அன்பின் மடல் April 2024

 

அன்பின் மடல்

April 2024


கிறிஸ்துவுக்குள்  அன்பான ஜெபப் பங்காளர்களுக்கு,

அடிமைத்தனத்திலிருப்போரின் கூக்குரலைக் கேட்பவரும் (யாத். 37), அவர்களை விடுவிக்கும்படியாக மோசே, ஒத்னியேல், கிதியோன் (யாத். 310; நியா. 39; நியா. 614)  போன்ற இரட்சகர்களை எழும்பப்பபண்ணுகிறவரும், 'நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார்'  (எபி. 15) என்று சொன்ன தன்னுடைய ஒரே பேறான குமாரனையே, நாம் கெட்டுப்போகாதிருக்கும்படியாகவும், நித்திய ஜீவனை அடையும்படியாகவும,; இரட்சிக்கும்படியாகவும்,  சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து (யோவான் 316) நம்மை அவருடைய பிள்ளைகளாக்கிக்கொண்டவரும் (யோவான் 112), இலவசமான ஈவாகிய அவருடைய இரட்சிப்பை இந்த உலகத்தில் நம்மை அனுபவிக்கச் செய்தவருமாகிய (எபே. 28) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

                இன்றைய நாட்களில், நம்முடைய தேசத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காகவும், மக்களவை உறுப்பினர்களுக்காகவும், புதிதாக அமையவிருக்கும் மத்திய அரசாங்கத்திற்காகவும் மற்றும் பதவி ஏற்கவிருக்கும் மத்திய மந்திரிகளுக்காகவும் ஜெபிப்பது நமது கடமை. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் (தானி. 221). எனவே, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு  ஷேமத்தைக்கொடுப்பேன் (2 நாளா. 714) என்ற வார்த்தை நம்முடைய நாட்களில் நாம் வாழுகின்ற இந்த பரந்த தேசத்தில் நிறைவேற  நம்முடைய ஜெப பலீபீடங்களில் அக்கினி அணைந்துவிடாதிருக்கட்டும். அவருடைய ஆசீர்வாதம் இன்றி, இந்த தேசத்தை வழிநடத்துவதென்பது கூடாதது. தங்களுடைய இஷ்டத்திற்காகவும் மற்றும் விருப்பத்திற்காகவும் அல்ல, இந்த தேசத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுடைய நன்மைகளுக்காகச் சிந்திக்கிறவர்களையும், தேவ இராஜ்யத்திற்கு இடறலற்றவர்களையும் மற்றும் இன்னலிழைக்காதவர்களையும் வரும் நாட்களில் ஆண்டவர் ஆட்சியில் அமரச்செய்யட்டும்; அவர் செய்ய நினைத்ததை யாரும் தடைசெய்யமுடியாதல்லவா. பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுப்பவரும், பூச்சக்கரம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவரும் அவர்தானே (யோபு 3413). 'தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது' (ரோமர் 131) என்றே எழுதுகிறார் பவுல். 'பரத்திலிருந்து கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது' (யோவான் 1911) என்பதுதானே பிலாத்துவுக்கு முன் இயேசு கிறிஸ்து பேசின வார்த்தைகள். அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அதிகாரம் பெற்று புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த சவுலை (அப். 914), தமஸ்குவிற்குச் செல்லும் பாதையில் தடுத்து நிறுத்தி, அப்போஸ்தலனாக மாற்றிய தேவன் (அப். 2612-18) இன்றும் ஜீவிக்கின்றாரே!

                பிரியமானவர்களே!  இந்த தேர்தல் நாட்களில், இந்த தேசத்தில் வசிக்கும் நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பாகிய, வாக்களிக்கும் உரிமையிலிருந்து நாம் ஒருபோதும் விலகிச்சென்றுவிடக்கூடாது; அதனை மறந்தவர்களாகவும் இருந்துவிடக் கூடாது. 2019 மக்களவைத் தேர்தலில், சென்னையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 57.07 விழுக்காடு மாத்திரமே; அவ்வாறே, டெல்லியில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 60.7 விழுக்காடு மாத்திரமே. இது எதைக் காட்டுகின்றது? நன்றாகக் கல்வி கற்றவர்கள், அரசாங்க அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களில் அநேகர், அந்நாட்களை தங்களுக்குக் கிடைத்த விடுமுறை நாட்களாகக் கருதி வீட்டிலேயே இருந்துவிட்டனர் என்பதைத்தானே! சாதாரண, நாட்டு நடப்பினை அறியாத மற்றும் கல்வியறிவு இல்லாத ஜனங்கள் அநேகர் வாக்களிப்பதினாலேயே, இன்றைய நாட்களிலும், தேசத்தில் தவறானத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; கல்லியறிவு உள்ளவர்களோ உறங்கிக்கொண்டிருக்கின்றனர். எனவே, வரப்போகும் தேர்தலில், தேவன் நம்முடைய கரங்களில் தந்திருக்கும் உரிமையை தேவனுக்காகப் பயன்படுத்துவோம்; தேவ நாமம் தேசத்தில் உயர்த்தப்படட்டும்.

                பிரியமானவர்களே! நம்முடைய தேவன், சோதனைகளின் மூலமாக நம்மை இன்னும் நெருக்கமாக அவர் பக்கம் இழுத்துக்கொள்ளுகிறவர் என்பதை இன்றைய நாட்களில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.  சந்தோஷமான மற்றும் மகிழ்ச்சியான நேரங்களில் தேவனுடைய சத்தத்தை ஒருவேளை நம்மால் கேட்கக்கூடாமற்போகலாம், இசைக்கருவிகளின் ஓசைகள் மாத்திரமே நமது செவிகளில் தொனித்துக்கொண்டிருக்கலாம்; ஆனால், சோதனைகளின் நேரத்தில், வேதனையான சமயங்களில், துக்கமான நேரங்களில், அவருடைய மெல்லிய சத்தம் தெளிவாக நம்முடைய காதுகளில் தொனிக்கின்றதை நம்மால் உணரமுடியும். வேதனையின் நேரத்தில், தேவன் தன்னுடைய சத்தத்தை நமது காதுகளில் தொனிக்கப்பண்ணுகிறார் . (God whispers in our pains). சோதனைகள், நம்முடைய வாழ்க்கையில் நன்மைகளையே கொண்டுவருகின்றன; சோதனைகளின் நேரத்தில் தேவ சத்தத்தை தெளிவாக நாம் கேட்கமுடியும்; சோதனையின் மூலமாக தேவ சித்தத்திற்கு நேராக நாம் முன்னேறிச் செல்லமுடியும்; இவைகளை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். அதுமாத்திரமல்ல, கிறிஸ்துவின் சந்ததியாராகிய நம்மிடத்தில், கிறிஸ்துவின் குணங்கள் காணப்படவேண்டும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது; இதனையே இந்த மடலில் சற்று விளக்க விரும்புகின்றேன். 

                ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபே. 211-13) என்றே நம்முடைய தற்போதைய நிலையைக் குறித்து, அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு எழுதியுணர்த்துகின்றார்.  

                அந்நியரும் புறஜாதியாருமாயிருந்த, ஆசீர்வாதத்தின் சந்ததியாரல்லாதவர்களாயிருந்த,  நம்பிக்கையற்றவர்களாயிருந்த, தேவனுக்குப் பிரியமில்லாதவர்களாயிருந்த, ஆபிரகாமின் சந்ததியாராகிய இஸ்ரவேலருக்கு மாத்திரமே கிடைக்கக்கூடிய காணியாட்சிக்குப் புறம்பானவர்களாயிருந்த,  தேவனற்றவர்களாயிருந்த மற்றும் மரங்களையும், விலங்குகளையும், சூரியனையும் மற்றும் பிசாசையும் ஆராதிக்கிறவர்களுமாயிருந்த நாம், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதினால், அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டதினால் இன்று அவருடையவர்களாக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நாம் 'ஆபிரகாமின் சந்ததியார்' என்று வேதம் மீண்டும் மீண்டும் நம்மைக் குறித்து ஞாபகமூட்டுகின்றது. தேவனிடத்தில் நம்பிக்கை வைப்பதினால், நாம் ஆபிரகாமின் சந்ததியார் என்றும் அழைக்கப்படுகின்றோம்.

                பிரியமானவர்களே! கிறிஸ்துவின் மரணம், ஆபிரகாமின் குடும்பத்தோடு நம்மை இணைப்பதோடு, ஆபிரகாமின் சந்ததியாராகவும் மற்றும் ஆபிரகாமின் அனைத்து உரிமைகளுக்கும் சொந்தக்காரர்களாகவும் நம்மை மாற்றுகின்றது; எனினும், இது தற்போதைய நிலை மாத்திரமே. என்றபோதிலும், கிறிஸ்துவுக்குள் வந்ததினால், சிங்காசனத்திற்கும் நாம் பாக்கியவான்களாக மாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதையும் கூடவே அறிந்துகொள்வது அவசியம். இயேசு கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருப்பவர். 'அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்' (லூக். 132) என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே. மேலும், 'இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்' என்று சொன்னதோடு அல்லாமல், 'நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்' (வெளி. 320,21) என்று இயேசு கிறிஸ்துவும் கூறுகின்றாரே. எந்த சிங்காசனத்தில் இயேசு கிறிஸ்து உட்காருகின்றாரோ, அதே சிங்காசனத்தில் அவரோடேகூட நம்மையும் உட்காரச்செய்கின்றவர் அவர் என்பதை நினைக்கும்போது எத்தனை ஆனந்தம் நமது உள்ளத்தில் பொங்குகின்றது!  நம்முடைய தற்போதைய நிலை என்ன? என்பதையும் கிறிஸ்துவுக்குள் நாம் வந்ததினால் நம்முடைய நிலை என்ன? என்பதையும் இதன் மூலமாக நாம் நன்கு அறிந்துகொள்ளமுடிகின்றதல்லவா! இன்று, நம்பிக்கையற்றவர்களாயிருந்த நாம் நம்பிக்கைக்குள் வந்துவிட்டோம்; தேவனற்றிருந்த நாம் தேவனுடையவர்களாக மாறிவிட்டோம்; தேவனுடைய ஆசீர்வாதத்தின் வாரிசுகளல்லாதவர்களாயிருந்த நாம், ஆசீர்வாதத்தின் வாரிசுகளாகிவிட்டோம்; வருங்காலத்திலே நாம் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரும் உரிமையையும் பெற்றுவிட்டோம். தாவீதின் சிங்காசனத்தில் உட்காருவதற்கு நாம் தகுதியுள்ளவர்களானபடியினால், தாவீதின் சந்ததியார் என்றும் அழைக்கப்பட நாம் தகுதிபெற்றவர்களே!

                இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது, அவரைக் குறித்து, 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு' (மத். 11) என்றே எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, இயேசு கிறிஸ்துவின் மூலமாக, அவருக்குள் இருக்கும் நாமும் நம்முடைய பெயர்களை இந்த வம்ச வரலாற்றில் இணைத்துக்கொள்ள முடியுமல்லவா! இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றின் பட்டியலில், மூன்று பெண்களின் பெயர்களையும் நாம் காணமுடியும். இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்த மரியாளின் பெயர் மாத்திரமல்ல, மற்றவனுடைய மனைவியாயிருந்த பத்சேபாளின் பெயரும் அதிலே இடம்பெற்றுள்ளது. பத்சேபாள், உரியாவின் மனைவியாயிருந்தவள்; ஆனால், தாவீது தந்திரமாக அவளை தனக்கு மனைவியாக்கிக்கொண்டான்; பத்சேபாள் தாவீதின் வலையில் சிக்கிக்கொண்டவள். மற்றொரு பெண்ணாகிய ராகாபின் பெயரும் இயேசு கிறிஸ்துவின் வம்சாவளிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ராகாப் ஒரு வேசி; மற்றவர்களை தனது வலையில் சிக்கவைப்பவள்; என்றபோதிலும், தனது நற்கிரியையினால் இயேசு கிறிஸ்துவின் வம்சாவளிப் பட்டியலில் அவள் இடம்பெற்றுவிட்டாளே. பிரியமானவர்களே! நாம் இந்த உலகத்தின் பாவங்களில் சிக்கினவர்களாயிருந்தாலும், மற்றவர்களை சிக்கவைப்பவர்களாயிருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே கழுவப்பட்டதினாலேயே, அவருடைய ஆசீர்வாதங்களுக்குப் பங்குள்ளவர்களாக்கப்பட்டு, அவருடைய வம்சாவளிப் பட்டியலிலிலும் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவுகூறுவது அவசியம். கிறிஸ்தவ குடும்பத்தில் ஒருவேளை நாம் பிறந்திருக்கக்கூடும், ஆலய ஆராதனைகளில் தவறாது பங்கெடுப்பவர்களாக இருக்கக்கூடும், ஆலயத்திற்கடுத்த அனைத்து காரியங்களிலும் நாம் ஒழுங்காகக் கலந்துகொள்ளபவர்களாக இருக்கக்கூடும்; என்றபோதிலும் இவைகளினால் நாம் அவருடைய சந்ததியாராகிவிடுவதில்லை; அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பினைப் பெற்றால் மாத்திரமே அந்த பாக்கியத்தை நாம் பெற்றனுபவிக்க முடியும்.

                பிரியமானவர்களே! இவ்வாறு, ஆபிரகாமின் சந்ததியாரென்றும், தாவீதின் சந்ததியாரென்றும் நாம் நம்மை அழைத்துக்கொள்ளுவோமென்றால், இவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்ட குணம் நம்முடைய வாழ்க்கையிலும் காணப்படவேண்டுமே. தங்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற ஆசீர்வாதங்களை எப்படியாவது அடைந்துவிடவேண்டும் என்பதே இன்றைய நாட்களில் அநேகக் கிறிஸ்தவர்களின் ஆசையாயிருக்கிறது. ஆபிரகாமின் ஆசீர்வாதம் என்னுடையது, தாவீதின் ஆசீர்வாதம் என்னுடையது என்ற நம்பிக்கையோடு, அதனை அடைந்துவிடவும், அத்துடன் பெற்றுக்கொள்ளவும் பிரயாசப்படுகின்றார்கள். எனினும், ஆபிரகாமின் மற்றும் தாவீதின் ஆசீர்வாதங்கள் ஒருவேளை நமக்குக் கிடைக்காமற்போனாலும், நாம் அவருடைய சந்ததியாரே; இதனை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, ஆபிரகாம் மற்றும் தாவீது ஆகிய இவர்களுக்குள் காணப்பட்ட குணங்களை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

                கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக நாம் இருந்தபோதிலும், அநேக நேரங்களில், உதவி செய்வதற்கென்று யாரும் என்னை அழைக்கவில்லை என்றும், உதவி தேடி யாரும் என்னிடத்தில் வரவில்லை என்றும்,  என்னை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் நாம் எண்ணுகின்றோம். கர்த்தர் காயீனை நோக்கி உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்று கேட்டபோது, காயீன் பிரதியுத்தரமாக, 'நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?' (ஆதி. 49) என்று சொன்னதைப் போன்றே இன்று அநேகருடைய நிலை காணப்படுகின்றது; தங்கள் மாம்சத்தின்படி வாழுகின்ற மனிதர்களிடத்தில் இத்தகைய ஆவி இன்றும் கிரியை செய்கிறது. அநேக நேரங்களில் இவர்கள் பெரியவர்கள், செல்வந்தர்கள், எனவே அவர்களுக்கு உதவிசெய்யவேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்று நாம் நினைத்துவிடுகின்றோம்; அவ்வாறே,  சாதாரணமான மனிதர்களைக் காணும்போது, அவர்கள் உபயோகமற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளிவிடுகின்றோம். அதுமாத்திரமல்ல, என்னிடத்தில் கேட்கவில்லை, என்னை அழைக்கவில்லை, என்னை எதிர்பார்க்கவுமில்லை; எனவே, என்னுடைய உதவி அவர்களுக்குத் தேவையில்லை என்று நாம் நினைத்துவிடுகிறோம்; எனவே, தேவைகளை அறிந்திருந்தும் உதவி செய்யாமல் அவர்களை விட்டு விலகிச் சென்றுவிடுகிறோம். என்றபோதிலும், நாம் ஆபிரகாமின் சந்ததியார் என்று நம்மை அழைத்துக்கொள்ளுவோமென்றால், தாவீதின் சந்ததியார் என்று கூறிக்கொள்ளுவோமென்றால், ஆபிரகாம் மற்றும் தாவீது இவர்களுக்குள் காணப்பட்ட குணம் நமக்குள்ளும் காணப்படவேண்டும்.  

                தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறான் தாவீது, இராஜாவாகிய சவுல் அவனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். தாவீதின் ஜீவனோ ஆபத்திலிருந்தது, அவனோடு உடனிருந்த மனிதர்களும் பராக்கிரமசாலிகள் அல்ல, போரிடுவதற்கான ஆயுதங்களும் எதுவும் அவர்களிடத்தில் காணப்படவில்லை. தன்னுடைய ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள, குகையிலே தாவீது ஒளிந்திருந்தபோது, 'இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது' (1 சாமு. 231). இந்தச் செய்தியைக் கேட்டதும், 'இது என்னுடைய வேலை அல்ல, இது இராஜாவாகிய சவுலின் வேலை' என்று தாவீது நினைக்கவில்லை. மேலும், எதிரிகளிடமிருந்து தன்னுடைய ஜனங்களைக் காக்கவேண்டிய இராஜா, தன்னுடைய வேலையை மறந்துவிட்டாரே, தன் ஜனத்திற்கு விரோதமாக எழும்பும் சத்துருவோடு யுத்தம் செய்யாமல், மருமகனான என்னை எதிரியாக நினைத்து பின்தொடருகிறாரே என்று சவுலுக்கு விரோதமாகவும் தாவீது பேசவில்லை.

                 மாறாக, 'நான் போய் அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர் நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக' என்று தாவீதுக்குச் சொன்னார் (1 சாமு. 232).செய்திகளைக் கேட்கும்போது, இந்தச் செய்தி நமக்கும், ஊழியத்திற்கும் இடையூராக இருக்குமா? இதற்காக நான் ஏதாவது செய்யவேண்டுமா? ஏன் தேவன் எனக்கு முன்பாக இந்தச் செய்தியைக் கொண்டுவந்தார்? போன்ற கேள்விகளை நமக்குள் கேட்பது அவசியம். கேகிலாவிலிருந்து உதவி கேட்டு யாரும் வரவில்லை; என்றபோதிலும், உதவவேண்டும் என்ற குணம் தாவீதினிடத்தில் காணப்பட்டதுபோல நம்மிடத்திலும் காணப்படவேண்டும். என்றபோதிலும், உடனிருந்த தாவீதின் மனுஷர் அவனை நோக்கி இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம். நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப்போனால், எவ்வளவு அதிகம் (1 சாமு. 233) என்று தங்கள் பயத்தை வெளிப்படுத்தியதோடு, தங்கள் வார்த்தைகளால் தாவீதையும் தடுத்து நிறுத்த முற்படுகின்றார்கள்; இப்படிப்பட்ட மனிதர்கள் இன்றும் நம்மருகில் காணப்படக்கூடும். என்றபோதிலும், தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்கிறார் (1 சாமு 234). அநேக நேரங்களில், பிறருக்கு உதவிசெய்ய உடனிருப்பவர்கள் ஒத்துழைக்காவிட்டாலும், தேவன் நம்மோடு கூட வருபவர்; இதனை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான். (1சாமு 235) பிரியமானவர்களே! சத்துருவின் பிடியில் சிக்கியிருக்கும் இத்தகைய மனிதர்களுக்கு உதவத் துடிக்கும் தாவீதின் சந்ததியாராகவே தேவன் நம்மையும் அழைத்திருக்கிறார்.

                அவ்வாறே, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்; அவர் ஒருவருக்கே ஆராதனை செய்தான்; நூறு வயதானபோதிலும், தேவன் கேட்டபோது தன்னுடைய குமாரனை பலிபீடத்தில் வைக்க அவன் சற்றும் தயங்கவில்லை; தேவனுக்குப் பயப்படுகிறவனாகவே வாழ்ந்தவன் அவன். பிரியமானவர்களே! நம்மைக் குறித்து தேவன் இவ்வாறு சாட்சிகூற முடியுமா? நூறு வயதில் ஒரு குமாரனைக் கொடுத்து, பலியிடும்படியாக தேவன் அவனிடத்தில் கேட்டபோது (ஆதி. 222), ஆபிரகாம் உடனே புறப்பட்டு, கர்த்தர் குறித்திருந்த மலையின்மேல் ஏறிச்சென்று, பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினது மாத்திரமல்ல, வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியையும் எடுத்தான் (ஆதி. 2210,11). அப்பொழுது அவர் பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார் (ஆதி 2212). தேவனிடத்திலிருந்து பெற்ற ஆசீர்வாதங்களை, அவருக்காக பலிபீடத்தில் வைக்க நாம் ஆயத்தமாகும்போது, ஆபிரகாமினிடத்தில் சொன்னதுபோல, நம்மிடத்திலும் தேவன் சொல்லமுடியும். குமாரனை தகனபலியாக பலியிட்டாலும், சாம்பலிலிருந்தும் தேவனால் அவனைத் திரும்பத் தரமுடியும் என்று ஆபிரகாம் விசுவாசித்ததினால், 'ஆபிரகாமின் தேவன்' என்று தேவன் தன்னை அழைக்கின்றார். மனந்திரும்பி, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுத்தால் மாத்திரமே, 'இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே' என்று சகேயுவைப் பார்த்துச் சொன்னதுபோல, நம்மையும் பார்த்து அவர் சொல்லமுடியும். இத்தகைய ஆபிரகாமின் சந்ததியாராக நாம் மாறாவிட்டால், பரலோக இராஜ்யத்திலும் நாம் பிரவேசிக்க முடியாது. ஆபிரகாமின் சந்ததியில் பிறந்ததினாலே நாம் ஆபிரகாமின் சந்ததியாராகிவிடுவதில்லை; மாறாக, மனந்திரும்பி, மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளை வாழ்க்கையில் வெளிப்படுத்துவதினாலேயே நாம் ஆபிரகாமின் சந்ததியாராகின்றோம்.

                அவ்வாறு, நாம் ஆபிரகாமின் சந்ததியார் என்று அழைக்கப்படுவோமென்றால், ஆபிரகாமினிடத்தில் காணப்பட்ட குணம் நம்மிடத்திலும் காணப்படவேண்டும். சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் சத்துருக்கள் எடுத்துக்கொண்டுபோய்விட்டபோது (ஆதி. 1411), அவர்களில் யாரும் ஆபிரகாமினிடத்தில் வந்து, 'எங்களுக்கு உதவி செய்யுங்கள்' என்று அவனை அழைக்கவில்லை; ஆபிரகாமை அவர்கள் எதிர்பார்க்கவுமில்லை;  என்றபோதிலும், ஆபத்தில் உதவும்படியாக, ஆபிரகாம் உடனே புறப்பட்டுச் செல்லுகின்றான்.

                ஐந்து இராஜாக்கள் தோற்றுவிட்டார்களே, நான் என்ன செய்யப்போகின்றேன் என்று ஆபிரகாம் ஒருபோதும் நினைக்கவில்லை. சோதோம் மக்கள் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டார்கள், லோத்துவும் அவனது மனைவி மற்றும் பிள்ளைகள் சத்துருக்களால் சிறையாகக் கொண்டுசெல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை ஆபிரகாம் கேட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான் (ஆதி. 1414-16). முற்றிலும் தேவன் மேல் நம்பிக்கையுடையவனாக, இவர்களுக்கு உதவிசெய்வதினால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஆபிரகாம் உதவிசெய்தான். பிரியமானவர்களே! இன்றைய நாட்களிலும், சத்துருவின் பிடியில் கட்டப்பட்டுகிடக்கும் ஆயிரக்கணக்கான ஜனங்களை விடுவிக்க ஆபிரகாமைப் போன்ற இத்தகைய குணம் நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனை அவசியமான ஒன்று; தேவன் கிருபைசெய்வாராக! 

                 

உலகத்தின் பாவங்களிலே உழன்று தினம் வாழ்ந்தவர் நாம்

உலகத்தார்  பாவத்திலே உழல வழி வகுத்தவர் நாம்

சுதந்தரத்திற்குப் தூரமாயின நமைச் சுதந்தரவாளியாக்கினாரே

உடன்படிக்கைக்குத் தூரமான நமை உடனிருக்கச் செய்தாரே

தேவனற்றிருந்த நம்மை தேவ ஜனமாக்கினாரே

காணியாட்சிக்குப் புறம்பான நமை கண்மணியாய் மாற்றினாரே

 

ஆத்துமா அவராலயமானதால் ஆபிரகாமின் சந்ததியார் நாம்

சிந்தின அவர் இரத்தத்தினால் சிங்காசனத்திற்கும் சொந்தக்காரர் நாம்

பிள்ளையைக் கொடுத்து நம்மை பிள்ளைகளாக்கிக் கொண்டார்

வேதனைகளைச் சகித்து நம்மை தேவனண்டை இழுத்துக் கொண்டார்

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் ஆஸ்தியாய் நமக்குக் கிட்டாவிடினும்

ஆபிரகாமின் சந்ததியாரென்ற ஆனந்தம் நமக்கு இன்று உண்டே!

 

சத்துருவின் பிடியினிலே சிக்கியோரைக் நாம் கண்ட பின்னும்

விடுவிக்கப் பெலனிருந்தும் வீட்டினுள்ளே நாம் முடங்கலாமா?

போருக்குப் புறப்பட்டு போர் முனைக்குத் துணிந்து செல்வோம்

புறமுதுகுக் காட்டுவோரால் பின்னிட்டு நாம் திரும்பாதிருப்போம்

அழிவின் பிடியில் அடைபட்டோர் அகிலமெங்கும் பரவிக்கிடக்க

அழைப்பிற்காக இன்னும் நாம் அமைதியாகக் காத்திருக்கலாமா?

 

உதவி தேடுவோர் இடும் ஓலம் உலகமெங்கும் கேட்கிறதே

உதவுவாரின்றி ஜனம் இருளினிலே இன்னும் அழிகிறதே

ஒரு பொழுது தாமதமும் உயிர்ச்சேதத்தைப் பெருக்கிடுமே

ஒரு ஆத்துமா அழிவினையும் பரலோகம் பொறுத்திடாதே

சத்தியம் நம் கையிலிருக்க சத்துருவுக்கு நாம் அஞ்சலாமோ?

சமாரியனாக விரைந்தெழும்பி சத்திரத்திலே சேர்க்கவேண்டாமோ?

 

 

அன்பரின் அறுவடைப் பணியில்

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்