சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்தி, அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரும் (சங். 113:7,8), ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொள்பவரும், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொள்பவரும், உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொள்பவருமாகிய (1 கொரி. 1:27,28) ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.
தேவன் ஒரு மனிதனைத் தெரிந்துகொள்ளும்போது, அவனை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல, அந்த மனிதனைச் சுற்றியிருக்கிற பிற ஜனங்களுக்கும் அவனை ஆசீர்வாதமாக மாற்ற விரும்புகிறார்; தேசம், சபை மற்றும் குடும்பம் அவன் மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறது. அத்தோடு நிறுத்திவிடாத தேவன், அவனது வாழ்வில் அற்புதமாக இடைபட்டு, அவனை பூமியின் உயர்ந்த ஸ்தானங்களிலும் நிறுத்துகின்றார். அதற்கு, யாக்கோபின் வாழ்வில், தேவன் ஏல்பெத்தேலிலிருந்து எகிப்து வரை (ஆதி. 32: 31-50:14) செயல்பட்ட விதம் நல்லதோர் அத்தாட்சி. யாக்கோபின் வாழ்க்கையுடனான தேவனது இந்த இடைபடுதல், அவனை பூரணமான மாறுதலுக்குள் வழிநடத்தியது.
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனை பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினபோது, யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான் (ஆதி. 47:7) என்று வாசிக்கின்றோம். இங்கே, யார் யாரை ஆசீர்வதிக்கிறார் என்று பாருங்கள். 'மேய்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்" (ஆதி. 46:34) என்று யோசேப்பு தன் தகப்பனையும், தன் சகோதரர்களையும் பார்த்துச் சொல்லுகிறான். ஆகையினாலேயே, 'கோசேன் நாட்டில் இருக்கும்படியாக பார்வோனிடத்தில் கேளுங்கள்" என்று தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் பார்த்துச் சொல்லுகிறான். ஆனால், இப்போதோ அருவருக்கப்பட்ட ஜாதியிலிருந்து வந்த யாக்கோபு பார்வோன் ராஜாவை ஆசீர்வதிக்கிறான். பிரியமானவர்களே! நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், தேவனை உங்கள் வாழ்க்கையில் உள்ளடக்கும்போது, பரிசுத்தத்தையும் மற்றும் அர்ப்பணத்தையும் ஒன்றாக்கும்போது, தேவன் இல்லாமல் என்னால் கூடாது என்று பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது நிச்சயம் நீங்கள் எல்லாரைக் காட்டிலும் உயர்த்தப்படுவீர்கள்; இது நிச்சயம்.
ஒரு பெரிய ராஜாவுக்கு யாக்கோபு ஆசீர்வாதம் கூறுகிறான், ஆதி. 47:10-ல் மீண்டும் பார்வோனை யாக்கோபு ஆசீர்வதிக்கிறான். இப்போது பார்வோனுக்குத் தெரிந்துவிட்டது. இந்த மனிதன் என்னை ஆசீர்வதிப்பதற்காகப் படைக்கப்பட்டவன், அனுப்பப்பட்டவன் என்று; எனவே, ஆசீர்வதிக்கும் பாத்திரமாகவே யாக்கோபை பார்வோன் பார்க்கும் நிலைக்கு அவன் மாறிவிட்டான். பிரியமானவர்களே! நாம் எத்தனை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தாலும், நம்மை ஆண்டவருக்குப் பூரணமாக ஒப்புக்கொடுக்கும்போது, பயனற்றவனாயிருந்தாலும் புழுதியிலிருந்து தூக்கி எடுத்து பிரபுக்கள் மத்தியில் உட்கார வைக்கிறவர் நம் ஆண்டவர்.
பீஹாரின் 'ஜப்லா" என்ற கிராமத்தில் ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டான். அவனுடைய வேலை, வயலில் கூலிக்கு அறுவடை செய்வது. மிகவும் தாழ்வான குடும்பத்தில் பிறந்த அவன், இயேசுவைப் பற்றி நமது ஊழியர் ஒருவர் மூலமாக அறிந்து, அவரை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, ஞாயிற்றுக்கிழமையில் எந்த வேலையும் செய்வதில்லை என்றும் ஆண்டவரை மட்டுமே ஆராதிப்பேன் என்றும் தன் மனதில் தீர்மானம் எடுத்தான். பீஹாரில், கோதுமை அறுவடை நாட்களில், தங்கள் ஊரை விட்டு விட்டு, மற்ற இடங்களிலிருக்கும் பண்ணையார்களுக்கு மற்றும் பண்ணைகளுக்கு வயலில் அறுவடைக்குச் சென்று சம்பாதிப்பது இங்குள்ள ஜனங்களின் வழக்கம். அவ்வாறு ஒருமுறை ஓரிடத்தில் அவன் அறுவடைக்குச் சென்று தங்கியிருந்த நாட்களில், ஒரு ஞாயிற்று கிழமை அன்று, 'இன்று ஆண்டவரை ஆராதிக்கவேண்டும்; எனவே, இன்று வயலிலே வேலை செய்ய முடியாது" என்று பண்ணையாரிடம் சொன்னபோது, பண்ணையார் பதிலாக, 'எல்லோரும் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு அறுக்கிறார்கள். நீ ஆண்டவரிடத்தில் ஜெபிக்கப்போகிறாயா" எனக் கூறி அவனை அனுப்பிவிட்டார்.
அவனோ, ஞாயிற்றுக் கிழமை அன்று, தூரத்திலிருந்த ஒரு மரத்தின் கீழ் முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்கினான். இந்நிலையில், பதினைந்து வருடங்களாக நீங்காத வியாதியினால், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சுகம் பெறாத பண்ணையாரின் மனைவி இதைக் கவனித்து, என்ன செய்கிறாய்? என அவனிடத்தில் கேட்டபோது, 'நான் ஜீவனுள்ள ஆண்டவரை வணங்குகிறேன்" என்றான் அவன். அப்போது பண்ணையாரின் மனைவி, 'உங்கள் ஆண்டவர் உயிரோடு இருப்பாரானால், எனது பதினைந்து வருட நீங்காத வியாதி சுகமாகுமா? எனக்காக எனது கணவர் பல லட்சம் பணம் செலவழித்தும் சுகமாகாத நிலையில், இனி வெளிநாடு சென்று சிகிச்சை செய்வதா அல்லது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாமா என யோசிக்கிறார். எனவே, அந்த ஜீவனுள்ள தேவனிடத்தில் எனக்காக வேண்டுதல் செய்" என்று அவனிடத்தில் கேட்டுக்கொண்டாள். இதைக் கேட்ட அந்த மனிதன், உடனே அந்த பண்ணையாரின் மனைவியின் தலை மீது கைவைத்து ஜெபித்தபோது, ஒரு வாரத்தில் தன் சரீரத்தில் வித்தியாசத்தை உணர்ந்த அவள், தன் கணவனாகிய பண்ணையாரிடம் அறுவடைக்கு வந்த அந்த மனிதனிடத்தில் சக்தி இருப்பதாகக் கூறினாள். ஆனால், பண்ணையாரோ அவன் பன்றி மேய்க்கிறவன் என அலட்சியமாகப் பதிலளித்தார். அவளோ, அவன் பன்றி மேய்க்கிறவன் அல்ல எனக்கு மறுவாழ்வு கொடுக்க வந்தவன் எனக் கூறியதுடன், அவன் போகும் போது ஐந்து மூட்டை கோதுமையையும் இலவசமாகக் கொடுத்து அனுப்பினாள். அவன் மூலமாக இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொண்டாள். எகிப்தியருக்கு யாக்கோபு அருவருப்பானவன்தான்! ஆனால், பார்வோனோ, 'நீ என்னை ஆசீர்வதிக்கவேண்டும்" என்று தலை குனிந்து நிற்கிறான். பிரியமானவர்களே! நாம் வித்தியாசமானவர்கள், நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள், நாம் வைராக்கியமானவர்கள், நாம் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள்; இதனை இந்த உலகத்திற்குக் காண்பித்துவிடுவோம். கர்த்தர் நல்லவர் என்பதை உலக மக்களுக்குச் சொல்ல வைராக்கியம் காட்டுவோம் நாம்.
இதுவரை, மற்றவர்களின் ஆசீர்வாதத்தில் ஆசைகொண்டு வாழ்ந்தவன் யாக்கோபு; இப்போதோ, ராஜாக்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் மனிதனாக மாறிவிட்டான். இந்த சந்தர்ப்பத்திற்குப் பின் யாரிடத்திலும் யாக்கோபு ஆசீர்வாதத்தைக் கேட்கவே இல்லை; எல்லாருக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் பாத்திரமாக அவன் மாறிவிட்டான்; எத்தனை பெரிய மாற்றம்! இதுவரை பெற்றுக்கொள்ளுகிற இடத்தில் இருந்தவன், தேவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுத்தபோது, அது அவனது வாழ்க்கையையே முற்றிலும் மாற்றிவிட்டது. ஆதி. 48:15-ல் யாக்கோபு யோசேப்பை ஆசீர்வதிக்கிறான், பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறான். எனக்கு ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறினவன், இப்பொழுது மற்றவர்களை ஆசீர்வதிக்கிறான்; ஆசீர்வாதத்தின் ஊற்றாகவும் மாறுகிறான். பிரியமானவர்களே! நமது அர்ப்பணம் சரியாக இருந்தால், ஒருக்காலும் நாம் நமக்கென்று வாழமாட்டோம். சபையே நீயும் நானும் ஆசீர்வாதத்திற்கென்றே அழைக்கப்பட்டிருக்கிறோம். தீமைக்குத் தீமையையும், உதாசீனத்திற்கு உதாசினத்தையும் சரிகட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்து, ஆசீர்வதியுங்கள் (1 பேதுரு 3:9). நாம் ஆசீர்வதிக்கப்படுவதோடு, மற்றவர்களையும் ஆசீர்வதிக்கும்படியாகவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டார்.
'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்" (மத். 5:44) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பிரியமானவர்களே! நாம் அழைக்கப்பட்ட அழைப்பு மற்றவர்களை ஆசீர்வாதமாக்குவதற்குத்தான். இந்திய நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது கிறிஸ்தவ மிஷினரிமார்களே என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. நமது இந்தியாவில் முதன் முதல் ரயிலுக்காகப் பாதை அமைத்தபோது, 'வெள்ளைக்காரன் பெரிய பெரிய கம்பியைப் போட்டு நம்மை வெளிநாட்டுக்குக் கொண்டு போகப்போகிறான்" என்றுதான் அப்போது இந்தியாவிலிருந்த மக்கள் கூறினார்கள். இந்தியாவிற்கு முதன் முதலில் அச்சு இயந்திரத்தைக் கொண்டுவந்தது யார்? கிறிஸ்தவ மிஷனரியான வில்லியம் கேரியே! அதற்கான இருநூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது; அப்போதையக் குடியரசுத் தலைவர் எஸ்.டி. சர்மா அவர்கள் கொடுத்த உரையை அறிந்தால் இது விளங்கும்.
உடன்கட்டை (சதி) ஏறுதல் அதிகமாக இருந்த நாட்களில், உடன்கட்டை ஏறுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது மிஷனரிமாரே! மருத்துவத்தைக் கொண்டுவந்தது யார்? கிறிஸ்தவ மிஷனரிமாரே! ஏனென்றால், அவர்கள் போகிற இடத்திலெல்லாம் அவர்கள் ஆசீர்வாதத்தைக் கொண்டுபோய்தான் ஆகவேண்டும்! சாலை, பாதை, கூட இல்லாத ஆப்பிரிக்க கண்டத்துக்கு முதன்முதலாக சென்றவர் மிஷனரி டேவிட் லிவிங்ஸ்டன். ஒரு டாக்டராக அங்கே சென்று, தன் முழு முயற்சியோடும் பெலத்தோடும் காடுகளிலும் மற்றும் மலைகளிலும் நடந்து திரிந்தார். விடியற்காலத்திலே சூரியன் உதிக்கும் முன் தேவனைத் தரிசிக்கும் அந்த பக்தன், ஒவ்வொரு இடத்திற்கும் சென்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்துக் காரியங்களையும் உலகிற்கு எடுத்துக் காட்டினது மாத்திரமல்ல, இன்றைக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தை முன்னுக்குக் கொண்டுவந்ததற்கும் மூல காரணமானவர். ஆடை இல்லாத, அரை மனிதனாக நின்றவனுக்கு ஆடை கொடுத்து நாகரீகம் சொல்லிக்கொடுத்தது யார்? கிறிஸ்தவ மிஷனரிகளே!
சபையே இன்றைக்கு நீ பூமிக்கு உப்பாக இருக்கிறாய்! உப்பு பூமியிலிருந்து முற்றிலும் எடுக்கப்பட்டுவிட்டால் பூமி ஒன்றுக்கும் உதவாது! வெளியே கொட்டப்படுவதுதான் அதன் நிலையாயிருக்கும். ஆகையினால்தான், ஆண்டவர் வரும்போது அவருடையவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்! பூமியிலே பெரும் உபத்திரவம் உண்டாகும்! என்று வேதத்தில் வாசிக்கின்றோம். பிரியமானவர்களே! இந்நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் உண்டு; அது கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவப் பிள்ளைகளே! மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காகவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம் நிமித்தமாகத்தான் நமது நாட்டை அவர் ஆசீர்வதிக்கவேண்டும். ஆகவேதான், 'நீர் காட்டுகிற எந்த இடத்திற்கும் செல்ல தயார்" என்று, வசதி வாய்ப்புகள் இல்லாத இடத்திற்கும் புறப்பட்டுச் சென்று, ஆசீர்வாதத்தின் காரணர்களாக மாறினார்கள் மிஷனரிகள்; இதை ஒரு மனிதனும் மறுக்க இயலாது. நம் ஒவ்வொருவரையும் இத்தகைய ஆசீர்வாதத்தின் ஊற்றாக வரும் நாட்களில் தேவன் மாற்றுவாராக!
ஒருமுறை, பதவுலா என்கிற இடத்திற்கு எனது மனைவியும் மற்றும் இரண்டு சகோதரிகளும் ஊழியத்திற்காகச் சென்றிருந்தபோது, அங்கே மூன்று வீடுகளில் இருந்த குறி சொல்லுகிற சகோதரிகள் வசனத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள். ஒரு மாதத்தில் அப்பகுதியில் பெரும் காலரா வியாதி வந்தது; அநேகர் மரித்தார்கள்; ஒரே நாளில் ஐந்து பேர் மரித்தார்கள். ஒருபக்கம் சிலர் சபையிலே உபவாசித்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள்; மறுபக்கமோ, ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, ஏன் இந்த வியாதி வந்தது என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினரே இதற்குக் காரணம்; எனவே, அவர்களை ஊரை விட்டே விரட்டவேண்டும் என்று கூறினார் அங்கிருந்தவர்களில் ஒருவர். மற்றொருவரோ, அவர்கள் இந்த கிராமத்திற்காக ஜெபிக்கிறார்கள், அவர்கள் வீட்டில் இந்த வியாதி வரவில்லையே என்றார். இந்நிலையில், உபவாசித்து ஜெபித்த மக்களை அவர்கள் பார்க்கவந்தபோது, அவர்கள், 'ஆண்டவரே எங்கள் கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்றும்" என்று ஆண்டவரிடத்தில் அவர்கள் வேண்டிக்கொண்டிருப்பதைக் கேட்டார்கள்; அன்றே அந்த வியாதி நின்றது. அருகிலுள்ள மூன்று கிராமத்தினரும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். சிறிய கூட்டம்தான், ஆனால், அவர்கள் திறப்பில் நின்று ஜெபித்தனர். வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே.
பிரியமானவர்களே! நாம் தேசத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராவிட்டால் வேறு யாராலும் முடியாது! யாக்கோபைப் போல நமது வாழ்விலும் ஒரு பூரண மாறுதல் உருவாகி, நான் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று கூறுவதைவிட என்னையே ஆசீர்வாதத்தின் பாத்திரமாக மாற்றும் என்று சொல்லுவோமென்றால், நம்முடைய வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றம் உண்டாகும், தேசம் ஆசீர்வதிக்கப்படும், ஜனங்கள் சந்திக்கப்படுவார்கள். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதிக்கிறான், தேசத்தை ஆசீர்வதிக்கிறான், யோசேப்பையும் தனது 12 கோத்திரங்களையும் ஆசீர்வதிக்கிறான். கிறிஸ்துவுக்குள் நாம் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்துவின் மூலமாக தேவன் சபையை ஆசீர்வதிக்கிறார்.
யோசேப்பு கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவன், அவனுடைய வாழ்க்கையை நாம் கவனித்துப் பார்த்தால், கிறிஸ்துவுக்கு முன் அடையாளமான காரியங்கள் நிகழ்ந்ததை நாம் அறிந்துகொள்ள முடியும். அதுமாத்திரமல்ல, பன்னிரெண்டு கோத்திரங்களையும் குறித்து தெளிவாகவும் திட்டமாகவும் கடைசி நாட்களில் வருவதை அறிவிக்கும் தீர்க்கதரிசியாகவும் அவன் மாறிவிட்டான்; அல்லேலுயா! தேவனை தனக்காக மாத்திரமல்ல. தனது குடும்பத்திற்காகவும் மாற்றிவிட்டான்; தேவனுக்கென்று எதையும் செய்வதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டான். ஆண்டவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவுடன் தேசங்களைக் குறித்து, ஜனங்களைக் குறித்து, தன் பிள்ளைகளைக் குறித்து, கடைசி நாட்களைக் குறித்தும் அவன் வெளிப்பாட்டினைப் பெறுகிறான்; அல்லேலூயா! அவனுடைய கண்கள் திறக்கப்படுகின்றன, வெகு தூரத்திலிருக்கிறவர்களையும் தெளிவாகப் பார்க்கும் கண்களை உடையவனாக மாறுகிறான் அவன். அருமையானவர்களே, 'ஆண்டவரே! தீர்க்கதரிசன வரத்தை எனக்குத் தாரும்" என்று அநேகர் ஜெபிப்பது உண்டு. ஆனால், 'முழுவதும் என் ஆண்டவருக்கே" 'பரிசுத்தத்திற்கே முதலிடம்" 'எனக்கென்று வாழ்ந்ததெல்லாம் போதும்; இனி வாழ்வது என் ஆண்டவருக்கே" என்று நாம் சொல்லுவோமென்றால், நமது கண்கள் திறக்கப்பட்டு, நம்முடைய வார்த்தைகளும் தீர்க்கதரிசனங்களாக மாறிவிடும். தேசங்களுக்காகக் கண்ணீர் விடுவோம், ஜாதிகளுக்காகக் கண்ணீர் விடுவோம், ஆத்துமாக்களை எப்படியாகிலும் தரவேண்டும் என்று தேவசமூகத்தில் போராடி ஜெபிப்போம்; நம்முடைய வார்த்தைகளும் தீர்க்கதரிசனங்களாக மாறும். 'கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7) என்று எழுதப்பட்டிருக்கின்றதே; அப்படியிருக்க, இந்த தேசத்தைக் குறித்த உம்முடைய தீர்மானங்கள் என்ன? என்று கேட்போம். 'தீர்க்கதரிசன வரம் வேண்டும்" என்று கேட்பதைக் காட்டிலும், நாம் தேசத்திற்காகக் கண்ணீர் விட்டு அழுவோமென்றால், நாம் சிறுபிள்ளை என்று நம்மைச் சொன்னாலும் அவர் நம்மைத் தூக்கியெடுத்து 'இதோ தேசத்திற்கு உன்னை தீர்க்கதரிசியாக மாற்றுகிறேன்" என்று சொல்லுவார். இந்த இரகசியம் இன்று அநேகருக்குப் புரிவதில்லை. யாக்கோபு ஒரு சாதாரண மேய்ப்பன்தான், அவனது சொப்பனங்களெல்லாம் சாதாரணமானவைகள்தான். ஆனால், ஒரு நாளிலே, தனது பன்னிரெண்டு குமாரர்களையும் அழைத்து, 'கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்" என்று ஒவ்வொருவருக்கும் சொன்னபோது, யூதாவைக் குறித்து, 'சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்" (ஆதி. 49:10) என்று தீர்க்கதரிசனமாகக் கூறுகின்றான்.
இறுதியாக, யாக்கோபு மரித்தபோது, எகிப்திலே எழுபது நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. உலகத்தில் எந்த மனிதனுக்கும் இத்தனை நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவில்லை; எங்கு அருவருத்தார்களோ! அங்கு 70 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டேவிட் லிவிங்ஸ்டன் இங்கிலாந்தின் பெரிய பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஒரு மிஷனரி அறைகூவல் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டபோது, அங்கு சொல்லப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் நிலை அவரது இதயத்தை உருக்கிற்று. ஆப்பிரிக்காவிற்கு மிஷனரியாகச் சென்றார். பெரிய பெரிய கொசுக்கள் மத்தியில், வசதிகள் இல்லாத இடத்தில் முழங்காலில் நின்று ஜெபித்து, காடுகளிலும் மலையிலும் ஊழியம் செய்தார். ஒரு நாளில் ஜெபிக்கும்போதே இவ்வுலகினை விட்டுப் பிரிந்துசென்றார். அப்போது, அங்குள்ள மக்கள், எங்கள் நாட்டுக்காக உயிர் நீத்த இவரை எங்கள் நாட்டில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அவரது இதயத்தை மட்டும் ஆப்பிரிக்காவில் அடக்கம் செய்துவிட்டு, உடலை இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று ராஜமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. கல்லை தலையணையாக வைத்திருந்தது யாக்கோபின் ஆரம்பம்; ஆனால், எல்லா ராஜாக்களைக் காட்டிலும் எழுபது நாட்கள் அரச மரியாதையோடு அவனது அடக்கம் நடந்தது! பிரியமானவர்களே! நம்முடைய முடிவைக் குறித்து என்ன? சம்பூரணமாய் இருக்கவேண்டுமென்றால், 'இனி நம்முடைய வாழ்க்கையின் ஆசீர்வாதத்தைக் கூட்டினது போதும்; என்னையே ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக மாற்றும்" என்று ஆண்டவரிடம் கேட்போம். இந்த உலகத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிறவர்களாக, மற்றும் அறியாத, சாபங்கள் மிகுந்த, தீட்டு மிகுந்த, அந்தகாரம் மிகுந்த இடங்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும் ஊற்றாக நாம் மாற்றுவதற்கு நம்மை அவர் கரத்தில் ஒப்படைப்போம். ஆசீர்வாதத்தை அற்புதமாக மாற்ற அனைத்தும் கிறிஸ்துவுக்கே என்று நம்மை அர்ப்பணிப்போம்.
அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாற் கொள்ளும்
கல்வாரியின் சிநேகம் கரைத்திடும் என்றும்
கல்மணம் மாற்றி கரைந்தோடச் செய்யும்
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்