July 2026

 கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

  உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக அவதரித்தவரும் (யோவான் 1:29)> தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல்> ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்து (எபி. 2:16)> நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு> நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டவரும் (ஏசா. 53:5)> மரணத்தைப் பரிகரித்து> ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினவருமாகிய (2 தீமோ. 1:10) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 
  கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆணிவேராகவும்> உயர்த்திக் கூறப்படவேண்டியச் செய்தியாகவும் உயிர்த்தெழுதலைக் குறித்தும்>  தேவனுக்குத் தூரமாக மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்திலும்> நியாயத்தீர்ப்பு மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த தேவ வெளிப்பாட்டினைப் பெற்ற முற்பிதாக்களைக் குறித்தும்> அத்துடன்> வசனத்தைப் புரட்டுவோரிடமிருந்து விலகி வாழவேண்டிய அவசியத்தையும் கடந்த இதழ்களில் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். தொடர்ந்து> இந்த இதழில்> உயிர்த்தெழுதலின் மேன்மையான சில காரியங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்; அதனை வாஞ்சிக்கவும்> அதற்கேற்ப வாழவும் வரும் நாட்களில் தேவன் உதவிசெய்வாராக!  

சடுதியான ஒளியில் இயேசுவைக் கண்டவனும்> முகமுகமாய்த் தரிசித்தவனும்> தேவ சத்தத்தைக் கேட்டவனும்> பலமுறை காட்சி பெற்றவனுமாகிய பவுல்> சிறைச்சாலையில் இருக்கும் நேரத்திலும்> 'இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும்> அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்> அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி> எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்> அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் (பிலி 3:10>11) என்று எழுதுகின்றார். மரித்தவர்கள் அனைவரும் உயிரோடு எழும்புவார்கள் என்றுதானே வேதத்தில் வாசிக்கின்றோம்; அப்படியிருக்க> இது எத்தகைய உயிர்த்தெழுதல்? அன்றியும்> ஒரேதரம் மரிப்பதும்> பின்பு நியாயத்தீர்ப்படைவதும்> மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி. 9:27) என்றுதானே வேதம் கூறுகின்றது; அப்படியென்றால்> பவுல் குறிப்பிடும் இந்த உயிர்தெழுதல் எத்தகையது? இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் மரித்த எல்லாரும் உயிரோடு எழும்புவார்கள் என்பது உண்மைதான்; என்றபோதிலும்> பவுல் குறிப்பிடும் இந்த உயிர்த்தெழுதலோ மேன்மையான உயிர்த்தெழுதல். 

பழைய தேவ தாசர்களுக்கு அபிஷேகம் என்றால் என்ன என்று தெரியாது> ஆவியில் நிறைவது என்றால் என்ன என்று தெரியாது> அந்நிய பாஷை என்றால் என்ன என்று தெரியாது> பெரிய பெரிய கூட்டங்களை அவர்கள் பார்த்ததில்லை; கிறிஸ்துவுக்காக அடிக்கப்பட்டார்கள் அவர்கள் கீழ்க்கண்டவாறு பாடலை எழுதினார்கள். 

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன 
குறைவுண்டு நீ சொல் மனமே

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்

விண்ணுல குயர்ந்தோர்
உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்
பாவமோ> மரணமோ> நரகமோ> பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்

    நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது (கொலோ 3:1-3) என்று வாசிக்கின்றோமே. கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, பழைய மனிதனைப் புதைத்து, புது மனிதனாக எழும்புகிறோம்; அதுவே ஞானஸ்நானம். கிறிஸ்துவோடு மரித்து, எழுந்து, அவரோடு ஆளுகை செய்வதற்கு நாம் ஆயத்தமாயிருக்கிறோம். இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை நம் மூலமாக நமது ஜனங்கள் பார்க்கட்டும். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவih முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். (சங் 2:11,12).

பிரியமானவர்களே! உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, இன்றும் அற்புதங்களைச் செய்யப் போதுமானவர். ஒருமுறை, சீதை இங்குதான் பிறந்தாள் என்று நம்பப்படுகின்ற பீஹாரின் சீத்தாமடி என்ற ஊரில் கூட்டங்களை நடத்துவதற்காக நாங்கள் சென்றிருந்தபோது, நாங்கள் கேட்டிருந்த மைதானம் அரசு நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டதினால், ஓர் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தோம். முதல் நாள் கூட்டத்தில், கிறிஸ்துவை அதுவரை கேட்டிராத மக்கள் 500 பேர் கூடினார்கள்; முதல் நாள் கூட்டத்திலேயே ஆண்டவர் அநேகரை சுகமாக்கினார். பள்ளி இருக்கின்ற அதே தெருவில் அரசாங்க மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கிருந்த ஒரு நர்ஸ் 18 வருடங்களாக யானைக்கால் வியாதியினால் பாதிக்கப்பட்டு, பல மருந்துகளைச் சாப்பிட்டும் குணமாகாமல், நடப்பதற்குக் கஷ்டப்பட்டவராக அந்த மருத்துவமனையில் வேலைசெய்துகொண்டிருந்தார். யாரோ சிலர் அந்தப் பெண்ணிடம், 'இங்கே இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் வந்திருக்கிறார்கள்; நேற்றைய கூட்டத்தில் அநேகருக்கு சுகம் கிடைத்தது, நீங்கள் செல்வீர்களென்றால், உங்களுக்கும் சுகம் கிடைக்கும்" என்று சொன்னார்கள். மாலை 7 மணிக்கு பணியில் இருந்த அவர், மருத்துவரிடம், அரைமணி நேரம் அனுமதி பெற்றுக்கொண்டு கூட்டத்திற்கு வந்தார். இரண்டாம் நாள் கூட்டத்தில், 1500 பேர் வந்திருந்தார்கள்; நான் பாடல் வேளையை நடத்திக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், மைதானத்திற்குள் நுழைந்து அந்தப் பெண் காலை வைத்ததும், மின்சாரம் பாய்ந்ததுபோல உணர்ந்தார்; யானைக் கால் வியாதியும் குணமாகிவிட்டது. வீட்டிற்கு ஓடிச் சென்று, தன் புருஷனை அழைத்துக்கொண்டு, மேடைக்கு ஓடி வந்து, 'இயேசு ஜீவிக்கிறார்" என்று சொன்னார்; அல்லேலூயா! 

பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று (லூக். 5:17) என்று வாசிக்கின்றோமே! இன்றைய நாட்களிலும், தேவனைத் துதிக்கின்ற, தேவனுடைய வசனம் உயர்த்தப்படுகின்ற இடங்களில் இது நிச்சயம் நடக்கும். 

  இயேசு உயிர்த்தெழுந்த செய்திதான் இன்றைய நாட்களில் கொண்டாடப்படவேண்டியது; அதுதான், பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை விலக்கிவைக்கும். உயிர்த்தெழுதலைக் குறித்த பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் எதிர்பார்ப்பையும், ஆவியிலே அதை அவர்கள் கண்டார்கள் என்பதையும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நமக்கு இருக்கின்ற நம்பிக்கையையும் கடந்த இதழ்களில் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இந்த இதழிலிலும், உயிர்த்தெழுதலைக் குறித்த மேலும் சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

லாசரு மரித்திருந்த வேளையில், 'ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே" (யோவான் 11:39) என்று அவனுடைய சகோதரியாகிய மார்த்தாளே சொல்லுகிறபோது, இயேசு அவளை நோக்கி: 'உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்" என்று சொல்லுகின்றார் (யோவான் 11:23). அப்பொழுது மார்த்தாள், 'உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்" என்று அறிந்திருக்கிறேன்" (யோவான் 11:24) என்று சொல்லுகின்றாள். தேவ வார்த்தைகளை எழுதிப் பெற்ற யூதர்களுக்கு மாத்திரமே உயிர்த்தெழுதலைக் குறித்த நம்பிக்கையும், மரணத்தைக் குறித்த மற்றும் நியாயத்தீர்ப்பைக் குறித்த பயமும் இருந்தது; மற்றவர்கள் அதை நம்பவில்லை. 

பீஹாரில், இயேசு கிறிஸ்துவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த புத்தன், ஆண்டவரையோ, தேவனையோ, மரணத்தைக் குறித்த எந்த ஒரு காரியத்தையோ அறியாதவராகத்தான் வாழ்ந்தான். அவன் ஒரு இளவரசனாக வாழ்ந்தான், அவனது இயற்பெயர் சித்தார்த்தன், ஒரு மனைவியும் மகனும் அவனுக்கு இருந்தார்கள். துக்கத்தையோ, கஷ்டத்தையோ அவன் பார்ப்பதற்கு அவனது தாய் தகப்பன் அனுமதிக்கவேயில்லை. ஒருநாள், அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தெருவை, தனது நாட்டு மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்தபோது, அப்போது, மரித்துப்போன ஒருவனை நான்குபேர் தூக்கிக்கொண்டு போகிறதையும், 

    பின்னர் ஒரு சிறிய கூட்டம் அழுதுகொண்டு செல்லுவதையும் பார்த்தான். சேவகர்களைக் கேட்டபோது, 'அந்த மனிதன் மரித்துப்போய்விட்டான்" என்று சொல்லக் கேட்டான். அதுவரை அவனுக்கு மரணத்தைக் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லாதிருந்தது. அப்போது, மந்திரிகள் மரணத்தைக் குறித்து அவனுக்கு விளக்கிக்கூறினார்கள். இதைக் கேட்டதும், தூக்கம் வராமல், மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு, வீட்டை விட்டுப் புறப்பட்டு, ஊர் ஊராகத் திரிந்து, இறுதியாக வந்து சேர்ந்ததுதான் பீஹாரின் கயா. புத்தகயாவுக்கு அவன் வந்தபோது, அவனுக்கு ஞானம் வந்ததாக ஜனங்கள் நம்புகிறார்கள். அவன் கண்டுபிடித்ததெல்லாம், 'துக்கத்திற்குக் காரணம் ஆசையே" என்பதுதான். ஆசையை விட்டுவிட்டால் துக்கம் போய்விடும் என்று, 'துக்கமில்லாத வாழ்கையைக் குறித்த ஆசை" அவனுக்கு உண்டானதினால், அங்கு நிர்வாணமாக உட்கார்ந்தவனாக, கண்களை மூடினவனாக, இப்பிறவியைக் கடந்துபோய்விட்டான் என்பது நம்பிக்கையே ஒழிய, கடவுளையோ, உண்டாக்கினவரையோ குறித்த எந்த ஒரு அறிவும் இல்லாதவன். இந்தியாவில் 66000 முறை பிறக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். எனவே, திருவள்ளுவரும், 'பிறவிக் கடல் நீந்தினான்" என்று எழுதிவிட்டார். இப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத உலகத்தில்தான் இயேசு கிறிஸ்து வந்தார். ஜீவகாலமெல்லாம், மரணபயத்தோடேயே அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,  ஜீவகாலமெல்லாம்    மரணபயத்தினாலே 
அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி. 2:14,15).  

ஆம், பிரியமானவர்களே! பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்று சொல்லும் இயேசு, பாதாளத்தில் இறங்கியது நமக்காகவே. திமிர்வாதக்காரன் உயிரோடு இருக்கும்போதே, 'உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று சொல்லவில்லையா! நம்மை பயமுறுத்துகிற சத்துருவாகிய சாத்தானின் கையிலிருந்து பாதாளத்திற்கும் மரணத்திற்கும் உரிய திறவுகோல்களைப் பிடுங்கினவராக, சாத்தானின் கரங்களில் சிறையாயிருந்த சாமுவேல், தாவீது, ஆபிரகாம் போன்றவர்களையும் மற்றும் தீர்க்கதரிசிகளையும் சிறையாக்கிக்கொண்டு பரதீசுக்கு ஏறிப்போனார் இயேசு கிறிஸ்து; எத்தனை பெரிய சுவிசேஷம் இது. 

ஒருமுறை மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டங்களில் நான் பங்கேற்றபோது, ஒரு மூதாட்டி என்னைச் சந்தித்து, ஒரு சுருக்குப் பையை எனது கரங்களில் கொடுத்து, தலையில் கைவைத்து ஜெபிக்கும்படியாக என்னைக் கேட்டுக்கொண்டார்கள்; அதில் 372 ரூபாய் சில்லறையாக இருந்தது. அதில் ஒரு கடிதமும் காணப்பட்டது; அதில், 'ஐயா, அகஸ்டின் ஜெபக்குமார், நாங்கள் இரண்டு சகோதரிகள். இரண்டுபேருக்கும் புருஷர்கள் இல்லை. எனது அக்காவுக்கு இரண்டு கண்களும் தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது; எனது அக்காவுக்கு வலிப்பு நோய் உண்டு; எனவே அவளை விட்டுவிட்டு நான் எங்கும் போகமுடியாது. குடும்பத்தாரின் ஆதரவு எங்களுக்கு இல்லை; அரசு கொடுக்கின்ற 200 ரூபாயிலேயே எங்கள் காலத்தைக் கடத்துகின்றோம். நாங்கள் ஒரு குடிசை வீட்டிலேயே வாழுகின்றோம். பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் வரும் உங்கள் செய்தி என்னை தட்டி எழுப்பியது.  எனவே, எனது அக்கா உறங்கும்போது, பக்கத்திலிருக்கும் சாலையில் அமர்ந்து பிச்சை எடுப்பேன். அதைத்தான் சேர்த்துவைத்து கர்த்தருக்காகக் கொடுக்கிறேன் என்று எழுதியிருந்தார்கள்.   

பிரியமானவர்களே! நமக்காக மரித்து உயிரோடு எழுந்த ஆண்டவரை உலகத்திற்குச் சொல்லவே, நமக்கு தேவன் இந்த வாழ்கையைத் தந்திருக்கிறார். ஆனால், நாமோ, எப்பொழுதும் நம்மைக் குறித்தே நினைத்து, நம்முடைய முன்னேற்றத்தையே நினைத்து, படித்தாலும் அதைவைத்துச் சம்பாதிப்பது எப்படி? என்றே யோசிக்கிறோமே; ஆண்டவருக்காக நாம் செய்தது என்ன? ஆலயத்திற்காக நான் கோபுரத்தைக் கட்டியிருக்கிறேன் என்று சிலர் பெருமைபட்டுக்கொள்வதுண்டு; அது குருவிகளுக்காகக் கட்டப்பட்ட கழிப்பிடமே.  

புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதையே உரக்கக் கூறினார்கள். இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் (அப் 2:32) என்றும், கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார் (அப் 3:18) என்றும், அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் (அப் 3:26) என்றும், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது (அப் 4:33) என்றும் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பறைசாற்றியதைக் குறித்து வாசிக்கின்றோமே. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் (வெளி 1:18) என்று சொல்லுகிற இயேசுவை அல்லவா உயர்த்த அழைக்கப்பட்டவர்கள் நாம். 'இயேசு உயிர்த்தெழுந்தார்" என்பதே அன்றைய கிறிஸ்தவத்தின் பாடலாயிருந்தது; ஆனால், இன்றைய கிறிஸ்தவத்தின் பாடலோ,  'வெறுங்கையாய்ப் போனேன், இரண்டு பரிவாரம் கொண்டுவந்தேன்" என்பது. யாக்கோபு வெறும் தடியோடு சென்று, லேயாள் மற்றும் ராகேல் என்ற இரண்டு பரிவாரத்தோடு வந்தான். இப்படிப்பட்ட தவறான பாடல்களை இன்றைய நாட்களில் பாடிக்கொண்டிருக்கிறோம். 

ஆதி அப்போஸ்தலர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பிரசங்கித்ததினாலேயே அடிக்கப்பட்டார்கள். இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்கள் இவனைப் பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம் (அப் 24:5,6) என்று பவுலைக் குறித்துச் சொன்னபோது, நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள்  தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறதுபோல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன் (அப் 24:15) என்று உயிர்த்தெழுதலைக் குறித்துச் சொல்லுகின்றான் பவுல். அதுமாத்திரமல்ல, தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறாரென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள் (அப் 25:19) என்றும் வாசிக்கின்றோமே. பவுல் அடிக்கப்பட்டதற்குக் காரணம், மரித்த இயேசு உயிரோடு இருக்கிறார் என்ற அவன் பிரசங்கித்ததே. நாம் கிறிஸ்துவுக்காக பாடுகளைச் சகித்திருக்கிறோமா? 

பிரியமானவர்களே! உயிரோடிருக்கும் ஆண்டவர் நம்மோடு இருப்பதற்குத் தடையாயிருப்பவைகளை விட்டு விலகுவோம். ஆஸ்தியோ, அந்தஸ்தோ, காதலோ, கர்வமோ, பணமோ ஆண்டவருக்கும் நமக்கும் இடையில் தடை உண்டாக்கிவிடாதபடி கவனமாயிருப்போம். கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும் (ரோமர் 10:9,10); இதனாலேயே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள் (எபி 11:33-35). அதுமாத்திரமல்ல, வேறுசிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும்; வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள் (எபி 11:36-39).

விசுவாசம் மலைகளைப் பெயர்க்கும் என்பது உண்மைதான்; விசுவாசம் மரித்தோரை உயிரோடு எழுப்பச் செய்யும் என்பது உண்மைதான்; பீஹாரில் சிறு பிள்ளைகளைக் கொண்டு மரித்துப்போனவர்களை தேவன் உயிரோடு எழுப்பியிருக்கிறார். விசுவாசம் உலகத்தை ஜெயிக்கும் என்பது மெய்யே! ஆனால், வேறு சிலரோ மேன்மையான உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருப்பவர்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டதினால், சாதாரண உயிர்த்தெழுதல் கிடைக்கக்கூடும்; என்றபோதிலும், மேன்மையான உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாக மாற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்  பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வரு~ம் அரசாளுவார்கள் (வெளி. 20:4-6) என்று வாசிக்கின்றோமே. 

இதனையே, பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?  தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை (இந்த சபைக்கேற்றவைகளை) நீங்கள் தீர்த்துக்கொள்ளாக்கூடாதிருக்கிறது எப்படி? இந்த ஜீவனுக்கேற்ற (இந்த சபைக்கேற்ற) வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? (1கொரி 6:2-5) என்று எழுதுகின்றார் பவுல். 

பிரியமானவர்களே! உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு அவர் நம்மை நம்புகிறார், இந்த உலகத்தையும் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்பதற்கு சிங்காசனத்தில் நம்மை அமரச்செய்ய அவர் விரும்புகிறார். இத்தகைய மேன்மையான உயிர்த்தெழுதலை வாஞ்சிக்க கர்த்தர் நமக்கு உதவிசெய்வாராக!
 
மேன்மையான உயிர்த்தெலுதலும் மேலோக வாழ்வுடனும்
ஆயிரம் வருட ஆளுகையிலும் சிங்காசனத்தில் அவருடனும்
நித்தியமாய் இணைந்திருக்கும் சத்தியத்தின் சந்ததி நாம்
நிழலான இத்தரையோ ஓர் இமைப்பொழுதில் நீங்கிடுமே0

உயிர்த்தெழுதலின் செய்தி உலகெங்கும் சொல்லப்படட்டும்
பாதாளம் செல்லும் மக்கள் பரலோகம் சேர்க்கப்படட்டும்
வருகை அது சமீபமே விரைந்து செயல்படுவோமே
விண்ணகத்தின் வேலையிலே தாமதம் வேண்டாமே


                                                                            அன்பரின் அறுவடைப் பணியில் 
                                                                    அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்