கர்த்தருக்குப் பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள் (சங். 115:13). யுத்தம் வாசல் வரை வந்ததனை காண்கிற இந்த நாட்களில் (நியா. 5:8), நம்முடைய செயல்பாடுகளைக் குறித்து வேதத்தில், நியாயாதிபதிகளின் புத்தகத்தில் தெளிவாக ஒரு காரியத்தினை தேவன் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளார். அதுவே இன்றையத் தேவை என்பதனை உணர்ந்தவர்கள் எத்தனை பேரோ! அதனைக் கொஞ்சம் விபரமாகக் கூறினால் ஆவிக்குரிய உலகிற்கு பிரயோஜனமாக இருக்கும் என நம்பி, இந்த மடலை எழுதுகிறேன்.
எகிப்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டு, 'என்னையல்லாமல் உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்' (யாத். 20:3; உபா. 5:7) என்று திட்டமாய் அவர்களுக்குக் கட்டளை கொடுத்து, 'சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்' (யாத். 19:5,6) என்று சொல்லி, தன்னுடைய இருதயத்தின் வாஞ்சையை தேவன் வெளிப்படுத்தியிருந்தும், நடக்கவேண்டிய வழிகளுக்கான சட்டதிட்டங்களை தன் சொந்த விரலினால் எழுதிக்கொடுத்திருந்தும், 'நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்' (நியா. 5:8) எனவே யுத்தம் வாசல் வரை வந்தது.
கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்கு முன் யுத்தஞ் செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் ஜாதிகளை விட்டுவைத்திருந்தார் (நியா. 3:1,2). ஆனால், இஸ்ரவேல் புத்திரர் திரும்பத் திரும்ப கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததினால், யாபீன் என்ற கானானிய அரசனை தேவன் சிசெராவின் கீழ் படையெடுக்க அனுப்புகிறார். (நியா. 4:1,2; 3:3,12)
இன்றைக்கும் நம் நடுவே தேவனைத் தவிர அநேக நூதன தேவர்கள் உண்டாயிருக்கவில்லையோ. பணம் அநேகருக்குத் தேவன் (லூக். 16:13), வயிறு அநேகருக்குத் தேவன் (பிலி. 3:19). நூதன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளான செல்போன் அநேகருக்கு முதலிடம் வகிக்கும் தேவன்; ஏனெனில், அதனாலேயே ஆளப்படுகிறார்கள். எது நம்மை ஆளுகிறதோ, அதற்கு நாம் அடிமைகள் மாத்திரமல்ல, அதுவே தேவனாகவும் மாற்றப்பட்டுவிடுகிறது. 'என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது' என்றார் இயேசு (யோவான் 15:5). இன்று செல்போன் இல்லாமல் எதுவும் செய்யக்கூடாதபடிக்கு இந்த சந்ததி தள்ளப்பட்டுவிட்டதே.
இஸ்ரவேலின் ஆயுதங்கள் நாற்பதினாயிரம் பேருக்குத்தானும் போதவில்லை (நியா. 5:8); ஆனால், 900 இருப்பு இரதங்களைக் கொண்டவனோடு (நியா. 4:3) யுத்தம் செய்யவேண்டிய நிலை. இன்றும் சபையின் நிலை அதுதானே? யுத்தத்திற்குப் பயிற்சி பெற்றவர்களும் (ஆவிக்குரிய யுத்தம்) இல்லை. ஆயுதமும் போதாது, ஆட்களும் போதாது. (லூக். 10:2)
இதனால் ஏற்பட்ட தாக்கம், கிராமங்கள் பாழாயின. வழி நடக்கிறவர்கள் பெரும்பாதை பாழாயிருந்ததினால் பக்கவழியாய் நடந்தார்கள் (நியா. 5:6,7); ஆனால், இதனைக் கண்ட ஒரு சிறு கூட்டம் செயல்பட எழுந்தது (நியா. 5:7). மனப்பூர்வமாய்க் ஒப்புக்கொடுத்த ஒரு கூட்டம் அது (நியா. 5:2), அதிபதிகளாலும் நிறைந்திருந்தது (நியா. 5:9), எழுதுகோலைப் பிடிக்கிறவர்களையும் விடவில்லை (நியா. 5:14), தங்கள் உயிரையும் எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நிற்கும் கூட்டம். (நியா. 5:18)
ஆண்டவரும் இணைந்துகொண்டார் (நியா. 5:20), நதியின் வெள்ளங்களும் இணைந்துகொண்டன. அதாவது, இயற்கையும் இணைந்துகொண்டது (நியா. 5:21). கடைசி நாட்களிலும் இப்படித்தானே இருக்கும். (வெளி. 12:16)
உற்சாகப்படுத்த ஒரு தெபோராள் இன்றும் தேவை (நியா. 4:6,7). தேவன் செய்ய விரும்புவதனைச் சொல்லத்தானே இன்றும் ஆட்கள் தேவை. ஒருவேளை ஏவிவிட்டு தங்கள் ஒரு விரலாலும் தொடாமல் இருக்கிறவர்கள் உண்டே (மத். 23:4,5). மனுஷர் காணும்படி மாத்திரம் வாய்ச்சொல் வீரர்கள் எத்தனை எத்தனை! ஆனால், தெபோராள் அப்படியல்லவே. பெண் என்றும், குடும்ப வாழ்க்கை தன்னைத் தடுத்திடும் அல்லது கணவன் என்னை நிறுத்திவிடுவான் என்ற சாக்குப்போக்குக்கு இடமேயில்லையே. (நியா. 4:5,9)
தேவ சத்தம் கேட்கவும், அதனை மற்றவர்களுக்குச் சொல்லவும், அவர்களை செயல்படச் செய்யவும், கூடுமானவரை உடன் நிற்கவும் உதவுகிற தீர்க்கதரிசனச் சத்தம் இன்றும் சபைக்குத் தேவையல்லவா! ஏராளமான சத்தங்கள் கேட்கிறது; ஆனால், இது தேவ சத்தம் என்று சொல்லக்கூடாதபடி, அது கூச்சலாகத்தானே இருக்கிறது. (There are noises but the voice is missing) கட்டளையிட ஆட்கள் உண்டு; ஆனால், இறங்கி செயல்பட்டு கைகளை அழுக்காக்க ஆயத்தமானோர் இல்லையே! (not willing to soil their hands).
பாராக் போன்ற மனிதர்கள் உயிரையும் பணையம் வைக்க ஆயத்தம் (நியா. 4:6; 5:18). ஆனால், கூடவே உடன் நடந்து இயக்குவிக்கும் தலைவர்கள் எங்கே? (நியா. 4:10). பெய்த மழையினால் சமபூமியனைத்தும் சேறாகிவிட்டதால், இருப்பு இரதங்களின் சக்கரங்கள் அதில் மாட்டிக்கொள்ள, சிசெராவும் இரதத்திலிருந்து ஜீவன் தப்ப இறங்கி ஓடவேண்டியதாயிற்று (நியா. 4:15); என்னே கர்த்தரின் கிரியை!!
ஆனால், மற்றொரு கூட்டம்,
ரூபனின் பிரிவினை - ஏன் மந்தைகளை விட்டு விட்டுப் போக மனதில்லை? அந்த மந்தையின் சத்தத்தில் இருக்கவே ஆசை. தன்னுடையவைகளைப் பாதுகாத்து, அதின் பலனைப் புசிக்கவேண்டும் என்பதிலேயே கவனம். (நியா. 5:15,16)
கீலேயாத் மனுஷர் - அக்கரைக்குச் செல்லவோ, தன்னுடைய வசதிகளை விட்டு (comfort area)) செல்லவோ மனமில்லை. (நியா. 5:17)
தாண் மனுஷர், ஆசேர் மனுஷர் - தங்கள் வேலைகளை விட மனதில்லை. யுத்தம் நடக்கும் காட்சியைக்குறித்து கேட்கவும் விரும்பாதவர்கள்.
மேரோசின் குடிகள் - கர்த்தரின் பட்சத்தில் துணை நிற்க வரவில்லை. செய்யவேண்டியதனைச் செய்யாததால், சாபத்தினை இந்தக் குடியினர் சம்பாதிக்கிறார்கள். (நியா. 5:23)
இதன் மத்தியிலும், தேவன் செய்கிற கிரியைகளைக் கவனித்தால் எத்தனை ஆச்சரியமாயிருக்கிறது. தேவனே எதிரியை இழுத்துக்கொண்டுவருகிறார் (நியா. 4:7). கர்த்தர் தம்மில் அன்புகூருகிறவர்களை, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருக்க மாற்றுகிறவர் (நியா. 5:31) என்பதும் வெளிப்படுகிறதே.
இதற்கு மத்தியில் யாகேலுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள், எதிரியை தீர்த்துக்கட்டுவதற்கு? அவளைக் குறித்து தீர்க்கதரிசனம் வந்ததனை யார் அவளுக்குச் சொன்னது? (நியா. 4:9). இத்தனை தைரியம் எப்படி வந்தது? தனியாக ஒரு படைத்தளபதியையே கொன்றுபோட்டாளே! இது தேவன் அல்லாமல் யார் செய்திருக்கக்கூடும்.
இவை அனைத்தையும் நன்றாக உற்றுக் கவனிக்கும்போது, இன்றைய சூழ்நிலையிலும் ஒரு சிறு கூட்டம் தேவனுக்குத் தேவை.
தேவனுடைய செயலைக் கண்டு, தன் ஜனத்திற்கு அதனைக் கூறி, யார் இதனை முன்நின்று நடத்துவது என்று அடையாளம் காட்டிக்கொடுத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, செயல்படுத்த உதவி செய்ய, உடன் இருக்கும் தீர்க்கதரிசிகள் இன்று எங்கே! தன்னை தீர்க்கதரிசி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறவர்கள் இன்று ஏராளம்.
போதாக்குறைக்கு, 'தீர்க்கதரிசன ஜெபம் செய்வது எப்படி?' என்று சொல்லிக்கொடுக்க வகுப்புகளை நடத்தி, அதற்கு கட்டணம் வசூலிக்க ஆயத்தமாகிவிட்ட ஓர் கூட்டம் நம்முடைய சிந்தைகளை வேதனைக்குள்ளாக்குகிறது. தேவனுடைய திட்டங்களை அறியாமல், தன்னுடைய திட்டங்களை தேவ திட்டங்கள் என்று பறைசாற்றி, கூவிக் கூவி விற்பவர்கள் நம் நாட்களில் பெருகிவருகின்றனரே. அதற்குக் காரணம் 'தீர்க்கதரிசனம், தீர்க்கதரிசனம்' என்று அலைமோதிக்கொண்டிருக்கிற விசுவாசிகளே. தேவன் தேசத்தில் செய்யவிரும்புவதனைக் காணாமல், தன்னைக் குறித்தும், தன்னுடைய தேவையை மாத்திரம் குறித்தும் அதிக அக்கறை கொள்வோர் இருக்கும்வரை இது இப்படித்தான் இருக்கும். தேவன் நமக்கு இரங்குவாராக.
தேசத்தின் தேவையைக் கண்டவளும், சந்தர்ப்பம் கிடைத்தால் உடனே செயல்பட்டவளுமாகிய யாகேல், தனியாகவே நின்று சாதிக்க அறிந்தவள். அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவள் அவள்தானே. கூடாரத்தில் தங்கியிருந்தாலும், தனக்கும் யுத்தத்தில் வெற்றிவாகை சூட வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று எத்தனையாய் மகிழ்ந்திருப்பாள். கூடாரவாசிதான்; ஆனால், அது அவளை அடக்கிவைக்க முடியவில்லையல்லவா? தன்னைத் தேடியே சத்துருவை வரவழைப்பார் தேவன் என்று அவளுக்குத் தெரியாதே! தன்னுடைய காலடியிலே சத்துருவின் மரணம் என்ற அந்த மாபெரும் காட்சிதனை அவள் முன்னறியவில்லைதான்; தன்னைக் குறித்துச் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவளுடைய காதுகளில் வந்து எட்டுமுன்னே, செயலில் சாதித்துவிட்டாளே!
அவரவருக்கு தேவன் தந்திருப்பவைகளை ஒன்றுசேர்ப்போம். இணைந்து செயல்படுவோம், எது வாய்க்குமோ நமக்குத் தெரியாதே!
துணை தேடுவோருக்கு துணைசெய்வோம், தைரியமற்றவரை தாங்கிப்பிடிப்போம், எழுதுகோல் பிடித்தோரும் எழும்பிவரட்டும், எதிரியை விரட்ட அடிமைத்தனம் நீங்க, இணைந்தால் இன்பம், இசைந்து செயல்பட்டால் இறைமகன் இயேசுவும் கூடவே செயல்படுவாரே, வெற்றிக் கனியும் உண்டே.
ஒட்டுமொத்தத்தில், ஒருமிக்க மனப்பூர்வமாய்ச் செயல்படக்கூடிய ஒரு சிறு கூட்டம் ஆண்டவருக்குத் தேவை. தேவனால் இயக்குவிக்கப்படும் அந்த கூட்டத்தில், ஒரு பேதையான பெண்ணுக்கும் இடம் உண்டு, எழுத்தர்களுக்கும் இடம் உண்டு, தீர்க்கதரிசியும் அங்கே உண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்க ஆயத்தமாக்கப்பட்டவனும் அதில் உண்டு, பிரபுக்களுக்கும் அதிபதிகளுக்கும்கூட அங்கே இடம் உண்டு, பட்டயம் ஏந்தும் பத்தாயிரம் பேருக்கும் இடம் உண்டு, அந்த கூட்டம் ஜெயித்துதான் ஆகும். ஏனெனில், தேவன் திட்டம்பண்ணின யுத்தமுறை அது. வீட்டின் வாசலுக்கு வந்த யுத்தம் (நியா. 5:8), வானமண்டலத்திற்கு மாற்றப்பட்டது (நியா. 5:20). கழுகு பாம்பு ஒன்றை தரையில் வைத்து தாக்குவதில்லை; மாறாக, ஆகாயத்தில் எடுத்துச் சென்று அதனை மூச்சுத் திணறவைத்து சாகடித்துவிடுகிறது. இதுதான் ஆகாய மண்டலத்தில் யுத்தங்களை நடத்தக் கற்றுக்கொண்டவரின் முறை (எபே. 6:12). தரையின் யுத்தத்தினை வானமண்டலத்திற்கு மாற்றக் கற்றுக்கொள்ளுவோம் (வெளி. 12:7); அதுதானே தேவனின் முறை. (தானி. 10:13,21)
இன்று இந்திய மண்ணில் எதிரியின் சூழ்ச்சியினைக் கண்டு கதறும் இந்தியத் திருச்சபை, இந்த முறைதனைக் கற்றுக்கொள்வது எத்தனை அவசியம். மாறாக, மானிட முறைகள் கையாளப்படுகிறது. மாநாடுகள் நடத்துவதால் அது நடைபெறப்போவதில்லை, கூட்டம்தனைக் கண்டு சத்துரு கலங்குவதில்லை அல்லது வெற்று ஆர்ப்பரிப்பினைக் கண்டு அவன் கலங்குவதில்லை. (1சாமு. 4:5-7). கற்றுக்கொள்ளுவோம், களம் இறங்குவோம் முழங்காலில்.
மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்ததும்
விண்ணகம் இயக்கும் சிறு கூட்டம்
மன்னவன் இயேசுவுக்கு இன்றைக்கும்
விண்ணின் முறைதனை தனதாக்கட்டும்
சிறியவனுக்கும் பெரியவனுக்கும் அங்கே
பங்கு கிடைக்குமே ஒப்புக்கொடுத்தால்
சீறிவரும் சத்துருவினைக் கண்டிடாமல் இங்கே
ஏங்கும் குரல்களை கேட்டிடும் தேவனைச் சார்ந்தால்
தரையில் நின்று யுத்தம் நடத்திடாதே
வான் நட்சத்திரங்களும் இணைவதனைப் பார்
வரையறுயில்லையே அவரின் முறைகளுக்கு
கானம் பாட முடியுமே வெற்றிக் கீதமாய்
தீர்க்கர் எழும்பிட தலைவனும் எழும்புவாரே
அதிபதிகளும் பிரபுக்களும் அதிவேகமாய்
தீவிரம் காட்டுவாரே தேவப் பணியிலே
அணிவகுக்கும் இந்த கூட்டம் போதுமே
மந்தையின் சத்தம் கேட்க தங்கிவிட்ட கொடுமை
சுகவாழ்வு சுகபோகம் போகணுமே
மமதையின் உச்சம் மாற்றானைக் காண மறுக்குதே
சக ஊழியனை இணைத்து செயல்பட இயலையே
சிந்தைகொள்வோம் கற்றுக்கொள்வோம்
தேவ முறைதனை தேவனின் நேரத்தினையும்
பந்தையப் பொருளின் மேல் கண்கள் பதித்திட
தேசம் தேவனை அறிவது நிச்சயமே
அன்பரின் அறுவடைப் பணியில்
சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்