கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவோடு மகிமையிலிருந்தவரும் (யோவான் 17:5), அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தவரும் (நீதி. 8:30), முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தவரும் (1யோவான் 4:19), நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவான் 15:16) என்று நம்மேலிருக்கும் பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படுத்தினவரும், இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது (சங். 40:7) என்ற தாவீதின் வார்த்தைகளின்படி பிதாவின் சித்தம் செய்ய இப்பூமியில் மனிதனாக அவதரித்தவரும், நமக்காக தன்னையே தந்தவருமாகிய உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். ஆளுபவர்கள் ஏரோதுவாயிருந்தாலும், எவராயிருந்தாலும், அவர்களைக் குறித்து பயப்படாமல், பாவத்திலிருக்கும் மனுக்குலத்தை மீட்கும் பணியினை மட்டுமே தனது மனதில் கொண்டு, இத்தரணியில் தன் பணியினைத் தொடங்கிய இயேசு கிறிஸ்துவின் பணியினையே தொடர்ந்து செய்துவரும் அவருடைய சீடர்கள் நாம் என்பதில் இன்றுமென்றும் ஆனந்தமே!! பயங்களோ அல்லது பாடுகளோ இப்பரலோகப் பணியிலிருந்து ஒருக்காலும் நம்மைப் பிரித்துவிடாதபடி கர்த்தர் காப்பாராக!
பிரியமானவர்களே! பாவத்தின் அடிமைத்தனத்தில் சிக்குண்டு, பிதாவை விட்டுப் பிரிந்து, பரலோக வாழ்க்கையினை இழந்து நின்ற மனிதர்களாகிய நம்மை மீட்டெடுக்கும்படியாக, தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்து (யோவான் 1:12), அவருடைய பிள்ளைகளென்று அழைக்கும் 'பிதாவின் அன்பு எவ்வளவு பெரிதானது" (1யோவான் 3:1). இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை பண்டிகையாகக் கொண்டாடுவோர், தாங்கள் அதைக் கொண்டாடுவதைக் காட்டிலும், தங்களுடைய மறுபிறப்பு பரலோகத்தில் கொண்டாடப்பட்டதா? என்ற கேள்விக்கு விடைகாண விழைவது முக்கியமானது. மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோ~ம் உண்டாயிருக்கும் (லூக். 15:7) என்று வாசிக்கின்றோமே, நம்முடைய வாழ்க்கையின் இந்த மகிழ்ச்சியை பரலோகம் அனுபவித்திருக்குமா? அப்படியில்லையென்றால், பண்டிகை நாட்களில் காணப்படும் நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றும் கோஷங்கள் அனைத்தும் பரலோகத்தின் பார்வையில் வெற்று வேஷமாகவே காட்சியளிக்கும்; வெடிகளுக்காகச் செலவழித்தாலும் பரலோகத்தின் பார்வையிலோ அது வேடிக்கையாகத்தான் காட்சியளிக்கும்; விலைமதிப்பான புத்தாடைகளை அணிந்திருந்தாலும், வெளிப்புறத் தோற்றத்தில் பிறர் கண்முன் பொலிவுறத் தோற்றமளித்தாலும், பரலோகத்தின் பார்வையிலோ இரட்சிப்பின் வஸ்திரமற்ற நிர்வாணிகளாகவே நாம் நின்றுகொண்டிருப்போம்.
பண்டிகைகளானாலும், ஆராதனைகளானாலும், ஐக்கியமானாலும், ஆடல் பாடல்களானாலும், கூடுகைகளானாலும், கொண்டாட்டங்களானாலும், வேறெந்த பிற நிகழ்ச்சிகளானாலும், நம்மை முன்னிறுத்துகின்றோமா அல்லது ஆண்டவரை அடையாளப்படுத்த முயற்சிக்கின்றோமா? என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது மிக மிக அவசியம். ஆவிக்குரிய வாழ்க்கையில் மேலோட்டமாய் இருக்கவேண்டியவைகளெல்லாம் மாம்சீக வாழ்க்கையில் மேலோங்கி நிற்க, ஆண்டவரும் மற்றும் அவரது வார்த்தைகளும் அடிமட்டத்திற்குத் தள்ளப்படுமென்றால், அவ்விடத்தை விட்டு நாம் அகன்று அப்புறம் சென்றுவிடுவதே ஆண்டவருக்குப் பிரியமானவர்களாகநம்மை மாற்றும் செயலாயிருக்கும். நம்மையும், நம்முடைய வீட்டையும் மற்றும் ஆலயத்தையும் அலங்காரப்படுத்தி மாம்சீகக் கண்களினால் மகிழ்வதல்ல; மாறாக, அகத்திலிருக்கும் ஆண்டவரோடு களிகூருவதே உண்மையான மகிழ்ச்சியை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரும்.
மனு உருவில் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தபோதிலும், மனிதர்களில் உயர்ந்தவர் அவர்; 'என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" (யோவான் 8:46) என்று தனது பரிசுத்தத்தைப் பிறர் கேட்கப் பிரகடனப்படுத்தினவர். 'இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோவான் 14:30) என்று உறுதியாக உரக்கச் சொன்னவர். 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) என்றும், 'நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்" (யோவான் 10:9) என்றும் வழிகளுள் ஒன்றாக அல்ல 'ஒரே வழியாக" ஜனங்களுக்குத் தன்னை அடையாளப்படுத்தினவர். 'ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும்" என்று பிலிப்பு கேட்டபோது, 'பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?" (யோவா 14:8,9) என்றும், 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (யோவான் 10:30) என்றும், 'என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை" (யோவான் 8:29) என்றும் தனக்கும் பிதாவுக்கும் இடையிலான பிரிக்க இயலாத உறவினை நமக்கும் பாடமாக்கத்தக்கதாக கூறினவர். 'எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான்" (யோவான் 1:15) என்று யோவான் ஸ்நானகனாலும் அறிமுகப்படுத்தப்பட்டவர். இப்படிப்பட்டவருக்கு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், நம்மிடத்திலிருந்து பிறருக்கு வெளிப்படும் வாழ்வியல் முறைகளிலும் இடங்கொடாவிட்டால், ஆடம்பரமாயிருப்பவைகளும் மற்றும் அலங்காரமாயிருக்கும் அத்தனையும் அவர் பார்வையில் ஆகாததாகவே மாறிப்போகும்.
பிரியமானவர்களே! ஆவிக்குரியவர்களாகிய நம்முடைய கண்கள், எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கவேண்டும், எத்தனை திரளான கூட்டத்திலும், அவரை அடையாளம் கண்டுகொள்ள நாம் அறிந்திருக்கவேண்டும். 'என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஸ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்தபொன்வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்" (உன். 5:10-16) என்று வார்த்தைகளால் வடித்துப் பாடும்; சாலொமோனின் வரிகள் அவருக்கு எத்தனை பொருத்தமானவைகள். அநேக நேரங்களில், இத்தகைய நேசர் நம்முடைய வாழ்க்கையில் இருக்கின்றாரா? என்பதை அறிந்துகொள்ள முயலாமல், விழாக் காலங்களில் 'நம்மை நாமே மகிழ்வித்துக்கொள்ள விரும்புகின்றோம்"; அத்தகைய விழாக்களின் முடிவு வெளிப்புறத்தில் பிறர் பார்வையில் குதூகலமாகக் காட்சியளித்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கு ஏமாற்றமாகவே காணப்படும்.
இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டபோது, அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது, சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான் (மத். 16:13-16). இத்தகைய தெளிவான பரத்திற்கடுத்த வெளிப்பாடும் பார்வையும் இன்று நம்முடைய கண்களில் உண்டா? இல்லையேல், 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6) என்று சொல்லுபவரை, 'இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?" (மத். 13:55) என்ற சாதாரணமான மாம்சீகக் கண்ணோட்டத்துடன் கடந்துசெல்லுகின்றோமா? இப்படிப்பட்ட மாம்சீக் கண்ணோட்டத்துடன் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தவர்கள், தங்கள் ஆத்துமாவிற்கு அவரால் கிடைக்கவிருந்த பலனை அடையவில்லையே, அனுபவிக்கவில்லையே!
இயேசு கிறிஸ்து பிறந்தபோது, எருசலேமுக்கு வந்த சாஸ்திரிகள் ஏரோதுவை நோக்கி, 'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்" (மத். 2:2) என்று கேட்கிறார்கள்; நட்சத்திரத்தைக் கண்டதும், சாஸ்திரிகளுக்கு இருந்த ஞானம், 'ராஜா பிறந்துவிட்டார்" என்ற அறிவினை மாத்திரமே அவர்களுக்குக் கொடுத்தது; அது அவர்கள் மாம்சத்தில் பெற்றிருந்த அறிவின் அடிப்படையில் உண்டானது. என்றபோதிலும், அது 'கிறிஸ்துவே" என்ற உணர்வு அவர்களது உள்ளத்தில் உண்டாகவில்லை. எனவே, ஒரு முறை நட்சத்திரத்தைக் பார்த்ததும், ராஜாவின் பிறப்பிடத்தை தாங்களே மனதில் நிர்ணயித்துக்கொண்டவர்களாக, தாங்கள் அறிந்திருந்த ஏரோதுவின் அரண்மனைக்குப் போகும் பாதையில் பயணத்தைத் தொடங்குகின்றார்கள்; வானத்தை நோக்கிப் பார்த்து, கிழக்கிலே கண்ட நட்சத்திரம் செல்லும் பாதையைப் பின்பற்றவோ அவர்கள் மறந்துவிட்டார்கள்.
நட்சத்திரத்தைக் கண்ட இடத்திலிருந்தே, தங்களுடைய அறிவைப் பின்பற்றாமல், அது காட்டும் பாதையில் அவர்கள் பயணித்திருந்தால், அது 'நேர்வழியாகப்" பிள்ளை இருக்கும் ஸ்தலத்திற்கு நேராக அவர்களை வழிநடத்தியிருக்குமே, ஏரோதுவின் அரண்மனைக்கு அவர்கள் சென்றிருக்க வாய்ப்பில்லையே. இயேசு கிறிஸ்துவை தரிசித்த பின், ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள் (மத். 2:12) என்று நாம் வாசிக்கின்றோமே; அப்படியென்றால், குழந்தையாகிய இயேசு கிறிஸ்துவை காண வாஞ்சித்த சாஸ்திரிகளை, இந்த வழியிலேயே, அதாவது, 'நேர்வழியிலேயே" வரும்போதும் அது கூட்டிவந்திருக்கக்கூடுமே. சாஸ்திரிகளுடைய மாம்சீகக் கண்களுக்கடுத்த வழிவிலகுதல், எத்தனை பெரிய பழிவாங்குதலுக்கு ஏரோதுவைத் தூண்டிவிட்டுவிட்டது. வேறு வழியில் சென்றதினால், அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டாலும், பாலகனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர் பாதுகாக்கப்பட்டுவிட்டாலும், எத்தனையோ ஆண்பிள்ளைகளின் உயிரை இவ்வுலகை விட்டுப் பிரித்துவிட்டதே (மத். 2:16,17).நம்முடைய வாழ்க்கையிலும், வழிவிலகுவதினால் உண்டாகவிருக்கும் விபத்தினைப் புரிந்துகொண்டவர்களாக அவர் காட்டும் நேர்வழியில் பயணிப்பது எத்தனை அவசியம். மாம்சீகக் கண்கள் பரத்தின் பாதையை விட்டு நம்மை விலக்கிவிடக்கூடாது, பிறரது வாழ்க்கைக்கும் அது ஆபத்தாக முடிந்துவிடக்கூடாது.
அநேக நேரங்களில் 'நேர்வழியாக" நம்மை வழிநடத்த தேவன் முயற்சிக்கின்றபோதிலும், நமக்கு இருக்கும் அறிவினால் நாம் வழிவிலகிச் சென்றுவிடுகின்றோம். பயணம் தொடங்கக் காரணமாயிருந்தது அவர்தான்; என்றாலும், பாதை மாறிச் சென்றுவிடுகின்றோம். கிழக்கிலே தோன்றிய நட்சத்திரம், அதன் இலக்காகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி 'நேர்வழியாக" நடத்திச் செல்ல ஆயத்தமாயிருப்பதை சாஸ்திரிகள் அறிந்துகொள்ளாமல், கிறிஸ்துவுக்கு எதிரியாகிய ஏரோதுவின் அரண்மனைக்குள் சாஸ்திரிகள் நுழைந்துவிட்டதைப் போல, நாமும் அநேக நேரங்களில் மாம்சீகக் கண்களைப் பின்பற்றி, எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்துவிடுகின்றோம்; என்றபோதிலும், 'யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது" (மத். 2:6) என்று எதிரியின் எல்லைக்குள்ளிருந்தும் வசனத்தின் மூலம் நம்மை வழிநடத்த தேவன் போதுமானவர். தேவன் காட்டுகின்ற நேர்வழியினை சில நேரங்களில் நாம் தவறவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை புரிந்துகொள்ளவும் மற்றும் உணர்ந்துகொள்ளவும் நாம் தடுமாறினாலும்; எழுதப்பட்டிருக்கும் வசனங்களைக் கொண்டு நம்மை வழிநடத்த தேவன் போதுமானவர்; எப்படியாகிலும், நம்மை இலக்கை அடையவைப்பதே அவரது நோக்கம்.
எழுதப்பட்டவைகளை அறிந்துகொண்டவர்களாக, ஏரோதுவின் அரண்மனையிலிருந்து வெளியே வந்ததும், மீண்டும் வானத்தை நோக்கிப் பார்த்த சாஸ்திரிகள், அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, 'மிகுந்த ஆனந்த சந்தோ~மடைந்தார்கள்" (மத். 2:10). பின்னர், அந்த நட்சத்திரம் காட்டிய வழியிலேயே தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். நட்சத்திரம் காட்டிய வழியில் அவர்கள் சென்றபோது, 'அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்". (மத். 2:11) சாஸ்திரிகள் பாதை மாறிச் சென்றபோது, நட்சத்திரம் 'நேர்வழியாக" தன் வழியில் சென்றுவிடவில்லை, எப்படியாகிலும் அவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று, அவர்கள் அறியாதபோதிலும், அவர்கள் அதனைப் பின்பற்றாதபோதிலும், அவர்களோடு கூட தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தது. சாஸ்திரிகள் நட்சத்திரத்தைப் பின்பற்றி நடந்திருக்கவேண்டும்; ஆனால், இப்போதோ, அவர்கள் வழிவிலகிச் சென்றதினால், நட்சத்திரம் அவர்களைப் பின்பற்றிச் செல்லவேண்டியதாயிற்று. அநேக நேரங்களில், வழிகாட்டும் நட்சத்திரத்தை விட்டு விட்டு, நமக்கு இருக்கும் அறிவினை மாத்திரமே சார்ந்துகொண்டவர்களாக வழி மாறிச் செல்வதினாலேயே, வேதனைகளை வாழ்க்கையில் கூட்டிக்கொள்ளுகின்றோம்; மாத்திரமல்ல, தேவனை நமக்குப் பின்னே தள்ளிவிடுகின்றோம்.
'யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" என்று சாஸ்திரிகள் கேட்டபோது, ஏரோதுவோ, பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்து: 'கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று" அவர்களிடத்தில் விசாரிக்கின்றான் (மத். 2:4). அப்படியென்றால், 'கிறிஸ்துவைக் குறித்த அறிவு" ஏற்கனவே ஏரோதுவுக்கு இருந்திருக்கிறது என்றும், 'அவர் யூதருக்கு ராஜாவாக எழும்புவார்" என்பதை அவன் முன்னமே அறிந்திருந்தான் என்றும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றதல்லவா. ஏரோதுவுக்கு இருந்த இந்த அறிவு சாஸ்திரிகளுக்கு இல்லையே!
இன்றும். உலகத்தின் இரட்சகராக 'கிறிஸ்து" பிறந்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளாமல், 'யூதருக்கு ராஜா" என்ற அறிவோடு மாத்திரமே நின்றுவிட்ட சாஸ்திரிகளைப் போல, நாமும் அநேக நேரங்களில் நின்றுவிடுகின்றோம். அடையாளங்களைத் தொடர்ந்து அவர் நடத்தும் வழிகளுக்கு உடன்படாமற்போய்விடுகின்றோம். கிறிஸ்து பிறப்பின் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றபோதிலும், இரட்சகராக 'கிறிஸ்துவை" இன்றும் பலரது கண்கள் காணக்கூடாமலிருப்பதற்கான காரணம் இதுவே. சாஸ்திரிகளுக்கு 'ராஜா" என்ற அறிவு மாத்திரமே இருந்தது; ஆனால், எதிரியோ அவர் 'கிறிஸ்து" என்பதை அடையாளம் கண்டுகொண்டான்; அதனாலேயே, அவரை கொலைசெய்யத் துடிக்கின்றான். இன்றும் இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் அநேகருக்கு சாஸ்திரிகளுக்கு இருந்ததைப் போன்ற அறிவு இருக்கக்கூடும்; ஆனால், எதிரியாகிய சாத்தானோ, ஒருபடி மேலாக, 'அவர் உலக இரட்சகர்" என்ற அறிவுடன் அவரை அறிவிக்காதபடிக்கும், ஜனங்கள் அவரை அடையாதபடிக்கும் நம்மை தடைசெய்ய முற்படுகின்றான். சத்துருவின் இத்தகைய சூட்சுமத்தைப் புரிந்தவர்களாகச் சுவிசே~ப் பணியில் நாம் முன்னேறிச்செல்லவேண்டுமே.
சாஸ்திரிகளுக்கு வானத்தைக் குறித்த அறிவு இருந்தது, ஆனால் வசனத்தைப் பற்றிய அறிவில்லை; பிரதான ஆசாரியருக்கும், ஜனத்தின் வேதபாரகருக்கும் வசனத்தைப் பற்றிய அறிவு இருந்தது, ஆனால் வானத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறிவில்லை. ஆனால், ஏரோதுவோ, வானத்தைக் குறித்த அறிவுடைய சாஸ்திரிகளையும், வசனத்தைப் பற்றிய அறிவுடைய ஆசாரியர்களையும், வேதபாரகர்களையும் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, கிறிஸ்துவுக்கு எதிராக செயல்பட நினைக்கின்றான்; இச்சூழ்ச்சியை இன்றைய நாட்களிலும், சத்துரு சாத்தியப்படுத்தத் துடிக்கிறான். அப்படியிருக்க, நம்முடைய கண்கள் அவர் காட்டும் வழியினை மாத்திரமே பின்பற்றிச் செல்லவேண்டியது எத்தனை அவசியம், அத்தகையக் கிருபையினை இந்நாட்களில் கர்த்தர் நமக்குத் தருவாராக.
மாம்சீகக் கண்கள் மாம்சத்திற்கே மகிழ்ச்சி தேடும்
மனமது ஆலயமானால் ஆண்டவருக்கே மகிழ்ச்சி சேரும்
மறுபிறப்பின் அனுபவம் மனிதனுக்கு மறுவாழ்வு தரும்;
மண்ணுலகம் அல்ல விண்ணுலகேயதைக் கொண்டாடும்
மாம்சீக வழிநடந்தால் மாறிவிடும் பாதையும் பயணமும்
மறுபடியும் ஒளிகண்டால் வழிதெரியும் நேர்வழி தெரியும்
'உலக இரட்சகர் அவர்" இந்த உண்மையை எதிரியே உணர்ந்திருக்க
உண்மையறிந்த நாம் இனி உறங்காது முன்னேறவேண்டாமோ?
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. P. J. கிருபாகரன்