அன்பின் மடல் September 2022



September 2022  


கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,

               

                நமக்கு நித்திய வெளிச்சமும், மகிமையுமாயிருக்கிற கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள் (ஏசா. 60:19). 75 ஆண்டுகளை முடித்து, மிகுந்த கோலாகலத்துடன் 76-ம் ஆண்டில் சுதந்திர இந்தியா பிரவேசித்ததனைக் கண்ட நாம், இனியும் அந்த சுதந்திரம் காக்கப்படவும், தேசம் உண்மையான சுதந்திரத்தின் முழு நன்மைகளையும் கண்டடையவும் தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம். 

                'ஆதி நாட்கள் தொட்டு ஆவியானவரின்

                அற்புத சக்திகளை - இயேசுவே

                பாவிகளாயினும் நாங்களும் கண்டிட

                ஊற்றியருளனுமே' என்று பாடினார் எமில் அண்ணன்.

                'ஆதித் திருச்சபையின் அனுபவங்கள், அப்போஸ்தலர் நடபடிகளில் கண்டபடியே, நம் நாட்களில் காணவேண்டுமே. அலப்பும் அபிஷேகமும், அர்த்தமற்ற விளக்கங்களும் அகலவேண்டுமே' என்ற எண்ணத்தில் அந்த நாட்களின் காரியங்களை உற்றுநோக்க உங்களை அழைக்கிறேன்.

                அப். 2-ம் அதிகாரத்தில், கூடி வந்தவர்கள் மேல் ஊற்றப்பட்ட ஆவியானவரின் நிறைவினால், அவர் தந்தருளின வரத்தின்படியே வௌ;வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினதினால், அங்கே இருந்த மற்ற பாஷைகளின் பிரதேசங்களிலிருந்து வந்த யூதர்கள், 'தேவனுடைய மகத்துவங்களைப் பேசக் கேட்டார்கள்'. (அப். 2:1-11)

                முதல் அருள் பொழிவிலேயே, மாற்று பாiஷக்காரர்கள் தேவனுடைய மகத்துவங்களைக் கேட்கச் செய்தது அந்த அபிஷேகம். உலகெங்கும் எனக்கு சாட்சிகளாக இருப்பதற்கே ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்துவார் என்ற வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலே (அப். 1:5,8), மாற்று மொழி பேசுவோர்க்கு சுவிசேஷம் சென்றடையத்தானே என்பது எத்தனை தெளிவு.

                இது ஆண்டவரின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் உணர்த்தும் ஒரு காரியமாகத்தானே உள்ளது. அறியப்படாத பகுதிகளைக் குறித்து தேவனின் ஆதங்கத்தைத்தானே அது தெளிவுபடுத்துகிறது. இன்று சபையோ, அபிஷேகத்தினால் கிடைக்கும் தரிசனத்தினையும், தேவ பாரத்தையும் குறித்துப் பேசுவதற்குப் பதிலாக, வேறு எதனையோ பேசிக்கொண்டிருக்கிறதாகத்தானே அநேக இடங்களில் நாம் காண்கிறோம்.

                அனைத்து பிரதேச மக்களுக்கும் ஆண்டவரின் மகத்துவம், மேன்மை, வாஞ்சை வெளிப்படத்தக்கதாகத்தானே ஆவியின் நிறைவு நம்மை வழிநடத்தவேண்டும்.

                வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள் (அப். 2:5). அநேக சரித்திர ஆசிரியர்கள், இவர்கள் மேசியா வருவார்; தானியேலின் புத்தகத்தில் சொல்லப்பட்டபடி இது எழுபதாவது வாரம்; எனவே, மேசியா வெளிப்பட்டு, இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது முதலாவதே நான் அதில் பங்குபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு எருசலேமுக்கு வந்து வாசம்பண்ணினார்கள் என்று குறிப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு, முதல் அருள் மாரியிலேயே, அவரவரின் ஜென்ம பாஷைகளில் தேவன் செய்துமுடித்திருக்கிற காரியங்களை வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட நேரம் அதுவே.

                தேவன் செய்து முடித்திருக்கும் காரியங்களைக் குறித்து அறிவிப்பு இல்லாமல் இருந்த அவர்களுக்கு, தேவ ஜனம் தேவ ஆவியினால் நிறைந்தபோது வெளியான விந்தையே பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட உன்னதத்தின் ஆவி.

                'நீ பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கு என்னை அனுப்பினார்' என்று பவுலாகிய சவுலுக்கு அனனியா கூறினபோது (அப். 9:17),

நிரப்பப்பட்ட பவுல், தாமதமின்றி கிறிஸ்துவைப் பிரசங்கித்தது இதனால்தானே. (அப். 9:20)

                உண்மையான அபிஷேகத்தின் நிறைவு, ஆண்டவரின் அன்பினை மற்றவர்களுக்குக் கூறி அறிவிக்கவே உந்தித்தள்ளும் என்பது ஆதி சபையின் அனுபவம் அல்லவா! இந்த உண்மை அடித்துக் கூறப்படவேண்டியது. ஏதோ நிறைந்தேன், பரவசமாக இருந்தது, பரவச மொழியில் பேசினேன் என்ற நிலையில் நின்றுவிடாமல், அறிவிக்கப்படவேண்டுமே, அதற்காகத்தானே அவர் என்னைப் பெலப்படுத்தியுள்ளார் என்ற அவசரம் அனைத்து விசுவாசிகளையும் பற்றிப்பிடித்தால் எத்தனை நலமாயிருக்கும்.

                இரண்டாவது, அப்போஸ்தல நடபடிகள் உணர்த்துவிக்கிற ஆவியானவரின் கிரியை, 'அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்' என்பதே. பரிசுத்த ஆவியின் நிறைவு, அதிக தைரியத்தினை உபத்திரவப்படுகிறவர்களுக்குத் தருகிறது என்பதனை பேதுருவும் யோவானும் நிரூபித்தார்கள் (அப். 4:13).

அதனைக் கண்ட மற்றவர்களுக்கும் அதே அனுபவத்தினை தேவன் அருளிச் செய்ததனைத்தானே மேலே சொன்ன வசனம் காட்டுகிறது. சுவிசேஷத்தின் நிமித்தம் உபத்திரவங்கள் பெருகிவரும் இந்நாட்களில், இனம் தெரியாத ஒரு தைரியம் தேவ மக்களுக்குத் தேவைப்படுகிறது.

                பரிசுத்த ஆவியில் ஒருவன் நிறைக்கப்படும்போது, இது இன்றைக்கு நடைபெறவேண்டியது மிகவும் அவசியமல்லவா! தேவ வசனத்தினை மற்றவர்களுக்குக் கூறி அறிவிக்க முடியாமல் தடுமாறுவோரும், தத்தளிப்போரும் எத்தனை பேர். சபை வீறுகொண்டு எழவே தேவன் தம்முடைய ஆவியின் நிறைவு தருகிறார் என்றால், பயம் என்ற வார்த்தைக்கு அங்கு இடம் ஏது? விசேஷமாக தேவ வசனத்தை அறிவிக்கத் தயக்கம் காட்டவே கூடாதே! நான்கு சுவருக்குள் ஆவியில் நிறைந்தேன் என்பது ஆதித் திருச்சபைக்கு பழக்கப்படாத ஒரு காரியம். காத்திருப்புக் கூட்டங்களில் இன்று பலமான நிறைவு உண்டாயிற்று என்போர், ஏன் தைரியமாக சுவிசேஷம் அறிவிக்க முன்வரவில்லை.

                பரிசுத்த ஆவியினால் நிறைந்த வாழ்வு வாழத் தன்னைத் தந்த ஸ்தேவான், சுவிசேஷத்தினைச் சொல்லத் தயங்கவில்லையே. பயமுறுத்துதல்களும், பற்கடிப்பும், பொய் சாட்சிகளும் அவனைத் தடுத்துவிட முடியவில்லையே (அப். 6:5,9,13; 7:54); அவன் வாயை அடைக்க முடியவில்லையே! முதல் இரத்தசாட்சியாக, சபையை அழிக்கப் புறப்பட்ட சவுலையும் தேவன் பக்கம் இழுக்கப் போதுமான பெலனைத் தந்ததே.

                மூன்றாவதாக, ஆவியின் நிறைவு பிலிப்புவை (அப். 6:5), சமாரியா பட்டணத்திற்குச் சென்று கிறிஸ்துவைப் பிரசங்கிக்கவும், நிரூபிக்கவும் உந்தித்தள்ளுகிறது (அப். 8:5); சுவிசேஷ எல்லை விரிவாக வித்திடுகிறான் அவன். அந்த கிரியை அப்போஸ்தலரான பேதுருவையும், யோவானையும் அங்கே இழுத்துக்கொண்டுவருகிறது (அப். 8:14); அவர்களும் சமாரியாவைச் சார்ந்த கிராமங்களில் சுவிசேஷம் பரம்ப ஊழியம் செய்தே திரும்புகின்றனர். (அப். 8:25)

                மீண்டும் ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட பிலிப்பு, வனாந்தர மார்க்கமாய் வழிநடத்தப்பட்டு, எத்தியோப்பிய மந்திரியை தேவனுக்குள் நடத்தவும், ஞானஸ்நானம் கொடுக்கவும் உந்தித்தள்ளப்பட்டவனாய் சுவிசேஷத்தின் எல்லையை இன்னமும் விரிவாக்க உபயோகிக்கப்படுகிறான்.

                ஆவியானவரின் நிறைவு, தைரியத்தோடு கேள்வியற்ற கீழ்ப்படிதலையும் உருவாக்குகிறதனை பிலிப்பு நமக்குக் கற்றுத்தருகிறாரே. மீண்டும் சுவிசேஷத்தின் எல்லை விரிவாகிறது; தேசங்களைக் கடந்து எடுத்துச்செல்லப்படுகிறது; அறியப்படாதவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

                ஆவியின் நிறைவு பெற்றோர் இதனையே வாழ்க்கை முறையாக்கியிருந்தால், கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் உண்டாகும் தண்டனை (2 தெச. 1:7-10) தணிந்திருக்குமோ? ஆவிக்குரியவர்களாக வாழவேண்டியவர்கள், மாம்சத்திற்குரியவர்களாக வாழ்வதினால் கீழ்ப்படியக்கூடாமற்போகிறதோ? (ரோமர் 8:5,8). ஆவியானவரால் மாம்சத்தின் கிரியையை அழிக்க மறந்தனரே. (ரோமர் 8:13)

                தொடர்ந்து, அப்போஸ்தலர் நிருபத்தினை வாசித்தால், அடுத்து வருவது, ஆவியானவரால் நடத்தப்படுகிற பேதுரு, அந்நிய ஜாதியானாகிய கொர்நேலியுவின் குடும்பத்தாருக்கு சுவிசேஷம் சொல்லுகிற காட்சியையே சந்திக்கவேண்டி வரும் (அப். 10:19). சுவிசேஷ எல்லை இன்னமும் விரிவாகிறது. புதிது புதிதாக மந்தையில் சேர்க்கப்படுகின்றனர் இதுவரை சுவிசேஷத்தினை அறியாதோர்.

                தொடர்ந்து, உபத்திரவமும், சிதறடிக்கப்படுதலும் சுவிசேஷ எல்லையை விரிவாக்கவே உபயோகப்படுகிறதே. சீப்புரு தீவாரும், சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர், அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசி, கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசங்கித்தார்கள். (அப். 11:20)

                அந்தியோகியா பட்டணத்தில் ஆவியானவரின் கிரியை, சபையின் எல்லைதனை விரிவுபடுத்தவே என்பதனை, பர்னபாவையும் சவுலையும் மிஷனரிகளாக அனுப்பத் திருவுளம்பற்றியதினால் விளங்கப்பண்ணுகிறார். (அப். 13:2)

                ஆவியானவரின் ஏவுதலில் தீர்க்கதரிசனம் சொன்ன அகபுவின் செய்கை, ஆதி சபையை கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவ ஏவிவிட்டு, சபையின் தெளிவான உபதேசங்களில் ஒன்றான நாம் ஒருவருக்கொருவர் உதவவே அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதனை நிரூபித்தது. (அப். 11:29:30)

                'ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்'. (எபேசி. 2:10)

                'இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படிக்கு, உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத். 5:16). அதுவும் சுவிசேஷ எல்லையை விரிவாக்க உதவுவதற்கே அல்லவா! இருளை அகற்ற நற்கிரியைகளும் உதவுகிறதே.

                ஆவியானவரின் தொடர் கிரியையாம் ஒன்றினை நமக்குச் சொல்லும் அப்போஸ்தல நடபடிகள், ஐரோப்பாவிற்குச் சுவிசேஷம் செல்ல, பவுலையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மக்கெதொனியாவிற்கு அழைத்துச் செல்ல அஸ்திபாரம் போடுவதனை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. (அப். 16:6-10)

                ஆசியாவினைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலும் சுவிசேஷம் பரம்பிப் பெருக அதுவே ஆரம்பம் அல்லவா! கட்டுகளும், உபத்திரவங்களும் அடுக்கடுக்காக வருவதனை பவுலுக்குக் காண்பித்து, அவனைத் திடப்படுத்தி, நின்றுவிடாதபடி தொடர்ந்து பணிபுரிய முன்னதாகவே அறிவிக்கிறார் ஆவியானவர். (அப். 20:22,23; 21:11)

                ஆக, இவைகளைக் காணுங்கால், ஆவியானவரின் நிறைவு ஆண்டவரின் வார்த்தை பரம்பிப் பெருகச் செய்வதற்காகவே பிரதானமாக அருளப்படுகிறது என்பதனை யார் மறுக்க முடியும்.

                செயல்படும் சபையிலும், 'எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப் பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்' (1கொரி. 14:24,25); என்கிற வார்த்தை ஆவியின் நிறைவினால் நடைபெறும் அந்நியரின் இரட்சிப்புக்கு அல்லவோ வழிநடத்தும்.

                இன்றைக்கு அபிஷேகத்தினைக் குறித்துப் பேசுவோர், இந்த உண்மைதனை அழுத்திச் சொல்லாமல், வேறு காரியங்களையே முக்கியப்படுத்தும் முறை நம்மை குழப்பத்தில்தானே வழிநடத்துகிறது. ஆவியின் நிறைவு, அறியப்படாத பிரதேசங்களைக் குறித்தும், அறியாத மக்களைக் குறித்தும் பாரப்படுவதற்கும், செயல்படுவதற்குமே என்கிற நிலை உண்டானால்தான், திருச்சபை ஆதி நிலை ஏகிவிட ஏதுவாகும். சொல்லப்படாத இடங்கள் இருக்கும் வரை, ஆவியானவரின் நிறைவைப் பெற்ற தேவ மக்கள் மீண்டும் மீண்டும் நிறைந்து, நதியாய் பெருக்கெடுத்து இந்த இடங்களைச் சென்றடைய உதவவேண்டுமே; இது நடைபெற ஜெபிப்போம்.

                பீஹாரின் அரசியலில் திடீரென்று ஏற்பட்ட மாற்றம், இந்திய அரசியலிலும் உண்டாக வாய்ப்புகள் ஏராளம். தேவ பிள்ளைகளின் ஜெபம் வீண்போகாது என்று எண்ணுகிறேன். சுவிசேஷப் பணியின் தீவிரத்தைக் குறைக்க எழும்பும் அனைத்து சக்திகளின் வீரியத்தைக் குறைக்க உதவட்டும். சுவிசேஷப் பணியில் உபத்திரவம் ஒரு பகுதி. புதிய விசுவாசிகளை அது அசைத்துவிடக்கூடியதுதான் (1 தெச. 3:3-5); ஆனால், அவைகள் விசுவாச மக்கள் உறுதிப்படவும் ஏதுவாக மாறிவிடக்கூடியது; அதற்கு உறுதுணை ஜெபம்தானே. (1 தெச. 3:10)

                50 ஆண்டுகளாகப் போகிறது நான் பீஹார் மண்ணில் கால் பதித்து. 50 ஆண்டுகளின் நிறைவில் ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அடுத்த 10 ஆண்டுகளில் செய்யவேண்டியவைகளுக்கு ஆயத்தப்படுத்தவும் தேவன் நம் கையில் தந்த ஜனங்களோடே சேர்ந்து 22 இடங்களில் ஒரு நாள் கூடுகையை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒழுங்குசெய்துள்ளோம்.

                அக்டோபர் 22-ம் தேதி, ஒரு நாள் கூடுகை 'நன்றி பெருவிழா' வாக சிக்காரியாவில் 7000 பேரை மட்டும் வரவழைத்து உற்சாகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். சிலர் தென் இந்தியாவிலும் இருந்து கலந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு; உங்களின் ஜெபம் எங்களுக்குத் தேவை. நன்றிப் பெருக்கால் ஜனங்களின் உள்ளம் பொங்கி தேவனை ஆராதிக்கவும், குறிக்கோளோடு முன்னேறிச் செல்லவும் தேவன் கிருபை செய்வாராக.

 

                ஆவியானவரின் நிறைவு வந்தால்

                பாவிகளைத் தேடி நம்மை ஓடச் செய்யுமே

 

                ஆவியானவரின் பெலத்தினால் நம்மை

                ஏவி எழுப்ப தேவ பெலன் பெருகுமே

 

                நிறைந்தோம் என்றால் புரண்டோட

                குறைவின்றி உற்சாகம் பெருகுமே

 

                பரவசத்திற்காக மாத்திரமா ஆவியின் நிறைவு

                பரந்த பாரதத்தின் மூலையிலெல்லாம் சுவிசேஷம் சொல்லனுமே

 

                அழுகும் சமுதாயத்தின் அவல நிலை போக்க

                ஆளுகை செய்யவே ஆவியானவரின் அபிஷேகம்

 

                பயம் என்னும் போர்வையைக் களைய

                பலம் என்னும் சால்வை தரிக்கனுமே

 

                தைரியமும் சகிப்புத் தன்மையும் தானாய்

                கரிசனை பெருகினால் கைகூடிவருமே

 

                பாரதம் இயேசுவைக் கண்டால் போதும்

                பார் முழுதும் வாசனை வீசிடவே அபிஷேகம்

 

 

 

அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்