அன்பின் மடல் March 2024

 

அன்பின் மடல்

March 2024


கிறிஸ்துவுக்குள்  அன்பான ஜெபப் பங்காளர்களுக்கு,


            'இதோ சீக்கிரமாய் வருகிறேன்' (வெளி. 22:12) என்று தனது வருகைக்காக நம்மை ஆயத்தப்படுத்துகிறவரும், 'இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்' (யோவான் 10:16) என்று ஆத்தும ஆதாயப் பணிசெய்ய நம்மைத்

தூண்டிவிடுகிறவரும், 'துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்' (எசே. 33:11) என்று தனது விருப்பத்தையும், ஆவலையும் நமக்கு வெளிப்படுத்துகிறவரும், 'சாகிறவனுடைய சாவை விரும்பாதவரும்' (எசே. 18:32), 'உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்' (யோவான் 16:33) என்று நம்மை தைரியப்படுத்துகிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.

            தேவனை அறிந்துகொள்வதற்கு எதிராக தேசம் பல்வேறு அரண்களை எழுப்புகின்ற இந்நாட்களில், 'நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது' (2கொரி 10:3,4)

என்ற வைராக்கியம் நம்மை விட்டு விலகாதிருக்கட்டும்.

            'இந்தக் கல்லின்மேல்' என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை (மத். 16:18); 'இந்தக் கல்லின்மேல்' விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்றார் நமது இரட்சகர் இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்துவே 'மூலைக்கல்' (எபே. 2:20) என்பது, சபையோடு, ஊழியங்களோடு, ஊழியர்களோடு மற்றும் விசுவாசிகளோடு முரண்படுபவர்களின் மூளையறிவுக்கு  ஒருவேளை  எட்டாதிருக்கலாம்; தங்கள் கோபத்தின் செயல்களினால், அவர்கள் வாழ்க்கையே நொறுங்கிப்போகும் நாளும் வரலாம்; ஆனால், சத்தியம் அறிந்த நாம் சத்துருவைக் கண்டு சஞ்சலப்படலாமோ? 'என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை' (நெகே. 6:11) என்ற நெகேமியாவின் வீரம் நம்மையும் பற்றிக்கொள்ளவேண்டாமோ! கூழாங்கல்லிலேயே கோலியாத் வீழ்ந்துகிடக்க (1 சாமு. 17:49), கன்மலை அவரோடு (1 கொரி. 10:4)

களம் காண்போர் கதி எம்மாத்திரம்! இத்தகைய சிந்தை, ஒவ்வொரு நாளும் முடங்கிவிடாமல் நம்மை முன்னேறச் செய்யவேண்டுமே!

            இன்றைய நாட்களில், உலகத்தின் பல்வேறு தேசங்களில் உண்டாகும், வித்தியாசமான சூழ்நிலைகளில், வாழ்வதெப்படி? என்பதை அறியாததினாலேயே, அநேகருடைய வாழ்க்கை, வீழ்ச்சி என்ற வட்டத்திற்குள் சென்றுவிட்டது. நிந்தைகளும், அழுத்தங்களும், விரோதமான காரியங்களும், நெருக்கங்களும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளும்  நான்கு புறங்களிலும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போது, இவைகளிலிருந்து நாம் வெளியேறுவது எப்படி? வாழ்வதற்குக்கூட மனதற்றவர்களாக, சரீரத்திலும் களைப்படைந்தவர்களாக ஒருவேளை நாம் காணப்படக்கூடும்; இத்தகையச் சூழ்நிலையில், நம்முடைய வாழ்க்கை எத்தகையதாயிருக்கவேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். வேதத்தில், தனியொரு மனிதனுடைய வாழ்க்கையில் உண்டான மாற்றத்தினால், எவைகளையெல்லாம் அவன் எதிர்கொள்ள நேர்ந்தது என்றும், எந்தெந்த பிரச்சனைகளையெல்லாம் அவன் சந்திக்கவும் மற்றும் சகிக்கவும் நேரிட்டது என்றும், கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் நமது வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்றும் வசனத்தின் அடிப்படையில் சற்று விளக்க விரும்புகிறேன். 

            யோவான் 9-ம் அதிகாரத்தில், பிறவிக் குருடனும், வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனுமாகிய ஒரு மனிதனைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். பிறவி முதல் அவன் குருடனாயிருந்தபடியினால், வாழ்க்கைக்கு வேறு வழி இல்லை. அவனுடைய பெற்றோரும் அவனைக் குறித்து, 'இவன் வயதுள்ளவனாயிருக்கிறான்' (யோவான் 9:23) என்றே சொல்லுகிறார்கள். இத்தனை வயது ஆனபோதிலும், அவனுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், வழியிலே உட்கார்ந்து பிச்சை கேட்பது. என்றபோதிலும், இயேசு கிறிஸ்து இவனை குணமாக்கியபோது, யூதர்கள் அவனுடைய தாய் தகப்பன்மாரை அழைத்து, 'உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான்?' என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். இப்பொழுது இவன்  பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்கிறார்கள். அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கை பண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். (யோவான் 9:18-22)

            பயந்திருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் இவன். இயேசுவை 'கிறிஸ்து' என்று அறிக்கையிட்டால், நாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்;கப்பட்டுவிடுவோம் என்ற பயம் இந்தக் குடும்பத்தாரை ஆட்கொண்டிருந்தது. ஏனெனில், யூதர்கள், ஜெப ஆலயத்தை மையமாகக் கொண்டே இணைக்கப்பட்டிருப்பவர்கள்; இயேசு கிறிஸ்துவைக் குறித்து முன்னமே அவர்கள் அறிந்திருந்தார்கள்; எனினும், வயதுள்ளவனாயிருந்தபோதிலும், சமுதாயத்தில் அவரைக் குறித்து அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருந்தபோதிலும், குருடனாய்ப் பிறந்த இவனோ அவரை அறியாதிருந்தான்; பயத்தினால், இவனது வீட்டார்கூட, இயேசு கிறிஸ்துவை இவனுக்கு அறிவிக்கவில்லை. பகல் முழுவதும் பிச்சையெடுத்துவிட்டு, இரவில் அவன் வீடு திரும்பியிருக்கக்கூடும்; உணவுகூட வீட்டிலிருந்தே அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். வழக்கமாக உணவு உண்ணும் நேரங்களில் பேசப்படும் பேச்சுகளில்கூட, அவனது வீட்டார் இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேசவில்லை.

            நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.  இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.  நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக (உபா. 6:5-9) என்று மோசேயின் மூலமாக தேவன் எழுதிக்கொடுத்திருந்தபடியினால், போஜனம்பண்ணும் நேரத்தில்கூட தேவனைக் குறித்து பேசுவது யூதர்களது வழக்கமாயிருந்தது; என்றபோதிலும், இவனது பெற்றோரோ, வசனத்தைக் குறித்து பேசினார்கள்; ஆனால், இயேசு கிறிஸ்துவைக் குறித்துப் பேசவில்லை. தேவாலயத்திற்குக்கூட யாரும் இவனை கூட்டிச்செல்லவில்லை. என்றபோதிலும், சில காரியங்களை அவன் அறிந்தவனாயிருந்தான். தன்னோடு பேசுபவர்களோடு, வசனத்தை அறிந்தவனாகவே அவன் விவாதம்பண்ணுகிறான்.

            'நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்' (யோவான் 9:24) என்று அவர்கள் சொன்னபோது, அவன் பிரதியுத்தரமாக, 'பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.  பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே (யோவான் 9:31-33) என்று வசனத்தின் அடிப்படையிலேயே விளக்கம் சொல்லுகின்றான்.

             பிறவிக் குருடனாயிருந்தபோதிலும், வசனத்தை அவன் அறிந்திருந்தான்; ஆனால், வார்த்தையாகிய இயேசுவையோ அறியவில்லை. வீட்டிலும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ள இயலாத, மற்றும் ஜெப ஆலயத்திற்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் வாழ்ந்தவன் இவன். ஜெப ஆலயத்தை விட்டுத் தாங்கள் பிரிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே, அந்நாட்களில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஜனங்கள் பேசாதிருந்தார்கள்.

            இவன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தபோது, இவனைக் குறித்து ஜனங்கள் அநேகக் காரியங்களைப் பேசியிருக்கக்கூடும்; எனவே,

சீஷர்கள் இயேசு கிறிஸ்துவை நோக்கி, 'ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ' (யோவான் 9:2) என்று கேட்கின்றார்கள். பிறவிக் குருடனும், ஜனங்களுடைய இப்படிப்பட்ட வார்த்தைகளை முன்னமே கேட்டிருக்கக்கூடும். என்றபோதிலும், பிறவிக்குருடனைக் குறித்துப் பேசுகின்ற இப்படிப்பட்ட ஜனங்கள் மத்தியில், 'அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்' (யோவான் 9:3) என்று கூறுகின்றார் இயேசு கிறிஸ்து. பிரியமானவர்களே! இன்றைய நாட்களிலும், நமது காதுகளில் விழும்படியாக, நமக்கு எதிரான காரியங்களை ஜனங்கள் பேசக்கூடும். உலகத்தாரின் பார்வையில் நாம் எப்படிக் காணப்பட்டாலும், தேவனுடைய பார்வையிலோ, அவருடைய மகிமைக்கென்று உருவாக்கப்பட்ட பாத்திரங்களே என்பதை மறந்துபோகவேண்டாம். உலகத்தாரின் வார்த்தைகளுக்கு நாம் இடங்கொடுத்தால், நம்முடைய வாழ்க்கை வாடிப்போய்விடும். உலகத்தார் நமக்கு விரோதமாகப் பேசும்போது, தேவன் நம்மைக் குறித்து என்ன திட்டம் வைத்திருக்கின்றார் என்பதைக் காணும்படியாக நமது கண்கள் திறக்கப்படுவதாக. இத்தகைய எண்ணம் நம்மில் மேலோங்கியிருக்குமென்றால், எத்தகைய விரோதங்களையும் மேற்கொள்ள நாம் தைரியம் பெற்றுவிடுவோம்.

            அவனைக் குறித்த தேவ நோக்கம் என்ன? என்பதை அறியாததினால், பெற்றோர்கள் அவனைக் குறித்துப் பேச பயந்திருக்கக்கூடும்; ஆனால், சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் பேசும் வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ளுகின்றான் இந்தப் பிறவிக்குருடன். பிரியமானவர்களே! உலகத்தாரின் வார்த்தைகளால் நாம் இழுக்கப்பட்டுப்;போவொமேன்றால், நாம் விழுந்துபோய்விடக்கூடும்; ஆனால்,  தேவனோ நம்முடைய குறைவையோ, பெலவீனத்தையோ பாராமல், அவைகளின் மூலமாகவும் மகிமையை வெளிப்படுத்த விரும்புகின்றவர். தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவான் 9:3) என்றே அவனைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது, தேவனுடைய கிரியைகள் நம்மில் வெளிப்படவேண்டும் என்பதற்காகவே; இதை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது. அநேக வாலிபர்கள், 'நான் ஏன் இந்தக் குடும்பத்தில், இந்த சமுதாயத்தில், இந்த கிராமத்தில், இந்த தேசத்தில், இந்த நேரத்தில் பிறந்தேன்?' என்று நினைப்பதுண்டு. நமக்குள்ளும் இப்படிப்பட்ட கேள்விகள் எழும்புமென்றால், நம்மை நேசிக்கிறவர்களையும் மற்றும் நமக்கு உதவிசெய்கிறவர்களையுமே நோக்கியே நமது பார்வை திரும்பக்கூடும்.  நம் மூலமாக தனது கிரியைகளை வெளிப்படுத்தவே, இந்த உலகத்தில் தேவன் நம்மை வைத்திருக்கின்றார்.

            பிறவிக் குருடனும், இதை அறியாதவனாகவே காணப்பட்டான், இயேசு கிறிஸ்து அவனுடைய வாழ்க்கையில் இடைபடும்வரை அவன் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 'தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்' என்று இவன் இயேசு கிறிஸ்துவை அழைக்கவில்லை; 'நான் உனக்கு என்ன செய்யவேண்டும்?' என்று இயேசு கிறிஸ்துவும் அவனிடத்தில் கேட்கவில்லை; என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவே அழைத்து அவனை குணமாக்கினார்.   தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான் (யோவான் 9:6,7). தன்னை குணமாக்கினவரை, 'நீர் யார்?' என்றுகூட அவன் கேட்கவில்லை; ஏனென்றால், இயேசு கிறிஸ்துவைக் குறித்த அறிவு அவனுக்கு இல்லாதிருந்தது. நாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறியாதிருந்தாலும், அவர் நம்முடன் இடைபட ஆயத்தமாயிருக்கின்றார். இயேசுவைக் குறித்து அவன் அறியாதிருந்தபோதிலும், எந்தக் கேள்வியும் கேட்காமல், அவர் சொற்படி சென்று சீலோவாம் குளத்தில் தனது கண்களைக் கழுவினான்; அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய முற்றிலும் அவன் ஆயத்தமாயிருந்தான். 

            பிரியமானவர்களே! இன்றும் தேவன் நம்முடன் இடைபட ஆயத்தமாயிருக்கின்றார், வாழ்க்கையில் மாற்றத்தை நாம் எதிர்பார்ப்போமென்றால், அவர் என்ன சொல்லுகிறாரோ அதற்குக் கீழ்ப்படிய நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும். கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபட்டபோது,  இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள் (யோவான் 2:7). என்ன செய்யப்போகிறார் என்பதை அவர்களில் யாரும் அறியாதிருந்தார்கள். திராட்சரசம்தானே குறைவுபட்டிருக்கிறது; இவர் தண்ணீரை நிரப்பச் சொல்லுகிறாரே என்று அவர்கள் எண்ணவில்லை. ஏனெ;றால், அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் (யோவான் 2:5) என்று சொல்லியிருந்தாள். அற்புதங்களையும், மாற்றங்களையும், உயர்வுகளையும் வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்போமென்றால், அவர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்ய நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும்.

            பிறவிக் குருடன் பிச்சைக்காரனாயிருந்தபோது சமுதாயம் அவனைக் கண்டுகொள்ளவில்லை; ஆனால், அவன் பார்வையடைந்தபோதோ, சமுதாயத்தில் அவனைக் குறித்த பேச்சு பரவிற்று. யூதர்கள் அவனுடைய தாய்தகப்பன்மாரை அழைத்து, 'உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான்' என்று கேட்கிறார்கள் (யோவான் 9:19). அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான் (யோவன்h 9:8,9). பிரியமானவர்களே!

நாம் மாற்றமடையும்போது, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடனிருப்பவர்கள்கூட நம்மை நம்ப மறுப்பார்கள்; என்றபோதிலும், நிருபிப்பவர் நம் அருகில் இருக்கிறார். 

            இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் (யோவான் 9:11) என்று அவன் சொன்னதும், அவர்கள் அவனை பரிசேயரிடத்திற்கு அழைத்துச் செல்லுகின்றார்கள். நான் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தபோது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை; வாழ்வதற்கென நான் போராடிக்கொண்டிருந்தபோது, யாரும் எனது பிரச்சனைகளைத் தீர்க்க முன்வரவில்லை, என்னிடத்தில் எதுவும் கேட்கவுமில்லை;  ஆனால், குணமடைந்த என்னை ஏன் இத்தனையாய் தொந்தரவு செய்கிறார்கள்? என்று, போகும் வழியில் ஒருவேளை அவன் நினைத்திருக்கக்கூடும். பிரியமானோரே! சாதாரணமாக நாம் வாழும்வரை எவரும் ஒருவேளை நம்மைக் கண்டுகொள்ளாதிருக்கக்கூடும்; ஆனால், நம்மிலே மாற்றம் உண்டாகுமென்றால், சமுதாயத்தில் நாம் பேசப்படுகின்ற நபராக மாறிவிடுவோம்.

            சமுதாயம் இத்தனையாய் அவனை தொந்தரவு செய்துகொண்டிருந்தபோதிலும், அவனது பெற்றோர் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை; மாறாக, 'அவனையே கேளுங்கள்' (யோவான் 9:23)என்றே சொல்லுகிறார்கள். ஒருபுறம், 'இவன் எங்களுடைய மகன்தான்' என்று பெற்றோர்கள் சொல்லிவிட்டார்கள்; அயலகத்தாhர் சந்தேகமாய்ப் பேசியபோது, 'நான்தான் அவன்' (யோவான் 9:9) என்று அவன் சாதித்துவிட்டான். என்றபோதிலும், இயேசுவின் பெயரை அவன் சொல்லக்கூடாதபடி, அவனைத் தடுக்கிறார்கள். ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். (யோவான் 9:24)

            இன்றைய நாட்களின் நிலையும் இதுதானே! சமுதாயமும், குடும்பங்களும், மனிதனுடைய எண்ணங்களும் இன்னும் மாறவில்லை; என்றபோதிலும், இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (எபி. 13:8). 'முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ' (யோவான் 9:34) என்று, தாங்களெல்லாரும் பரிசுத்தவான்களைப் போலவும், அவன் மட்டும் பாவி எனவுமே அவனைக் குறித்து அவர்கள் சான்று கொடுக்கிறார்கள். அவன் குணமடைந்ததைக் கேட்டு, சமுதாயத்தினர் அனைவரும் ஆனந்தப்படவேண்டிய நிகழ்வு இது, நண்பர்கள் அனைவரும் சந்தோஷமடையவேண்டிய நேரம் இது; ஆனால், இங்கேயோ, எல்லாம் தலைகீழாக நடைபெறுகிறது.  

            பிரியமானவர்களே! இன்றைய நாட்களில் நாமும், சூழ்நிலையின் நிமித்தம் அமைதியாயிருக்கின்றோமோ? அதிகம் அழுத்தப்படுகின்றோமோ? எவ்வளவோ சாட்சிகொடுத்தும், சமுதாயத்தினால் இன்னும் நாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லையோ? அவர் நம்மைத் தேடிவருகின்ற தேவன். பிறவிக் குருடனாயிருந்த இந்த மனிதன் இயேசு கிறிஸ்துவை இதுவரை கண்டதில்லை, அவரது கிரியையை மாத்திரமே சரீரத்தில் அனுபவித்திருக்கின்றான். மீண்டும் அவரைப் பார்த்து, 'நன்றி' என்று சொல்லுவதற்குக்கூட அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிரச்சனைக்கு மேல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றான் அவன். இயேசுவே! நீர் என்னை குணமாக்கிவிட்டீர்; ஆனால், இவர்கள் என்னை கஷ்டப்படுத்துகிறார்களே! என்று அவன் ஜெபிக்கவில்லை; என்னைத் குணமாக்கியவர் யார்? என்று அவன் அவரைத் தேடாதபோதிலும்,  'இயேசு அவைகளைக் கேள்விப்பட்டபோது, அவனைத் தேடிச் செல்லுகின்றார்' (யோவான் 9:35). தன்னைக் குறித்த அறிவை அவனுக்குக் கொடுக்கிறார், அவனுடைய விசுவாசத்தை மேலும் வலுப்படுத்துகின்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான் (யோவான் 9:38). பிறர் பேசும் வார்த்தைகளைக் குறித்து அவன் கவலைகொள்ளவில்லை,

சீலோவாம் குளத்திற்குத் 'தன்னை அனுப்பினவரை' முற்றிலுமாக நம்பி, அவரது சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து பார்வை பெற்றான். 

            ஆனால், பிறவிக் குருடனை 'பாவி' என்று சொல்லிக்கொண்டிருந்த கூட்டத்தாரை, 'நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலை நிற்கிறது' (யோவான் 9:41) என்று பாவிகளாகத் தீர்க்கிறார் இயேசு கிறிஸ்து. எனவே, நாம் சூழ்நிலைகளைக் கண்டு சோர்ந்துவிடாமல், அவர் அதில் இடைபடக் காத்திருப்பது அவசியம். நம்முடைய அழைப்பைக் குறித்து ஒருவேளை நாம் சந்தேகமுடையவர்களாக இருக்கக்கூடும். 'அவரே என்னை அனுப்பினவர்' என்ற விசுவாசம் நம்மிலே நிலைத்திருக்குமானால், முன்நிற்கும் எல்லாவற்றையும் கடந்து நம்மால் முன்னேறிச் செல்லமுடியும். சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் எத்தனையாயிருந்தாலும், நம்மை அனுப்பினவரை நாம் பணிந்துகொள்ளமுடியும், அவரது பணியை செய்துமுடிக்கமுடியும். இப்படிப்பட்ட கிருபையை தேவன் நம்முடைய வாழ்க்கையில் தருவாராக!

வசனத்தின் அறிவிருந்தும் 'வார்த்தை'யின் அறிவில்லையே

வழியோரம் அமர்ந்திருப்போரின் வாழ்க்கையிலே மாற்றமில்லையே

வழிப்போக்கர் உதவிகளும் வாழ்க்கையை மாற்றவில்லையே

வயதுகள் கடந்தும் இன்னும் விழிகளிலே ஒளியில்லையே

 

சூழ்நிலைகள் எல்லைகளைச் சுருங்கச் செய்கிறதோ

துன்பங்கள் நம்மைத் துவளப் பண்ணுகிறதோ

நன்மைகளைத் தந்தவரை நாடே எதிர்க்கிறதோ

நம்மையும் அண்டவிடாமல் துண்டாடத் தூண்டுகிறதோ

 

பெற்றவரும் பேச பலனற்று நிற்கின்றாரோ

உற்றவரும் உள்ளம் உடைந்திடவே பேசுகின்றாரோ

அயலாரின் வார்த்தைகளும் அசட்டையாய்ப் பாய்கிறதோ

பாவி நீ என்று பார்ப்போரின் வாயும் தூற்றுகிறதோ

 

ஆவி அவியும்படி அற்பமாய் பலர் எண்ணுகிறாரோ

ஆலயத்தில் உள்ளோரும் அப்புறமாய்த் தள்ளிவிட்டாரோ

இரட்சிப்புத் தந்தவரையே துட்சமாய் நினைக்கிறாரோ

பரிகாரி அவரையே பரிகாசம் செய்கிறாரோ

 

கண்களை திறந்தவர் உண்டு காணாதிருப்பாரோ

ஒளியைக் கொடுப்பவர் கண்டு ஒளிந்துகொள்வாரோ

இல்லாதவைகளையும் இருப்பதாய் அவர் அழையாரோ

நானே அவர் என்பதை நிரூபியா திருப்பாரோ


அன்பரின் அறுவடைப் பணியில்

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்