அன்பின் மடல் July 2024

  

அன்பின் மடல்

July 2024


கிறிஸ்துவுக்குள்  அன்பான ஜெபப் பங்காளர்களுக்கு,


சமுத்திரத்திலே வழியையும், வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவர்கள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்து கிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிறவரும்,  கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள். நமக்காக யுத்தங்களை நடத்துகிறவரின் கிருபை நம்மில் பெருகுவதாக. 

இன்றைய நாட்களில், சாக்குப் போக்குச் சொல்வோரின் எண்ணிக்கை மிகுதியானதினால்தான், தேவ இராஜ்யத்தின் விஸ்தரிப்பு தேங்கிக் கிடக்கிறது. அழைப்பைக் கேட்டவர்களும் மற்றும் அதற்கேற்ற அபிஷேகத்தை தேவனிடத்திலிருந்து பெற்றவர்களும், தேவ இராஜ்யத்தின் பணிக்கென்று தங்களை அர்ப்பணிக்க அவசரம் காட்டாததினால்தான், அன்பரின் இராஜ்யம் இன்னமும் அகலப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. சிலரோ, தங்கள் வாழ்க்கையில் அழைப்பு இன்னமும் தெளிவாக இல்லை என்கின்றனர்; பலரோ, தேவனுடைய அழைப்பை அசட்டை செய்துவிட்டனர்; ஒரு சாராரோ, சரியான காலத்தில் அடியெடுத்து வைக்காததினால் அவதிப்படுகின்றனர், பின்னால் அதை நினைத்து நினைத்து அழுதும் புலம்புகின்றனர். 

அசட்டைபண்ணினவர்களின் பட்டியலில் முதலிடம் பெறுபவன் ஏசா தான். இந்த ஏசாவின் சந்ததியாராய் இராதபடி, கூழுக்கு விற்றுப் போட்டவர்களாக மாறாதபடி, தேவன் நம்மைத் தற்காப்பாராக. அவசர காலத்தை அறியாது, அரண்மனை சுகமே போதுமென்று வீற்றிருந்த எஸ்தர், 'யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவினுடைய சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை' (எஸ்தர் 4:11) என்று சொல்லுகின்றாள். 

1. நான் அழைப்பிக்கப்படவில்லை

2. அழைக்காமல் சென்றால் சாக வேண்டும் 

3. சட்டங்கள் எனக்கு விரோதமாக இருக்கின்றன 

  அழைப்பு 

முதலாவதாக, எல்லாரையும் தேவன் நேரடியாக அழைத்தது இல்லை. ஒரு சிலரை பெயர் சொல்லி அழைத்தது உண்மைதான். 'அறியாதிருந்த உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன்' என்று ஒரு சிலரைக் குறித்துத் திட்டமாய்ச் சொல்வதும் உண்மைதான். என்றபோதிலும், பெயர் சொல்லி அழைத்தோரை மாத்திரம் வேதத்தில் தேடுவோமென்றால் வெகு சிலரே எண்ணிக்கையில் அடங்குவர்; ஆபிரகாமும், மோசேயும். பேதுருவும் இந்த வகையைச் சேரலாம். 

இரண்டாவதாக, சூழ்நிலைகளையும், தேவைகளையும் கண்டு தங்களை பணியில் ஈடுபடுத்தினோர் வேதத்தில் இடம் பெறாமல் இல்லை. கோலியாத்தைக் கொன்ற ஒரு தாவீதும், தேவக் கோபாக்கினைக்கு முற்றுப் புள்ளி வைத்த பினெகாசும், பேச அறியேன் என்று சொல்லிய மோசேக்கு வாயாகிய ஆரோனும், பவுலின் வழித்துணையான சீலாவும் இதில் அடங்குவர். தேவனையும், தேவையையும் கண்ட மனிதன் வாய்க்காலாய் மாறிப் போவதில் வியப்பொன்றுமில்லை. 'இதோ என்னை அனுப்பும்' என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, தேவனுடைய அன்பை, தேவை மிகுந்த மனுக்குலத்திற்குக் கொண்டுவரும் வாய்க்காலாகத் தன்னை மாற்றிக் கொண்டார். ஏசாயா தீர்க்கனும் விசேஷ ஊழியத்திற்கென தன்னையே ஒப்புக்கொடுத்தானேயல்லாமல் வேறு காரணம் வேதத்தில் கூறப்படவில்லை. 'யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்'  என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டதும், இத்தனை பெருந்தேவை இருக்கும் போது, நான் ஏன் இதை நிறைவேற்றக் கூடாதென்று சொல்லி, செயலில் இறங்கி விடுகிறான். 'இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்;' (ஏசா. 6:8) என்று தன்னை அவர் பணிக்கு அர்ப்பணிக்கின்றான். ஒரு காலகட்டத்தில், அவனும் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே தேவ பணிக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவனென்பது தெளிவாகிறது; அழைப்பு உறுதியாகிறது. 

மூன்றாவதாக, கேள்விப்பட்டவைகளை உள்ளத்தில் ஏந்தி பாரப்படும் மனிதன், ஜெபத்தில் கண்ணீரை ஊற்றி முழங்காலில் நிற்கும்போது, அவனையும் அறியாமல் செயல்பாட்டில் இறங்குகிறான். வாய்ப்புகளின் கதவுகள் திறக்க, மதகுகளைத் திறந்த வெள்ளம் போல ஓடி உழைக்க ஆரம்பிக்கிறான்; பின்னர், உலகம் அவனையும் அழைக்கப்பட்டவனாக அடையாளம் கண்டுகொள்ளுகிறது. நெகேமியா மற்றும் எஸ்றா போன்றவர்கள் இப்படித்தான் அழைப்பைப் பெற்றார்கள். கேட்ட செய்திகள், கேடுபாடு நிறைந்த மற்றும் தேவை மிகு பிரதேசங்களில் கணக்கெடுப்பின் உண்மைகள் ஆகிய இவைகளே அநேகரை இன்று தேவப் பணியில் முன்னிலையில் நிறுத்தியிருக்கிறது. தேவனும் அவர்களை அங்கீகரித்திருக்கிறார். 

நான்காவதாக, தேவ ஆவியினால் உந்தப்பட்ட தேவ மனிதர்கள், 'என்னோடு வா' என்று அழைக்கும் அழைப்பை தேவனின் சொல்லாகவே கேட்டோர், கீழ்ப்படியத் தயக்கம் காட்டினதில்லை. எலிசாவைப் பாருங்கள், ஏன் தீமோத்தேயுவையும் பாருங்கள்; ,வர்களெல்லாம் ,ப்படித்தான் அழைப்பைப் பெற்றார்கள். கடைசியாக, தேவன் பிரித்தெடுக்க விரும்பும் சிலரை, விபத்துகள், வியாதிகள் போன்ற இடுக்கத்தில் நிறுத்தி, தேவனுக்கு ஊழியம் செய்வதற்கென்று அர்ப்பணிக்கும் வரை அவர்களை விடாமல் பிடித்து, கஷ்ட நஷ்டங்கள் என்கின்ற உலையினின்று ஊழியத்திற்கு பிரிக்கிறார். தொடரும் தோல்விகள், பின்பற்றும் பயங்கரங்கள் மற்றும் மடிவினால் உண்டாகும் சோகக் குரல்களினால், 'இனி நான் தப்புவிக்கப்பட்டால் தேவனுக்காகவே ஊழியம் செய்வேன்' என்று முடிவெடுக்க வைக்கிறார். அந்த அரும்பு மலர்ந்து அழைப்பு என்னும் பூவாய் விரிந்து அவரின் மணத்தை வீசுகிறது. 

இந்தப் பின்னணியிலே, ஆரோனைப் போல அழைக்கப் பட்டாலொழிய முழு நேரத்திற்கு ஒப்புகொடுப்பது எப்படி? என்ற கேள்வி உத்தரவு பெறும் என நம்புகிறேன். எவ்விதத்திலும் தேவன் உங்களை அழைக்கலாம்; யாரையும் அதற்கு உபயோகிக்கலாம். நம் செவிகள் மாத்திரம் விருத்தசேதனம் உள்ளவைகளாய் இருக்குமானால், நம்மை நோக்கி வரும் அழைப்பை நாம் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடியும். பிரசங்க ஊழியத்திற்கு மாத்திரமல்ல, பெசலெயேலின் ஊழியத்தைச் செய்வதற்கும் ஆட்கள் இன்றைக்கு ஆண்டவருக்கு தேவை. (யாத். 31:2) 

தேவன் அழைக்கிறார் என்பதை தாங்கள் அறிந்துகொண்ட பின்னரும், அர்ப்பணிப்பதற்கும், அழைப்பில் முன்னேறிச் செல்லுவதற்கும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கும், தேவ இராஜ்யத்தின் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுவதற்கும் தடைகளாகக் காணப்படும் சிலவற்றையும் கூடவே நாம் அறிந்துகொள்வது நல்லது. 

 அசட்டை

அழைப்பைப் பெற்றவர்கள் அசட்டையாக இருக்கக் காரணங்களில் ஒன்று பொருளாசை. கொண்டதில் கொண்டாட்டம் அடைவோர் ஒரு நாளும் தேவனுக்குக் கீழ்ப்படியத் துணியமாட்டார். லூக். 14:17-20 - ல் 

1. வயலைக் கொண்டேன் 

2. ஐந்தேர் மாடுகளைக் கொண்டேன்  

3. பெண்ணைக் கொண்டேன் என்றனர் 

அழைக்கப்பட்ட இவர்கள் முதலாவதாகவே கொள்முதல் (வாங்குதல்) செய்துவிட்டார்களே; பின்னும், ஏன் அதையே கொண்டாட்டம் ஆக்கிவிட்டனர். மண், பொன், பொருள், பெண், ஆசைகள் இவை அனைத்தும் அழைப்பை அசட்டை செய்துவிட வைத்துவிடும். எண்ணங்கள் உன்னதத்தில் வைக்கப்படாவிட்டால், மங்கும் பொன்னின் மேல் வைக்கப்படும். அநீதியான உலகப் பொருள்களின் மூலம் சிநேகிதர்களை சம்பாதியுங்கள் என்றார் இயேசு கிறிஸ்து (லூக்கா 16:9). அதே அதிகாரம் 13-ம் வசனத்தில் தேவனுக்கும், உலகப் பொருளுக்கும் உங்களால் ஊழியஞ் செய்யக் கூடாது என்றார். தொடர்ந்து, 15-ம் வசனத்தில் இதையெல்லாம் பொருளாசைக்காரர்களான பரிசேயர் கேட்டு அவரை பரியாசம் செய்தனர் என்று வாசிக்கின்றோமே. பொருள்களைப் பற்றிய பாசம் நம்முடைய வாழ்க்கையில் கவலையீனத்தையும், அசட்டையையும் கொண்டுவந்துவிடும். சோதோமின் பாவத்திற்கு மூல காரணம் இது என்று ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் (எசேக்கியேல் 16:49); எரேமியா இஸ்ரவேலைப் பார்த்து புலம்பினதும் இதற்காகத் தான். அவர்களின் சிறியோர் முதல் பெரியோர் மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்கள் (எரேமியா 6:13). திருடனான யூதாசும் இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுக்கத் தயங்கவில்லை. 


சந்தேகம்

அழைப்பை அசட்டை பண்ணும் மற்றொரு காரியம் சந்தேகம். இது மூன்று வகையானது. 

1. தேவனைச் சந்தேகிப்பது 

2. தன்னையே சந்தேகிப்பது 

3. சூழ்நிலைகளைச் சந்தேகிப்பது

தேவனைச் சந்தேகிப்போர்: அழைப்பு பெற்ற கிதியோனைப் பாருங்கள். அவனுடைய கேள்விகளை ஆராய்ந்து பாருங்கள். நியா 6:19 சொல்லுகிறது, 

1. ஆண்டவர் எங்களோடிருந்தால் ஏன் இப்படி ? 

2. அற்புதங்கள் எங்கே அற்புதங்கள் செய்கிறவர் எங்கே ?

3. அவர்தான் எங்களை கைவிட்டு விட்டாரே என்று.

இப்படித்தான் இன்றும் சிலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். எலியாவின் தேவன் எங்கே என்று கேட்போர் ஒன்றை மறந்து விட்டனர்;அவர் எலியாக்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். தேவனைச் சந்தேகிக்க வைப்பதே சத்துருதான், ஆதியில் ஆதாம் மற்றும் ஏவாளிடத்தில் தேவ வார்த்தைகளைச் சந்தேகிக்கும் வித்துக்களைத் தூவிவிட்டவன் அவனே. தேவனைச் சந்தேகிப்பவர்கள், தேவனது வார்த்தைகளையும் சந்தேகிப்பார்கள்; தேவ வார்த்தைகளைச் சந்தேகிப்பவர்கள், தேவனுடைய வல்லமையையும் சந்தேகிப்பார்கள். ஆகையால்தான், இயேசு, நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினால் அல்லவோ தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்று வினவினார் 

(மாற்கு 12:24). அதைத்தான், விசுவாசிக்கிறவனால் எல்லாம் கூடும் என்று நாம் சொல்லுகிறோம். 

தன்னையே சந்தேகிப்போர்: மோசேயை கவனித்துப் பாருங்கள். அவனுடைய சந்தேகமெல்லாம் அவனைச் சுற்றியதே. 

1 நான் எம்மாத்திரம் (யாத். 3: 11) 

2. என்னை நம்ப மாட்டார்கள் (யாத். 4:1) 

3. பேச அறியேன் (யாத். 4:10) 

தன்னையும், தன் பெலவீனத்தையும் பார்த்துக்கொண்டே நிற்கும் மனிதன் ஒருக்காலமும் கீழ்ப்படியாமல் போய்விடுவான். 

'அழைத்த தெய்வம் உண்மையானவரல்லோ 

வழியில் நான் வழி தப்பி போகா வண்ணம் 

வருகை மட்டும் என்னை பிரியா வண்ணம் 

வலது கை பிடித்தென்னை நடத்திடுவார்' - மறைவிடமாம் 

சூழ்நிலையைச் சந்தேகிப்போர் : அவசர காலத்தை அறியாத எஸ்தர் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தாள்; நான் அழைக்கப்படவில்லை, நான் சாக நேரிடலாம், இராஜாவின் மாறாத சட்டம் எனக்கு விரோதமாக இருக்கிறது என்று. சத்துருவின் சதிகளையும் மற்றும் காலத்தின் வேகத்தையும் புரிந்துகொள்ளாதோர், இப்படித்தான் சொல்லி தங்களைத் தேற்றிக் கொள்ளுகின்றனர். யுத்தத்தில் நின்றவர்களுக்கு ஆடல், பாடல் சத்தம் கூட யுத்த தொனியாகக் கேட்டது (யாத். 32:17). ஆனால், இன்றைக்கு, அசட்டை செய்தோருக்கு அவரின் சத்தமும் சத்துருவின் யுத்தசத்தமும் ஆடல் பாடலின் சத்தமாகக் கேட்கிறது. ஆராதனை முக்கியமானதுதான், ஆடல் பாடல் நிறைந்ததுதான்; இங்கே இருப்பது நல்லது என்று சொல்லும் இடம்தான்; ஆளுக்கொரு கூடாரம் போடுவதற்கு ஆசை காட்டுவதுதான்; ஆனால், அத்தோடு நின்றுவிட நாம் அழைக்கப்படவில்லையே. சிறையிருப்பின் தத்தளிப்பை என் காதுகள் கேட்டது உண்மையானால், நரகத்தினின்று எழும்பும் முணுமுணுப்பை நான் கேட்டது சரியானால், எலும்புகள் நிறைந்;த பள்ளத்தாக்குகளின் ஊடே நான் நடந்தது உண்டானால், நியாயத்தீர்ப்பின் நாளை நான் நினைத்துப் பார்ப்பது உண்மையானால், அசட்டை என்னும் சொல் என் அகராதியில் இல்லாமல் போயிருக்கும். 

அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர் - இது 

ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

  நாம் வாழும் இந்தக் காலம் ஒரு அவசரக் காலம் என்பதையும் 'யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள். உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. பயிர் முதிர்ந்தது, 

அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது' (யோவேல் 3:9,10,13,14) என்பதையும் அறிந்துகொள்ளுவோம். ஆண்டவருடைய பணியின் அவசரத்தைப் புரிந்தவர்களாக இன்றே செயல்படத் தொடங்குவோம், தேவ இராஜ்யத்தைக் கட்டும் பணிகளில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ளுவோம்! 

 

அழைப்பில்லை என்று அமர்ந்து விடாதே!                   

        ஆற்றல் உண்டு உனக்கு அவர் பெலத்தால் 

இளைத்தவனுக்கு ஏற்ற வார்த்தைகளை சொல்ல 

ஈவாக உனக்கு அருள்வார் அவர் திரு வாக்கு

உனக்குள்ளதெல்லாம் அவருக்கென்று கொடுப்பார் 

ஊமையின் நாவும் அவர் துதியால் கெம்பீரிக்கும் 

எண்ணங்கள் எத்திசையிலும் சிதறாமல் 

ஏற்றுக் கொள்வோர் ருக்கும் திசை திருப்பப்பட 

ஐயங்கள் அனைத்தையும் அகற்றி 

ஒப்புரவாக்குதலின் ஊழியத்திற்கு உன்னை ஒப்புக் கொடுத்து

ஓட்டத்தை சந்தோஷத்துடன் முடிக்க 

ஒளஷதமாம் யேசுவின் நாமம் அகிலம் பரவ 

கற்ற நல்லவைகளை பலரும் அறிய 

சத்துவமற்ற உன்னையே அவர் நம்பியிருக்கிறார் 

டமாரம் அடிப்போர் செய்வது ஒன்றும் ல்லை 

தற்பெருமை கொண்டோர் தலைகீழாய் விழுந்தார் 

பலதைக் கற்றேன் என்றோர் பாரில் பதுமையானார்


அன்பரின் அறுவடைப் பணியில்

   D. அகஸ்டின் ஜெபக்குமார்