அன்பின் மடல்
December 2023
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
தம்முடைய இராஜ்யத்திற்கு முடிவில்லை என்று (லூக். 1:33) முழக்கமிடத்தக்கவரும், என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல (யோவான் 18:36) என்பதினையும் சொல்ல வல்லவருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் இந்த குதூகலமான பண்டிகை நாட்களில் கிறிஸ்மஸ் வாழ்த்துகள். அவரின் இராஜ்யத்தின் ஆதிக்கம் அவருடைய பாதத்தண்டைக்கு வரும்வரை, நம்மை போராடவும், செயல்படவும் அவர் நம்மை தெரிந்துகொண்டுள்ளார் என்கிற நோக்கிலேயே பண்டிகைகளை ஆசரிப்பது நமக்கு நல்லது. (வெளி. 11:15; எபி. 10:13)
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியைக் காண, பிரதமர் உட்பட பல பிரபலங்கள் குஜராத்தின் அகமதாபாத்தில் கூடியிருந்தனர். நிறைய அடுக்கடுக்கான சோதிடர்கள் சொல்லியிருந்தார்கள் 'வெற்றி நமதே' என்று. அணிக்கு நான் விளையாட 'Tips' தருகிறேன் என்றார் ஓர் ஆன்மீக மேதாவி. மணிப்பூருக்குச் சென்று அங்கே நடக்கும் வெறியாட்டங்கள் 6 மாதங்களைத் தாண்டும் நேரத்தில், அதனை போய்ப் பார்க்கத்தானும் நேரமற்ற பிரதமர், இதனைக் காண நேரத்தினைச் செலவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தினை வரவழைத்தது. அனைத்து மக்களும் ஆவலாய் எதிர்நோக்கி நின்ற கிரிக்கெட் வெற்றிக்கனி கைக்கு எட்டாதபோது, பேரிழப்பை சந்தித்ததுபோல துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதனையே சாக்காக வைத்து இலாபம் ஈட்டினவரும் உண்டு (ஒரு ஹோட்டல் அறை Rs. 4000 -லிருந்து 1.25 இலட்சத்திற்கு வாடகைக்குத் தரப்பட்டது).
இளைஞர், சிறுவர், பெரியோர் யாரையும் அந்த ஜுரம் விட்டுவிடவில்லை. ஆனால், ஹமாஸ் - இஸ்ரவேல் போரிலும், உக்ரைன் போரிலும், ஏன் உள்நாட்டுப் போர்க்களமாகப் பார்க்கப்படும் மணிப்பூரிலும் உயிர் துறந்தவரின் எண்ணிக்கை அநேகம் பேரைப் பாதிக்கவில்லை. உலகம் இப்படி வாழக்கற்றுக்கொண்டுவிட்டதுதான் கொடுமை.
கொடுமைகள் நிறைந்த இவ்வுலகில் நீதியாய் அரசாள, அவருடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதே விடையாக முடியும். 'ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்' (வெளி. 22:20) என்பதே நம்முடைய ஜெபமாவதாக.
தன் மூலம் தேவ இராஜ்யத்தினை நிலைநாட்டப்போகிறவர் பிறக்கப்போகிறார் என்ற செய்தி, மரியாளை 'இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ' என்ற யோசனைக்குள் தள்ளிற்று (லூக். 1:29). கேட்க நன்றாகத் தோன்றும் தேவ வாக்குத்தத்தமும் கூட நிதானிக்கவேண்டிய ஒன்றே!
வேறொரு தலைவனைக் குறித்தும் வேதம் சொல்லுகிறது.
'அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான்.
அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக் கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.
அவன் தன் உபாயத்தினால், வஞ்சகத்தை கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான் (தானி. 8:23-25). இது இன்றைய இந்தியத் தலைமைக்கு பொருந்துகிறதோ என்ற கேள்வி எழும்புகிறது! சத்திய வேதம் சரியான எச்சரிப்பின் மணியை அடிப்பது எத்தனை பேரின்பம். இந்த கிறிஸ்மஸ் மணியோசையின் நடுவில் காதில் தொனிக்குமோ?
மரியாள், தன் இருதயத்தில் வாக்குத்தத்தமானாலும், தீர்க்கதரிசனமானாலும் வைத்து சிந்தித்து தியானிக்கக் கற்றுக்கொண்டதினால்தான் (லூக். 1:29; 2:19), அதுவே அவளை 'ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்' என்ற பெயருக்குப் பாத்திரமாக மாற்றிவிட்டதோ! (லூக். 1:28)
இன்று நாமும் சிந்தித்து, நிதானிக்கவேண்டிய காரியங்களை வேதம் வரிசையாக நமக்குக் காட்டுகிறது. அதனையே ஆதாரமாகக் கொண்டு, வருட முடிவுக்குள் வந்திருக்கிற நமக்கு தற்பரிசோதனை செய்து, புதியவர்களாகப் புத்தாண்டில் பிரவேசிக்க உதவும் வண்ணம் மடலாக்கியுள்ளேன். தேவ சமுகத்தில் தனித்துக் காத்திருந்து, திறந்த வேத புத்தகமும் திறந்த மனதோடு கூடிய இதய பரிசோதனை செய்ய தேவன் உங்களுக்கு உதவும்படி ஜெபிக்கிறேன்.
1. காகங்களைக் கவனித்துப் பாருங்கள். - (லூக். 12:24)
காட்டு புஷ்பங்களைக் கவனித்துப் பாருங்கள். - (லூக். 12:27)
கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் அவர் ஆகாரம் கொடுக்கிறார் (சங். 147:9) என்பது உண்மையாயிருக்க, நம்மில் அநேகர் அன்றாடக தேவைகளுக்காகவே கவலைப்படுவதோடு அல்லாமல், இம்மைக்காக மாத்திரம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருப்பது (அதுவும் விசுவாசக் குடும்பத்தார்) எத்தனை வேதனையானது. (1 கொரி. 15:19)
2. எறும்பினிடத்தில் கற்றுக்கொள். - (நீதி. 6:6; நீதி. 30:25)
அதனை ஏவிவிட எந்தத் தலைவனும் தேவையில்லை; அதிகாரியும் அவசியமில்லை. கோடைகாலத்தினைக் காட்டிக்கொடுக்கவும், அறுப்புக் காலத்தினைப் பயன்படுத்தவும் அதற்கு ஆணையும் தேவையில்லை. ஒருமைப்பாட்டில் நடக்கவும், இணைந்து செயல்படவும் அதற்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை (seminars). பயிற்சி சாலைகளும், ஆலோசனைக் கூட்டங்களும் அவைகளுக்குத் தேவையில்லை. உற்சாகமூட்டி இயக்குவிக்கத்தக்க (motivational talk) கூடுகைகளும் இல்லை. அதனிடம் கற்றுக்கொள்ளவும், நிதானித்து வாழ்க்கையில் அப்பியாசிக்கவும் தேவன் நம்மை ஏவினால் எத்தனை நலமாயிருக்கும்!
3. அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையானக் காரியங்களைச் செய்தார் என்பதனைச் சிந்தித்துப் பாருங்கள். - (1 சாமு. 12:24)
'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்றார் வள்ளுவர். முறுமுறுப்புகளுக்கு மாற்றுமருந்து நன்றிபலி செலுத்துவதே! சிறந்தவைகளை மறந்துவிடுகிறதும், துறந்தவைகளை கறந்துவிடுகிறதும் உலகத்தின் வழி என்றார் தேவ ஊழியர் அகஸ்டின் செல்லப்பன் (WhatsApp Post dt. Nov. 21st).. பாத்திரனாக இல்லாதிருந்தும், இத்தனை நன்மைகளை அளித்தாரே என்ற நினைவு எத்தனை பேரை மறுரூபமாக்கியிருக்கக்கூடும். ஆனால்,
'எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்'
என்ற பாடல் வரிகள் நம்மை உயிர்ப்பிக்கப் போதுமானவையல்லவா! ஒரு பேப்பரை எடுத்து இந்த வருடத்தில் தேவன் செய்த கிரியைகளை எழுதிப்பாருங்கள், உங்களுக்கே அது வியப்பைத் தரும். ஏதோ வருட இறுதியில் ஆராதனையில் மாத்திரம் அல்ல. எல்லா நேரத்திலும் அது செய்யப்படவேண்டிய உடற்பயிற்சி.
4. ஆபத்துவேளையில் நாம் செய்யவேண்டியதைக் கவனித்துப் பார்ப்பது மிகவும் அவசியம். - (1 சாமு. 25:17)
குடும்பம் அழியப்போகிறது, ஆபத்துகள் கதவைத் தட்டுகின்றன, விடியற்காலம் மட்டும் காத்திருக்கக்கூடாது (1 சாமு. 25:22). மற்றவர்களைக் கலந்து ஆலோசிக்கக்கூடத் தருணமில்லை. தீவிரமாய் செயல்பட்டால் ஒழிய (1 சாமு. 25:18) வேறு வழியில்லை. தரையில் முகங்குப்புற விழுந்துகிடக்கும் அபிகாயில் (1 சாமு. 25:23); கணவன் தார்மீகத் தவறுசெய்தான், நான் என்ன செய்ய? என்று காத்திருக்கவில்லை. ஆபத்திலே செய்யப்படாவிடில், அனைத்தும் அழிந்துபோகுமே. ஒருவனுடைய பைத்தியக்காரத்தனம் அழிவுக்குப் போதுமானது அல்லவா! தருணத்தை தவறவிடாதிருப்பதுவே ஞானம். தாவீதின் வாழ்வில் ஒரு கறை வராதபடிக்கும் காத்துக்கொள்ள முடிந்ததே. ஞானமாய் நடப்போமாக. நீங்கள் ஞானமற்றவர்களைப்போல் நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ள (எபே. 5:15) தேவ கிருபை போதுமானதாயிருப்பதாக.
5. கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும். - (சங். 5:1)
என் தியான வாழ்வு, தேவனின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது தாவீதின் ஜெபம். இன்று வாழும் இளையதலைமுறைக்கு, ளுழஉயைட நெவறழசம மோகத்தினால் இந்த தியான வாழ்வின் மேன்மையும் மறந்தேபோய்விட்டது என்றே சொல்லுவேன். கர்த்தரின் வேதத்தில் தியானமாய் இருக்கும் மனிதன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங். 1:2,3) என்பது மாறாத சத்தியமல்லவா!
6. தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும். - (உபா. 32:29)
'முடிவே முக்கியம்.' 10 போட்டிகளில் போட்டியிட்டு வென்று நின்ற இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப்போட்டியில் பரிதாபத் தோல்வி அடைந்தது தேசத்தினையே சோகத்தில் தள்ளிவிட்டு, ஒருவரை தற்கொலைக்கும், சாவுக்கும் ஒப்புக்கொடுத்துவிட்டதே. நம்மை நாம் தேற்றிக்கொண்டோம்; ஆனால், வெற்றிக்கனியைப் பெறமுடியாதது பரிதாபமானதுதானே!
தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து, உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் என்பதே தேவ மனிதர்களின் அறிவுரை. (எபி. 13:7)
7. உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. - (சங். 45:10)
ராஜா உன் அழகில் பிரியப்படவேண்டுமானால், இந்த உறவுகளிலும் விடுபடவேண்டிய அவசியம் உண்டல்லவா. உனக்கும் உன் ஆண்டவருக்கும் இடையில் எந்த உறவும் ஊடுருவிவிட விட்டுவிடாதே. 'தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மகனையாவது, மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல (மத். 10:37) என்பதே தன்னைப் பின்பற்றுவோரைப் பார்த்து இயேசு விடும் அறைகூவல்.
வாழ்வின் தீர்மானங்களை எடுக்கும்போது, 'பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்' என்ற சாபத்தின் வார்த்தையில் மாட்டிக்கொள்ளாதீர்கள் (ஏசா. 3:4). 'நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன்' என்றே ஏலியைப் பார்த்து கேட்டக் கேள்வி, அதற்குப் பதில் சொல்லக்கூடாமலேயே ஏலி தடுமாறினான் என்பது நமக்கு எச்சரிக்கை! (1 சாமு. 2:29,30)
8. உபத்திரவத்தின் மத்தியிலும் அவருடைய வேதத்தை மறவாதபடி கவனமாயிரு. - (சங். 119:153)
'நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை' (தானி. 3:17,18) என்பதே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் முழக்கம்.
'மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.' (ரோமர் 8:38,39)
உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோமர் 8:36,37). இது பவுல் அப்போஸ்தலனின் முழக்கம். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இதுவே மூச்சு பரிசுத்தவான்களுக்கு. இது ஏன் நம்முடையதாகக்கூடாது.
9. உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப் பார். - (நீதி. 23:1)
சாப்பாடு விஷயத்தில்கூட எத்தனை ஜாக்கிரதையாய் இருக்க தேவன் விரும்புகிறார். சமைத்தது நீங்களாகக்கூட இருக்கலாம் அல்லது விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களாய் இருக்கலாம். எந்த சூழ்நிலையிலும் 'இருதயம் கூட இல்லாதவர்களின் விருந்தும் உனக்கு விஷமாகலாம்' (நீதி. 23:7). அது உன்னை கொல்லமாத்திரமல்ல, உன் குணத்தையே மிருக குணமாக்க வல்லது. நீ உன் இனிய சொற்களைக்கூட இழந்துவிடுவாய்.
10. வாங்கும் முன் நன்றாக விசாரி. - (நீதி. 31:16)
இன்று நுகர்வோரின் பட்டியல் அனைத்து காரியங்களிலும் வெளிப்படுபவை. முதலாவது, எந்தப் பொருளையோ / சொத்தையோ வாங்கும் முன், பல கேள்விகள் கேட்கப்படவேண்டியது. a. இது எனக்கு இப்போது தேவையா? b. இது இல்லாவிட்டால் முடியவே முடியாதா? c. இதற்குரிய போதுமான வசதி என்னிடத்தில் உண்டா? d. இதற்கு இத்தனை மூலதனம் செலுத்துவது தேவையா? e. எத்தனை காலத்திற்கு இது உதவும்? f. இதைவிட முக்கியமானதில் நான் செலவழிக்கலாமா? g. நான் மாத்திரம்தான் இதனால் பிரயோஜனப்படுவேனா அல்லது பலருக்கும் இது உதவுமா? h. இது தொலைந்துபோனால் அது என்னை எத்தனையாய் பாதிக்கும்? .... போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சரியான பதில் வராமல் வாங்குவது சரியில்லை.
இந்தப் பாதை கடினம்தான்; ஆனால், குணசாலியான ஸ்திரீ என்றும், எல்லாரைக் காட்டிலும் சிறந்தவள் (நீதி. 31:29) என்று சாட்சிபெறுவது அதனால்தான் என்பதனை மறக்காதீர்கள்?
11. முன்னுரிமைகள் தள்ளிவிடப்படும் வேளையில் வழிகளை சிந்தித்துப் பார். - (ஆகாய் 1:4,7)
பாபிலோனிலிருந்து திரும்பி வந்த நோக்கம் மறந்துவிட்டது. கையில் கொடுக்கப்பட்ட பணமும், வாய்ப்பும், வருவாயும் மறந்துவிட்டது. தன்னயம் ஆட்டிப்படைக்கிறது. தேவனைத் துக்கப்படவும் வைத்துவிட்டது. சிந்தித்துப்பார்... சிந்தித்துப்பார்... என்றே பரலோகம் கதறுகிறது.
12. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன? - (மத். 7:3)
'Do not pick on people, jump on their failures, criticize their faults unless, of course, you want to same treatment' (Mt. 7:3 Msg)
மற்றவர்களின் தோல்விகளை பெரிதுபடுத்தும்போது, நம்மை அறியாமலேயே நாம் சுயநீதிக்குள் பயணம் செய்கிறோம் என்பது அனைவரின் அனுபவமே.
13. பிரச்சனைகள் எழும்போது மற்றவர்களின் அனுபவங்களை அலசி ஆராய்வது நல்லது. - (அப். 15:24)
மிகுந்த தர்க்கம் எழும்புகிறது. எருசலேமில் வாழ்ந்த தேவ ஜனங்கள் மத்தியில் ஒரு பெரும் பிரச்சனை. பிரிவினைக்கு வித்திடும் காரியங்கள் நடைபெறுகிறது. ஆனால், பரிசுத்த ஆவியின் பெலத்தினால் மேற்கொள்ளப்படுகிறது நமக்கு நல்ல படிப்பினை. (அப். 15:7,29)
ஊழியம் / சபை தேவனுடையது என்கிற அறிவு அநேக நேரங்களில் ஓரம்கட்டப்படுகிறது என்பது உண்மை. குடும்பமும் / சிநேகமும் இதில் அடங்கும். பேதுருவின் அனுபவம், தேவ வசனம், தொலைநோக்கு, முக்கியக் கட்டளையான உலகமெங்கும் சுவிசேஷப் பணி போன்றவை சமமாக கையாளப்படுகிறது. வேதனை சாதனையாக மாறிவிடுகிறது. 'சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்கு நாள் பெருகின.'(அப். 16:5)
14. நன்மை செய்ய நாடு; ஆனால், உன்னை கறைப்படுத்திக்கொள்ளாதபடி கவனமாயிரு. - (கலா. 6:1)
அநேகருடைய ஆவிக்குரிய விழுகைக்குக் காரணம், இந்த காரியத்தில் கவனமாயில்லாததே. கண்ணியை எடுக்கப்போனவர்கள் பலர் கண்ணிக்குத் தப்பாமல் போக நேரிட்டது, மறந்துவிடாதீர்கள். 'தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ.' (நீதி. 6:27)
15. உருவாக்குகிறவர்களின் ஆலோசனைகளை கவனிப்பதில் ஜாக்கிரதை. (2 தீமோ. 2:7)
'தாய் மிதித்து குஞ்சு சாவதில்லை' என்றார் மூதாதையர். ஆனால், இன்று இளைஞர்களுக்கு இது தகாத வார்த்தைப்போல் காணப்படுகிறது. பலத்த கரங்களுக்குள் அடங்கியிருப்பதும், ஏற்றகாலத்தில் உயர்த்தப்படும்படி காத்திருப்பதும் அநேகருக்கு வேப்பங்காய், கவனம்.
16. உந்துதலுக்கு உறுதுணையாக கூடிவரும்போது மற்றவர்களை கவனித்தறிவது எத்தனை அவசியம். - (எபி. 10:24)
சபை கூடிவருதலை வற்புறுத்தும் அநேக ஊழியக்காரர்கள், இதனை அறிவிக்கவும், அப்பியாசப்படுத்த உற்சாகப்படுத்தவும் மறந்துவிடுகின்றனர். நற்கிரியைகளைச் செய்யவே நாம் கிறிஸ்துவுக்குள் புதிதாய் உருவாக்கப்பட்டேன் (எபே. 2:10). அதனுடைய அவசரத்தையும் அச்சாரத்தினையும் அறிந்தவர்கள் வெகு சிலரே.
17. துன்ப நேரத்தில் இயேசுவையே கவனித்துப் பாருங்கள். - (எபி. 12:1-3)
நன்மை செய்து அவமானப்படும்போது, அதனைத் தாங்க பெலன் கிறிஸ்துவின் பாடுகளைச் சிந்திப்பதினாலேயே கிடைக்கிறது. கூடவே, எதிர்கால சந்தோஷத்தின் காட்சி நம்மை துரிதமாய் ஓடச்செய்யும்.
சிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி
சேவையும் செய்வேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேன் என்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
- சாராள் நவரோஜி
18. ஓட்டத்தை ஜெயமாக முடித்தவர்களை முன்நிறுத்தி ஓடுவதில்... - (2 தீமோ. 4:7,8)
பந்தயசாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள் (1 கொரி. 9:24) என்று எழுதிய பவுல், அதில் வெற்றி பெற நமக்கு 'Tips' கொடுத்திருக்கிறார்.
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். (1 கொரி. 9:25)
மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப்போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (வச. 27) இது அனைவருக்கும் பொருந்துமல்லவா!
19. முந்தினவைகளை நினைக்கவேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம். - (ஏசா. 43:18)
ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி. 3:14)
'விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்'
என்று நான் எழுதின பாடலாம் 'சிலுவை சுமந்தோராய்' ன் முடிவு கவி இவையே.
20. சோம்பலின் விளைவை நினைத்துப் பார்த்தல். - (நீதி. 24:32)
இன்று அநேகர் மற்றவர்களின் வெற்றிதனைக் கண்டு, பொறாமை கொண்டு தங்களுக்குத் தெரியாத காரியங்களையும் தெரிந்ததுபோல நினைத்து வெற்றிபெற்றவர்களைத் தூற்றித் திரிகின்றனர். ஆனால், வெற்றியின் பின்னர் மிகுந்த கடின உழைப்பு இருப்பதனையும், கர்த்தரின் கரம் இருப்பதனையும் உணர்ந்தாரில்லை. சோம்பேறியின் வயலின் அடைப்பும்கூட தானே இடிந்து விழும் என்பதனைக் கண்ட சாலொமோன் ஞானி,
'அதனைக் கண்டு சிந்தனைப் பண்ணினேன். அதை நோக்கிப் புத்தியடைந்தேன்' என்கிறான். - (நீதி. 24:32)
'உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரி தொனிதான்
மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்' - எமில் ஜெபசிங்
21. தேவனுடைய சிட்சையை சரியாய் புரிந்துகொள்ளுங்கள். - (எபி. 12:7-11)
தேவ தண்டனையை அனுபவிக்க தேவ ஜனம் பயம்கொள்ளும். ஆனால், தேவ சிட்சையை அற்பமாக நினைத்து, தேவனையே புறக்கணிக்க வாய்ப்புகள் உண்டு.
நீதியாகிய சமாதான பலனைப் பெறத் துடிக்கும் நாம், தேவ வழிதனைப் புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.
கடந்த ஆண்டின் (2023) செய்கைகளையும் காரியங்களையும் மனதில் கொண்டவர்களாய், அவரின் சமுகத்தில் அமர்ந்து உங்களையே புதுப்பித்துக்கொண்டு, புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்க ஆயத்தப்படுவோமா!
நவம்பர் 14-ம் தேதி நம்முடைய ஆங்கிலப் பள்ளியின் 40 வருட நிறைவை தேவனுக்குக் காணிக்கையாக்கின 'RUBY JUBILEE’ ' வைபவத்தில், மந்திரிகளும், அதிகாரிகளும், பெற்றோரும் கலந்துகொண்டு, 'I AM the future" என்ற T Shirts அணிந்த நமது 5000 பிள்ளைகளும் கலந்துகொண்ட காட்சி அற்புதமாக இருந்தது; தேவனும் மகிமைப்பட்டார். இது இந்த மாவட்டத்தின் 'கௌரவச் சின்னம்' என்று மந்திரிகள் நம்முடைய சேவையைப் பாராட்டினர். அவருக்கே மகிமை உண்டாகட்டும்.
எண்ணிப் பார் அவரின் மேன்மைகளை
நினைத்துப் பார் வாழ்வின் நோக்கங்களை
புனைத்துப் பார் அவரின் புகழ்தனை
இணைத்துப் பார் கிருபையின் அறிவுரைகளை
அணைத்துப் பார் அவரின் ஆலோசனைகளை
கணக்குப் பார் இழந்த வாய்ப்புகளை
மணந்து பார் அவரின் மாண்புகளை
ருசித்துப் பார் இயேசுவின் கிருபைகளை
புசித்துப் பார் அவரின் வார்த்தைகளை
கல்வாரியைப் பார் கலக்கம் மாறிடும்
பொல்லாப்பைப் பார் உன்னைக் கண்டு ஓடிடும்
சொல்லா இடங்களைப் பார் துரிதப்படுவாய்
ஒப்பில்லாவரின் கட்டளைகளைச் சுமந்திடுவாய்
அன்பரின் அறுவடைப் பணியில்
சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்