கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கம் செய்கிறவரும் வாக்குத்தத்தத்தை பிள்ளைகளுக்கும் உரித்தாக்குகிறவருமாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துகள். (யாத். 3:16; 20:6 அப். 2:39)
'எழும்பும் புதிய தலைமுறைக்கு சபையின் பொறுப்பு" என்பதே இம்மடலின் தலைப்பு.
அப்போஸ்தலர் 2:17 - 'கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்..."
சபை துவக்கப்பட்டபோது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகச் சொல்லப்பட்ட விஷயம்: குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். தீர்க்கதரிசனம் மற்றவர்களுக்கு பக்தி விருத்தியை உண்டாக்குகிறது. 1கொரிந்தியர் 14:3 பக்தி விருத்தி என்கிற சொல்லுக்கான கிரேக்க மூல சொல் oikodomeo (ஓய்கோடோமியோ); அதன் பொருள் "கட்டி எழுப்புதல்" என்பதாகும்.
குமாரரை குமாரத்திகளை தீர்க்கதரிசனம் சொல்லவைப்பது, பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றால், கட்டி எழுப்புகிறவர்களாக அவர்களை உருவாக்குவது என்று பொருள்.
ஆனால் இன்றைய நிலவரம் என்ன? நேபாளத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை 22 பேர் பலி, தலைநகர் முழுவதும் ஊரடங்கு, பல கட்டடங்கள் பொது சொத்துக்கள் உடைக்கப்பட்டன, பிரதமர் வீடு எரிக்கப்பட்டது, முன்னாள் பிரதமரின் மனைவி கொல்லப்பட்டார் மற்றும் முன்னாள் பிரதமர் தாக்கப்பட்டார்.
தமிழகத்தில் ஒரு சினிமா பிரபலம் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். முதல் மாநாட்டிலே லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடினார்கள்; அங்கு இருந்த நாற்காலிகள் உடைக்கப்பட்டன. இரண்டாவது மாநாடு நடத்த முயன்றபோது, தமிழகத்திலிருந்து யாருமே நாற்காலியை கொடுப்பதற்கு முன்வரவில்லை. எனவே, பக்கத்து மாநிலத்திலிருந்து நாற்காலிகளை வரவழைக்கவேண்டியதாயிற்று. இருப்பவர்கள் சரியில்லை, நான்தான் சரி என்று புதிதாய் வந்திருக்கிறவரால், தன்னுடைய ஆதரவாளர்கள் நாற்காலிகளை உடைப்பதைத் தடுக்கமுடியவில்லை.
அயர்லாந்தில், அங்கு வாழும் ஆசிய மக்கள் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். காரணம், வெள்ளைக்கார இளைஞர்கள் ஆசியர்களைக் குறி வைத்துத் தாக்கியச் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதே. அது உள்;ரோ, பக்கத்து நாடோ, ஐரோப்பாவோ இன்றைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் உடைக்கிறவர்களாக, தாக்குகிறவர்களாகக் காணப்படுகிறார்கள். அவர்களை கட்டி எழுப்புகிறவர்களாக உருவாக்கும் பொறுப்பு சபைக்கு உண்டு.
குடும்பத்திலும் இதை காண முடியும். ஒரு குடும்பத்திலே ஒரு வாலிபனை தாய் கண்டித்தார்கள். கோபப்பட்ட வாலிபன் வீட்டின் கதவை உடைத்துவிட்டான். அந்த வாலிபன் இரட்சிக்கப்பட்டு அபிஷேகிக்கப்பட்டு ஊழியத்திலும் ஈடுபடுகிற வாலிபன் தான்.
பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இந்த தலைமுறையைக் கட்டி எழுப்புகிறவர்களாக உருவாக்குகிறவர்களாக எழுப்புவது தான். அதற்கு நேராகத் தான் சபை இந்த தலைமுறையை வழிநடத்தவேண்டும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்றாலே ஆடுவது, பாடுவது, பரவசம் ஆவது என்பதிலேயே இந்தத் தலைமுறையைக் கொண்டுபோகிறவர்கள், அவர்களுக்கு கேட்டையே விளைவிக்கிறார்கள். ஆராதனை அலை நல்லது, வரவேற்கக் கூடியது; ஆனால், அந்த அலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படவேண்டும். அந்த அலையில் சறுக்கி விளையாடுவதோடு விட்டுவிடக்கூடாது.
அப்போஸ்தலர் 7: 58:- அவனை நகரத்துக்கு புறம்பே தள்ளி, அவனை கல்லெறிந்தார்கள்: சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களை கழற்றி சவுல் எனப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
சவுல் எனப்பட்ட பவுல் ஒரு வாலிபன். அவன் கொலைகாரனாக, சபையை துன்பப்படுத்துகிறவனாக, கிறிஸ்தவர்களை அடிக்கிறவனாக, சிறையில் தள்ளுகிறவனாக இருந்தான். அப்படிப்பட்டவன் கட்டி எழுப்புகிறவனாக மாற்றப்பட்டான்.
2கொரிந்தியர் 10:8:- 'மேலும் உங்களை நிர்மூலமாக்குகிறதற்கு அல்ல, உங்களை ஊன்றக் கட்டுவதற்கு கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தை குறித்து, நான் இன்னும் சற்று அதிகமாய் மேன்மை பாராட்டினாலும் நான் வெட்கப்படுவது இல்லை."
உங்களை ஊன்றக் கட்டுவதற்கு கர்த்தர் எங்களுக்கு கொடுத்த அதிகாரம். சபையை இடித்துப் போடுகிறவனாக இருந்த சவுல் என்கிற பவுல், பின் நாட்களில், சபையை ஊன்றக் கட்டுகிறவனாய் மாறினான். இந்த மாற்றம் எப்படி வந்தது?
கிறிஸ்து அவனை சந்தித்தார். அப்போஸ்தலர் 9:5:- 'அதற்கு ஆண்டவரே நீர் யார் என்றான். அதற்கு கர்த்தர் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம் என்றார்"
கர்த்தர் தன்னை பவுலுக்கு, நீ துன்பப்படுத்துகிற இயேசு, என்று அறிமுகம் செய்து கொண்டார். ஒவ்வொருவருக்கும் தன்னை ஒவ்வொரு விதமாக ஆண்டவர் வெளிப்படுத்தினார்; இருக்கிறவராக இருக்கிறேன் என்றார், காண்கிற தேவனாக வெளிப்பட்டார், சர்வ வல்லவராக சந்தித்தார்; ஆனால், துன்பப்படுத்தப்பட்டவராக, அதுவும் பவுலால் துன்பப்படுத்தப்பட்டவராகத் தன்னை காட்டிக்கொள்கிறார். சரீரமாகிய சபை துன்பப்பட்டால், தலையாகிய கிறிஸ்துவுக்கும் அது துன்பம்தானே. சவுல் என்கிற வாலிபனை ஸ்தேவானின் பிரசங்கம் மாற்ற முடியவில்லை, ஸ்தேவானுடைய மன்னிக்கிற ஜெபம் மற்றும் இறுதி ஜெபம் மாற்ற முடியவில்லை. ஆனால், சபைக்கு வந்த துன்பம் பவுலை மாற்றியது. சபை துன்பப்பட்டதனால்தான் அது கிறிஸ்துவுக்குத் துன்பமாக மாறியது. ஆகவேதான,; அவர் துன்பப்படுத்தப்பட்ட இயேசுவாக தன்னை பவுலுக்கு வெளிப்படுத்தினார். பவுல் இடிக்கிறவனாக இருந்தவன் கட்டி எழுப்புகிறவனாய் மாற்றப்பட்டான். இப்பொழுது சபைக்கு ஏற்பட்டிருக்கிற துன்பங்களுக்காய், பாடுகளுக்காய் மற்றும் உபத்திரங்களுக்காய் ஸ்தோத்திரம். ஏனென்றால், இதுதான் துன்பப்படுத்தப்பட்ட இயேசுவாக அவரை, பல இளம் தலைமுறையினருக்கு வெளிப்படுத்தும். அவர்கள் கட்டி எழுப்புகிறவர்களாக மாறிப் போவார்கள். ஆகவே, துன்பத்தைக் கண்டு பயப்படவேண்டாம். துன்பமே இல்லை, என்கிற கவர்ச்சியான உபதேசங்கள் இந்த தலைமுறையை காந்தம் போல் இழுக்கின்றன. உனக்கு எப்போதும் செழிப்புதான், நீ ராஜரீக ஆசாரியக் கூட்டம், ராஜரீகம் என்றால் அதற்கு ஆடம்பரம் என்பது போன்ற ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உபதேசங்கள், அப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்கள், அப்படிப்பட்ட பாடல்கள், அப்படிப்பட்ட சபைகள், காளான் போல எங்கும் பெருகிவிட்டன. உள்ளங்கையிலேயே மொபைல் போன் மூலமாக, இந்த உபதேசங்கள் எல்லாம் இந்தத் தலைமுறையைப் பிடித்து இழுக்கின்றன. ஆனால், இவை இந்தத் தலைமுறையை கட்டி எழுப்புகிறவர்களாக உருவாக்க முடியாது. சபைக்கு வருகிற துன்பங்கள் தான் அதை செய்ய முடியும்.
ஆகவே, இந்த ஒன்றிய ஆட்சி போய்விட்டால், துன்பமே இருக்காது, என்று எண்ணுவது சரியல்ல. இந்த கட்சி இப்போதைக்கு போவது போல் இல்லை; இனி வரப் போகிற துன்பங்களுக்காகவும் ஸ்தோத்திரம். தமிழ்நாட்டிலே துன்பங்கள் குறைவு, அவை ஒரு வேளை அதிகமாகிவிட்டால், அதற்காகவும் ஸ்தோத்திரம்.
கட்டி எழுப்புகிறவர்கள் என்ன செய்வார்கள் என்று 2கொரிந்தியர் 10 படம் பிடித்துக் காட்டுகிறது:-
வசனம் 1 முதலாவதாக, 'உங்கள் மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான்.." கண்டிப்பு கட்டி எழுப்பும்.
வசனம் 2 அதை ஆமோதிக்கிறது. 'சிலரை குறித்து நான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு..."
வசனம் 3 இரண்டாவதாக, 'மாம்சத்தின் படி போர் செய்கிறவர்கள் அல்ல".
வசனம் 4 எங்களுடைய போர் ஆயுதங்கள் மாம்சத்துக்கு ஏற்றவைகளாய் இராமல் தேவ பலம்
உள்ளவைகளாய் இருக்கிறது"
அப்போதும் கிறிஸ்தவத்துக்கு அரசு அனுமதி இல்லை, சபை நடத்த அரசு அனுமதியில்லை, சுவிசேஷம் சொல்ல அரசு அனுமதி இல்லை, அப்படிப்பட்ட சூழ்நிலையைத்தான் சபை முதல் 300 ஆண்டுகள் சந்தித்தது. அனுமதி இல்லாத நிலை மட்டுமல்ல, ஊழியம் செய்தாலே, ஆண்டவரை ஆராதித்தாலே கைது, அடி, உதை, கொலை, சிறை மற்றும் புறக்கணிப்பு இவையெல்லாம் இருந்தன. ஆட்சி மாறவேண்டும் என்று ஜெபிக்க பவுல் சொல்லவில்லை. அரசாங்கம் நமக்கு அனுமதி கொடுக்க வேண்டும், அதற்காக நாம் மனு கொடுப்போம், அதற்காக நாம் ஒரு ஊர்வலம் போவோம், கூட்டத்தை கூட்டுவோம் என்று சொல்லவில்லை. நாம் மாம்சத்தின்படி போர் செய்கிறவர்கள் அல்ல.
மாம்சீக ஆயுதங்கள் நம் ஆயுதங்கள் அல்ல. தேவ பலமுள்ள ஆயுதங்கள் ஆவிக்குரிய ஆயுதங்கள். இந்த ஆவிக்குரிய ஆயுதங்கள்தான் மற்றவர்களை கட்டி எழுப்பும்.
மூன்றாவதாக, வசனம் 13:- 'நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்டாமல், உங்களிடம் வரைக்கும் வந்து எட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவு பிரமாணத்தின்படியே மேன்மை பாராட்டுகிறோம்"
வசனம் 15:- 'எங்கள் அளவை கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம்"
ஒரு அளவுப் பிரமாணம் பவுலுக்கு இருந்தது. எது தன்னுடைய எல்லை? எந்த எல்லை வரை போகலாம்? போக வேண்டும், என்று அவன் அறிந்து இருந்தான். அது மற்றவர்களை கட்டி எழுப்பியது.
நான்காவது, வசனம் 18:- 'தன்னைத்தான் புகழ்கிறவன் உத்தமன் அல்ல: கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்"
புகழை நாடிப் போகவே இல்லை. புகழை நாடுகிறவனின் கட்டியெழுப்புகிற திறன் குறைந்து விடும். சில பட்டங்கள், சட்டப்பூர்வமாக, அரசுத் தொடர்பு போன்ற காரியங்களில் தேவைப்படுகிறது. ஒரு சபைக்கு பாஸ்டராக இருக்க, சிலருக்கு சில நேரங்களில் ரெவரென்ட் பட்டம் தேவைப்படுகிறது;பல பாஸ்டர்களுக்கு தலைவராய் இருக்கிறவர்களுக்கு, சில நேரங்களில், பிஷப் பட்டம் தேவைப்படுகிறது; ஒரு முதுகலை இறையியல் படிப்பு இருக்கிற வேதாகமக் கல்லூரியை நடத்துகிறவருக்கு, சில நேரங்களில் டாக்டர் பட்டம் தேவைப்படுகிறது; அது தேவை என்கிற அளவில்தான், பயன்படவேண்டும். புகழுக்காக ஒரு பட்டத்தை பெறுவதும் கொடுப்பதும் கட்டி எழுப்புகிற திறனை குறைத்து விடும். இன்னும் பல பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன, வாங்கப்படுகின்றன, விளம்பரங்கள் மனிதருக்குச் செய்யப்படுகின்றன. இவை எல்லாமே பிறரைக் கட்டி எழுப்புகிறத் திறனைக் குறைத்துவிடும் என்று பவுல் அறிந்திருந்தான்.
அப்போஸ்தலர் 2: 17 சொல்லுகிற இன்னொரு விஷயம்:- 'உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்."
தரிசனம் பெற்ற இளம் தலைமுறையினரை உருவாக்குவது சபையின் பொறுப்பு. ஆவியானவர் அதை செய்தாலும், சபை ஆவியானவரோடு இணைந்து கரம் கோர்த்து செயல்படாவிட்டால் அது நடக்காமல் போய்விடலாம்.
அதே சவுல் என்கிற வாலிபன் அப்போஸ்தலர் 26:19-ல் பரம தரிசனத்தைப் பெற்றவனாய் உருவாகிவிடுகிறான்.
தரிசனத்திலே இரண்டு வகை உண்டு; ஒன்று வந்து போகிற தரிசனம், அது மின்னலைப் போல வந்து போகிறது. அப்படிப்பட்ட தரிசனங்களையும் பவுல் கண்டான். அப்போஸ்லர் 16-ல், ஒரு மக்கேதோனியன் வந்து, 'எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டதாக ஒரு தரிசனம் கண்டான். இப்படிப்பட்ட தரிசனங்கள், மின்னலைப் போன்ற தரிசனங்கள். வந்து போகிற தரிசனங்கள். இவைகளும் தேவை, இவைகளும் பரிசுத்த ஆவியின் மொழிதான். ஆனால், கண்முன்னே நிலைத்து நிற்கிற, மலை போன்ற தரிசனங்கள்தான் பிரதானமானது.
இந்த பரம தரிசனத்திலே அப்போஸ்தலர் 26:16- 18 வரை:-
நான் என்ன செய்கிறேன்? என்ற வெளிப்பாடு
கர்த்தர் யார்? என்ற வெளிப்பாடு
நான் என்ன ஆக வேண்டும்? என்கிற வெளிப்பாடு.
நான் என்ன செய்ய வேண்டும்? என்கிற வெளிப்பாடு.
இவைகளின் கலவை தான் பரம தரிசனம்.
தரிசனத்தின் முதல் பகுதி, நான் என்ன செய்கிறேன்? என்ற வெளிப்பாடு முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம், என்று கர்த்தர் சொன்னார் இந்த தலைமுறை முள்ளில் உதைத்து கொண்டிருக்கிற தலைமுறை. இன்றைய தலைமுறை தாங்கள் செய்கிறது என்னவென்று அறியாது இருக்கிறார்கள். அதை சமூக ஊடகத் தலைமுறை என்று கூட அழைக்கலாம். லைக்குகள், வியூக்கள், ரீல்கள் மற்றும் ஷாட்ஸ்கள், இன்ஸ்டாகிராம் இவற்றைப் பிடித்துக்கொண்டு போகிற ஒரு தலைமுறை. Screen Addiction எனப்படுகிற ஊடகத் திரைக்கு அடிமைப்பட்ட ஒரு தலைமுறை. ஊடகத்திலே நல்ல காரியங்களும் இருக்கின்றன; ஆனால், கெட்ட காரியங்கள் தான் அதிகம். தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகப் பண்ணப்படுகிற கோமாளித்தனங்கள், ஆபத்தான விஷயங்கள், சர்ச்சையைக் கிளப்புகிற விஷயங்கள் இவற்றில் இன்றைய தலைமுறை சிக்கியிருக்கிறது.
இரண்டாவதாக, நட்பு என்றால் என்னவென்று தெரியாத ஒரு மாயையிலே இன்றைய தலைமுறை சிக்கியிருக்கிறது. ஃபேஸ் புக் பிரெண்ட்ஸ் என்பது நட்பையே மிக துச்சமாக அழைக்கிற ஒரு காரியம். நட்பு என்றால் என்னவென்று புரியாமல், கற்பின் முக்கியத்துவமும் புரியாமல் குழம்பிக் கிடக்கிறத் தலைமுறை.
மூன்றாவதாக, இந்தத் தலைமுறைக்கு யாரை பின்பற்றவேண்டும்? என்று தெரியவில்லை; யார் கிடைத்தாலும் பின்பற்றுகிறார்கள். Follow என்பதும் சமூக ஊடகத்திலே மலிவாகப் போய்விட்டது. மலிவான அரசியல்வாதிகளையும், மோசமான ரவுடிகளையும், ஆபத்தான ஜாதி வாதிகளையும் மதவாதிகளையும், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாத வாண வேடிக்கை நடிகர்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றுகிற தலைமுறை.
நான்காவதாக, தன்னை யார் என்று தெரியவில்லை. Identity crisis உசளைளை என்று சொல்வார்கள்; அடையாளப் பிரச்சனை. சிலர் மிக மோசமாகக் குழம்பி, தான் ஆணா பெண்ணா? என்று கூட உணராமல் போய்விடுகிறார்கள். இவற்றிலிருந்து இவர்களை விடுவித்து, தெளிவுக்கு கொண்டு வர அனனியாக்கள் தேவை.
அப்போஸ்தலர் ஒன்பதாம் அதிகாரத்தில் அனனியா என்கிற சீஷனை ஆண்டவர் பயன்படுத்தி பவுலுக்கு தரிசனத்தை கட்டளையிட்டார். 'அனனியா என்பவன் வந்து ஜெபிப்பான்" என்கிற தரிசனம் வந்து போகிற தரிசனம், மின்னல் தரிசனம். அனனியா வந்து ஜெபித்த பிறகு பவுல் பெற்ற தரிசனம், நிலையான தரிசனம், மலை போன்ற தரிசனம். அப்போஸ்தலர்கள் ஏற்றுக்கொள்ள பயந்தபோது, அனனியா என்கிற சாதாரண சீஷன் பவுலை ஏற்றுக் கொண்டான். அப்படி பரந்த, விசாலமான புதிய தலைமுறையினரை ஏற்றுக் கொள்ளக்கூடிய இதயம் கொண்ட, சாதாரண விசுவாசிகள் சபைகளில் தேவை.
தரிசனத்தின் இரண்டாம் பகுதி கர்த்தர் யார் என்கிற வெளிப்பாடு. 'கர்த்தர் தேவப்பிள்ளைகளின் துன்பத்திலே பங்கெடுக்கிறவர். சரீரம் துன்பப்பட்டால் தலையும் துன்பப்படும். கிறிஸ்து தலை" என்கிற வெளிப்பாடு.
தரிசனத்தின் மூன்றாவது பகுதி:- நான் என்ன ஆக வேண்டும்? என்கிற காரியம். 'உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துவதற்காக" (வசனம் 16) நான் ஊழியக்காரன், நான் சாட்சி, என்கிற வெளிப்பாடு.
தரிசனத்தின் கடைசி பகுதி:- நான் என்ன செய்ய வேண்டும்? யாருக்கு செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும? எங்கே செய்ய வேண்டும்? என்கிற விவரம்.
இத்தனை காரியங்கள் அடங்கிய வெளிப்பாடு தான் பரம தரிசனம். அந்த பரம தரிசனத்தை பவுல் நிறைவேற்றுவதற்கு பர்னபா பெரிய துணையாக மற்றும் தூணாக நின்றான். தன்னோடு சேர்த்துக்கொண்டு ஊழியத்தில் வாய்ப்புகளைக் கொடுத்து அவனை உற்சாகப்படுத்தினான்.
பவுலுக்கு அங்கீகாரத்தைக் கொடுத்து, அவனுக்கு ஆலோசனைகளைக் கொடுத்து, தரிசனம் நிறைவேற உதவி செய்தவர்கள் பேதுருவும் யோவானும். இன்றைக்கு தரிசனம் பெற்ற தலைமுறையை உருவாக்க பர்னபாக்களும் பேதுருக்களும் யோவான்களும் தேவை!
ஜென் இசட் தலைமுறையை - மறு
ஜென்ம வாழ்வினில் நடத்துவோர் தேவை
உடைக்க உத்வேகம் கொண்டோரை
படைப்பாளியாக உருவாக்குவோர் தேவை
பிரசங்கிக்கும் சபை ஜெபிக்கும் சபையை விட
பாடுபடும் சபையே பவுல்களை பிடிக்கும்
தாராள உள்ளம் துணிவு கொண்டோர்
சாதாரண அனனியாக்கள் செயல்பட்டால்
தரிசனத் தலைமுறையை தயாரித்து விடலாம்
பரிவுள்ள பர்னபாக்கள் பவுல்களை ஏற்றால்
சரியான வாய்ப்பு சந்ததிக்கு வாய்க்கும்
அங்கீகாரம் ஆலோசனை பேதுருக்கள் அளித்தால்
அம்புகளாக அடுத்த தலைமுறை பாயும்.
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரன் ஆ. பிரைட் கென்னடி