SEPTEMBER 2026

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

'நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்" (யோவான் 15:16) என்பவரும், கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பவரும் (சங். 25:12), உலகத்திற்கு வெளிச்சமாயிருக்க நம்மை அழைத்தவரும் (மத். 5:14), ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவருமாகிய (யோபு 9:10) ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாட்களில், சமுதாயத்தின், தலைவர்களின் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எப்படியிருக்கின்றன என்றும், தேசத்தில் தேவனைக் காண்பிக்கும் மனிதர்கள் தேவை என்பதை வலியுறுத்தியும், இன்றைய உலகம் முன்மாதிரிகளைத் தேடுகிறது என்பதனை முக்கியப்படுத்தியும் கடந்த இதழில் உங்களோடு பகிர்ந்துகொண்டதோடு,  'ஒரு பெரிய பணிக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள் நாம்" என்றும், 'தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாக தெரிந்தெடுக்கப்பட்ட பணியில் நாம் அமர்த்தப்பட்டிருக்கிறோம்" என்றும், காலத்தைப் புரிந்தவர்களாக வருங்காலச் சந்ததியினருக்கு தேவனைக் காண்பிக்கும் பொறுப்பு நமது கரங்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். தொடர்ந்து, இந்த இதழில், தேவனுடைய, பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுடைய மற்றும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு  ஏற்றாற்போல் வாழாத ஆசிரியர்கள், என்ன தாக்கத்தை சரித்திரத்தில் உண்டாக்குவார்கள் என்பதை வேதத்தின் அடிப்படையில் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். 

லேவியோடே (ஆசிரியர்களோடே) பண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவனோடே (ஆசிரியர்களோடே) பண்ணின என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்துக்குப் பயந்தும் இருந்தான். சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான். ஆசாரியனுடைய (ஆசிரியர்களுடைய) உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன். 

நீங்களோ (ஆசிரியர்களோ) வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் (ஆசிரியரின்) உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன் (மல். 2:4-9) என்று மல்கியா தீர்க்கதரிசியைக் கொண்டு உரைக்கின்றார் ஆண்டவர். 

இந்த வசனங்கள், வேதபாரகர்களையும் மற்றும் லேவியர்களையும் குறித்துப் பேசுகிறது; அந்நாட்களில், வேதபாரகர்களையும், ஆசாரியர்களையும் ஜனங்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் உபயோகித்துவந்தார். இயேசு கிறிஸ்து ஆசாரியனால் போதிக்கப்பட்டார்; சீஷர்கள் ஆசாரியர்களால் போதிக்கப்பட்டார்கள்; அந்நாட்களில், தேவனையும் தேவ ஞானத்தையும் போதிக்க கல்விசாலைகள் என்று எதுவும் இல்லை. எனவே, நிக்கோதேமு இயேசுவை சந்திக்க வந்தபோது, 'இஸ்ரவேலில் போதகனாயிருக்கிற நீ" என்றுதான் இயேசு நிக்கோதேமுவைப் பார்த்துப் பேசுகின்றார். எனவே, ஆசாரியர்களுக்கு என்ற சொல்லப்பட்டவைகளை 'ஆசிரியர்களுக்கு" என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.   

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையிலே 400 வருடங்கள் இடைவெளி இருக்கிறது; தேவன் ஜனங்களோடு பேசுவதற்கு மறுத்துவிட்டபடியினால், அதனை இருண்ட காலம் என்று சொல்லுகிறார்கள். தான் தெரிந்துகொண்ட ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கி, நாற்பது வருடங்கள் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தி, கானான் தேசத்திலே கொண்டு சேர்த்தார் தேவன். அங்கு அவர்கள் கீழ்ப்படியாததினால், பஞ்சங்களை அனுப்பினார், மிருகங்களை அனுப்பினார், யுத்தங்களை அனுமதித்தார், எதிராக சத்துருக்களை எழும்பச்செய்தார்; இன்னும் அநேக காரியங்களின் மூலமாக எப்படியாகிலும் அவர்களை தன்னிடமாகத் திருப்பிக் கொண்டுவந்துவிடவேண்டும் என்று நினைத்தார்; ஆனாலும்,   சாலொமோனுக்குப் பின் அவர்கள் இரண்டாகப் பிரிந்தார்கள் என்று வேதத்தில் வாசிக்கின்றோம். பத்து கோத்திரங்கள் ஒருபுறம், இரண்டு கோத்திரங்கள் இன்னொரு புறம். இவைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக மோதிக்கொள்ளும்படியான சூழ்நிலைகளும் ஏராளமாக உண்டாகிவிட்டன. தேவன் எவ்வளவோ பேசிப்பார்த்தார், எலியாவையும் எலிசாவையும் மற்றும் பெரிய பெரிய தீர்க்கதரிசிகளையும் எழுப்பிப்பார்த்தார்; என்றபோதிலும் எதுவும் நடக்கவில்லை. எனவே, அவர்களை பாபிலோனுக்குக் கொண்டுசென்றார். பாபிலோனில் இரண்டு காரியங்கள் நடைபெற்றன; ஒன்று, விக்கிரக ஆராதனையிலிருந்து அவர்கள் விடுதலையானார்கள்; எனவே, இயேசு வரும்போது விக்கிரக ஆராதனை இஸ்ரவேலிலே காணப்படவில்லை. இரண்டாவதாக, இரண்டு பிரிவாகச் சென்றவர்கள் ஒன்றாக மாறிவிட்டார்கள்.  

ஆனாலும், திரும்பிவந்த பின்பு மீண்டும் தங்கள் மீதான நோக்கத்தை அவர்கள் மறந்துபோனதினால், ஆகாய் மற்றும் சகரியா போன்ற தீர்க்கதரிசிகளை எழுப்பி, 'எல்லாரும் உங்கள் சொந்த வேலையில் இருக்கிறீர்களே, நான் உங்களை ஆலயம் கட்டுவதற்கல்லவா அழைத்தேன்" என்று அவர்களை உணர்த்துவித்தார்; நெகேமியா, எஸ்றா போன்றோர் எழும்பினார்கள். என்றபோதிலும், நூறு வருடங்களுக்குப்பின் அவர்களது நிலை மிகவும் மோசமானதற்கான காரணம் ஆசாரியர்களே என்று ஆண்டவர் கூறுகின்றார். ஏனென்றால், ஆசாரியர்கள், லேவியர்கள் ஜனங்களுக்குப் போதிப்பதில் தவறிவிட்டார்கள். எனவே, தேவன் கோபமடைந்து, நானூறு வருடங்கள் பேசவில்லை. முழு உலகமும் மற்றும் ஜனங்களும் இருளான வாழ்க்கையைச் சந்தித்ததற்குக் காரணம், போதகர்கள் தவறிப்போனதே. மீண்டும் எருசலேம் கட்டப்பட்டது, அதன் சுவர்கள் கட்டப்பட்டன; எழுப்புதலை அவர்களுக்குள் கொண்டுவர தேவன் எஸ்றாவை உபயோகப்படுத்தினார்; என்றபோதிலும், சகரியாவுக்கும் மல்கியாவுக்கும் இடையில் நூறு வருடங்களாக மீண்டும் அவர்கள் கெட்டுப்போனதைப் பார்த்து, ராஜாக்கள் மீது அல்ல, போதகர்கள் மேலேயே தேவன் கோபம்கொள்கிறார். அந்த கோபத்தினாலேயே நானூறு வருடங்கள் தேவன் ஜனங்களோடு பேசவில்லை. பிரியமானவர்களே! ஆசிரியர்கள், வெளிச்சத்தையும் இருளையும் கொண்டுவரும் வலிமையுடையவர்கள்.       

இந்த வசனங்களில், தான் உடன்படிக்கைப் பண்ணின முந்தைய நாட்களின் லேவி கோத்திரத்தோடு கூட, இக்காலத்து போதகர்களை  ஒப்பிட்டுப் பேசுகிறார் தேவன். அவன் அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான் (மல் 2:6) (He kept many out of the ditch - MSG) என்று சொல்லுகின்றார். ஆசிரியர்களே! இவ்வுலகத்தின் கல்வியை மாத்திரம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் தெரிந்தெடுக்கப்பட்டவர்களல்ல; எதிர்காலத் தலைமுறையை, தேசத்தின் எதிர்காலத்தை, உலகத்தின் எதிர்காலத்தை அக்கிரமத்தினின்று திருப்பவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமல்ல,'kept them on the road - MSG" என்றும் வாசிக்கின்றோமே. அப்படியென்றால், நீங்கள் வைக்கப்பட்டிருக்கின்ற இடத்தையும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற பொறுப்பையும் உணர்ந்திருக்கின்றீர்களா?   

ஒருமுறை, ரஷ்யாவில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த எனது மகள் திடீரென தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, 'அப்பா, இனி நீங்க என்னைப் பார்க்கமாட்டீங்க" என்று சொன்னாள். ஏன்? என்ன ஆயிற்று? என்று நான் அவளைக் கேட்டபோது, 'அப்பா, நான் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தின இரண்டு இஸ்லாமியப் பிள்ளைகளுக்கு நீங்க வந்தபோது ஞானஸ்நானம் கொடுத்தீர்கள் அல்லவா, அதை அறிந்துகொண்ட இரண்டு ஈரானைச் சேர்ந்தவர்களும், ஒரு ஈராக்கைச் சேர்ந்தவரும் சேர்ந்து, 'ஒரு முஸ்லீமையே நீ திருப்பிவிட்டாயா" என்று சொல்லி, என்னைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டிவிட்டார்கள்; எனவே, இன்றைக்கு இராத்திரியிலே நான் கொல்லப்படலாம்" என்று சொன்னாள். உடனடியாக நான் அங்கு செல்லமுடியாத சூழ்நிலையில், எனது இதயமே நின்றுவிடும்போல இருந்தது; என்றபோதிலும், அவளைக் குறித்த தேவ தீர்மானத்தை நான் அறிவேன். அவளும் ஜெபித்தாள்; நாங்களும் ஜெபித்தோம். அவளுடைய அறையிலே மேலும் ஐந்து மாணவர்கள் தங்கியிருந்தனர்; சென்னையைச் சேர்ந்த ஒரு பிராமண மாணவியும் தங்கியிருந்தாள்; அவளையும் இவள் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியிருந்தாள்; ஒரு மாணவி ஆந்திராவைச் சேர்ந்த கிறிஸ்தவள், இருவர் கிறிஸ்தவரல்லாதவர்கள், மேலும் ஒரு மாணவி கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்துவை அறியாதவள். கிறிஸ்துவை அறிந்த அவர்களும், நாங்களும், இரவெல்லாம் இணைந்து ஆண்டவருடைய சமுகத்தில் ஜெபித்தபோது, அடுத்த நாள் காலையில் கொன்றுவிடவேண்டுமென்றிருந்த அந்த மூன்று பேரையும் உடனடியாக நாடு கடத்தும்படியாக ரஷ்ய அதிபர் புதின் அலுவலகத்திலிருந்தே கடிதம் வந்தது. அடுத்த நாள் மாலையில், 'அப்பா நான் உயிரோடு இருக்கிறேன்" என்று தொலைபேசியில் சொன்னாள். ஆசிரியர்களே! சிறு சிறு குழுக்களாக இணைந்து ஜெபிக்க மாணவர்களாகிய பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்களா? தேவனோடு ஒரு பிள்ளை இணைக்கப்பட்டிருக்குமென்றால், எப்படிப்பட்ட ஆபத்திலிருந்தும் அது தப்பித்துக்கொள்ள முடியும்; நாமே அதற்கு வழிகாட்டிகள்.   

ஒருமுறை, வகுப்பு ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பாடம் கற்பித்துக்கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் வகுப்பினைச் சோதிக்கும்படியாக அங்கு சென்றார். 'கங்கை நதி இமயமலையிலிருந்து புறப்பட்டு, உத்திரப்பிரதேசத்தைக் கடந்து, பீஹாரைக் கடந்து, பீஹாரின் பக்ஸருக்கு வருகிறது" என்று சொல்லிவிட்டு, அத்துடன் நிறுத்திவிட்டார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், 'சார், பக்ஸருக்கு மாத்திரமல்ல, பீஹாரையும் கடந்து, மேற்கு வங்காளத்திற்குச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது என்று சொல்லுங்கள்" என்று சொன்னபோது, ஆசிரியர் பதிலுக்கு, 'நீங்கள் கொடுக்கிற சம்பளத்திற்கு கங்கை இவ்வளவுதான் போகும்" என்று சொல்லிவிட்டார். பிரியமானவர்களே! இந்த ஆசிரியரைப் போன்று நமது வாழ்க்கை காணப்பட்டுவிடக்கூடாது. நமது நோக்கம் என்ன? நாம் வாங்குகின்ற சம்பளத்திற்கு மாத்திரம் உழைத்துவிட்டு, அதோடு நின்றுவிடுகின்றோமா? அல்லது கரங்களில் கொடுக்கப்பட்டுள்ள பிள்ளைகளை அக்கிரமத்தினின்று திருப்பவும், உருவாக்கவும் முயற்சிக்கிறோமா? முந்தைய நாட்களில், லேவியர்கள், 'அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினதுபோல" நாமும் செயல்படுவோம். 

போன வருடம் மாத்திரம் இந்தியாவுக்கு வந்த கஞ்சா 2400 

டன். பிரியமானவர்களே! வருங்காலத் தலைமுறையைக் குறித்த பாரம் நமக்கு உண்டா? சமூக ஊடகங்கள் வருங்காலத் 

தலைமுறையினரின் அறிவையும், ஞானத்தையும் சூறையாடிக்கொண்டிருக்கின்றன, கறைபடுத்திக்கொண்டிருக்கின்றன, மனதை மாசடையச் செய்கின்றன. இப்படிப்பட்ட அக்கிரமங்களிலிருந்து அவர்களை விடுவிக்க நாம் ஆயத்தமா? இது என்னுடைய பொறுப்பு அல்ல என்று நாம் சொல்லிவிடமுடியாது; முன் நாட்களில் போதகர்கள் இதைச் செய்தார்களே!       

  இரண்டாவதாக, 'ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் 

தூதன்" (மல். 2:7) என்று வாசிக்கின்றோம்.

ராஞ்சி பட்டணத்தில் வருமானவரித்துறை ஆணையராக இருந்த கிறிஸ்துவை அறியாத மற்றும் வைராக்கியமான இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியின் தகப்பனாரது மரணத்தின்போது, அவரை சந்தித்து அவருக்கு ஆலோசனையையும் ஆறுதலையும் கூறிய ஜெம்ஸ் பள்ளியின் ஆசிரியையான சகோதரி அனிதாவின் வார்த்தைகள், அவரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியது. பீஹாரில் னுளைவசiஉவ ளுpநஉயைட நுனரஉயவழையெட ழுககiஉநச  ஆக இருக்கும் ஒரு சகோதரனை அறிவேன்; இந்திய அரசாங்கத்தினால் 26 நாடுகளுக்கு அனுப்பப்பட்டபோதிலும், நான் பீஹார் மக்களுக்கே பணிசெய்வேன் என்று என்னிடத்தில் கூறினான். 'நீ ஏன் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளை ஏற்பதில்லை?" என்று நான் அவனிடத்தில் கேட்டபோது, 'அங்கிள், நீங்க தமிழ்நாட்டிலிருந்து வந்து எங்களுக்காக கண்ணீர் வடிக்கிறீர்கள்; நாங்கள் உலகத்தைச் சுற்றிப்பார்க்கச் செல்லுவோமா?" என்றான் அவன். ஒரு காலத்தில் தீவிரவாதிகளால் நிறைந்திருந்த பீஹாரின் பகுதிகளை மாற்றுவதற்கு தேவன் எங்களுக்கு உதவிசெய்திருக்கிறார்; கல்விப் பணி அத்தனை இன்றியமையாதது; அத்தகைய முக்கியமான ஸ்தானங்களில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். வருங்காலத் தலைமுறையினருக்கு, வாழ்க்கைக்கும் வருங்காலத்திற்கும் வழிகாட்டுவோர் இன்றைய நாட்களில் தேவை.  

மூன்றாவதாக, 'நீங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள் அநேகரை குழப்பத்தினால் நிறைத்துவிட்டது" (your teaching has messed up many lives - MSG)என்றும் (Everyone will be disgusted with you and avoid you - MSG)  என்றும் சொல்லுகின்றார் ஆண்டவர். நம்முடைய உரையாடல்களிலே, தொடர்புகளிலே நாம் தெளிவுள்ளவர்களாயிருக்கின்றோமா?

வட இந்தியாவில், படித்த அல்லது படித்து முடித்த பிள்ளைகள் ஆசிரியர்களின் காலைத் தொட்டு கும்பிடுவது வழக்கம்; ஒருவேளை, தமிழ்நாட்டில் அது இல்லாதிருக்கலாம். இன்றும், ஜெம்ஸ் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'எங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று மாணவர்களிடமிருந்து அநேக குறுஞ்செய்திகள் வருவதுண்டு. நம்மிடத்தில் கற்றவர்கள், பின் நாட்களில் சந்தோஷமாக வந்து நம்மைச் சந்திக்கின்றார்களா? அல்லது நம்மை விட்டு விலகி நிற்கின்றார்களா? நம்முடைய மாணவர்கள் தொடர்ந்து நமது தொடர்பில் இருக்கின்றார்களா? 

அதுமாத்திரமல்ல, 'நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால்" (மல். 2:9) என்றும் சொல்லுகின்றார் ஆண்டவர்; ஆம், இதுவும் இன்றைய நாட்களில் ஆசிரியர்களிடயே மறைவாகக் காணப்படுகின்றது. நன்றாகப் படிக்கும் மாணவர்களைக் கண்டு ஆசிரியர்கள் சந்தோஷப்படுவதுண்டு; அதே நேரம், படிப்பில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை, என்ன செய்வது என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு. முந்தைய நாட்களில், தேறாதவர்களை பின் பெஞ்சில் (மாப்பிள்ளை பெஞ்ச்) உட்காரவைத்துவிடுவார்கள்.  

எனக்கு முன் பற்கள் சற்று தூக்கியவாறு இருக்கும், சாதாரணமாகவே சிரித்துக்கொண்டிருப்பவனைப் போலத்தான் காணப்படுவேன்.  எனவே, நான் பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த நாட்களில், எனது துறைத் தலைவர் என்னை அதிகமாக வெறுத்தார். நன்றாக எழுதாதவனுக்கு 80 மார்க் போடுவார்; எனக்கோ, 40 மார்க் தான் போடுவார். தேர்வு ரிசல்ட் பார்க்கும்படியாக கல்லூரிக்கு நான் வந்தபோது, றழசமளாழி ஆசிரியர், 'அப்பாவு முதல் மார்க்" என்று சொன்னார்; எல்லாரும் கைதட்டினார்கள்; அவருக்கும் என்னைப் பிடிக்காது. கடைசியாக நான் அவரிடத்தில் சென்று, 'சார், என் மார்க் என்ன?" என்று கேட்டபோது, மேலும் கீழும் பார்த்தவாறு, நீ 'சுழடந ழக hழழெரச" (ரniஎநசளவைல கசைளவ) என்று சொன்னார். எனது பல் வெளியே இருந்தது, அவர்களது வெறுப்பிற்கு ஒரு காரணமா? அவர் நினைத்ததெல்லாம், அவர் நடத்துகின்ற பாடங்கள் பிடிக்காமல் நான் சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்றுதான். 

சென்னையில் திரு. குமாரதுரை என்ற என்னுடைய ஆசிரியர் ஒருவர் உண்டு. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, அந்நாட்களில் வெளிவந்திருந்த, ஒரு பெந்தேகோஸ்தே சகோதரியிடத்திலிருந்து எனது தாயார் கற்றுக்கொண்டு வீட்டில் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த, 'உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்" என்ற சகோதரி சாராள் நௌரோஜியின் பாடலை ஒருமுறை மாணவர் சங்கத்தில் மேடையில் கடவுள் வாழ்த்துப் பாடலாக நான் பாடினேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கணித்த ஆசிரியரான திரு. குமாரதுரை, 'இந்தப் பாடலை யார் பாடியது?" என்று கேட்க, 'அகஸ்டின் ஜெபக்குமார்" என்று சொன்னார்கள் பிற மாணவர்கள். அடுத்த வருடம், அவர் எனது வகுப்பு ஆசிரியர், ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்வது என்றால் என்னால் இயலாதது; சொந்தமாக எழுதுவதுதான் எனது வழக்கம். ஆனால், அவரோ மனப்பாடம் செய்துதான் சொல்லச் சொல்லுவார். மனப்பாடம் செய்ய முடியாதவர்களையெல்லாம் வகுப்பறையில் எழுப்பிவிடுவார். அவ்வாறு அவர் எழுப்பிவிடும்போது, முதல் பெயர் எனது பெயராகவே இருக்கும். நான் அதிகம் தவறுகள் போட்டிருப்பேன்; எனினும், என்னை மட்டும் உட்காரச் சொல்லிவிட்டு, மற்ற மாணவர்களையெல்லாம் பிரம்பால் அடிப்பார்; காரணம், அந்த பாடலே. உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவனுக்கு ஒரு சேதமும் வராது என்பதை எட்டு, ஒன்பது மற்றும் பத்து ஆகிய மூன்று ஆண்டுகள் வகுப்பறையில் அனுபவித்தவன் நான். சில நேரங்களில், அவர் தனியாக இருக்கும்போது, என்னை அழைத்து அந்தப் பாடலைப் பாடும்படியாகச் சொல்லுவார். சில பள்ளிகளில் ஜாதிகளும், நிறங்களும் மற்றும் கிரேடு, குடும்பத்தின் தரம், நண்பர்களின் பிள்ளை போன்றவைகளும் மாணவர்களிடையே பிரிவினைகளுக்குக் காரணங்களாயிருக்கின்றன. 

தேவன் போதகர்களைப் பார்த்து, 'நீங்கள் அக்கிரமத்திலிருந்து ஜனங்களை வெளியே கொண்டுவரத் தவறிவிட்டீர்கள்; ஜனங்களிடையே பட்சபாதத்தையும் பிரிவினையையும் உண்டாக்குகிறீர்கள்; சரியான வழியில் அவர்களைக் கொண்டுவரத் தவறிவிட்டீர்கள்; தேவனையும் அவருடைய வழிகளையும் காட்டத் தவறிவிட்டீர்கள்" என்று சொல்லி அவர்களைக் குற்றஞ்சாட்டிவிட்டு, நானூறு வருடங்கள் பேசாமல் இருந்துவிட்டார். எனது தந்தைக்கு கோபம் வந்துவிட்டால், வீட்டில் யாரிடமும் பேசமாட்டார்கள்; அப்பா பேசாமல் இருந்துவிட்டால், நாங்களும் வீட்டில் அமைதியாகவே இருக்கத் தொடங்கிவிடுவோம். நான்கு நாட்கள் தேவன் என்னோடு பேசவில்லையென்றால், நான் அழுதுவிடுவேன்; இதுவே எனது நிலை.  

பிரியமானவர்களே! நாம் நமது கடமையைச் சரிவரச் செய்யவில்லையென்றால், தேவன் இந்த உலகத்தில் செயல்படுவதை நிறுத்திவிடுவார் என்பதே உண்மை. நாம் சாதாரணமானவர்கள் அல்ல; உன்னதமான பணிக்காக நாம் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். கல்வி அறிவைக் கொடுப்பது அரசாங்கத்தின் வேலை; ஆனால், கல்வியோடுகூட கர்த்தரையும் காட்டிக்கொடுப்பது ஆசிரியர்களின் பணி. 

தரங்கம்பாடியில் சீகன்பால்க்-ன் கல்லறை, ஆலயம், பிரசங்கபீடம் போன்றவைகளைப் பார்க்க ஒருமுறை நான் அங்கு சென்றிருந்தேன். 23-வது வயதில் இந்தியாவிற்கு வந்த அவர், ஊழியம் செய்தது 13 வருடங்கள் மாத்திரமே; 36- வது வயதில் மரித்துவிட்டார். மண்ணிலே தமிழ் எழுத்துகளை எழுதிப் பயின்று, விரல்களில் இரத்தமும் வந்து, மொழியைக் கற்று, பெண்களுக்கு பள்ளிகளை ஆரம்பித்து, முதல் அச்சு இயந்திரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் அவர். வெளிநாட்டிலிருந்த வந்த ஒருவரால் 13 வருடத்தில் இதைச் செய்யமுடியுமென்றால், '53 வருடங்களாக பீஹாரிலிருக்கும் நான் எதைச் சாதித்திருக்கிறேன்?" என்ற கேள்வி அப்போது எனக்குள் எழும்பினது. 

    பிரியமானவர்களே! கொஞ்சபேரையாகிலும், அக்கிரமங்களிலிருந்து தூக்கியெடுத்து, மீட்கவே நம்மை ஆசிரியர்களாகவும், போதகர்களாகவும் தேவன் வைத்திருக்கிறார் என்ற உணர்வு நமக்குள் உண்டாகுமென்றால் நாம் சாதாரணமானவர்களாக இருக்கமாட்டோம். அப்படிப்பட்ட கிருபையை தேவன் நமக்குத் தருவாராக! 

பெரியதோர் பணிக்காகப் பிரிந்தெடுக்கப்பட்டப் பாத்திரங்கள் நாம்

உடன்படிக்கையை நிறைவேற்ற உருவாக்கப்பட்டப் பாத்திரங்கள் நாம்

வாயிலே வேதம் சுமந்து, உதடுகளிலே உண்மையைக் காத்து

சேனையதிபனின் தூதராகச் சேவையினைச் செய்பவர் நாம்


வழியினைப் போதிப்போரே ஜனங்களை வழிவிலகப் பண்ணலாமா?;

இருளை நீக்குவோரே ஜனங்களை இடறச்செய்வது நியாயமாகுமா? 

உடன்படிக்கையைக் காப்போரே அதனை உடைப்பது முறையாகுமா? 

இவ்வுலகினை இருளாக்க நம் தவறுகளுக்கு இடங்கொடுக்கலாமா?


அக்கிரமத்தினின்று ஜனங்களைத் திருப்ப அழைக்கப்பட்டவர்கள் நாம்

உழைப்பை சார்ந்து அல்ல, அழைப்பையே நிறைவேற்றுவோம் தினம்

பட்சபாதத்திற்கும் பிரிவினைக்கும் என்றும் நாம் காரணராயில்லாமல் 

குழப்பத்திற்கும் இடமளிக்காது கடமையினையே தினம்    நிறைவேற்றுவோம்


கடமையை நாம் மறந்தால் - தேவக் கரங்களும் செயல்படாதே!


                                                                  அன்பரின் அறுவடைப் பணியில் 

                          அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்