அன்பின் மடல் July 2023

 


அன்பின் மடல்

July 2023


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,


ஓட்டத்தை ஜெயமுடன் ஓடி முடிக்க உதவிடும் (2 தீமோ. 4:7; 1கொரி 9:24; அப். 20:24) ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துகள். அநேகருடைய வாழ்வில் 'அசதி' அல்லது 'அசட்டை' அவர்களுடைய ஓட்டத்தினை ஜெயமாக முடிக்காத வண்ணம் தடுத்துப்போட்டது நாம் அறிந்ததே. எனவே, தேவ இராஜ்யம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் 'அசட்டை' என்ற வார்த்தைக்கு தங்கள் அகராதியில் இடம் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது எத்தனை அவசியம் என்பதனை உணர்த்துவிப்பது அவசியம் என எண்ணியே இந்த மடலை வரைகிறேன்; தேவன் நம்மில் கிரியை செய்வாராக.

'அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்'  (அப். 13:41) என்பதே பவுல் யூதருக்குச் சொன்ன அறிவுரை.

'ஏசா தனக்குண்டான சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணினான்' (ஆதி. 25:34); விளைவு, 'ஒருவனும் ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (எபி. 12:16) என்ற எச்சரிப்புச் சின்னமானான். 

ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான் (எபி. 12:17); என்னே பரிதாபம்!!

'என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்' (நீதி. 1:30) என்பது தேவனின் அங்கலாய்ப்பு. அது அவர்களின் ஜெபங்களுக்கு உத்தரவைத் தடைசெய்ய வல்லமையுள்ளது என்பது அநேகருக்குத் தெரிவதில்லை. 'அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்' (நீதி. 1:28) என்பதுதானே தேவனின் நியதி. 

அநேக நேரங்களில், 'பணத்தின் மேல் உள்ள ஆசையும்' (1 தீமோ. 6:10), பணத்தின் ஆளுகையும் தேவனை அசட்டைசெய்ய வைத்துவிடக்கூடும். (லூக். 16:13)

முதலாவது, கர்த்தரை அசட்டைபண்ணுவதனைக் குறித்துப் பார்ப்போம். பணப் பெருக்கமும், செல்வத் திரளும் அநேகரை ஆண்டவரை அசட்டைசெய்ய வைக்கிறது. யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான். (உபா. 32:15)

கூடவே, துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமை பாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான். (சங். 10:3)

காடைகளைக் கேட்ட இஸ்ரவேலர், அழுகையினால் கர்த்தரை அசட்டைசெய்து (எண். 11:20),  (எரே. 23:17)

ஆனால், 'என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள்' எனறு கர்த்தர் சொல்லுகிறாரே. (1சாமு. 2:30)

நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிறவர்களை கேள்வி கேட்பாரே. (மல். 1:6)

விபச்சாரப் பாவத்தில் விழுந்து தாவீது கர்த்தரை அசட்டைபண்ணினதாகத்தானே வேதம் நமக்குக் காட்டிக்கொடுக்கிறது (2 சாமு. 12:10). பரிசுத்தம் பேணிக் காக்கப்படாதபோது, கர்த்தரே அசட்டைபண்ணப்படுகிறார் என்பது உண்மை அல்லவா. (1 தெச. 4:8)

கர்த்தரை அசட்டைபண்ணுவது என்பது, அவருடைய வார்த்தையை அசட்டைபண்ணுவதே! துணிகரமாய்ப் பாவஞ்செய்கிறவன் அவருடைய வார்த்தையை அசட்டைபண்ணி, அவரை நிந்திக்கிறானே (எண். 15:30,31). தாவீது பத்சேபாளிடத்தில் பாவத்திற்குட்பட்டபோது, தேவன் இதனைச் சுட்டிக்காட்ட மறக்கவில்லையே (2 சாமு. 12:9). ஆகையினால்தான், 'துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்' (சங். 19:13) என்று கெஞ்சுகிறான். தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள் எத்தனை பேர்! (சங். 107:10). விளைவு, அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடத்தப்பட்டார்களே. (சங். 107:11)

பரிதானம் (லஞ்சம்) வாங்கும் மனிதர்கள், சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே! (ஏசா. 5:24)

வார்த்தையை அசட்டைபண்ணுகிறவன், தேவன் வாக்குப்பண்ணின தேசத்தையும், அது இச்சிக்கப்படத்தக்கதாய் இருந்தாலும் அசட்டைபண்ணுகிறான் அல்லவா! (எண். 14:31; சங். 106:24)

இன்றைக்கும் தேவன் தேசத்தை அவருடைய சுவிசேஷத்தால் நிரப்ப நமக்குக் கட்டளையிட்டிருந்தபோதிலும், தேசத்தை அசட்டைபண்ணுகிற திருச்சபை, மிஷனரி ஊழியங்களில் ஆர்வம் காட்டுகிறதில்லையே. அநேக போதகர்களும், திருச்சபை உறுப்பினர்களும் இந்தக் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் திருச்சபைக் கட்டிடங்களை அழகுபடுத்துவதிலும், திருச்சபை பாரம்பரியக் காரியங்களை மேன்மைப்படுத்தி அதற்கு முக்கியத்துவம் தரும் விழாக்களைக் கொண்டாடி, அதில் பணத்தினையும், திறமைகளையும், திருச்சபையாரின் தாலந்துகளை வீணடிப்பதிலும், பெருமைக்காகக் காரியங்களைச் செய்வதிலுமே செலவு செய்யப்படுகிறது. 

தேவன் தம்முடைய திருச்சித்தத்தினை நிறைவேற்ற ஏற்படுத்தும் தலைமைகளையும் அதனால் அவர்கள் அவமதிக்கிறார்கள் (1 சாமு. 10:27). சில வேளைகளில், அவர்களைக் குறைத்து மதிப்பிட்டு, 'நீ இளைஞன், உன்னால் ஆகாது, உனக்குப் புரியவில்லை' என்ற வார்த்தைகளைக் கூறி (1 சாமு. 17:33,42), 

கூடவே, தேவ தீர்க்கதரிசன வார்த்தைகளை சுமந்துவரும் தீர்க்கர்களையும் (Pசழிhநவiஉயட ஏழiஉந) இந்த கலகக் கூட்டத்தார் அவமதிக்கிறார்கள். 'அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று' (2 நாளா. 36:16). இதனை சபை என்றைக்கு கண்டுகொள்ளுமோ தெரியவில்லை. மாறாக, தங்களுக்கு இதமான, சந்தோஷப்படுத்துகிற, தாலாட்டுகிற, மனதினைக் குளிரப்பண்ணுகிற குறிசொல்லுகிறவர்களையே தீர்க்கர்கள் என ஏற்றுக்கொள்கின்றனர். (எரே. 23:16,17)

செழிப்பு உபதேசக்காரர்கள் தேவன் பேரில் வைக்கும் அன்பினை ஊக்குவிக்கும் பிரசங்கங்களைச் செய்யாமல், பொருளாசையையே தூண்டிவிடும் வார்த்தைகளையும், பசப்பு மொழிகளையும் அள்ளி வீசி, தேவ அன்பைத் தணிக்கப்பார்க்கிறார்கள். ஆனால், தேவனையும் அவருடைய அன்பையும் புரிந்து ருசித்து வாழும் ஜனம் அவர்களுடைய உபதேசக் கோளாறைக் கண்டுபிடித்து, அவர்களின் வேதம் சாரா உபதேசத்தை அசட்டைசெய்வார்கள் என்பது மறுக்க முடியா உண்மை. (உன். 8:7)

ஞானம் பரத்துக்குரியது. அது பரலோக பாஷையைப் பேசுகிறது. இதனை உணராத கூட்டம் ஞானத்தினை அசட்டைசெய்யும் (நீதி. 1:7). அநேக நேரங்களில், அது ஏழை (எளிமையான) தேவ மனிதர்களின் வாயிலிருந்துதான் புறப்படுகிறது. அவனுடைய ஆலோசனைதான் பட்டணத்தை எதிரியின் சூழ்ச்சியிலிருந்து விடுவிக்கும். ஆனாலும், அவன் அசட்டைபண்ணப்படுவான் (பிர. 9:14-16). இது இன்று நடக்கும் கொடுமைகளில் ஒன்று. எனவேதான், ஒன்றுமில்லாதிருந்தும், செய்தியில்லாதிருந்தும் அநேக ஊழியர்கள் தங்களை பணக்காரராகவும், மிகவும் மதிப்புக்குரியவராகவும் தங்களைக் காண்பிக்க, கடன்பட்டாகிலும் விலையுயர்ந்த கார்களையும், உடைகளையும் வாங்கிக்கொண்டு 'பந்தா' வாகத் திரிகிறார்கள். மாய்மாலக்காரராக மாற்றியமைத்த இந்த 'அசட்டைபண்ணப்படுதல்' அநேக நல்ல ஊழியரையும் படுகுழிக்குள் தள்ளிவிட்டதே!

பணமும், ஜனத்திரளுமே முக்கியமெனக் கருதும் கூட்டம் சபையில் நிறைந்து இருக்கும் வரை, இது சாதாரணமாக விளங்கி சபைதனை சத்துவமற்றதாக்கிவிட்டுவிடுமே; ஜாக்கிரதை!!

தன்னையும், தன்னுடைய மேன்மைகளையும் உலகமறியவேண்டும் என எண்ணி, தன் மனைவிக்குக் கட்டளையிட்ட அகாஸ்வேரு ராஜாவும், அவனுடைய அழகு மனைவி வஸ்தி, தன் கணவனை அசட்டைபண்ணின காரியம், ஊருக்குள்ளும், உலகுக்குள்ளும் புகுந்துவிடுவதனை முன்னறிந்த அறிஞர்கள், அதனைத் தடுத்து நிறுத்தும் சட்டம் கொண்டுவந்ததனை எஸ்தரின் முதல் அத்தியாயமே நமக்குக் கற்றுக்கொடுக்கவில்லையா! (எஸ். 1:10-12; 17-20)

வியாதியினிமித்தமும், தரித்திரத்தின் நிமித்தமும் சில தேவ மனிதர்கள் அசட்டைபண்ணப்படலாம். சிறு பிள்ளைகளும்கூட அவர்களை அசட்டைபண்ண வாய்ப்பு உண்டு (யோபு 19:18). வேலைக்காரன்தானே என்று சிலரை அசட்டைபண்ணி நியாயக்கேடு செய்வாரும் உண்டு (யோபு 31:13). வயதாகிவிட்டது என்பதினால் அசட்டைபண்ணப்படும் பெற்றோர் எத்தனை பேர்? அவர்களுடைய வாழ்க்கையின் அனுபவ வார்த்தைகளும், தேவனுக்குப் பயப்படும்படியாக ஏவும் ஆலோசனைகளும் எத்தனையாய் அசட்டைசெய்யப்படுகிறது. அதற்கு வரும் தண்டனை 'கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னுமே' (நீதி. 30:17). அவர்களின் ஆலோசனைகள் மெதுவாக ஓடும் நீர் சுனைகள் என்பதனையும், அதனை அசட்டைபண்ணும்போது வரும் பேராபத்தினையும் அறிவது நலமல்லவா. (ஏசா. 8:6,7). 

ஆனால், மாயமானவைகளைப் பின்பற்றி, உலகத்தினைப் பிரியப்படுத்தத் துடித்து அதற்கேற்றவைகளைச் செய்யும்போது,  அந்த உலகமும் உன்னைக் காட்டிலும் வசீகரமானவற்றினைப் பார்க்கும்போது உன்னை அசட்டைபண்ணிவிடுமே (எரே. 4:30; புலம். 1:8). இளம் வயதின் கணவனையோ, மனைவியையோ வசீகரத்தினால் மாத்திரம் திருமணம் செய்தவர்கள் நிலை இதுவல்லவோ! 

உடன்படிக்கைகளை அசட்டைபண்ணினோரும் ஏராளம். திருமண உடன்படிக்கையையோ (மல். 2:14), ஞானஸ்நான உடன்படிக்கையையோ (1 பேதுரு 3:21), கண்களோடு செய்த உடன்படிக்கையையோ (யோபு 31:1), புதிய உடன்படிக்கையின் இரத்தத்தினையோ (1 கொரி. 11:25) அவமதித்து அசட்டைபண்ணுதல், நம்முடைய ஆவிக்குரிய தீயை அணைத்துவிடப் போதுமான பெலன் கொண்டவை. 

அவரால் அனுப்பப்பட்ட அவருடைய சீஷர்களை அசட்டைபண்ணுதல், அவரையே அசட்டைசெய்வதற்குச் சமானம். (லூக். 10:16)

தேவனைப் பின்பற்றும் தங்கள் எஜமான்களையோ, அல்லது வேலையையோ (1 தீமோ. 6:2), தேவ சபைதனையோ (1 கொரி. 11:22), பெலவீனர்களையோ (கலா. 4:14), ஏழை விசுவாசிகளையோ (யாக். 2:2-7) நாம் அசட்டைபண்ண அனுமதியில்லையே! அற்பமாய் ஆரம்பம் பண்ணினவைகளையும் தேவன் அபரீதமாய் ஆசீர்வதித்து, பெருகப்பண்ணக்கூடுமே (சக. 4:10). பரிசுத்தமாக்கப்பட்ட அல்லது தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்ட எதனையும், எவரையும் நாம் கவனமாய்க் கையாளவேண்டுமே. (எசே. 22:8)

இன்றைக்கு இளைய சமுதாயத்தின் தேவ பக்தியையோ, பரிசுத்த நடக்கைகளையோ, தேவனுக்கேற்ற செயல்பாடுகளையோ நாம் அசட்டைசெய்தால், பிற்காலத்திற்கு சபைக்கும், தேசத்திற்கும், குடும்பங்களுக்கும் நாம் கேடு விளைவித்துவிடுவோமே. (1 தீமோ. 4:12)

கர்த்தத்துவத்தினை (Sovernity of God) மதிப்போம் (யூதா 1:8). அவர் சித்தம் அறிந்து மதிக்கவேண்டியவற்றையும், மதிக்கவேண்டியவர்களையும் மதித்து, ஜசகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து (1தெச 5:12)ஸ, தேவன் வாக்குப்பண்ணின இந்த பாரத பூமியை அவருக்காகச் சொந்தமாக்கிட, அசட்டைபண்ணாத ஆவியினையும், மனநிலையையும் (attitude) நமக்கு தருவாராக. 

தேவ வார்த்தையை அசட்டைபண்ணின சவுலின் நிலை, நம்மை தேவன் தள்ளிவிடாதபடி காப்பதாக (அப். 13:22; 1 சாமு. 13:13,14; 1 சாமு. 15:11,26). அவர் நம்மை தெரிந்துகொண்டதற்காக மனஸ்தாபப்படக்கூடாது. 



அசட்டை செய்து அழிந்துபோனோர் அநேகர்

அவசரப்பட்டு இழந்துபோனோரும் உண்டு

ஆண்டவரையும் அவருடைய வார்த்தைகளையும் 

ஆனந்தமாய்க் கைக்கொள்ளுவோம்

ஆகாயம் அழிந்தாலும் அது அழியாதே

ஆவியினால் நடத்தப்படும் அடியாரையும்

ஆர்ப்பரிப்போடு பின்பற்றிச் செல்லுவோம்

இப்புவி யாத்திரையில் இன்பராம் இயேசு

இறைப் பணி செய்திட நம்மை நம்புகிறார்

ஏற்றுக்கொண்ட பணியினை அசதியாய் செய்யாமல்

ஏகமனதோடு செய்து முடித்து ஏகிடுவோம் பரலோகமே



அன்பரின் அறுவடைப் பணியில்

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்