February 2023
நீதி செய்கிறவரும் (சங். 94:1), நீதியாய் அரசாளுகிறவருமாகிய (ஏசா. 32:1) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள். அவருடைய நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்குமே. (ஏசா. 11:5)
இன்றைக்கு அநேகருடைய, விசேஷமாக தேவ ஜனங்களின் போராட்டம், யாரைப் பிரியப்படுத்துவது? குடும்பத்தில், தாய் தகப்பனையா? அல்லது மனைவி, பிள்ளைகளையா? சபையிலும், ஊழியத்திலும் தேவனையா? அல்லது மனுஷரையா? அரசியலில், தன் கட்சித் தோழரையா? அல்லது மக்களையா? சமுதாயத்தில், பெரும்பான்மையானவரையா? அல்லது சிறுபான்மையானவரையா? வியாபாரத்தில் பங்காளரையா? (Stock holders) அல்லது நுகர்வோரையா? (Stake holders) அலுவலகத்தில், மேல் அதிகாரியையா? அல்லது பணியாளர்களையா? கல்வித்துறையில், பள்ளி மேனேஜ்மென்ட்டின் ஆசைகளையா? அல்லது மாணவர்களின் எதிர்காலத்தையா? பொழுது போக்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும், உணவு உண்பதற்கும், ஆரோக்கிய வாழ்விற்கும், அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்கும், வேலையைத் தெரிந்தெடுப்பதிலும், சேமிப்பதிலும், குடியிருப்பினைத் தெரிந்துகொள்வதிலும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
வேதத்திலிருந்து சில காரியங்களைக் காட்டிக்கொடுத்தால், அநேக எதிர்கால ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள உதவுமே என்று இந்த மடலை எழுதுகிறேன். வாழ்வின் எந்த போராட்டத்திற்கும் வேதத்தில் விடை உண்டு என்பதனை நான் எழுதும் இந்த மடலில் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்; தேவன் உங்களோடு இடைபடுவாராக!
ஏசா, தன்னுடைய தகப்பனும் தாயும் தன்னுடைய கானானிய மனைவிகளை விரும்பவில்லை என்பதனை அறிந்துகொள்ளுகிறான் (ஆதி. 27:46; ஆதி. 28:8). இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டபோதிலும் (அவர்களிடம் ஆலோசனை பெறாமலே), தன்மேல் தகப்பன் மற்றும் தாய்க்குப் பிரியம் உண்டாகவில்லையாதலால், மூன்றாம் திருமணம் செய்யத் தீர்மானித்து, ஒருவேளை குடும்பத்தில் ஒருவளைத் திருமணம் செய்தால் அது மாறிவிடும்போல என எண்ணி, தன்னுடைய பெரியப்பாவின் மகளைத் தெரிந்துகொள்கிறான் (அந்நாட்களில் அப்படி தங்கை உறவில் உள்ளவளையும் திருமணம் செய்வது தவறாக எண்ணப்படவில்லையாதலால்).
ஆனால், தேவனால் தள்ளப்பட்ட இஸ்மவேலின் குடும்பத்தில் திருமணம் செய்வது தேவனுக்குப் பிரியமாயிருக்காது என அவன் யோசிக்கவில்லை. (ஆதி. 21:10; கலா. 4:30)
தேவனைப் பிரியப்படுத்துவதுதான் தன்னுடைய முதல் காரியம் என்பதனையும், கானானியரிடத்தில் தன் தாத்தாவாகிய ஆபிரகாமும் தன் தகப்பனுக்குப் பெண் கொள்ள விரும்பவில்லை என்பதனையும் ஏசா அறிந்திருந்தும் (ஆதி. 24:3) கவனக் குறைவாகக் காணப்படுகிறான்.
தகப்பனைப் பிரியப்படுத்தினால் போதும் என்ற மனநிலை, தேவனை மறக்கச் செய்துவிட்டதோ? ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினை அலட்சியம் செய்பவன் இப்படித்தானே இருப்பான் (ஆதி. 25:34). இன்றும் அநேகர் பெற்றோரைத் திருப்திப்படுத்த, தேவனை அலட்சியம் செய்யவில்லையா? எச்சரிக்கை!! 'பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் 'கர்த்தருக்குள்' கீழ்ப்படியுங்கள், இது நியாயம் (எபேசி. 6:1) என்ற வசனத்தில், கர்த்தருக்குள் என்பதனை கவனிக்கத் தவறியவர்கள் எத்தனை பேர்? இதனால் குடும்பத்தில் சமாதானக் குறைவும், பிரிவினைகளும்தானே மிஞ்சி நின்றது. 'தேவனே உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்' என்ற தாவீதின் ஜெபம் நம்முடையதாக மாறட்டும். (சங். 143:10)
சில குடும்ப வாழ்வில் சிலர், 'விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்' (1கொரி. 7:33) என்ற வசனத்தினை மிகைப்படுத்தி (1கொரி. 7:33) அல்லது 'விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்' (1கொரி. 7:34) என்பதனைப் பிடித்துக்கொண்டு, வேத வசனத்தினைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். (மாற். 12:24)
அதே வசனங்களில் காணப்படும் 'உலகத்திற்குரியவைகள்' நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தினைப் போக்கடித்து, கனியற்றவர்களாக மாற்றிவிடும் என்பதனையும், இருதயத்தினைப் பாரப்படுத்தி, ஆண்டவரின் வருகைக்கு நம்மை ஆயத்தப்படாமல் தடுத்துவிடும் என்பதனையும் அறிந்தாரில்லையே (மத். 13:22; லூக். 21:34,36). எனவே, வேதவாக்கியங்களைத் தவறாக அர்த்தப்படுத்திவிடாதிருங்கள்; அல்லது, தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்; அது எப்போதும் ஆபத்தானதே.
மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்களே (ரோமர் 8:8). ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால், அவனிடத்தில் பிதாவின் அன்பில்லையே (1யோவான் 2:15). பிறரைப் பிரியப்படுத்துவது, அவர்களை இரட்சிப்பிற்கு வழிநடத்தவே (1கொரி. 10:32); அது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை சித்தாந்தங்களில் ஒன்று அல்லவா!
கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான் (ரோமர் 14:18) என்பதனை அசட்டை செய்யக்கூடுமோ!
தேவஞானமாய் குடும்பத்தில் நடந்துகொள்வது, தேவன் தரும் சமாதானத்தை அனுபவிக்கவும், பரிசுத்த ஆவியினாலுண்டான சந்தோஷத்தை அனுபவிக்கவும் பெரிதும் உதவிடுமே! (ரோமர் 14:17)
சிலரோ, தங்களுக்கே பிரியமாய் நடந்து, சுயத்தினை சிலுவையில் அடிக்கத் தவறினவர்கள். கூடவே, 'பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன';.
கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார் அல்லவா! (ரோமர் 15:1-3). அவருடைய அடியவர்களாகிய நாமும் அப்படியே வாழவேண்டும் அல்லவா! (1யோவான் 4:17; 1கொரி. 15:47,48)
பவுலைப் பாருங்கள், 'இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே' (கலா. 1:10). போதக ஊழியத்தில், 'அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்'. (2கொரி. 2:17)
'எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி' (1தெச. 2:3-5) என்று எழுதுகின்றாரே.
மனிதரைப் பிரியப்படுத்த ஆரம்பித்தால், விளைவு, பிரசங்கத்தில் கலப்பு தாராளமாக வந்துவிடும். தேவ பிரசன்னத்தில் நின்று பேசுகிறோம் என்ற நினைவு அற்றுப்போகும். வஞ்சகமும், தேவையற்ற ஆசைகளும் நிறைந்த வார்த்தைகளே வெளிப்படும். ஆவிக்குரிய வர்ணம் பூசிய பொய்கள் கலந்தோடும். தேவனை சாட்சியாக நிறுத்த முடியாமல், மக்களின் மனதிற்கேற்ற சொற்களையும், உபதேசத்தையுமே கொடுக்க நேரிடும். தொடர்ச்சியாக மாய்மாலமான வாய்ச்சாலங்களே நிறைந்திருக்கும். மற்றவர்கள் புண்பட்டுவிடக்கூடாது என்பதில்தான் கவனமிருக்குமே ஒழிய, மக்கள் தேவனைச் சேர்வதற்குரிய தடைகள் தேவ தயவோடு சுட்டிக்காட்டப்படுவது இல்லாமலே போகும். ஓரக் கொள்கைகளான வெறும் தேவ அன்பும், வல்லமையும், பரவசமும் அதிகம் பேசப்பட்டு, தேவ நீதியும், தேவ கோபமும் பெயரளவில் மாத்திரம் சொல்லப்படும். தேவ இராஜ்ய வழிமுறைகளை உலகிற்கு ஏற்ப மாற்றி, உலகத்தின் வழக்கப்படி விழாக்களிலும், ஆராதனைகளிலும், கூட்டங்களிலும் செயல்முறைகள் அரங்கேற்றப்பட்டுவிடும். தேவபயமற்ற சிந்தனைக்கே ஜனங்கள் தள்ளப்படுவார்கள். தேவ வார்த்தைகளை மட்டும் சார்ந்த தேவ கண்ணோட்டத்தில் காரியங்களைப் பார்க்கக்கூடாதபடி கண் சொருகிப்போகும். தேவையற்ற முறையில் தகாதவர்களும் புகழப்படுவார்கள், செய்யாதவைகள் செய்தவைகள் போல் சொல்லப்படும். நோக்கங்கள் கோணலான முறைகளிலேயே நிறைவேற்றப்படும்; ஐயோ! அபத்தம்!!
மக்களைத் திருப்திப்படுத்த முயன்றதினால், தேவன் வெறுக்கிற பொற்கன்றுக்குட்டியை செய்து தந்த ஆரோனும் (யாத். 32:22-26), 'ஜனங்களை நிர்வாணமாக்கி, பகைஞருக்குள் அவமானப்படச் செய்துவிட்டான்' என்பதுதானே மோசேயின் குற்றச்சாட்டு. மூவாயிரம் பேர் செத்துமடிய அது காரணமாகிவிட்டதே. கர்த்தருக்குப் பண்டிகை என்று ஒரு மாயம் (வச. 5).
மக்கள் விரும்புகிறார்கள் என்று தன்னுடைய இலாபத்திற்கானத் திட்டத்தினை அரங்கேற்றினான் இராஜா சவுல் (1சாமு. 15:9-30). கூடவே, தேவனுக்காகத்தான் என்பது போலும் நாடகமாடிவிட்டான்.
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதுதான் தேவனுக்குப் பிரியம் என்று கண்டுகொண்ட பின்னரும் (எண். 24:1), 'எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும்' (எண். 23:27) என்ற பசப்பு வார்த்தைகளை பிலேயாமுக்குச் சொல்லி, தன் காரியத்தினைச் சாதிக்க நினைத்த பாலாக் என்னும் மோவாபிய இராஜாவுக்கு, பிலேயாம் இஸ்ரவேல் ஜனத்தினைப் பாவத்தில் விழவைப்பதில் வெற்றி கண்டு 24,000 பேரின் சாவுக்குக் காரணமாகிவிட்டானே. (எண். 25:9)
மனிதனைப் பிரியப்படுத்தச் செய்யப்படும் எந்தக் காரியத்திலும் நிகழ்வது அழிவே! வாழ்க்கையைச் சிதைக்கிறதற்கும், இலக்கை அடையக்கூடாதபடிச் செய்யப்பண்ணுவதற்கும், எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ என்ற சிந்தையை எடுத்துப்போடுவதற்கும் (பிலி. 3:15), பரம அழைப்பின் பந்தயப் பொருளை இழந்துபோவதற்கும் (பிலி. 3:14), மற்றவர்களுக்கு வழிகாட்டமுடியாமற் போவதற்கும் (பிலி. 3:17), சிலுவைக்குப் பகைஞர்களாக மாறிப்போவதற்கும் (பிலி. 3:18), மற்றவர்களையும் இடறிப்போகச் செய்கிறதற்கும், கவிழ்த்துப்போடுவதற்கும் அது வழிவகுத்துவிடும். (ரோமர் 16:18; தீத்து 1:11)
தன் சிநேகிதர்களைத் திருப்திப்படுத்த நினைத்த ரெகொபெயாம், இஸ்ரவேலில் பிரிவினைக்கு வித்திட்டுவிட்டானே. (2நாளா. 10:7-13)
ஆனால், தாவீதைக் கவனித்துப் பாருங்கள், ஆசையாய் ஏராளமான பொருள்களையும், பொன்னையும், வெள்ளி, வெண்கலத்தையும் தேவ ஆலயம் கட்டுவதற்கென சேர்த்துவைக்கிறான். தீர்க்கன் நாத்தானும் ஒத்துக்கொண்டாகிவிட்டது (2சாமு. 7:3; 1 நாளா. 29:2-4) என்ற சந்தோஷ நினைவில் படுக்கைக்குச் செல்கிறான். ஆனால், காலையிலே தேவனுக்குப் பிரியமில்லையெனவும், தேவனோ தன் மகனைக் கொண்டு தான் அதனைச் சாதிக்கப்போகிறார் என்றும் அறிந்தபோது, தேவனுக்குப் பிரியமானதைத்தான் செய்வேன் என்று மனதார தேவனைத் துதிக்கிறான். (2 சாமு. 7:28,29)
ஆகையால் தான் பவுலும் தன்னுடைய நிரூபங்களில், 'மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்' (எபே. 6:6-8; கொலோ. 3:22-24) என்று எழுதுகின்றார்.
இழிவான ஆதாயத்திற்காக மனுஷரைத் திருப்திப்படுத்த விரும்புகிறவர்களை தீத்து 1:11-ல் கடிந்துகொள்ளுகிறார்.
தேவ கரம், மனிதனை அல்ல, நம்மை உண்டாக்கினவரும், அழதை;தவருமாகிய அவருக்கே பிரியமுண்டாக வாழ நம்மை வழிநடத்தட்டும்; ஜெபிப்போம்.
தென்னகக் கூட்டங்களில், தேவ ஆவியின் அசைவாடுதலையும், ஜனங்களின் ஏக்கத் தொனியையும், ஒப்புக்கொடுத்தலையும் காணமுடிந்தது; அவருக்கே மகிமையுண்டாகட்டும்; ஜெபித்த உங்களுக்கு நன்றி. ஒப்புக்கொடுத்தோர் தீர்மானங்களில் நிலைத்து நிற்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.
வட இந்தியாவின் குளிரின் மிகுதி, பிள்ளைகளின் படிப்பினை பல நாட்களுக்குக் கெடுத்துப்போட்டது; ஊழியங்களும் ஓரளவு முடக்கப்பட்டன. ஈடுசெய்ய ஜெபியுங்கள்.
பல புதிய ஊழியங்களைச் செய்யத் தீர்மானிக்கவும், ஆயிரக்கணக்கானோரை ஆண்டவருக்குள் கொண்டுவரவும், ஆயிரம் ஆயிரம் வாலிபர்களை ஆண்டவருக்கென்று உபயோகப்படச்செய்யும் பயிற்சிகளையும், GEMS-ன் ஊழியர் அல்லாமல், மற்ற ஊழியர்களையும் திடப்படுத்தி, இசைந்து, இணைந்து ஓட IMPACT (I Must Prepare a Community Today) seminar போன்றவற்றையும், Gen-NEXT Training ஐயும் ஆரம்ப வேலைகளோடு, ஆயத்த வேலைகளையும் செய்கிறோம்.
ஆண்டவருக்காக உழைக்கும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறார்கள். சில பெண் ஊழியர்கள் திருமணத்தினால் தென் இந்தியா திரும்புவதினால், வெற்றிடம் உருவாகியுள்ளது; நிரப்பப்பட ஜெபியுங்கள்.
ஊழியர் உபவாசக் கூடுகையிலும் (3 நாட்கள்), விசுவாசிகளின் கூடுகைகளிலும் தேவ ஆவியானவரின் வல்லமையின் பிரசன்னத்தை உணர்ந்தோம். இன்னமும் அதிகமாக வாஞ்சிக்கிறோம். பரீட்சை எழுதுவோர்களுக்காக ஜெபிக்கிறோம்; பெற்றோரையும் அது அழுத்தத்தில் கொண்டுசெல்கிறதே. வெற்றி கர்த்தரால் உண்டாவதாக.
வாழ்வின் நோக்கம் தேவனானால்
வழிகள் கர்த்தருக்குப் பிரியமானால்
சத்துருக்களோடும் சமாதானம் பெருகிடுமே
மித்துருக்களும் கூடி மகிழ்வாரே
பிதாவுக்குப் பிரியமானதைச் செய்தால்
பிரியமாட்டாரே பிரசன்னம் நிரப்புமே
சத்தமும் கேட்குமே அவரிடமிருந்து
சித்தமும் செய்திட பெலன் வருமே
தேவனுக்குப் பிரியமாய் நடப்பவர்கள்
தேவைகளைத் தேடி அலையமாட்டார்
தேடுவோரை தேவன் நிரப்பிடுவார்
தேவை இன்றே தேசத்தில் அறிவிப்போரே
கூடிடவும் நாடிடவும் இலக்கு அதுவல்லோ
பாடிடவும் ஓடிடவும் பெலனும் அதுவே
விசுவாசத்தில் தேர்ச்சி அது தந்திடுமே
இயேசுவின் நாமமும் வென்றிடுமே
செயலிலும் சொல்லிலும் தேவனை திருப்திப்படுத்தவே
வயலிலும் வரப்பிலும் பாடல் சத்தமே
இரவிலும் பகலிலும் கீதம் பாடிட
இரக்கமும் கிருபையும் பெருகிடுதே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்