அன்பின் மடல் May 2023

 

அன்பின் மடல்

May 2023


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,


பொன்னையும், தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் (ஞானமாகிய இயேசு கிறிஸ்துவின்) நல்லது. சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது என்று அறைகூவல் விட்டு, நம்மை தம்மைத் தேட அழைக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள் (நீதி. 8:19). என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன். அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் (நீதி. 8:17) என்பது அவரின் அங்கலாய்ப்பு. ஆனால், அதனை செய்துவிடாது நம்மைத் தடுப்பதில் ஒரு பெரும் பங்கினை வகிப்பது, 'பொருளாசை' என்னும் 'அரக்கனே'. 

அவர் நம்மை, 'நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும் புகழ்ச்சியிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்;' (உபா. 26:19) என்பதில், ஐசுவரியமும், பணமும், சொத்தும் அடங்கவில்லை என்பதை தயவுசெய்து கவனிக்கவும். ஆனால், இன்றைய கிறிஸ்தவ பிரசங்க பீடங்களிலோ, அது முற்றிலும் மறக்கப்பட்டுப்போன ஒன்று. 

'பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன? (பிர. 5:11) என்பதுதான் ஞானியான சாலொமோன் இராஜாவின் கண்டுபிடிப்பு. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம் (நீதி. 23:5)

இதனை அறியாத அநேக தீர்க்கதரிசிகள் (தங்களை அழைத்துக்கொள்ளுபவர்கள்) கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். 

அதின் நடுவில் (சபையின் நடுவில்) இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள்; ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். (எசே. 22:25,27)

அதைத்தானே, லூசிபர் அன்று செய்தான். 'நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்' (எசே. 28:4) என்றுச் சொல்லித்தானே அவனை தேவன் கீழே தள்ளினார். (எசே. 28:17)

இம்மைக்குரிய ஆசீர்வாதங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து பிரசங்கம் பண்ணி, அதற்காக ஜெபித்து, ஜனத்தின் உலக ஆசைகளைத் தூண்டிவிடும் எந்தப் பிரசங்கியையும் என் மனம் அரோசிக்கிறது. 

அன்று ஆகானின் பொருளாசை இஸ்ரவேல் ஜனத்திற்கு, பெரிய அற்புதத்திற்குப் பின் அதிர்ச்சியைத்தானே கொண்டுவந்தது (யோசு. 7:12). அதனை சாபத்தீடானது என்று அழைக்கும் கர்த்தர், 'அது உங்களிலிருந்து நீக்கப்படும் மட்டும், நீங்கள் சத்துருவுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்றே சொல்லுகிறார் (யோசு. 7:13). இன்றைக்கும், ஆவிக்குரிய யுத்தத்தில் அநேகர் தோற்று நிற்பதற்கானக் காரணங்களில் இது பெரும் இடத்தையே வகிக்கிறது என்று நான் சொல்லுவேன். சத்துருவின் முன் எத்தனை முறை நம்முடைய சபைகள் அவமானப்பட்டு நிற்கிறது? கவலையில்லையா? 

கேயாசியின் பொருளாசை, நாகமான் என்ற சீரியாவின் படைத்தளபதி  விட்டுச் சென்றக் குஷ்டரோகத்தினை தனக்கும் தன் சந்ததிக்கும் என்றைக்கும் பிடித்திருக்கத்தக்கதாய் மாற்றிவிட்டதே! (2 இராஜா. 5:27)

அனனியா சப்பீராள் என்பவர்கள் தங்களுக்குச் சொந்தமானதை விற்று காணிக்கையாகக் கொடுக்க விரும்பினபோதிலும், கொடுக்கும் நேரம் வந்தபோது, ஒரு பங்கின் மேல் ஏற்பட்ட ஆசை, வஞ்சகமான நோக்கத்தில் தேவனிடத்தில் பொய் சொல்லும் அளவுக்குக் கொண்டுசென்றுவிட்டதே! (அப். 5:1-11)

சாமுவேலின் புத்திரர்கள், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள் (1 சாமு. 8:3). அவர்களின் தகப்பனோ, உலகத்திற்கே சவால் விடும் வார்த்தைகளைச் சொல்லமுடிந்தது (1 சாமு. 12:2-4). எனவேதானே, 'சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அன்றைய தினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்.' (1 சாமு. 12:18)

வாலிபனும், தன்னைத் தாழ்த்த அறிந்தவனும், சிறிய வயது முதல் தேவக் கட்டளைகளைத் தவறாமல் கைக்கொண்டுவந்த அந்த தலைவன் (லூக். 18:18-25), பொருளாசையினால் அல்லவோ இயேசுவினிடத்தில் வந்தபோதிலும் துக்கமுகத்தோடுப் புறப்பட்டுப் போனான். 

ஆனால், மாறாக, ஆபிரகாமுக்குள் இருந்த மனநிலை என்ன? சோதோமின் இராஜாவின் வெகுமதிகளை எடுத்துக்கொள்ள ஆயத்தமாயில்லை (ஆதி. 14:21,22). ஏன் ஒரு பாதரட்சையின் வாரையாகிலும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயில்லை. உலகத்தில் வாழ்ந்தாலும், அவன் பரதேசியைப் போல வாழமுடியுமே (எபி. 11:9); உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லையே. (எபி. 11:38)

பேதுரு அப்போஸ்தலன், ஆவிக்குரிய வரங்களை பணத்தினால் விலைக்கு வாங்க முயற்சித்த மந்திரவாதியான சீமோனுக்கு, 'உன் பணம் உன்னோடேகூட நாசமாய் போகக்கடவது' என்று கூறி கடிந்துகொள்ள பெலன் இருந்ததே. (அப். 8:20)

பவுல் அப்போஸ்தலனுடைய பிரசங்கத்தில், துப்புரவு காணப்பட்டதற்கான முக்கியக் காரணம், 'நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி' (1 தெச. 2:5) என்று சொல்லலாமே. அது தேவ  வசனத்தைக் கலப்பில்லாமல் பேசுவதற்குத் தைரியத்தினை அளித்தது. (2 கொரி. 2:17)

தானியேல் என்ற தேவ மனிதனுக்கும் பொருளாசை ஒரு வெறுப்பானதே! 'உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும். உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்' (தானி. 5:17) என்று தேவ சட்டத்திட்டங்களை உடைத்தெறிந்த பெல்ஷாத்சாரிடத்தில் தீர்க்கமாகச் சொல்லமுடிந்ததே!

சாலொமோனிடத்திலும் தேவன், 'நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்' என்று கேட்டபோது, தேவனே ஆச்சரியப்படும் வகையில் அவன் ஐசுவரியத்தையும், சம்பத்தையும், கனத்தையும், பகைஞரின் பிராணனையும் (அவர்களின் சொத்தை பின்னதாகப் பறித்துக்கொள்ளலாமே), நீடித்த ஆயுளையும் (தான் சம்பாதித்தவைகளை அனுபவிக்கத்தக்கதாக) கேளாமல், 'ஞானத்தையும் விவேகத்தையும்' கேட்டதனைக் காணுங்கால், நமக்கே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! (2 நாளா. 1:7,11). அவன் கேளாத ஐசுவரியத்தினையும் மகிமையையும் அவரே தருகிறார். (1 இராஜா. 3:13)

வேதம் போதிக்கும் உண்மைகளை, விசேஷமாக பொருளாசைகளைக் குறித்து கூறுபவைகளை கொஞ்சம் தொகுத்துத் தந்திருக்கிறேன்; தியானித்துப் பயன்பெறுவீர். 

யாத். 18:21: பொருளாசையை வெறுக்கிறவர்களே தலைமைத் தாங்கத் தகுதியுடையவர்கள். 

சங். 119:36: பொருளாசையில் சாய்ந்துபோகிறவர்கள், தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துகொள்ள வாய்ப்பில்லை. 

நீதி. 1:19: பொருளாசை தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும் வல்லமை படைத்தது. 

நீதி. 15:27: பொருளாசைக்காரன் தன் வீட்டிற்கே உலை வைக்கிறான்.

நீதி. 28:16: பொருளாசையின் வெறுப்பு ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும் நல்ல டானிக். 

ஏசா. 57:17: பொருளாசை ஒரு அக்கிரமம். தேவ கோபத்தினைக்  கிளறிவிடக்கூடியது. மனம்போன போக்கில் நடக்கச் செய்து, தேவனுடைய அடிகளுக்குத் தன்னை ஆயத்தப்படுத்த வல்லது. 

எரே.6:13ஃ8:10: பொருளாசைக்கு சிறியவரும், பெரியவரும் இலக்காகக்கூடும். தீர்க்கதரிசிகளையும், ஊழியக்காரரையும் பொய்யர்கள் ஆக்கிவிடும்.

எரே. 51:13: பாபிலோனை (கள்ள மார்க்கம்) அழிக்க தேவன் சொல்லும் பிரதானக் காரணங்களில் ஒன்று, பொருளாசையே. 

எசே. 22:12: வட்டி, பொலிசை போன்றவைகளின் பிறப்பிடமும், இடுக்கண் செய்ய ஏவிவிடுதலுக்குத் தூண்டுகோலும் தேவனை மறக்கச் செய்துவிட வலிமை மிக்கது. 

எசே. 33:31 பொருளாசை ஆவிக்குரிய உடைகளில் காட்சி அளித்து, தேவ ஜனங்களைப் போல வேடமணிந்து, தேவ வார்த்தைகளில் மனங்களிப்பது போலச் சத்தமிடும். அடிக்கடி 'அல்லேலூயா' என்றும் 'ஆமென்' என்றும் கோஷம்போட்டு மற்றவரை ஏமாற்ற அஞ்சாது. 

மாற். 7:22: பொருளாசை மனிதனை தீட்டுப்படுத்தப் போதுமான சக்தி வாய்ந்தது. 

லூக். 12:15: பொருளாசை நித்தியஜீவனை விழுங்கவைத்து, செத்தவனாக்கிவிடும். 

லூக். 16:14: இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை ஏளனம் செய்யும். 

ரோமர் 1:29: கேடான சிந்தையின் விளைவுகளில் இதற்கும் இடம் உண்டு. கூடவே, பொருளாசை கொண்டோரைத் தன்னோடு இணைத்துக்கொள்ளும்.

1 கொரி. 5:10,11: உலகத்தார் என்பதற்கு இதுவும் ஓர் சின்னம்.

1 கொரி. 6:10: தேவ இராஜ்யத்திற்கு அந்நியனாகவும் மாற்றக்கூடியது. 

எபேசி. 5:3,5: பரிசுத்தவானாக மாறும் தகுதியை இழக்கச்செய்துவிடும்.

கொலோ. 3:5: பொருளாசை ஒரு விக்கிரக ஆராதனையே. 

1 தெச. 2:5: கபடு நிறைந்த மாய்மால ஜீவியம் ஊழியனுக்கும் தந்துவிடும்.

2 பேது. 2:3: மற்றவர்களை தங்கள் வசப்படுத்த சத்துருவின் ஊழியர் உபயோகிக்கும் ஆயுதம். 

2 பேது. 2:14: உறுதியில்லாத ஆத்துமாக்களைச் சாபத்தின்  பிள்ளைகளாக்கும்.  

இன்றைய தேவப் பணியினை தேசத்தில் பரம்பவிடாமல் செய்ய, சத்துரு தேவ ஜனத்தினைத் திசைதிருப்பவும், சத்துரு தன் வலையில் மாட்டிவைத்து உபயோகமில்லாமல் ஆக்குவதற்கும், உப்பாக இருக்கவேண்டிய சபைதனை சாரமற்றச் சபையாக மாற்றுவதற்கு சத்துரு உபயோகப்படுத்தும் தந்திரங்களில் ஒன்று. 

வாழ்வதற்கு பொருட்கள் தேவைதான் என்றும், இது இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்றதுமான மனநிலைக்குள் நம்மைத் தள்ளி, அதனையே நோக்கமாகக் கொண்டு, தாலந்துகளையும், நேரங்களையும், சந்தர்ப்பங்களையும், கவனத்தினையும் நிலையில்லாதவைகளுக்குச் செலவழிக்கவைத்துவிடவே, சத்துரு நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் செய்து, ஏக்கப் பெருமூச்சோடு வாழ்க்கையை வாழ, சந்தோஷத்தையும், திருப்தியையும் கெடுத்துவிட, கடன்காரர்களாக மாற்றி, நிலைமையைச் சீர்குலைக்க உபயோகப்படுத்தும் ஆயுதமே பொருளாசை. 

இன்றைக்கு தேசத்தில் தேவன் அறியப்படவேண்டும் என்ற சிந்தைக்குச் சாவுமணி அடிக்க உதவுவதில் பொருளாசை பிரதான இடத்தினை வகிக்கிறது; ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

'GENEXT' பயிற்சிகள் எதிர்பார்த்ததை விட அதிகமான தாக்கத்தினைக் கலந்துகொண்டவர்கள் மேல் ஏற்படுத்தியது. கூடவே, மூன்று நாட்கள் உபவாசக்கூடுகையில், வட இந்திய விசுவாசத் தலைமையில் உள்ள கிட்டத்தட்ட 7500 பேர் முதிர்ச்சி அடைந்து, தங்களுடைய தேவைதனைக் காட்டிலும் தேவனுடைய இதயத்துடிப்புக்கே முதலிடம் கொடுத்து கதறி ஜெபித்த காட்சி நிச்சயம் வரும் நாட்களில் பெருத்த அறுவடையைக் காணச்செய்யும். 


பொருளாசை தன்னை உடையவர்களை உருவக்குத்தி

பொறுப்பை மறக்கச் செய்யும் சத்துருவின் ஆயுதம்


கண் சொருகிப்போகச் செய்யவும் துரோகி ஆக்கவும்

தன்னைத் தானே பழிவாங்கவும் செய்யும் பட்டயம்


பரிதானமாய் அது பாரினில் காரியங்களைச் சாதிக்கலாம்

பரிதாபப்பட்டால் அது நம்மை பரிதாப நிலைக்குத் தள்ளிவிடும்


கொள்ளையடிக்கவும் அஞ்சாது ஏன் கொலை செய்யவும்கூட

சொல்லைக் கேட்க மனமில்லாமல் பொல்லாப்புச் செய்யும்


இன்பமாய் அழிவுப்பாதையையும் காட்டித் தரும்

துன்பம் வரும்போது எட்டி நின்று வேடிக்கைப் பார்த்திடும்


கானல் நீரை அமிழ்தாகக் கண்களுக்குக் காட்டிடும்

காணாமல் போன ஆட்டைப்போல புதரில் சிக்கவைத்துவிடும்


கர்த்தரின் பேரில் பிரியம் கொண்டால் கண்டிடுவோம் இன்பம்

கர்த்தரையே சார்ந்திருந்தால் போதுமென்றே சொல்லும் மனமே


தேசம் தேவனை அறியக்கூடாமல் தடுக்கும் இந்த ஆயுதம்

தேவ ஊழியரின் வாயில் கண்டால் ஓடிப்போய்விடுங்கள்


மகிமை மாட்சிமை புகழ்ச்சி கீர்த்தி அவரின் கையில்

புகலிடமாக்குவோம் அவரின் கிருபையால்


அன்பரின் அறுவடைப் பணியில்

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்