August 2026

 

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

உன்னதமான பணிக்கென நம்மைத் தெரிந்துகொண்டவரும்,  தனது திட்டத்தையும் சித்தத்தையும் செய்துமுடிக்க நம்மை முன்குறித்தவரும்,  முன்குறித்தவர்களை அழைத்தவரும் (ரோமர் 8:30), நற்கிரியைகளுக்கு மாதிரியாக நம்மை மாற்றுபவரும் (தீத். 2:7), 'நான் பெரிய வேலையைச் செய்கிறேன்" (நெகே. 6:3) என்று நெகேமியாவைப் போல நம்மை சூளுரைக்கச் செய்பவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  

பிரியமானவர்களே! இன்றைய நாட்களில், சமுதாயத்தின், தலைவர்களின் மற்றும் தேசத்தின் எதிர்பார்ப்புகள் எப்படியிருக்கின்றன? என்றும், அதற்குச் சாதகமானச் சூழ்நிலை ஆசிரியர்களுக்கு உண்டோ? என்றும் கேள்விகள் ஒருவேளை நமக்குள் எழும்பக்கூடும். என்றபோதிலும், 'தேசத்தில் தேவனைக் காண்பிக்கும் மனிதர்கள் தேவை" என்பதை இந்நாட்களில் நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இதனை மையமாகக் கொண்டு, நான் எழுதியிருக்கும் 'தேவை தேவை தேவை தேசத்தில் தேவனைக் காண்பிக்கும் மனிதர்கள் தேவை" என்ற பாடலை நீங்கள் லழரவரடிந -ல் கேட்கலாம். ஆரம்ப நாட்களில், மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே சொல்லிக்கொடுக்கப்பட்டது; இது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்ததே! தாயைத்தான் குழந்தை முதலில் பார்க்கிறது, தகப்பனை தாய் குழந்தைக்கு அடையாளம் காட்டிக்கொடுக்கிறாள், தகப்பனும் தாயும் இணைந்து ஒரு குருவை அடையாளம் காண்பிக்கிறார்கள், இந்த மூன்று பேரும் சேர்ந்து தேவனை அடையாளம் காட்டிக்கொடுக்கிறார்கள் என்பதை உள்ளடக்கிய இந்த வாக்கியம் நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க, 'இவரைப் பார்த்து என் பிள்ளை பின்பற்றிவிடமாட்டானா" என்ற குருவைக் குறித்த ஏக்கத் தொனியோடேயே இன்றைய பெற்றோர் காணப்படுகின்றனர்.  

ஒருமுறை, காலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாடாநகர் என்று சொல்லப்படுகின்ற ஜாம்ஷெட்பூரிலிருந்து ஹவுரா பட்டணத்திற்கு ரயிலில் நான் பயணம் செய்ய நேரிட்டது. அது ஒரு விடுமுறை நாளானபடியினால், ரயிலில் கூட்டமும் இல்லாதிருந்தது. நான் இருக்கையில் அமர்ந்தவாறு ஒரு காலை தியானப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோதோ, இரண்டு கைகளும் இல்லாத ஒரு மனிதன், ஒருதோளிலே தூக்குவாளி ஒன்றைத் தொங்கவிட்டவனாக, 'ஐயா, இரண்டு நாளாக ஒன்றும் சாப்பிடவில்லை, காலையிலாவது ஏதாகிலும் சாப்பிட எனக்கு உதவிசெய்யுங்கள்" என்று பெங்காலி மொழியிலே சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு முன் வரிசையில் இருந்த ஒரு நபர், இருபது ரூபாயை அவனது

    தூக்குவாளியில் போட்டுவிட்டு, உள்ளேயிருந்து பதினைந்து ரூபாயை எடுத்துக்கொண்டார். என்னிடத்திலோ நூறு ரூபாய் இருந்தது; நான் அதைப் போட்டபோது, 'ஐயா, தொன்னூற்றைந்து ரூபாய் திருப்பித்தர என்னிடத்தில் சில்லறை இல்லையே" என்றான் அவன். நானோ, 'நீயே வைத்துக்கொள்" என்று சொன்னபோது, அவனால் நம்பமுடியவில்லை. அவன் நினைத்ததெல்லாம், ஒவ்வொருவரிடம் ஐந்து ஐந்து ரூபாய் கிடைக்கும், அதைக் கொண்டு டீயாவது குடிக்கலாம் என்பதே. அப்பொழுது அவன் என்னிடத்தில், 'நீங்க இயேசு கிறிஸ்துவா?" என்று கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்பொழுது நான் அவனை அருகிலே உட்காரவைத்து, அவனது தோளின் மேல் கைகளைப் போட்டு அவனோடு பேசத் தொடங்கினேன். எனக்கும், ஒரு கை இல்லாத ஒரு மகள் இருப்பதினாலும், வகுப்பறையில் அவளுக்காக ஆசிரியர்களிடம் நான் பரிந்துபேசியிருப்பதினாலும், கையில்லாதவர்களின் கஷ்டத்தை நான் அறிந்திருந்தேன். அப்பொழுது அவன் என்னிடத்தில், 'ஐயா, ஆறு மாதத்திற்கு முன் வயதான ஒருவர் தோளிலே பையைத் தொங்கவிட்டுக்கொண்டு, 'இயேசு ஜீவன் கொடுக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தார்" என்று சொன்னார்; இப்பொழுது, என்னுடைய தேவை ஐந்து ரூபாய்தான்; ஆனாலும், நீங்க நூறு ரூபாய் கொடுத்ததினால்  நீங்க இயேசுவாகத்தான் இருக்கவேண்டும்" என்றான். அப்பொழுது நான் அவனுக்கு இயேசுவை அடையாளம் காட்டிக்கொடுக்க தேவன் உதவிசெய்தார். 

பிரியமானவர்களே! இன்றைய உலகம் முன்மாதிரிகளைத் (Roll Model) தேடுகிறது; அது ஆசிரியர்களிடத்திலேயே முதலில் காணப்படவேண்டும். ஆசிரியர்களின் வாழ்க்கை,  நடைமுறை மற்றும் உறவு ஆகியவைகளே, பிள்ளைகளுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும். ஒருமுறை, எனது 6 வயது பேரன், மொபைல் போனை கையில் வைத்துக்கொண்டு, 'Hello, This is Abundance'  உனக்கு ஏதாவது தெரியலன்னா எங்கிட்ட கேளு என்ன " என்று 'ChatGPT" உடன் பேசிக்கொண்டிருந்தான்; இப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

ஒருநாள், இரண்டாம் வகுப்பு படிக்கின்ற ஒரு பிள்ளை, அழுதுகொண்டே எனது அறைக்குள் வந்து என்னைச் சந்தித்து, 'Sir, டீச்சர்கிட்ட கொஞ்சம் பேசுறீங்களா, அவங்களுக்கு ஒன்னுமே புரியமாட்டிங்குது" என்றாள். 'உனது டீச்சரிடம் என்னம்மா கேட்கவேண்டும்" என்று நான் அவளைக் கேட்டபோது, அவள் அழுதுகொண்டே, 'எங்க அம்மா ஆறு மாதத்திற்கு முன்னால் இறந்துட்டாங்க, எங்க அப்பா இரண்டாவது மாதத்திலேயே இன்னொரு கல்யாணம் கட்டிவிட்டார்,   சின்னம்மா எங்கள ரொம்ப அடிக்கிறாங்க, வீடுகூட்டச் சொல்றாங்க, பாத்திரம் விளக்கச் சொல்றாங்க, பெட்சீட் எல்லாம் மடித்துவைக்கச் சொல்றாங்க, எனக்கு வீட்டில நேரமே இல்ல" என்று சொன்னவளாக, தனது காயமான கையையும் நீட்டிக் காட்டினாள். இப்போ என்னம்மா ஆயிற்று? என்று நான் அவளைக் கேட்டபோது, 'டீச்சரும் நான் ஹோம் ஒர்க் செய்யலன்னு கையிலேயே அடிக்கிறாங்க, கையெல்லாம் புண்ணாகுது சார்"; டீச்சருக்கு எனது life  புரியமாட்டிங்குது, நீங்க வந்து சொல்லுங்க என்று சொன்னாள்; நான் அதிர்ச்சிக்குள்ளானேன். 'தங்களது கைகளில் என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அநேகர் அறியாதிருக்கிறார்களோ? என்ற பெரியதோர் கேள்வி எனக்குள் அப்போது எழும்பிற்று. கிறிஸ்துமஸ் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல், 

‘Mary did you know that your baby boy

Will one day walk on water?

Mary did you know that your baby boy

Will save our sons and daughters?

And when you kiss your little baby

You’ve kissed the face of God

Oh, Mary did you know Ooh...’  என்பதுதான்

ஏன் நாம் role model ஆக இருக்கவேண்டும்? சிறு பிள்ளைகள் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கின்றனர் என்று நமக்குத் தெரியுமா? பெற்றோர் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நமக்குத் தெரியுமா? அவர்களுடைய இருதயத்தை சரியாக நாம் அறிந்திருந்தால் மாத்திரமே, அவர்களுக்கு சரியான முன்மாதிரிகளாக நாம் இருக்கமுடியும்.   நாற்பது பிள்ளைகள் இருக்கிறார்கள், 'நீ எப்படியும் போ, எப்படியும் படி" என்று சொல்லுவது எளிது; ஆனால், நம்முடைய வாழ்க்கையினால் அவர்களது வாழ்க்கையில் தாக்கம் உண்டாக்கும்போது, அவர்களால் இந்த உலகம் மாற்றப்படும் என்பது நிச்சயம். முன்னால் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களது ஆசிரியருக்குத் தெரிந்திருக்குமா, அவர் ஒரு பெரிய விஞ்ஞானியாகவும், அநேக வாலிப உள்ளங்களைக் கவர்ந்திழுக்கிறவராகவும், தேசத்தின் ஜனாதிபதியாகவும் பின்நாட்களில் வருவார் என்று? வாய்ப்பில்லையே. இயேசு கிறிஸ்துவை தனது கரங்களில் ஏந்தியிருக்கும்போது, பிள்ளையாக அவரைக் கொஞ்சும்போது, 'இவருடைய கால்கள்தான் கடல் மீது நடக்கப்போகிறது, இவருடைய கைகள்தான் குருடருடைய கண்களைத் திறக்கப்போகிறது, இவருடைய சத்தம்தான் உயிரோடு லாசருவை எழுப்பப்போகிறது" என்று மேரிக்குத் தெரிந்திருக்குமா? தெரிந்திருக்காதே. பிரியமானவர்களே! உங்களது நடை உடை பாவனைகளில் யாரை வெளிப்படுத்தப்போகிறீர்கள்? 

ஒருமுறை, கன்னியாகுமரிக்கு கூட்டங்களுக்காக நான் சென்றிருந்தபோது, ஒரு தகப்பன், தனது மகனைக் கூட்டிக்கொண்டு என்னிடத்தில் வந்து, 'அண்ணன், இவன் ஆங்கிலப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான், இவனுக்கு கொஞ்சம் ஜெபம் பண்ணுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அந்த பையனைச் சோதித்துப் பார்ப்பதற்காக நான் சில கேள்விகளை அவனிடத்தில் கேட்டுவிட்டு, 'தம்பி, நீ யாராக விரும்புகிறாய்?" என்று கேட்டபோது, அவன், 'நான் பைலட்டாக மாறவேண்டும்" என்றான்.  அருகில் நின்றுகொண்டிருந்த தந்தையோ, 'இவன் கனவை நிறைவேற்ற என்னிடத்தில் காசு இல்லையே" என்றார். 'ஒரு பைலட் என்பவருக்கு, பின்னால் இருப்பவர்களுடன் தொடர்பு இருக்காது, 'விமானம் புறப்படப்போகிறது, இவ்வளவு உயரத்தில் பறக்கிறோம், தரையிறங்கப் போகிறோம், இங்கே இவ்வளவு தட்பவெட்ப நிலை" என்பதை மாத்திரம்தானே சொல்லுவார்" என்றும், 'விமானத்தில் இருக்கிற அத்தனை பேரையும் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவேண்டும், அதில் அவரது உயிரும் அடக்கம்; ஆனால், ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கோ, விமானத்தின் உள்ளே இருப்பவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவனிடத்தில் பேசிவிட்டு, 'ஒரு ஆசிரியர் பத்து வருடங்களில் எத்தனை மாணவர்களைச் சந்திப்பார்" என்று அவனைக் கேட்டவனாக, கிட்டத்தட்ட 800 பிள்ளைகளை உருவாக்கும் பெரியதோர் பணியினை ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்று நான் சொன்னபோது, நான் பைலட் ஆக அல்ல, டீச்சராக விரும்புகிறேன் என்றான் அவன். ஆம், ஆசிரியர் பணி இத்தனை முக்கியமானது. 'ஏதோ, டீச்சராகிவிட்டேன்" என்ற எண்ணத்தை மாற்றிவிட்டு, 'ஒரு பெரிய பணிக்காக நான் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரம்" என்பதை நமது உள்ளத்தில் பதித்துக்கொள்ள கர்த்தர் உதவிசெய்வாராக! 

இரண்டாவதாக, மாதிரியாகவும், ஞானத்தை மாத்திரம் கடத்துபவர்களாகவும் மாத்திரமல்ல, 'ஆசிரியர்கள், தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிடவேண்டும்" என்று பெற்றோரும், மற்றோரும், சமுதாயமும் எதிர்பார்க்கிறார்கள்; இதை நாம் மறந்துவிடக்கூடாது. 

மூன்றாவதாக, நாம் Updated ஆக இருக்கவேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. அநேக ஆசிரியர்களுக்கு இன்று செய்தித்தாள் வாசிப்பதற்கே நேரமில்லை; சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை; அத்தனை busy ஆகிவிடுகிறார்கள். 

இயேசு கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படும் முன்னதாக, பன்னிரெண்டு பேரோடு பந்தியிருந்தார்; அதிலும், 'நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்" என்று ஒருவனை அனுப்பிவிட்டு, பதினோரு பேரோடு பந்தியிருந்தார். அந்த பதினோரு பேரையும் கூட்டிக்கொண்டு, வழக்கமாய் ஜெபம்பண்ணும் இடத்திற்குச் சென்று, எட்டு பேரை மாத்திரம் ஒரு இடத்தில் விட்டுவிட்டு,  மூன்று பேரை மாத்திரம் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்போது, அந்த எட்டு பேர் என்ன நினைத்திருப்பார்கள்? அந்த மூன்று பேர் என்ன நினைத்திருப்பார்கள்? அந்த எட்டு பேருக்கு, 'தங்களை ஏன் இங்கே நிறுத்துகிறார்" என்பது தெரிந்திருக்காது; அல்லது, பொறாமையுள்ளவர்களாயிருந்திருந்தால், 'அவர்கள் என்ன பெரிய ஆட்களா, அந்த மூன்று பேரை மாத்திரம் தனியாக மலைக்கு கூப்பிட்டுச் செல்கிறார், ஏன் இந்த பட்சபாதம்" என்று நினைப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. என்னைப் பொறுத்தமட்டில், அந்த எட்டு பேருக்கும் சுற்றிலும் நடப்பது ஒன்றும் தெரியாது. என்ன நடக்கிறது என்றும் தெரியாது, தங்களிடத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரியாது; எனவே அவர்கள் செயலற்றவர்களாக அங்கேயே இருந்துவிட்டார்கள். நல்ல மனிதர்களோடு நடந்தும், தரிசனமுள்ளவர்களோடு உடனிருந்தும், அநேக நேரங்களில், நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அறியாதவர்களாகவே நாம் இருந்துவிடுகின்றோம்; காரணம், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை நாம் கவனியாததே. இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்ற தெளிவு, ஒரு ஆசிரியருக்குக் கட்டாயம் தேவை.     

'நாங்கள் எவ்வளவோ முயற்சிசெய்து பார்க்கிறோம்; ஆனால், இன்றைய டெக்னாலஜியின் பெலன் பெரிதாயிருக்கிறதே; அப்படியிருக்க அவர்களை எதிர்கொள்வது, சந்திப்பது, ஈடுகொடுப்பது எப்படி?" என்ற கேள்விகளுக்குள் ஆசிரியர்கள் மாட்டிக்கொள்வதினால், அவர்களுக்குள் இருக்கின்ற திறமைகளும் வெளிப்படாமல் போய்விடுகின்றன. அதற்குக் காரணம், 'காலத்தை அவர்கள் புரிந்துகொள்ளாததே". இன்றைய நாட்களில், 'காலத்தைக் குறித்த அறிவு அநேக ஆசிரியர்களுக்கு இல்லை".  

பீஹாரில், ஜெம்ஸ் பாலிடெக்னிக்-ல் ஜெர்மனைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் உண்டு. அவர்கள் ரஷ்ய மொழி பேசுகின்ற ஜெர்மன் நாட்டினர்; அர்ப்பணிப்புள்ள மிஷனரிகள், நன்றாகப் படித்தவர்கள், பாலிடெக்னிக்-ல் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். அதில் ஒருவருக்கு நான்கு பிள்ளைகள், முதல் பிள்ளை ஜெர்மனில் பிறந்தது, இரண்டாவது குழந்தை சென்னையில் பிறந்தது, மூன்றாவது குழந்தை சிக்காரியாவில் பிறந்தது, நான்காவது குழந்தை கல்கத்தாவில் பிறந்தது; இப்போது, அவர்கள் பூடானில் ஊழியம் செய்துவருகின்றனர். பீஹாரில் அவர் இருந்தபோது, விபத்து ஒன்றில் அவரது முகம் நொறுங்கிப்போனது, சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு அனுப்பிவைத்தோம்; ஜெர்மனிக்கும் சென்று சிகிச்சைபெறவேண்டியதிருந்தது. என்றபோதிலும், மீண்டும் பீஹாருக்கு வந்தார். பீஹாரின் வெப்பத்தினால், பிள்ளைகளுக்கு முகமெல்லாம் சிவந்துபோய்விடும்; என்றபோதிலும், பீஹாரில் சந்தோஷமாக ஊழியம்செய்துவருகின்றனர். சிகிச்சை முடித்து ஜெர்மனியிலிருந்து அவர் திரும்பி வந்தபோது, 'அங்கிள், நான் ஜெர்மனிக்குச் செல்ல விரும்பவில்லை; என்னுடைய பிள்ளைகள் ஜெர்மனியில் வளர்க்கப்படவேண்டும் என்றும் நான் விரும்பவில்லை" என்று சொன்னார். 'இந்தியாவில் இருப்பவர்கள், ஜெர்மனிக்குச் செல்லவேண்டும்" என்று நினைக்கிறார்கள்; இவர் என்ன இப்படிச் சொல்கிறார்" என்று நான் நினைத்தேன். அவரது மூத்த பிள்ளை ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கின்றது. அப்பொழுது அவர் என்னிடத்தில், 'அங்கிள், ஆறு மாதங்கள் சிசிச்சைக்காக நான் ஜெர்மனி சென்றிருந்தபோது, அங்கே அவளை ஒரு பள்ளியில் சேர்த்தோம்; அந்தப் பள்ளியில் அவளுக்கு முதலில் கொடுக்கப்பட்டது  ''sex toys"  என்று சொன்னார். 

ஜெர்மனியில் நடைபெற்ற மேலும் ஒரு சம்பவத்தையும் நான் அறிவேன். ஜெர்மனியில் உள்ள ஒரு பள்ளியில், ஒரு ஆசிரியர் பிள்ளையிடம், உனது அப்பா அம்மா போட்டோவைக் கொண்டுவா என்று சொல்ல, அந்தப் பிள்ளையோ, இரண்டு பெண்கள் நிற்கும் போட்டோவைக் கொண்டுவந்தது. ஆசிரியரோ, 'உனது பெற்றோரின் போட்டோவை கேட்டேன்" என்று சொன்னார். அந்த பிள்ளையின் பெற்றோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் (lesbians); அவர்கள் ஒரு பிள்ளையை எடுத்து வளர்க்கிறார்கள்; இந்த இரண்டுபேரும்தான் உனது பெற்றோர் என்று பிள்ளைக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதனால், ஆசிரியர் சொன்னதைக் கேட்ட பிள்ளை வீட்டிற்கு வந்து, 'நீங்கள் எனது பெற்றோர் இல்லை, நீங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என்று ஆசிரியர் சொல்லுகிறார்" என்று சொன்னபோது, அந்த பிள்ளையின் வாக்குமூலத்தின்படி, அந்த ஆசிரியர் ஒன்றரை மாதங்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்தார். இப்படிப்பட்ட அநேக நிகழ்வுகள் வெளிநாடுகளில் பள்ளிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  ஆனால், தேவனையும், அவருடைய அன்பினையும் மற்றும் அவருடைய ஞானத்தையும் பிள்ளைகளுக்குக் காண்பிக்கும் ஒரு பொன்னான நேரத்தினை ஆசிரியர்களுக்குத் தேவன் தந்திருக்கிறார். உங்களது வருமானம் குறைவாயிருக்கலாம்; ஆனால், நீங்கள் வைக்கப்பட்டிருக்கின்ற இடமோ உயர்வானது என்பதை உணர்ந்தால் மாத்திரமே, 'தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாக தெரிந்தெடுக்கப்பட்ட பணியில் நான் அமர்த்தப்பட்டிருக்கின்றேன்" என்பதை நீங்கள் அறிந்துகொள்ள இயலும். 


வார்த்தையில் அவரைப் பிரசங்கிப்போர் பெருகினாலும்

வாழ்க்கையில் அவரைப் பிரதிபலிப்போர் வேண்டும்

முன்மாதிரிகளைத் தேடும் உலகத்தின் கண்களெல்லாம்

உன்மாதிரியைக் கண்டு உன்னதரை அறியனும்

வருங்காலத் தலைமுறை நம் கரங்களில் வந்திருக்க

வனைந்திடும் குயவர் நாம் இதை மறந்திடக்கூடாது

தலைமுறையினை தேவனண்டைத் திருப்பிவிட

  தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள் நாம் தேவனாலே



                                                                       அன்பரின் அறுவடைப் பணியில் 

                                       அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்