அன்பின் மடல் November 2022

 

அன்பின் மடல் November 2022


கிறிஸ்துவில் அன்பான ஜெபப் பங்காளரே, 

'வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்' (தானி. 7:27) என்ற தீர்க்கதரிசன வார்த்தையின்படி, தம்முடைய மக்களையும் உள்ளடக்கிய இராஜ்யத்தின் ஸ்தாபகருடைய நாமத்தில் வாழ்த்துகள். ஆகவேதான், 'உம்முடைய ராஜ்யம் வருவதாக' என்று ஜெபிக்க அவர் நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார். (மத். 6:10; லூக். 11:3)

அவர் தாமே சொல்லிக் கொடுத்த ஜெபத்தினை, நாம் எத்தனையாய் உச்சரிக்கிறோம் என்பது நம்முடைய கீழ்ப்படிதலைச் சார்ந்தது என்பதனையும் நாம் அறியவேண்டுமே. பிதா ஏற்றுக்கொள்ளக்கூடிய, அல்லது பிரியப்படக்கூடிய ஜெபத்தையல்லவா ஜெபவீரனாகிய இயேசு நமக்குச் சொல்லிக் கொடுத்தார். ஊழிய வாழ்வினைத் தொடங்கிய போதும் (மத். 4:2), முடிக்கும் போதும் (லூக். 4:42), சாயங்காலத்திலும் (மத். 14:23), இரா முழுவதும் (லூக். 6:12), கெத்செமனேயில் வியாகுலத்தோடும் (லூக். 22:41,42) ஜெபித்தவர் அவர். இன்றும் பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து ஜெபித்துக்கொண்டிருக்கும் இயேசு பிதாவின் இருதயத்திற்கேற்ற ஜெபத்தினை நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார் அல்லவா! (1 யோவான் 2:1)

அவருடைய உவமைகளிலும், பிரசங்கங்களிலும் 'தேவ இராஜ்யம்' என்ற வார்த்தைகள் அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டதனையும் நாம் அறிவோமே. நம்முடைய கரிசனையும், தேவ இராஜ்யத்தின் மேலேயே இருக்கவேண்டும் என்பதினால்தானே, 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்' (மத். 6:33) என்ற கட்டளையையும் தந்திருக்கிறார். 

அந்த இராஜ்யத்தின் சிறப்பினை விளக்கவே, தொடர்ச்சியாக 'உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக' (மத். 6:10) என்றும் கற்பித்தார். 'உம்முடைய சித்தம் செய்ய இதோ வருகிறேன்' (சங். 40:7,8), பிதாவின் சித்தம் செய்வதே என் போஜனமாயிருக்கிறது (யோவான் 4:34) என்று முழங்கினவர் வாழ்வில், கீழ்ப்படிதலைக் காண்பிப்பதே தலையாயக் கடமையாக இருந்ததனை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம் (யோவான் 5:19; பிலி. 2:6-8). நம்மால் கீழ்ப்படியக் கூடாமலும் போய்விடுவது, மாம்ச சிந்தை மேலோங்கியிருப்பதுதானோ! (ரோமர் 8:7)

முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டிருந்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் ஒளியின் இராஜ்யத்திற்கு உட்பட்டபோதிலும் (எபேசி. 2:2; கொலோ 1:13), தேவ ராஜ்யப் பணியில் தீவிரம் காட்டவில்லையென்றால், ஏதோ கோளாறு உள்ளது என்பதுதானே அர்த்தம். 

'தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால், அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்' (உபா. 21:18-21) என்பது நியாயப்பிரமாணம். பூமியிலுள்ள தகப்பனுக்குக் கீழ்ப்படியாதோருக்கு இப்படியெனில், பரம தந்தையின் வார்த்தையை அவமதித்து, வீண் செலவுகளைச் செய்து, காணிக்கைப் பணத்தினை வீணடிக்கும் திருச்சபையை என்ன செய்வது? பட்டாசுகளுக்கும், பந்தாக்களுக்கும் வீணடிக்கப்படும் பணம், பெருந்திண்டிக்கும், குடி வெறிக்கும் சமமானதுதானே!

கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் (இயேசு கிறிஸ்து) இடறுதற்கேதுவான கல்லும், விழுதற்கேதுவான கன்மலையல்லவா! (1 பேதுரு 2:7)

பரலோகத்தின் காரியங்களில் ஒன்று, 'கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வ சேனை' அல்லவா! (சங். 103:21). உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று முழங்குகிற அல்லது முணுமுணுக்கிற நமக்கு, பவுலைப் போல 'அந்த பரம தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாகயிருக்கவில்லை' (அப். 26:19) என்று சொல்ல தைரியம் வேண்டுமே. 

'கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.' (உபா. 26:17)

கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: 'நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், 

நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்'  (உபா. 26:18,19). இதனை இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்று ஒதுக்கிவைக்கக்கூடாதே. ஏனெனில், இதனைத்தானே பேதுரு தன்னுடைய முதலாம் நிருபத்தில், புதிய ஏற்பாட்டின் பிள்ளைகளுக்கு நினைப்பூட்டுகிறார். 

'நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்.' (1பேதுரு 2:9,10)

சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினைத் தீர்ப்பை அளிக்கும்படி இயேசு கிறிஸ்து வருகிறார் என்று அறிந்திருக்கிற, அறிவிக்கிற நாம் (2 தெச. 1:7,8), நாம் செய்யவேண்டிய வேலையைச் செய்யாமற்போனால், அது கீழ்ப்படியாமைதானே!

நீயாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? (1பேதுரு 4:17). அதற்கு நாமும் பொறுப்பாளிகள் அல்லவா!

ஏரேமியாவின் நாட்களில், தன் ஜனத்திற்கு ஒரு குடும்பத்தினை இஸ்ரவேலருக்கு முன் நிறுத்தி, அவர்களின் நற்குணம் ஒன்றினை கர்த்தர் அவர்களுக்குக் காண்பித்துக் கொடுக்கிறார். எரேமியா 35-ம் அதிகாரம் இதனை விளக்குகிறது. 'நீ ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக்கொடு' (எரே. 35:2) என்றார் கர்த்தர். 

அந்தப்படியே, அவர்கள் தேவனுடைய மனுஷனாகிய ஆனான் என்பவனுடைய அறைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள் (எரே. 35:4); திராட்சரசம் பரிமாறப்படுகிறது. தேவனுடைய வீட்டில், தேவனுடைய மனுஷனின் அறையில், தேவனுடைய வார்த்தையின்படியே. ஆகிலும், அவர்கள் 'மாட்டோம்' என்று கூறி, தங்கள் முன்னோர் கட்டளையிட்ட வார்த்தையை நினைவுகூருகிறார்கள். 

'நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்கள் தகப்பன் யோனதாப் (2 இராஜா. 10:15,16;23 வசனங்களில், யோனதாப்பைக் குறித்து வாசிக்க முடியும்), நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் (இது வாக்குப்பண்ணப்பட்ட தேசம்தான். ஆனால், ஆபிரகாமைப் போன்று இவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தினையே பரதேசம் என்றே அழைக்கிறதனைக் கவனியுங்கள் எபி. 11:8,9) நீடித்திருக்கும்படிக்கு, 

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லாநாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.' (எரே 35:6,7)

அப்படியே, வருடங்கள் கடந்துபோனாலும், தலைமுறைகள் தாண்டிச் சென்றாலும், கட்டளையிட்டபடியே செய்துவருகிறதனை உதாரணமாய்க் காண்பித்து, கர்த்தர் தம்முடைய ஜனத்திற்குப் போதிக்கிறார். (வச. 10)

300 வருடங்கள் ஆகியும், ஒரு தகப்பனுடைய கட்டளை மாறாமல் கைக்கொள்ளப்பட்டுவருகிறபோது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு நமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைதனை நாம் கைக்கொள்ளவில்லையானால், நம் தகப்பனின் மனம் புழுங்காதோ?

பிரதானக் கட்டளை 'அன்பைக் குறித்தது' என்றால் (மத். 22:35-40), 'பெரிய கட்டளை' (Great Commission) மத். 28:19,20-ல் கொடுக்கப்பட்ட 'சகல ஜாதிகளையும் சீஷராக்குவது' அல்லவோ! பிரதானக் கட்டளையைக் கைக்கொள்ளுபவர்களுக்கு (1 யோவான் 2:4,5), பெரிய கட்டளையாம் 'சகல ஜாதிகளையும் சந்திக்கப் பிரயாசம் எடுப்பது' எளிதல்லவா!

'உம்முடைய ராஜ்யம் வருவதாக' என்கிற வார்த்தை வெறும் 'கிளிப் பிள்ளை வார்த்தையாகவோ, அர்த்தமற்றதாகவோ, அசைக்காத சொல்லாகவோ, அல்லது அலப்புச் சொல்லாகவோ இருக்கிறதோ? என்று நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் உண்டு!

'தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ் செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்' (தீத்து 1:16) என்றே விசுவாசத்தில் வியாதிப்பட்டவர்களைக் குறித்துப் பேசும் பவுல் குறிப்பிடுகிறார். 

'கீழ்ப்படிதலை மிகப் பெரிய அலங்காரம்' என்று சித்தரிக்கிறார் பேதுரு. (1 பேதுரு 3:5)

'கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவி' (அப். 5:32) என்றுதானே வேதம் விளம்புகிறது. நான் சொல்லுவேன், 'கீழ்ப்படியவே பரிசுத்த ஆவி தரப்படுகிறது' என்று. (அப். 1:8)

'கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண் வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்' (எபே. 5:6, கொலோ. 3:6) என்று வேதம் நம்மை எச்சரிக்கத் தவறவில்லையே! 

'தேவ குமாரனாயிருந்தாலும், பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்' (எபி. 5:8) அல்லவா! எனவே, கீழ்ப்படிய ஒருவேளை பாடுகளுக்குள்ளாக செல்லவேண்டியிருக்கலாம். ஆனால், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவே! (ரோமர் 8:18). கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறதே. (பிலி. 1:29)

கிறிஸ்துவின் சுவிசேஷச் செய்தியை, அறிவிக்கப்படாத இடங்களுக்குக் கொண்டு செல்வதில் மிகுந்த போராட்டங்கள் இன்றைக்கு ஏராளம். அதுவும், கிறிஸ்தவ விசுவாசிகளே அறவே இல்லாத இடங்களில் சுவிசேஷம் எடுத்துச் செல்லும் மிஷனரிகளின் பாடுகள் அதிகம்; ஜெபியுங்கள். பாடுகள், ஒப்புக்கொடுத்த மிஷனரிகளை அசைக்கப்போவதில்லை. 

ஆண்டவரின் காத்திருத்தலையும் கருத்தில் கொள்வது அவசியம். 'எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.' (எபி. 10:11-13)

சாத்தானின் தலையை இயேசு சிலுவையில் நசுக்கிவிட்டார் என்பதும், வேதம் நமக்குக் காட்டிக் கொடுக்கும் சத்தியம். ஆயினும், தன்னுடைய வாலை வைத்து (அந்த சர்ப்பத்தின் வால் இன்னமும் ஆடிக்கொண்டிருக்கிறது) கிரியை செய்துகொண்டிருக்கிறதை நாம் அறிவோம், காண்கிறோம். இந்த வேலையைத் தேவன் தம்முடைய மக்களுக்கு என்று வைத்திருக்கிறார். ஏனெனில், அவருடைய சிங்காசனத்தில், அவரோடே கூட உட்காரவைப்பதற்காகவே அவர் விட்டுவைத்திருக்கிறார். (வெளி. 3:21,22)

அவருடைய அவசரத்தை யாக்கோபு நமக்குச் சொல்லுகிறார், 'இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்' என்று. (யாக். 5:9)

எனவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக என்று ஜெபிக்கிற நாம், நம்முடைய பொறுப்புணர்ச்சியினையும் வெளிக்காட்ட செயலில் இறங்கவேண்டியது எத்தனை அவசியம், அவசரம் என்ற நினைவு நம்மில் மேலோங்கி நிற்பதாக. 


தேவ ராஜ்யம் தேடுவோம் முதலில்

தேவைகளுக்கு முக்கியத்துவம் தருவதனைத் தவிர்த்து

தேவன் பார்த்துக்கொள்வார் தம் பர்வதத்தில்

தேவ பணியினை நாம் முன்நிறுத்தி முயன்றால்


காலங்கள் கடந்திடுதே காத்திருக்கின்றாரே

காரணங்கள் கூறி கடத்திவிட்டோமே நாமே

கானகமும் கரையுதே ஆவலோடு இன்று

காத்திருக்க வேண்டுமோ காலங் காலமாய்!


கர்த்தரின் சபை இரத்தத்தால் கொள்ளப்பட்டதே

கருத்தாய் உணர்ந்தால் செயல்படுவோமே

கலப்பையில் கைவைத்தோர் பின்னே திரும்பாமல்

கலப்பில்லா ஊழியம் செய்ய கட்டளை உண்டே!


சத்துரு கொஞ்ச காலம் உண்டென்று அறிந்து

சத்தத்தை அதிகமாக்கும் இக்காலத்தில்

சத்தியம் அறிந்தவர் சந்து சந்தாய் திரிந்து

சத்தியபரரை வாழ்ந்துகாட்ட இதுவே தருணம்


துள்ளிக் குதிப்போம் தூயவரின் செய்கை பெரிதே

அள்ளித் தருவோம் வாழ்வினையும் அவருக்கே

பள்ளிகளெல்லாம் பண்பாடவேண்டாமோ

எள்ளி நகையாடல் நம்மை அடக்கக்கூடாதே




அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்