அன்பின் மடல் December 2024

 


அன்பின் மடல்

December 2024


தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன் என்று வாக்களித்து, நம்பிக்கையுடைய சிறைகளே, உங்கள் அரணுக்குத் திரும்புங்கள் (சகரியா 9:11,12) என்ற அறைகூவல் விடும் ஆண்டவரின் நாமத்தில் நல்வாழ்த்துகள். 

டிசம்பர் மாதம் பிறந்தவுடனேயே, கிறிஸ்து பிறப்பின் தொனி நம் காதுகளில் விழத்தொடங்கும். முதல் கிறிஸ்மஸ் தினத்தினை நினைவில் கொண்டு, எந்த நேரத்தில், எந்தச் சூழ்நிலையில் கிறிஸ்து நம்பிக்கை நட்சத்திரமாக இவ்வுலகில் உதித்தார் என்பதனை சிந்திக்குங்கால், இன்றையச் சூழ்நிலையிலும், அதே தேவையை நாம் உணர்ந்துகொண்டு, கிறிஸ்மஸ் நற்செய்தியினைத் துரிதப்படுத்த தீவிரம் கொள்ளுவோம் என்கிற நோக்கோடு இந்த மடலை வரைகிறேன். 

கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் தேவன் தன்னுடைய ஜனத்தோடு பேசுவதனை நிறுத்திக்கொண்டார். சாலொமோன் இராஜாவுக்குப் பின் அவன் தேசம் இரண்டு துண்டாகிப்போனதனையும், அவை இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாக தேவனை விட்டு விலகிப்போனதையும் நாம் நன்கு அறிவோம். இடையிடையே, யூதா இராஜாக்கள் சிலரின் முயற்சியால் சீர்திருத்தங்களும் எழுப்புதலும் ஜனங்கள் மத்தியிலும் மற்றும் தேசத்திலும் உண்டானாலும், பின்னர் அவைகள் நிலைத்துநிற்கவில்லை. எனவே, அனைவரையும் 70 ஆண்டுகள் சிறையாக்கி, பாபிலோன் தேசத்தினரால் அழிக்கப்படவும், தேசத்தினை விட்டு அகற்றிப்போடவும் தீர்மானித்த ஆண்டவர், தம்முடைய மாறாத கிருபையின்படியேயும், உடன்படிக்கையின்படியேயும் திரும்ப அவர்களின் தேசத்திற்குக் கொண்டுவந்து நிலைநாட்டினார். 

அந்த 70 ஆண்டுகளில், விக்கிரக ஆராதனை அவர்களை விட்டு அகன்றது. இருதிறத்தார் ஒருதிறத்தாராகவும் மாறினர் (எசே. 37:19). ஆயினும், அவர்கள் மத்தியில் சீர்கேடும், ஒழுக்கக்கேடும் காணப்பட்டதனை எஸ்றா, நெகேமியா புத்தகங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. அதனால், வேதவசனத்தினைத் தெளிவாகப் போதிக்கவும், பின்பற்றவும் அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். 

ஆயினும், ஆண்டவருக்குரிய கனம் கொடுக்கப்படாமலேயே இருந்தது (மல். 1:6). குடும்ப வாழ்வின் சீர்கேடுகள் தலைதூக்கி நின்றன (மல். 2:14-16); இவைகள் தேவனை வேதனைப்படுத்தின (மல். 2:17). சிறுமைப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டனர் (மல். 3:5); தேவனுக்கு விரோதமாகப் பேசுவது சர்வ சாதாரணமாயிற்று (மல். 3:13). எனவே, துக்கமுற்ற ஆண்டவர் இனி இந்த ஜனத்தோடு பேசுவதில்லை என்று தீர்மானித்தார்.  

தெரிந்துகொள்ளப்பட்டு, கட்டளைகளைப் பெற்ற ஜனமே இப்படி இருக்குமானால், உலகத்தின் ஜனங்கள் எப்படி இருப்பார்கள்! மார்க்க சடங்குகளுக்குக் குறைவில்லை; ஆனால், ஆண்டவரைக் குறித்து அறிவு இல்லை. தேவன் நம்மை ஏற்றுக்கொள்வாரா? என்ற தெளிவு இல்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர, அதிகமானவர்கள் தேவனுக்குத் தூரமாகவே வாழ்ந்துகொண்டிருந்தனர். 

தேவன் தம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்றியது மாத்திரமல்லாமல், இஸ்ரவேலிலிருந்து இரட்சிப்பை உலகிற்கு அளிக்கவேண்டிய திட்டத்தினையும் மற்றும் நிறைவேற்றவேண்டிய கட்டாயத்தினையும் அறிந்தவராய் (யோவான் 4:22) செயல்பட விரும்பினாலும், ஆயத்தமில்லாத ஜனத்தின் அநியாயங்கள் அதனை செயல்படுத்தத் தடையாய் நின்றபோது, இனி அவர்களோடு பேசுவதில்லை என்றே தீர்மானித்ததுதான் 400 வருட மௌன காலம்.

எத்தனை காலம்தான் இரட்சிப்பின் திட்டத்தினைத் தள்ளிப்போடுவது? தலைமைபீடம் நன்றாகக் கறைபட்டுப்போயிற்று. அடிமைத்தனத்தில் தள்ளி அதனை சரிசெய்வது சரி என்றுதானோ, ரோமர்களின் கையிலே தேசத்தினை விற்றுப்போட்டார். இப்போது, சிறையாகக் கொண்டுபோகப்படவில்லை; மாறாக, இருந்த தேசத்திலேயே அடிமைகளாக்கப்பட்டார்கள் அரசியல் ரீதியாக!

பிசாசினை விரட்டத் தெரிந்திருந்தது; ஆனால், பிசாசு தங்களை ஆளுகிறதனை அறியவில்லை (லூக். 11:19). 'நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்' (யோவான் 8:44) என்று அவர்களின் நிலையை இயேசு உணர்த்தவேண்டியிருந்தது அல்லவா? விடுதலையில்லா வாழ்வு 

(யோவான் 9:34); ஆனால், அடிமையாய் இருக்கிறோம் என்ற அறிவு இல்லை. 

விடுதலையில்லா வாழ்வில் ஏது சந்தோஷம்? ஏது உறவுகளில் குதூகலம்? பயமும், நடுக்கமும்தானே மிஞ்சும். சந்தேகத்தில்தானே உயிர் ஊசலாடும். நியாயத்தீர்ப்பினைச் சந்திக்க பெலனும் இருக்காதே. நம்பிக்கை அற்ற வாழ்வு, அதனால் உண்டாகும் சோர்வு, மேசியாவை எதிர்பார்த்து பூத்துப்போன கண்கள்; நம்பிக்கை இல்லாததால் வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. எதிர்காலம் இருண்டதாய் இருக்க, நித்தியம் எப்படி ஒளியுள்ளதாக மாறமுடியும்! ஆனால், கிருபையில் ஐசுவரியமுள்ளவர் எத்தனை காலம்தான் மௌனமாயிருக்கமுடியும்? செயலற்றவராய் எத்தனை வருடங்கள் செலவழிக்கமுடியும்? 

எனவேதான், எப்படியாகிலும் செயல்படவேண்டும் என்ற நோக்கில், பூமியில் தன் வல்லமையைக் காண்பிக்க, அவரது கண்கள் தேடினபோது, அகப்பட்டவர்கள், எளியவர்களும், சாதாரண மக்களும், அதிக பிரசித்தமாகாதவர்களுமே.

ஆசாரியரும் வேதபாரகரும் உண்டு; மேசியா எங்கே பிறப்பார் என்கிற அறிவும் உண்டு (மத். 2:4-6). ஆனால், அதனை மேலும் அறியவேண்டும் என்ற ஆர்வமோ, அவசரமோ இல்லாத மனநிலை உடையோர். தங்களிடத்தில் ஏரோது விசாரித்தபோது, அவனிடத்தில், 'இப்போது அதனை கேட்பதற்கு என்ன காரணம்? என்ற ஒரு கேள்விகூட அவர்கள் நாவில் இல்லை. 

மேசியா வருவாரென்றும், அவர் வந்து ஜனங்களுக்கு தெளிவாகப் போதிப்பார் என்பதனை மக்களுக்குப் போதித்திருந்தனர் (யோவான் 4:25); ஆனால், அவர் வெளிப்பட்டபோது, அது அவர்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. 

மோசேயை அறிவோம் என்றார்கள்; ஆனால், மோசேக்கு வசனம் எழுதித்தந்தவரை அறியவில்லை. (யோவான் 9:29)

ஆபிரகாம்தான் எங்களுக்குத் தகப்பன் என்றனர்; ஆனால், ஆபிரகாமுக்குக் காட்சியளித்தவரையும் வாக்களித்தவரையும் அறியவில்லை. (யோவான் 8:56)

தாவீதைத் தெரியும் என்றார்கள்; ஆனால், தாவீதிற்கு சிங்காசனத்தினை உண்டாக்கினவரைத் தெரியவில்லை (மத். 12:23; 21:15,16). ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது முதுமொழி. அறிந்தோம் என்றனர்; ஆனால், அது மூளை அளவிலேயே; துடிப்போ, துரிதமோ அவரை அறிவதில் காண்பிக்கப்படவில்லையே! 

எலிசபெத், சகரியா தம்பதியினரின் அர்ப்பணிப்பும் குற்றமற்ற வாழ்க்கையும், தேவன் 400 வருடத்திற்குப் பின்பு இடைபடும் முதல் நபராக மாற்ற வலியதாய் இருந்ததே (லூக். 1:5,6). குடும்பமாகவும், கர்ப்பத்தின் பிள்ளையும்கூட ஆவியில் நிரம்பியிருக்கும் உன்னத அனுபவம் (லூக். 1:41,15,67), அப்படிப்பட்ட இருண்ட காலத்திலும் இவர்களுக்குச் சாத்தியமாயிற்றே!

மரியாள் முதற்பேறானவரைப் பெற்று ஆலயத்திற்குக் கொண்டுவரும் வேளையில், ஆட்டுக்குட்டி ஒன்றைக்கூட பலியிடத் தருவதற்குப் போதிய பணபலம் இல்லை யோசேப்புக்கு; அத்தனை ஏழை (லூக். 1:24). ஆனால், கீழ்ப்படிய மாத்திரம் எப்போதும் தாராளம் (மத். 1:18-25; 2:13-15; 2:19-23). அவனுடைய கீழ்ப்படிதல் அனைத்தும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக மாறிற்றே! 

'ஆண்டவருக்கு அடிமை' என்றே ஒரே வாக்கியத்தில் அத்தனை கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாளே மரியாள் என்னும் டீன் வயதைத் தாண்டாத மங்கை (லூக். 1:27-38). சரீரத்தையும் அவருக்குக் காணிக்கையாகத் தர தடை ஏதும் இல்லாமல் ஆக்கிவிட்டதே! 

பெயரில்லாத மேய்ப்பர்களுக்குத்தானே பரலோகப் பாடல்குழுவின் கீதம் தொனித்தது. தெய்வீகப் பாடல் குழுவின் பாடலில் பூரித்ததனைக் காட்டிலும், பாலகன் இயேசுவைத் தரிசிக்கவே அவர்கள் தீவிரம் காட்டினர் (லூக். 2:16). இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற செய்தி பிரசித்தம்பண்ணப்படவே என்று அறிந்து, கட்டளை பெறாமலிருந்தும், கண்டதையும் மற்றும் கேட்டதையும் அறிவித்தனரே. தாங்கள்தான் முதலில் கண்டோம் என தம்பட்டம் அடிக்கவும் மனம் வரவில்லையே! விளம்பரப் பிரியர் நிறைந்தவர் மத்தியில் இவர்கள் 'வித்தியாசமானவர்கள்'.

செல்வந்தர்கள், கற்றவர்கள், செல்வாக்குடையோர் இருந்தாலும், இயேசுவின் பிறப்பில் உதவினவர்கள் அனைவரும் சாதாரணமானவர்களே! மரியாள் என்னும் சிறுமி முதல், வயோதிபர்கள் பங்கும் அதில் அதிகமே. சிமியோன், அன்னாள் என்பவர்களுக்கும் அறிவிப்பும், அசாதாரண துல்லியமாக அவரைக் காணும் பாக்கியமும் கிடைத்ததே. 

அடிமைத்தனத்தில் (ரோமரின்) வாழ்ந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. எளியவருக்கும், ஏங்குவோருக்கும் ஒரு அருணோதயம் உதித்தது. இருளில் இருந்த ஜனத்திற்கு பெரிய வெளிச்சம் (மத். 4:14,15); காத்திருந்தவர்களுக்கு களிப்புச் செய்தி; பாவத்திலிருந்து விடுதலை தரும் நாயகனின் பிறப்பு பாரோருக்கு ஒரு வரப்பிரசாதம்; சமுதாயத்தால் இகழப்பட்டவர்க்கும் (ஆயக்காரர், விபச்சாரிகள்) அவரின் விருந்தில் ஓரிடம்; என்னே அற்புதம்! 

இன்றும் இரட்சகர் வருகையை உலகெங்கும் சாற்றிட அழைக்கப்பட்ட நாம், எளிமை விசுவாசம், தியாகம் என்னும் அச்சார வார்த்தைகளை அலட்சியப்படுத்த முடியாதே!

உல்லாசமும், டாம்பீகமும், எதிர்த்து நின்றலும், விளம்பரங்களும் நம்மை திசைதிருப்பிவிடக்கூடும். எல்லாரும் இணைந்துதான் இந்தப் பணியினை செய்துமுடிக்கக்கூடும் என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஓர் அம்சம். பகட்டாய் கொண்டாடுங்கள் என்கிறது உலகம்; பலருக்கும் சொல் என்கிறது உள்ளுணர்வு; பாடி மகிழ்ந்து அதிலேயே களிகூர்ந்து நின்றுவிடு என்கிறது தற்காலக் கிறிஸ்தவம். இயேசு வந்த நோக்கம் அத்தோடு முடிவதில்லை; மாறாக, அனைவர் காதிலும் விழவேண்டும் என்கிறது நிகழும் நிகழ்வுகள். நிலையற்ற, நம்பிக்கையற்ற மக்களுக்கு நம்மிடம் உள்ள ஒளஷதமே நம்பிக்கையின் நற்செய்தி. 


பாமரரும் விண்ணகப் பாடல் கேட்டார்

பார்த்த காட்சியை பாராருக்குச் சொன்னார்


பரிசுத்த ஆவியில் இயக்கப்பட்ட கூட்டம்

பரமனின் வருகைக்கு வித்திட்டார்


பகட்டினைத் தள்ளி எறிந்து பகருவோம் நாமும்

பகலவன் ஒளிபடும் நாடுகள் எங்கும்


தியாகமும் கீழ்ப்படிதலும் இணைந்திட்டால்

தீவிரம் எழும்பிடுமே திருச்சபை கூட்டம்


திராணிக்கும் மேலாகச் செயல்பட்டால் 

தரணியில் நற்செய்தி திக்கெட்டும் எட்டிடுமே


தயங்கி நிற்போர் தயக்கம் ஒழிப்போம்

தன்னிகரற்ற நம் நாதரை அறிவிக்கவே


அன்பரின் அறுவடைப் பணியில் 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்