத்துப்பேசுகிறான் என்பதும் நாம் அறிந்ததே (யோவா 8:44) அவன் விட்டுக்கொடுக்கும் எவனையும் எளிதான நிரப்பிவிடுகிறான் என்பது ஆதி விசுவாசிகளான அனனியா சப்பீராளுடைய வாழ்வில் நடைபெற்றதும் நமக்குத் தெரிந்ததே (அப் 5:1-3). தனக்குப் பெயர் வரவேண்டும், தன்னை மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதனையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் எவரும் சத்துருவுக்கு தன்னை விட்டுக்கொடுத்து வாழ்வது வெட்டவெளிச்சம். 

     'வஞ்சகம்" என்பதனை 'பொல்லாப்பு செய்ய இணங்கப் பண்ணுதல்" எனவும் கூறலாம். அதனை ஆங்கிலத்தில் ‘enticing’ என்கிறோம். நியமிக்கப்படடாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம் போக்கி ‘enticing’ அவளோடே சயனித்தால்... என்று கூறும் வேதம் (யாத் 22:16) ஒருவளின் கற்பை சூரையாடுவதனை 'வஞ்சகமான செய்கை" என்கிறது. இன்று அநேக தேவ மக்கள் ‘தீட்டுப்படக் காரணமாக வாழும், பேசும், தீர்க்கதரிசனங்களை கூறும் ஊழியங்களும், ஊழியர்களும் எந்த விதத்திலும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லவே; அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். 

     உபா 13:1-10 வசனங்களில், உன்னை ஜீவ தேவனை விட்டு திசை திருப்பும் (வச 10) எந்த மனிதனும் சாக வேண்டும் என்று கடுமையாக உரைக்கும் ஆண்டவர் ‘enticing’ என்ற வார்த்தையே உபயோகிக்கிறார். கூடவே, தண்டிக்கபடவேண்டியதினை வெளிப்படுத்துகிறார். ஒருவேளை இன்றைய புதிய ஏற்பாட்டு யுகத்தில் நாம் கொலை செய்ய அல்ல, அவர்களை ஓரம் கட்டுவதற்குக் கற்றிருக்கவேண்டும். அவர்களை ஒதுக்கிவைப்பதற்குப் பதிலாக மாலை போட்டு வரவேற்று, வாழ்த்துப்பாடி புகழாரம் சூட்டி அவர்களை நீதிமான்களாகக் காண்பிக்க சபை உந்தப்படுமாயின் வெளிச்சம் மங்கத்தானே செய்யும்.

     'துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவன்... கர்த்தருக்கு அருவருப்பானவன்" என்று வேதம் சொல்லுகிறதே (நீதி 17:15). அருவருப்பு உள்ள இடத்தில் தேவன் அசைவாட முடியாதே ஒத்துக்கொள்வோம்; சபையின் பிரகாசம் பெருக பாடுபடுவோம். 'உன் ஒளி வந்தது கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியிடத்திற்கு இராஜாக்களும் நடந்து வருவார்கள். கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும். ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்திற்கு வரும் (ஏசா 60:1,3,5)." சபை பெருகட்டும், தேசம் அசையட்டும்;; வெற்றி வேந்தர் இயேசு மங்கி எரிகிற திரியை அணையாதவர் மாத்திரம் அல்ல பொங்கி எரிய எண்ணெய் ஊற்றுபவர். எழுந்து பிரகாசியுங்கள், மற்றவர்களையும் எரியப்பண்ணுங்கள். சபைகள் எரிந்து பிரகாசிக்கட்டும், தேசத்தில் இருள் நீங்கி வெளிச்சம் உதிக்கட்டும்; செயல்படுவோம்!. 

                                                                     அன்பரின் அறுவடைப் பணியில்                                                                                         அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்