அன்பின் மடல்
August 2024
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
வல்லமை மிகும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள். பொல்லாத சாத்தானையும் மற்றும் அவனுடைய தந்திரங்களையும் அழித்தொழிக்க அது போதுமே நமக்கு. அன்று சிந்திய அவரின் இரத்தத்தினாலும், நம்முடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை வீழ்த்துவோமே! (வெளி. 12:11)
இன்று அநேக எழுப்புதல் ஊழியங்கள் என்ற பெருங்கூட்டங்களும், மாநாடுகளும், கருத்தரங்குகளும் ஏராளமாக நடத்தப்படுகிறது; கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆயினும், அதனை உற்றுநோக்குங்கால், பழைய நாட்களும் அதின் அனுபவங்களும் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. எனவே, 'நீ இல்லாவிடில்' என்ற என்னுடைய 2-வது புத்தகத்தின் 32-ம் அத்தியாயத்தில் 'எழுப்புதலின் விளைவுகளும், இன்றைய குறைவுகளும்' என்ற தலைப்பின் கீழ் எழுதின கருத்துக்களையே பிரசுரிக்க முற்பட்டேன். தயவுசெய்து இதனை கருத்தோடு வாசித்து, தேவன் ஏவும் காரியத்தில் ஈடுபடுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஈவான்ஸ் ராபர்ட்ஸ் மூலம் வேல்ஸ் நாட்டில் விழுந்த சுத்திகரிப்போடு கூடிய எழுப்புதல், பின்னதாக நார்வே, ஸ்வீடன், பின்லாந்து நாடுகளிலும், தொடர்ச்சியாக ரஷ்யாவின் வட பகுதிகளிலும் விழுந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த நெருப்பு இந்திய தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களிலும் ,ந்தியாவின் தென்மேற்கு மாநிலங்களிலும் விழுவதற்கு கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பிடித்தது. ஆகையால், 1960-ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து சுநஎ. எட்வின் ஓர் என்ற தேவ மனிதர் அதனுடைய விளைவை அதிகப்படுத்த, சென்னை முதலான பட்டணங்களில் எழுப்புதல் ஆவி பற்றிப் பிடிக்கும்படியாக கூட்டங்களை நடத்தியதின் விளைவாக, ஆங்காங்கே ஜெபக் குழுக்களும், மனந்திரும்புதலின் ஆழத்தினை உணர்த்தும் செய்திகளைப் பறைசாற்றுகிறவர்களும் தமிழகத்தில் அதிகமாக எழும்பினார்கள். ஜெபிக்க ஆரம்பித்தவர்களுக்கு ஆத்தும பாரம் உண்டானது. தொடர்ந்து அறியப்படாத பகுதிகளைச் சந்திக்க வேண்டுமே என்ற ஆதங்கம் பெருகிற்று. 1965 முதல் 1975 வரை இதனுடைய தாக்கம் பல
மிஷனரி சங்கங்களை உருவாக்கிற்று. அவைகள் இன்றைக்கும் பலத்தோடும் நோக்கம் சிதறாமலும் செயல்படுகின்றன (FMPB, IEM, BYM, GEMS போன்றவைகள்).
ஆழமான மனந்திரும்புதலுக்கு வழி நடத்திய தேவ ஆவியானவர், சுத்திகரிப்பின் காரியத்தினை அநேக இளம் உள்ளங்களுக்குள் நேர்த்தியாகச் செய்ததினால், ஜெபங்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. உள்ளத்தினை ஊற்றி ஜெபிக்கும் ஜெபம், ஆண்டவரின் பேரில் அணையாத அன்பு கொண்டு எதனையும் இழக்கவும் ஆயத்தமாக்கிற்று.
'நேசம் மரணத்தைப் போல் வலிது, நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிதாயிருக்கிறது. அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜூவாலையுமாய் இருக்கிறது.
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்க மாட்டாது. வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது, ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும் அது முற்றிலும் அசட்டைப்பண்ணப்படும்' (உன். 8:6,7) என்ற வார்த்தைகள் அநேகரின் அனுபவமானதினால் பிறந்ததே மிஷனரி சங்கங்கள்.
சில தேவ மனிதர்களை தேவன் வேத வசனத்தைச் சார்ந்த சபைகளை ஸ்தாபிக்க உபயோகித்தார். சிலர் இருக்கும் பாரம்பரிய சபைகளில் எழுப்புதல் தீயைப் பற்றவைக்க தீவிரம் காட்டினர். சில வல்லமையான தீர்க்கதரிசிகளை தேவனே எழுப்பினார். பாடல் ஊழியத்தில் சிலர் வல்லமையாக உபயோகப்பட்டனர். அர்த்தம் நிறைந்த, அர்ப்பணத்திற்கு ஏவுகிற, ஆண்டவரின் அன்பைக் கூறி அறிவிக்கிற, ஆத்தும பாரத்தினையும், ஜெப ஆவியையும் தூண்டிவிடுகிற பாடல்கள் ஜனங்களை அசைத்துக்கொண்டிருந்தது.
பாவ உணர்வு மக்களுக்குள் பாய்ந்தோடியது. இந்த எழுப்புதலின் ஆரம்பத்தில் Dr. பில்லிகிரகாம், Dr. T. L. ஆஸ்பார்ன், Dr. ஓரல் ராபர்ட்ஸ், சகோ. பக்த் சிங், சகோ. N. தானியேல் (சகோ ஜோஷ்வா தானியேல்) போன்றவர்கள் இந்த அக்கினியை அதிகப்படுத்த உபயோகப்பட்டனர். தற்பரிசோதனை செய்வதிலும், வேத தியானத்திலும், ஜெபத்திலும் இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான நேரத்தைச் செலவழித்தனர்.
யாரும் ஜெபிக்கவேண்டும் என்று கற்றுத்தரவில்லை; ஆனால், ஆங்காங்கே தனியாக, குழுவாக ஜெபித்தார்கள். வேதம் வாசி என்று சொல்லத் தேவையில்லை; ஆனால், மணிக்கணக்காக வேதம் வாசித்தார்கள். ஊழியம் செய் என்று செயல்முறைகளை யாரும் போதிக்கவில்லை; ஆனால், தங்களுக்குத் தெரிந்த பலவிதங்களில் பிள்ளைகள் மத்தியில், தெருக்களில், கிராமங்களில், அலுவலகத்தில் ஊழியம் செய்தார்கள். காணிக்கையைப் பற்றிய விசேஷப் பிரசங்கங்கள் இல்லை; ஆனால், தாராளமாய், ஏராளமாய், தியாகமாய், எழுப்புதலின் தீயினால் தொடப்பட்டவர்கள் அள்ளித் தந்தார்கள். அடங்கி நட என்று அறிவுரை சொல்லப்படவில்லை; ஒருவருக்கொருவர் தேவபயத்தோடே கீழ்ப்படிந்தார்கள் (எபே. 5:21). வசனம் போதிக்கிறவர்களை மதியுங்கள் என்றும் (1 தெச. 5:11,12) நன்மை செய்யுங்கள் என்றும் நிர்பந்திக்கப்படவில்லை. (கலா.6:9)
மிஷனரி ஊழியங்களைக் குறித்த தகவல்கள் இல்லை; ஆனாலும், இயேசுவின் நாமம் சொல்லப்படாத பிரதேசங்களைக் குறித்த அங்கலாய்ப்பினால் உருவான ஜெபம் கண்ணீராய் மாறிற்று. இரவென்றும், மலையென்றும், ஆற்றுப்படுகையென்றும், வனாந்திரமென்றும் பார்க்காமல் உபவாச ஜெபங்களின் கூடுகையாக மாற்றப்பட்டது.
இதுதான் எழுப்புதல் தீயின் தாக்கம் என்பதனைக் கண்டவன் நான். ஆனால், இப்போது கூறப்படும் எழுப்புதல் என்ற கூக்குரல் என்னை ஒருபோதும் திருப்தி கொள்ளச்செய்யவில்லை; அது வெறும் ஆர்ப்பரிப்பின் சத்தமாக மாத்திரமே தெரிகிறது.
நித்தம் எமக்காய்ப் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே
அன்பின் பிதா முன்னில் நின்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங் கேளுமே
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐசுவரியமே
கூவிக்கதறியே இராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே
தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலைமாற
பக்தர் ஜெபம் கேளுமே.
சுத்திகரிப்பின் ஆவியும், சுவிசேஷ ஆர்வமுமே அடையாளங்கள|; எனவே, எழுப்புதலுக்கான ஜெபம் ஏறெடுக்கும் முன்னால், பெரிதான ஒரு சுத்திகரிப்பின் ஆவி நம்மனைவரையும் பற்றிப்பிடிக்க வேண்டியதனையும், மனந்திரும்புதலுக்கு அடையாளமாக வெளிப்படையானத் தவறுகளையும், தவறிப்போகப் பண்ணினவைகளையும் அறிக்கை செய்யவேண்டிய அவசியத்தினையும் நான் அதிகம் உணருகிறேன்.
எழுப்புதலினால் ஏற்படும் நன்மையைப் பற்றி பேசும் தேவதாசர்கள் உண்டு; ஆனால், எழுப்புதலுக்குத் தேவையான அடிப்படை அஸ்திபாரம் போட கூடுதல் கவனம் செலுத்துவது அதிக அவசியம்.
எழுப்புதலுக்காக ஏங்கும் தேவஊழியர் உண்டு; ஆயினும், மனந்திருந்துதலின் கனிகளைக் காண்பிக்க வேண்டிய அவசியத்தினை அழுத்திக் கூற இடம் தரவேண்டும்.
எழுப்புதலுக்காக கண்ணீர் விடும் கூட்டமும் உண்டு; ஆனால், அதற்குரிய விலைக்கிரயம் செலுத்தத் தயாரானவர்களின் எண்ணிக்கை கைவிரல்களில் அடக்கம்.
எழுப்புதலின் எந்த சரித்திரத்தின் இறுதியிலும், மிஷனரிகள் புறப்பட்டுப் போனதே சரியான எழுப்புதலின் அடையாளம். ஆனால், இன்று, ஆவிக்குரிய இளைஞருடைய நிலைமையை நான் ஆராய்ச்சி செய்துபார்த்தால், அன்று ஏற்பட்ட மாற்றம் அவர்களில் மிகவும் குறைவாக இருப்பதனைக் காணமுடியும். அதில் சிலவற்றை மாத்திரம் தருகிறேன். குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு அல்லாமல் ஏக்கப் பெருமூச்சோடு இவைகளை ஒப்பிடுகிறேன். ஒருவேளை, இதுவே ஆராய்ந்து பார்க்க ஏதுவாக இருக்கும் என்றும் நம்புகிறேன். சில காரியங்கள் நான் சொல்லுவது ஏற்கத்தகாததாக இருக்கலாம் அல்லது எல்லாருக்கும் பொருந்தாததாக இருக்கலாம். ஆனால், உண்மை நிலையறிந்தால் சீர் செய்து கொள்ளவும், தெளிவாக ஜெபிக்கவும் ஏதுவாகும் என்று நினைத்து கீழே தருகிறேன்.
எண் | காரியம் | உண்மை எழுப்புதலைக் கண்டபின் உண்டான நிலை | தற்போதைய நிலை |
1 | அர்ப்பணம் | ஆழமானது | மேலோட்டமானது |
2 | நோக்கம் | தெளிவானது | சிதறுண்டது |
3 | பிரதிஷ்டை | உடைக்கப்படாதது | நொறுங்கக்கூடியது |
4 | விலைக்கிரயம் | எதையும் செலுத்த ஆயத்தம் | இலாபம் தருவதற்காக மாத்திரம் |
5 | எதிர்கால பயம் | எண்ணிப் பார்க்காதது | உண்ணிப்பாகக் கணக்கிடுவது |
6 | குழு வாழ்வு | எளிதானது | மிகவும் கஷ்டப்பட்டு மேற்கொள்வது |
7 | தனக்கு மகிமை தேடுதல் | கவலையற்றிருத்தல் | அதிக கவனம் |
8 | உடனடியான பலன் எதிர்பார்ப்பு | பொறுமையுடன் காத்திருத்தல் | உடனடியாக மாற்றிக்கொள்ள வாஞ்சித்தல் |
9 | திருமணம் | தரிசனமிக்கத் துணையைத் தேடுதல் | கண்ணுக்கு இனியவைகளுக்கு முக்கியத்துவம் |
10 | சிலுவையில் அறையப்பட்ட அனுபவம் | தானாக முன்வருவது | மிகுந்த வேதனையுடன் ஒப்புக்கொள்ளுதல் |
11 | பகிர்ந்துகொள்ளுதல் | கேட்காமலே தருவது | நெருக்கத்தில் பகிர்வது |
12 | யோசனைகள் | தன் எல்லைக்குட்பட்டு யோசிப்பது | காட்டுத்தனமானது |
13 | தேவனிடத்தில் காத்திருத்தல் | முன்னுரிமை | அவசரக் குடுக்கை |
14 | உக்கிராணத்துவம் | இயற்கையாக வருவது | கண்டிப்பாக நடத்த வேண்டிய அவசியம் |
15 | மற்றவர்களிடம் கற்றுக்கொள்ளுதல் | கிடைக்காதா என்ற ஏக்கம் | நாட்டமில்லை |
16 | தேசத் தேவையைக் குறித்த அறிவு | கொஞ்ச அறிவு | அறிய விரும்பாமை |
17 | திருப்தியான வாழ்வு | போதுமென்ற மனது | ஒருபோதும் நிறைவடையாத வாழ்வு |
18 | வேத தியானம் | அத்தியாவசியம் என நம்புவது | அநேகக் காரியங்களை வைத்துக் குழப்புவது |
19 | பழைய மிஷனரி சரிதைகளைக் குறித்து அறிய விருப்பம் | அவர்களைப் பின்பற்ற முயல்வது | அநேகக் காரியங்களை வைத்துக் குழப்புவது |
20 | இசைந்துபோதல் | இயற்கையானது | கடிவாளம் அணிந்தால் சாத்தியம் |
21 | கவரும் நிலையில் தன்னைத் திருத்துதல் | கவலையில்லை | மிகவும் நேசித்தல் |
22 | கனவுகள் | தேவ இராஜ்யத்துக்கு அடுத்தவை | உலகம் சுற்றிவருபவை |
23 | திட்டமிடுதல் | இழப்பு ஏற்படாமல் காப்பதில் கவனம் | இனந்தெரியாத கவனம் |
24 | மற்றவர்களை நம்புதல் | பூரணமாக நம்புதல் | சந்தேகக் கண்கள் |
25 | உணர்வுகளை மறைத்தல் | விழுங்கிவிடுதல் | உடனே வெளிப்படுத்துதல் |
26 | உண்மை | உள்ளான மனிதனில் அதிகம் | முடிகிற அளவிற்கு |
27 | மற்றவர்களைப் பயிற்சிப்பித்தல் | கவனம் செலுத்துதல் | பயிற்சிபெறுவோர் அடிமைபோல் இருத்தல் |
28 | ஒழுங்கு | கூடியவரை முயற்சித்தல் | மற்றவர்களிடத்தில் எதிர்பார்ப்பு |
29 | நன்னடக்கை | அதிக முக்கியத்துவம் தருதல் | முயற்சி நிலையிலேயே |
30 | தியாகம் | தன்னைப் பாதிக்கும் வரை | அதிகம் இருக்கும்போது மாத்திரம் |
31 | காயப்படுதல் | எளிதாக அல்ல | மிகவும் எளிதான |
32 | எளிமை | இயேசுவை பின்பற்றுதல் | அகந்தையோடு கலந்தது |
33 | தடைகளைத் தாண்டுதல் | தெய்வீக முறைகளைக் கையாளுதல் | எப்படியாகிலும் |
34 | ஈர்ப்புகள் | மிகவும் குறைவு | அதிக எண்ணிக்கையில் |
35 | தேவ இராஜ்ய நோக்கம் | விட்டுக்கொடுக்க ஆயத்தம் | தனக்குப் போகதான் தானம் என்ற மனநிலை |
36 | நெருக்கடிகளைச் சமாளித்தல் | ஜெபத்தை அதிகரித்தல் | மனித முயற்சிகளில் ஈடுபடுதல் |
மனிதர் என்னை கைவிட்டாலும்மாமிசம் அழுகி நாறிட்டாலும்ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும்இயேசு போதுமே, இயேசு போதுமேஎந்த நாளிலுமே, எந்நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலேஇயேசு போதுமேபிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்மயங்கிடாமல் முன்னேறவே!