அன்பின் மடல்
September 2023
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தினை வெளிப்படுத்தி, அதனை செய்யத்தக்க விருப்பத்தினை நம்மில் உருவாக்கி, பின்னர் அதனை செய்துமுடிக்கும் பெலனையும் நமக்குத் தருகின்ற தேவனுடைய இனிய நாமத்தில் வாழ்த்துகள். (எபே. 1:10; பிலி. 2:13)
அநேகந்தரம் தப்பர்த்தப்படுத்திப் பிரசங்கிக்கப்படும் வசனங்களில் ஒன்று ரோமர் 8:28 என்றால் மிகையாகாது. 'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.'
தேவன் கையில் உள்ள முழுப்படத்தினைப் பார்க்காமல், தன்னுடைய சொந்த நினைவுகளின் நிறைவேற்றத்தினை மாத்திரம் பார்த்து மகிழ நினைப்போர், தங்களையே ஆறுதல்படுத்தவே இந்த வசனம் அநேக நேரங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதனை சரியான கோணத்தில் புரியவைக்கவே இந்த மடலை எழுதுகிறேன்; தயவுசெய்து சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றார்ப்போல நம்முடைய வாழ்வினை வகுத்துக்கொள்ள தேவன் உதவிசெய்வாராக.
ஆபிரகாமை தன்னுடைய மீட்பின் திட்டத்தினை இந்த பூமியில் நிறைவேற்ற தேவன் தெரிந்துகொள்ளுகிறார் (ஆதி. 12:3; கலா. 3:16). அந்த மீட்பின் திட்டத்தினை பூமியில் அறிவிக்கவே தேவன் தம்முடைய சபையைத் தெரிந்துகொண்டார் (எபேசி. 3:10). எனவேதான், நாம் நிழலாட்டமாகவும், சாயலாகவும் இஸ்ரவேல் குடும்பத்தின் சம்பவங்களை சபையோடு இணைத்துப் பார்த்துக் கற்றுக்கொள்ளுகிறோம்.
தேவன் ஆபிரகாமை பிரித்துக்கொண்டு கானானுக்குள் வழிநடத்தியபோது, 'அது பாலும் தேனும் ஓடும் தேசமாக இருக்கவில்லை' (ஆதி. 12:6,7); ஆனால், அவனுடைய சந்ததியாருக்குத் தேவன் வாக்குப்பண்ணினபோது, அதனை 'பாலும் தேனும் ஓடும் தேசம்' என்றே அழைக்கிறார் (யாத். 3:8). ஆகையால், அந்த இடைப்பட்ட காலத்தில் தேவன் சாதாரணமான ஒரு தேசத்தினை, பாலும் தேனும் ஓடும் தேசமாக மாற்ற உபயோகப்படுத்தினவர்கள் அந்த ஏழு ஜாதிகளே (கானானியர்).
அதற்காகத்தான், ஆபிரகாமின் குடும்பத்தாரை கானானைவிட்டு வெளியே கொண்டுவந்து, பின்னர் 400 வருடங்கள் கழித்து அதற்குள்ளே மீண்டும் கொண்டுவரும்; ஒரு பெரும் திட்டத்தினைத் தீட்டுகிறார்; இது அவருடைய அநாதித் தீர்மானத்தின் ஆரம்பப்பகுதி.
அடிமைத்தன வீடாகிய எகிப்தில் அவர்களைக் கொண்டுவந்தாலும், புறப்பட்டுப்போகும்போது மிகுந்த பொருட்களோடு அவர்களைப் புறப்படப்பண்ணுகிறார் (ஆதி. 15:13,14). எகிப்தியரை இஸ்ரவேல் ஜனங்கள் கொள்ளையிட்டார்கள் என்றே வேதம் இதனை வர்ணிக்கிறது. 'ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்' (யாத். 12:35,36). அன்றைய நாட்களில் எகிப்தில் மோசேயின் அதிகாரத்தில் மாத்திரம் இருந்த பொன்னின் அளவு 50 ஆயிரம் டன் (50,000,000,000 grams) என்றே வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். இன்றைக்கு சில கிராம்கள் தங்கத்தினையே வைத்துப் பெருமைபாராட்டுவோர் எத்தனை பேர்! ஆகையால்தான் எபிரேயர் நிருப ஆக்கியோன் 'இனி வரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபி. 11:26) என்று எழுதுகிறார்.
ஆனால், எகிப்திற்கு அவர்களைக் கொண்டுசெல்ல தேவன் செய்த காரியங்களைக் கொஞ்சம் தியானிப்போம். ஆபிரகாமிடத்தில் தேவன் சொல்லிய அந்த 400 வருட காலம் நிறைவேறவேண்டுமே. தேவனின் செயலைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள்; அதனை செயல்படுத்த உபயோகப்படுத்திய பாத்திரம் 'யோசேப்பு' என்னும் இளைஞன். அவனுக்கு 17 வயதில் வந்த சொப்பனம் விளங்கவில்லைதான்; குடும்பத்தாருக்கும் புரியவில்லை (ஆதி. 37:1-11). தேவதிட்டத்தினை நிறைவேற்றவே 'யோசேப்பை' சகோதரர்கள் பகைக்கிறார்கள். அதுவே அவர்களை அவனை இஸ்மவேலரின் கையில் விற்றுப்போடச்செய்கிறது. (ஆதி. 37:28)
சென்ற இடத்திலும் யோசேப்புக்கு நேர்ந்த துன்பங்களை நாம் அறிவோமே. பொய்யாய் குற்றஞ்சாட்டப்படுதல், சிறைச்சாலை, நன்றிகெட்ட மனிதர்களால் மறக்கப்படுதல் போன்ற இனம் தெரியாத, புரிந்துகொள்ள இயலாத துன்பங்கள். பரிசுத்தத்தினை வாஞ்சிப்பவனாயிற்றே அவன், உண்மையாய் நடப்பவனாயிற்றே, கர்த்தரும் கூட இருந்தார் என்று வேதம் சொல்லுகிறதே. (ஆதி. 39:2,21)
ஆம் பிரியமானவர்களே, பரிசுத்தத்திற்கு நீங்கள் வைராக்கியம் பாராட்டினாலும், மிகவும் உண்மையும் உத்தமுமாய் நடந்துகொண்டாலும், கர்த்தர் கூட இருப்பதனை ஜனங்கள் கண்டாலும், அநேக வெளிப்படுத்தல்களைப் பெற்றிருந்தாலும், அனைவரையும் நேசிக்கும் சுபாவம் இருந்தாலும், எளியவனாய் சிறியவனாய் தாயை இழந்திருந்தாலும், சொந்த சகோதரர்களால் பகைக்கப்பட்டாலும், துன்பப்பாதை உனக்கு வைக்கப்படும்போது உனக்கு விளங்காமற்போகலாம்; ஆனால், 'அவருடைய' தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவன் என்ற நினைவு உன்னை எந்த முறுமுறுப்பும் இல்லாமல் பாடுகளின் பாதையில் வழிநடத்தப் போதுமானதாக இருக்கும்.
உலகத்தினை இரட்சிக்கும் இரட்சகனாக உயர்த்தப்பட்ட யோசேப்பின் (ஆதி. 50:20) அழைப்பைக்கூட யாக்கோபு சந்தேகப்பட்டு நடுங்குகிறான் (ஆதி. 46:3). ஆகையால்தான், தேவன் யாக்கோபை தேடி வந்து பயப்படாதே என்று சொல்லவேண்டியிருந்தது. ஏனெனில், தன் தாத்தா ஆபிரகாமுக்கு எகிப்திலே நேரிட்டதனை யாக்கோபு நன்கு அறிவான். ஏனெனில், ஆபிரகாம் மரிக்கும்போது யாக்கோபின் வயது 15. தன் தாத்தாவிடம் அவரின் பழைய அனுபவங்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் வயது. இஸ்மவேல் தன்னுடைய குடும்பத்திற்குள் நுழைந்த கதை தெரியும். அது எகிப்திய பெண்ணான ஆகார் மூலம் வந்தது அல்லவா!
தன்னுடைய தகப்பனாகிய ஈசாக்கையும், ஆண்டவர் அவன் எகிப்திற்குப் போக (பஞ்சத்தின் நிமித்தம்) எச்சரித்ததனை யாக்கோபு நினைவுகூருகிறான் (ஆதி. 26:2). தன்னுடைய சூழ்நிலையும் அவனை எகிப்திற்குத் தள்ளுகிறதோ என்றே நினைத்தான்.
யோசேப்பு மாத்திரம் இரதங்களையும் வண்டிகளையும் அனுப்பாமல் இருந்தால், தன்னுடைய மற்ற மகன்களை அவன் நம்பியிருக்கவேமாட்டான் (ஆதி. 45:26,27). ஆயினும், பயம் விடவில்லையே; யோசேப்பு எகிப்திலே அதிபதியாயிருக்காவிட்டால் இந்த தேவ திட்டம் நிறைவேறியிருக்காதே. அதற்கு யோசேப்பு சென்ற பாதை கல்லும், முள்ளும், பாடும், வேதனையும் அல்லவா!
தாவீதின் வாழ்க்கையையும் கவனித்துப் பாருங்கள். இஸ்ரவேலில் ஒரு நல்ல மாதிரியான இராஜா வேண்டும். உலகிற்கே தேவ இராஜ்யத்தின் நடைமுறைகளைக் காண்பிக்கத்தக்க இராஜ்யம் ஸ்தாபிக்கப்படவேண்டியது தேவ திட்டம் (யாத். 19:6). உலகத்தாருக்கு தேவன் தம்முடைய இருதயத்தினைத் திறந்து தன்னுடைய பிரமாணங்களை எழுதிக்கொடுக்கவேண்டும் (ரோமர் 9:4). அவர்களுக்கு ஒப்பான வேறே ஜாதி இல்லை என்று சொல்லுமளவுக்கு (உபா. 4:6,7) அவர்களை உயர்த்தினார். ஆகாமியம் செய்தபோதோ, அவர்களைப் போல எந்த ஜனத்தையோ, ஜாதியையோ அவர் தண்டித்தது இல்லை.
அவர்களை ஒரு மாடல் ஆக உருவாக்கவேண்டிய கட்டாயம் தேவனுக்கு உண்டல்லவா! ஆகவே, தாவீது சிறுவயதிலேயே அபிஷேகிக்கப்பட்டபோதிலும், ஆடுமேய்க்கவே அனுப்பப்படுகிறான் (1 சாமு. 16:13,19). கோலியாத்தைக் கொன்று வீழ்த்தினபோதிலும், இராஜாவின் மருமகனானபோதிலும், சவுல் அவனை அழிக்கவே முற்படுகிறான். தொடர் துன்பங்கள், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் அவன் ஒரு தேசாந்திரியாய் அலையவேண்டிவந்தது (1 சாமு. 20:31); அது அவனை உருவாக்குவதற்கே!
தனக்கு தாவீதே முன்னடையாளமானவன் என்றும், தன்னுடைய செல்லக் குமாரனும் தாவீதின் குமாரன் என்றே அழைக்கப்படவேண்டும் என்பது தேவ திட்டம்; அதற்காகவே பாடுகள், வேதனைகள், தாவீதை அலறவைக்கும் தீமைகள். காரணமில்லாமல் பகைக்கப்படுகிறான் (சங். 69:8; 77:7; 59:4; 40:12; 7:4). தேவ இராஜ்யத்தின் மாடலை ஸ்தாபிக்கத் தெரிந்துகொள்ளப்பட்டவனுக்கே இத்தனை வேதனைகள் எனில், தேவ இராஜ்யத்தினை பூமியில் ஸ்தாபிக்கப் பிரயாசப்படுவோருக்கு எத்தனை வேதனை உண்டாகும்! ஆச்சரியமில்லையே. விசேஷமாக எதிரியின் எல்லைகளுக்குள் ஸ்தாபிக்கத் தொடர்ந்து முன்னேறும் மிஷனரிப் பணிகளுக்கு ஏன் தொல்லைகள் இருக்காது?
பவுலை கவனித்துப் பாருங்கள், தேவ பணியினைத் தலைமேற்கொண்டு இரவும் பகலும் கண்ணீரையே உணவாக்கி, தாழ்மையாய் நடந்தபோதிலும், தவறாகப் பேசப்பட்டு, யூதருடைய தீமையான யோசனைகளால் நேரிட்ட சோதனைகளோடு அவன் ஓடுகிறான். பின்னானதை மறந்து ஓடுகிறான் (அப். 20:19). பட்டணந்தோறும் கட்டுகளும் உபத்திரவங்களும் உண்டு, அதனைக் குறித்து கவலைப்பட்டு அவன் உட்கார்ந்துவிடவில்லையே. (வச. 24)
பசியும் பட்டினியும், நிர்வாணமும் நிந்தையும் அவவமானமும், பொய் குற்றச்சாட்டுகளும், நிரூபிக்கக்கூடாத (அப். 24:13), நிரூபிக்கமுடியாத, வேதனையை மாத்திரம் அதிகரிக்கும் விஷ அம்புகளால் நிரம்பிய வார்த்தைகளும் (WhatsApp செய்திகளும்) ஏராளம். ஆனால், அதுதானே தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதனை நிரூபிப்பது.
எனவே தேவன் உன்னை தெரிந்துகொண்டிருக்கிறார் என்றால், உபத்திரவங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். பின்வாங்கி நின்றுவிடாதீர்கள். 'இயேசு சென்ற பாதை இடுக்கம்' என்றுதான் பாடினார்கள் சகோதரி சாராள் நௌரோஜி. 'இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும், அவ்வுலக வாழ்வைக் காணக் காத்திருக்கின்றேன்' என்பதே நமது கீதமாகவேண்டும்.
சபைக்கு சட்டதிட்டங்களைத் தெளிவாக எழுதிக்கொடுக்கத் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம் இவ்விதம் கசக்கிப் பிழியப்படுமே. அப்பமாகும்படிக்கு தானியம் இடிக்கப்படவேண்டுமே. ஒலிவ எண்ணெய் நன்றாய் இடிக்கப்படுமே. (ஏசா. 28:28)
பின்வரும் சந்ததிக்கு உலகின் வரும் காரியங்களை விளக்கமாக எழுதிக்கொடுக்கத் தெரிந்துகொண்ட பாத்திரம் யோவான் என்னும் அன்பின் சீஷன். அவனுக்கும் அந்தப் பாடுகள்தானே. (வெளி. 1:9)
தனித்து விடப்படுதல், வயதினையும் பாராமல் துன்பப்படுத்தப்படுதல், அன்பின் மொழி பேசுபவனுக்கு அத்தனை அல்லல்கள். இயேசுவே அவனை நம்பி தன்னுடைய தாயை ஒப்படைத்தார்; ஆனால், அவனால் சபைக்கு மூப்பனாக நியமிக்கப்பட்ட தியோத்திரேப்புவே அவனுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி கிரியைகளையும் செய்து அவனை வேதனைக்குட்படுத்தினானே (3 யோவான் 9,10). நம்மை விட்டுப் பிரிந்தார்கள்; ஆகிலும், அவர்கள் நம்முடையவர்களாகயிருக்கவில்லை என்று சிலரை அடையாளம் காட்டி, இவர்கள் கூட இருந்து குழிபறித்தவர்கள். இப்பொழுதோ வெளியாக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறார் (1 யோவான் 2:19). இதுதான் எதிர்காலத்தின் கோரத்தினை உலகிற்குக் காண்பிக்க நினைக்கும் அவைருக்கும் நேரிடும். இது ஒரு அடையாளம். இதன் மூலம் நாம் ஊழியத்தினையும், ஊழியரையும் அடையாளம் கண்டுகொள்ளலாம்.
பழைய ஏற்பாட்டின் யோசேப்போ, தாவீதோ, புதிய ஏற்பாட்டின் பவுலோ, யோவானோ, இன்றைய மிஷனரிப் படையோ, உண்மை ஊழியனோ இதே பாதையில் நடந்து 'சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடைபெறுகிறது' என்று முழங்கலாம். தேவனுடைய பெரிய படத்தினைக் கண்டவர்களுக்குத்தான் இந்த வசனத்தின் மேன்மை விளங்கும். அவர்களே இந்த வசனத்தை உரிமைபாராட்ட முடியும். இப்போது விளங்கியிருக்கும் என நம்புகிறேன்.
நடக்கும் அனைத்தும் அவருடைய திட்டங்களும், ஆலோசனைகளும் நிறைவேற்றப்படவே எனக்கு நடக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.
'எனக்கு நேரிட்டவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று' (பிலி. 1:12) தைரியமாகச் சொல்லும் பவுல்கள் எங்கே? தேடுவோம், ஆயத்தப்படுத்துவோம் அப்படிப்பட்டவர்களை. ஜெபிப்போம் தேவனே அப்படிப்பட்டவர்களை எழுப்பித்தர. அது தேசத்தின், சபைகளின் உடனடித் தேவை.
ஜுலை மாதம் 28,29-ம் தேதிகளில் 'மிரிக்' (மே. வங்காளம்) என்ற இடத்தில் நடந்த நம்முடைய பொதுக்குழு, செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டங்களில் தேவன் பலமாக அசைவாடினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட அதே சந்தோஷமும், மகிழ்ச்சியும், சகோதர சிநேகமும் அபரீதமாகப் பொழியப்பட்டது. ஒருமனதின் ஆவி அனைவரையும் ஆட்கொண்டது. அடிக்கப்படும் நம்முடைய சகோதரர்களுக்காக கரிசனை பெருகிற்று. தேவ இராஜ்யத்தின் விரிவாக்கப் பணிக்காக ஏராளமான புதிய காரியங்களைச் செயல்படுத்தும் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு, நிறைவேற்றத் தீர்மானங்கள் ஒருமனதோடு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வட இந்திய விசுவாசிகளின் பொருளாதார நிலையையும், தொழிற் பயிற்சிகளை உயர்த்தும் திட்டங்களும் செயலாக்கப்படும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. அனைத்து மகிமையும் ஆண்டவருக்கே உண்டாவதாக.
அர்த்தமற்ற விளக்கங்கள் அனைத்து வசனங்களுக்கும்
அந்தகர்களால் அனைவரையும் குருடாக்கிற்றே
ஆறுதல் சொல்ல இதனையும் உபயோகப்படுத்தினோர்
ஆதாயத்தினை குறியாய் கொண்ட கொள்ளையர்
இறைத் திட்டம் இனியும் மறைக்கப்படலாமோ
இரைதேடும் எதிரிக்கு இது உணவாகுமே
ஈவாரை மட்டும் மனதில் கொண்டு செயல்பட்டால்
ஈகையையும் திசை திருப்பினார் தன் வயிறு நிரப்பவே
உலகத்தினை உருவாக்கினவர் மீட்க செயல்பட்டால்
உன்னத நோக்கினை அறியாமல் செய்தானே சத்துருவும்
ஊரெங்கும் இரட்சிப்பின் திட்டம் செயல்பட்டால்
ஊரணியாய் இல்லாமல் நதியாய் பாயுமே சபை
எங்கும் சொல்ல, வெல்ல பிறந்தவர் அடையாளம் காண்பர்
எத்தனின் பித்தம் பிடித்த செயல்திட்டங்களை
ஏங்கிடுதே இதயம் இன்று அன்பரின் ஆதங்கத்தால்
ஏகிடுவோம் உண்மை புரிந்தே நேரமில்லையே
அன்பரின் அறுவடைப் பணியில்
சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்