December 2022
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
நீதியாக அரசாளுகிற நம்முடைய இராஜாதி இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள் (ஏசா. 32:1). இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை உற்சாகமாய்க் கொண்டாடும் இந்த நாட்களில், இதனையே கருவியாக உபயோகித்து, 'அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது; அவர் என்றென்றைக்கும் அரசாளுவார்' என்று மரியாளுக்கு தேவதூதன் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்ட (லூக். 1:33) கொண்டாட்டமாக மாற்றி, தேவ ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக எதையாவது செய்துவிட தேவன் உங்களை ஏவி எழுப்பிவிட ஆண்டவரிடம் விண்ணப்பிக்கிறேன்.
சொன்னவர்களிடத்திற்கே திரும்பப் போய், அறிந்தவர்களுக்கே அவரின் பிறப்பின் வாழ்த்துகளை அறிவிப்பதோடு நில்லாமல், 'ராஜா பிறந்திருக்கிறார்' (மத். 2:2) என்று அரண்மனையாருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் அறிவிப்பதோடு, நம்முடைய பொக்கிஷங்களைத் திறக்கவும் (மத். 2:11), காணிக்கையை அவருக்கு தருவதுமல்லாமல், துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்த மாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். (1 கொரி. 5:8)
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார் (உபா. 10:17,18) என்பதனையும், என் ராஜாவின் பிறப்பின் கொண்டாட்டம், கண்களை மறைத்துவிடாதபடி காத்துக்கொள்ளுவோம். கரிசனை அநேக வேளைகளில் பண்டிகை பரபரப்பில் இழக்கப்பட்டுப்போக வாய்ப்பு உண்டு.
தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் (உபா. 15:11) என்பவைகளை, பழைய ஏற்பாட்டுப் பிரமாணம் என்று ஒதுக்கிவிடவேண்டாம்; அது தேவனுடைய இதயத்தைக் காட்டும் கண்ணாடி.
கூடவே, அந்த ராஜாவின் காரியத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய அவசியமும் உண்டு. நம்முடைய இராஜாவின் ஜெபத்தினைச் சொல்லும் சபைதனை 'எருசலேம்' என்று சொல்லுகிறோம். ராஜாவின் இராஜ்யத்தில் உண்மை, நீதி, நியாயங்கள் இருக்கும் என்பதும், ஒடுக்கப்பட்டோருக்கு அது புகலிடமாக இருக்கும் என்பதுமே வேதம் காட்டும் ராஜ்யத்தின் சாயல்.
'இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்'. (ஏசா. 32:1,2)
'கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால், தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும்.
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.
சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார்.
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். (ஏசா 25:4-9)
ஆனால், இன்றைய சபைதனைக் குறித்து தேவன் சொல்லும் காரியம், 'உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க் கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை (ஏசா. 1:21-23) என்பதே.
சபையின் இந்த நிலையினால், அது தேசத்திலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது.
தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ் சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். (மீகா. 7:2,3)
சுப்ரீம் கோர்ட்டின் (உச்ச நீதிமன்றம்) நீதியரசர்களின் கண்கள் அடைக்கப்பட்டக் காலம் என்பதனை, சமீப கால நிகழ்வுகள் நமக்குச் சொல்லவில்லையா? கட்டாய மதமாற்றம் தேசத்தின் பாதுகாப்பைக் கெடுத்துவிடும் என்று அவர்களையும் சத்துரு அலறவைத்துவிட்டான். மதமாற்றம் (உண்மையில் அது மனமாற்றம்) உண்டானால், அது தேசத்தினை சமாதானப் பாதையில்தான் வழிநடத்தும் அல்லவா! மாறாக, இந்த தேசம் அடிமையாக்கப்படும் என்று சொல்ல இவர்கள் நாவு கூசவில்லையே!
என் இராஜ்யத்தில், 'என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்' (ஏசா. 11:9) என்பதுதானே நடைபெறும் என்று தேவன் உரைக்கிறார். எனவேதானே, இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை முன்னறிவித்த சகரியாவும், 'நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய 'அருணோதயம்' நம்மைச் சந்தித்திருக்கிறது' என்றான். (லூக். 1:79)
ஒருவேளை, தீய வழியில் குடும்பத்தினைப் பாழடித்துக்கொண்டிருக்கிற ஒருவன், மனந்திரும்பி, உலக உல்லாசங்களை உதறித் தள்ளும்போது, உல்லாசமாக வாழ விரும்பும் ஒரு மனைவிக்கு இடறலாகி, குடும்ப சமாதானம் அதனால் கெட்டுப்போகலாம்.
அல்லது, ஆடுகளை பலியிட்டுத்தான் தன் தெய்வத்தினைத் திருப்திப்படுத்த முடியும் என்பவர்கள் நிறைந்த கிராமத்தின் மத்தியில், ஒருவன் கிறிஸ்து இயேசுவினை அறிந்துகொண்டவுடன், இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டுவிட்டபடியினால், நித்திய விடுதலை உண்டாகிவிட்டாகிவிட்டது (எபி. 9:12) என்று பறைசாற்றி தன் மக்களின் மனதை கர்த்தருக்கு நேராகத் திருப்பினால், அது 'கட்டாய மதமாற்றம்' என்று கூறத் துணிந்த இந்த கண்கள் அடைக்கப்பட்ட நீதியரசர்கள், அந்த கிராமத்தில் ஒரு சிலரால் சமாதானம் குலைக்கப்படலாம் என்று கூறி, சமுதாயத்தில் சமாதானம் குலைக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகலாம் என்று கூறியிருந்தால் ஓரளவு உண்மையிருக்கும் என்று சொல்லலாம்.
ஆனால், இவர்களோ, 'தேவ ராஜ்ய எதிரிகளின்' கருத்தினால் மனதை நிரப்பிக்கொண்டு, 'தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து' என்றும், ஒன்றிய அரசு இதனைத் தடுக்க உரிய காரியத்தினை உடனடியாக 'யுத்த கால நடவடிக்கைகளை' எடுக்கவேண்டும் என்றும் கத்துகிறார்கள். நீதி காக்கவேண்டியவர்கள் ஏதோ ஒரு கூட்டத்தின் கைக்கூலிகளாய் செயல்படுகின்றார்களே! இதைத்தானே சாலொமோன் என்ற ஞானி,
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே என்றதோடு நிறுத்தாமல், 'உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு' என்று நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைச் சொல்லுகிறான் (பிர. 5:8). இதைத்தானே கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நம்மைச் சிந்திக்கவைக்கவேண்டும். அது நம்மை கலக்கத்திலிருந்து விடுவித்து, உற்சாகம் கொள்ளச் செய்வதோடு, அவரின் ராஜ்யத்தினை சீக்கிரமாய் இவ்வுலகத்தில் ஸ்தாபிக்க நம்மை ஏவி எழுப்புமே.
'இனி காலம் செல்லாது, ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும்'. (வெளி. 10:6)
'இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது. ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின'. (வெளி. 11:14,15)
ஆண்டவரே இந்த நாட்கள் சீக்கிரமாய் வராதோ!
ஆயிரமாயிரம் ஏழைப் பிள்ளைகளை வளர்த்து, படிக்கவைத்து மகிழ்ந்ததும், இயற்கையின் சீற்றத்தினால் ஆபத்துகளும் தேசத்தினை ஆட்கொண்டு, மக்கள் உயிரையும் உடமைகளையும் இழந்து நின்ற நேரமெல்லாம் 'தேவனே உம்முடைய இருதயத்தினை உடைப்பவைகள் எல்லாம் என்னையும் உடைக்கட்டும்' என்று கதறிய ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட, கோடி கோடியாய் பணத்தினை சேகரித்து இந்த தேசத்தில் உதவிக்கரம் கொடுத்த 'றுழசடன ஏளைழைn' கணக்குகள் முடக்கப்பட்ட நிலை இன்று. பல்லாண்டுகளாக செயல்பட்ட இந்த ஸ்தாபனத்தில், தற்போது படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் நிலையினை மனதில் கொள்ளாத மத்திய அரசு, நம்முடைய தேசத்தில் இன்று மமதையாய் ஆளுகிறதே.
'என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.
அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்று கேட்கும்போதும் (புல 2:11,12), ஏக்கக் குரல் தேசத்தில் கேட்கும்போதும், 'கர்த்தர் நீதிபரர்' (புல. 1:18) என்று கூறி அறிவிக்கவும், 'உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா. 30:18) என்பதனை அறிவிக்கவும்,
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள் (ஏசா. 52:7,8) என்ற வார்த்தையை நிறைவேற்ற இதுவே நல்ல தருணம்.
அதனை மறந்து, 'இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (ஏசா. 29:13) என்று நம்மைப் பார்த்து தேவன் சொல்லிவிடாதபடி கவனமாய் பண்டிகை கொண்டாட்டங்கள் அமைவதாக.
உங்கள் மாதப்பிறப்புகளையும் (வாக்குத்தத்த ஆராதனைகளையும்), உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் (ஏசா. 1:14) என்று கர்த்தர் நம்முடைய கொண்டாட்டங்களைப் பார்த்துச் சொல்லிவிடாதபடி காத்துக்கொள்ளுவோம்.
இராஜாவின் பிறப்பின் வர்த்தமானங்கள் நம்மை உலகத்திற்குத் தெளிவாக அடையாளம் காட்டிக்கொடுக்கப் போதுமான பெலன் கொண்டவை என்பதனை மறக்காதிருப்போம்.
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; (மிருகத்தின் சுபாவத்தினை உடையவர்கள், மிருகத்தினை வணங்குகிறவர்கள் நம்மோடு யுத்தம் செய்வது புதியதல்லவே!) ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார் (வெளி. 17:14 முற்பகுதி) அத்தோடு அந்த வசனம் முடியவில்லை என்பதனை கவனிக்கவும்.
'அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்' (வெளி 17:14-ன் பின் பகுதி); இதனையும் மறவாதிருப்போம். 'மறவார் மறவார் என்னை ஒருபோதும் மறவார்' என்று வாய் கிழிய பாடுவதோடு நின்றுவிடாமல், என்னுடைய பொறுப்புகளையும், எனக்குத் தரப்படும் சந்தர்ப்பங்களையும் நானும் உபயோகப்படுத்தி, அவரின் இராஜ்யத்தினை பரப்புவதினை மறக்கமாட்டேன் என்று உறுதி எடுக்க கிறிஸ்மஸ் பண்டிகை உதவுவதாக.
புதிய ஆண்டின் துவக்கத்திலேயே தீவிரமாக செயல்படுங்கள். இந்த மாதத்தின் இறுதி நாட்களை தற்பரிசோதனைகளிலும், தேவ பாதத்தில் காத்திருப்பதிலும் அவருடைய வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்வதிலும் செலவழியுங்கள். வெற்று அரைத்த மாவையே அரைக்கும் வாக்குத்தத்தங்களைக் கூறுவோரைத் தேடி அலையாமல், 2023-ம் ஆண்டில் என்ன நடக்கப்போகிறது என்று ஏதோ தேவன் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினதுபோல பாவனை செய்து பல தேசங்களைக் குறித்துப் பேசுவோரின் அலப்பலுக்கு நீங்கலாகி, ஆபத்துகள் நிறைந்ததும், நசுக்குவதற்கு எதிரி கொக்கரிப்பதனையும் புரிந்துகொண்டு நாம் எப்படி வாழப்போகிறோம் என்றும், அதற்குரிய தேவ பெலனைப் பெற்றுக்கொள்வதிலுமே கவனம் செலுத்துங்கள்.
செயல் திட்டங்களை (தேவன் காண்பிக்கிறதும், செயல்படுத்தக்கூடிய திறனையும் கருத்தில் கொண்டு, கையில் இருப்பது கூழாங்கல்லாயினும், தேவ வைராக்கியத்தினையும், அபிஷேகத்தினையும் பெற்றவர்களாய் கோலியாத்துக்களை வீழ்த்தி சாய்க்கவும், அவனுடைய ஆயுதங்களையே உபயோகப்படுத்தி அவனை அப்புறப்படுத்தவும் செயல்படுங்கள்) தீட்டி வடிவம் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டோரையும் இணைத்துக்கொண்டு, தேவ மகிமையை அனுபவிக்கவும், அதில் மகிழவும் தேவன் உங்களை வழிநடத்துவாராக.
கொண்டாட்டங்கள் நம் அர்ப்பணத்தினை
கொள்ளை கொண்டு போய்விடா வண்ணம்
கொள்கிறவன் கொள்ளாதவனைப் போல்
கொள்கைப் பற்றுக் கொண்டும் வாழ்வீர்
கொஞ்ச காலம் உண்டென்று அறிந்து செயல்படும்
கொள்ளைக்காரனாம் சத்துருவின் உபாயம் அறிந்து
கொஞ்சப்பேரையாயிலும் நித்திய மகிமையில் சேர்க்க
கொண்டாட்டத்தினை வாய்ப்பாக்குவோம்
கூடி ஜெபித்தாலும் உழைத்தாலும் கொடுத்தாலும்
கூடிவருமே தேவ பிரசன்னமும் காரியமும்
கூட்டாக செயல்படும் எறும்பினை உற்று நோக்கி
கூடி செயல்படுவோம் தேவ இராஜ்யம் நிலைப்படவே
அரசாங்கம் அடைத்துவைக்கக் கூடாதே
அதிகாரம் அசைத்திட முடியாத திட விசுவாசத்தினை
அங்கலாய்ப்பும் ஆர்ப்பரிப்பும் தேவ அதிகாரம் தந்திடுமே
அல்லேலூயா கீதமே நம் பாடலாகுமே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்