July 2022
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
முன்னே அந்நியராயும், துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த நம்மை, பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும், கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படி, தன்னையே மரணத்திற்கும் ஒப்புக் கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள் (கொலோ. 1:21). அநேக வேளைகளில் அது மறக்கப்பட்டு, தேவன் தனக்கு செய்த நன்மைகளைப் பார்க்கக்கூடாமல், மற்றவர்களுக்கு அருளும் கிருபைகளைக் கவனித்து, அதனையே கேள்வியாக்கி வாழ நினைக்கத் துடிக்கும் நாட்கள் இவை.
அவர் நமக்குக் காண்பித்த தயவையும், இரக்கத்தையும் கிருபையையும் கொண்டாடப் படிக்கிறவர்கள், நன்றியறிதலில் தங்கள் உள்ளத்தினை ஊற்றி, அந்த நன்றிப் பெருக்கின் அடையாளமாக, அவருக்கு எதையாவது தங்களால் இயன்றதனைச் செய்துவிடவே துடிப்பார்கள்.
ஆனால், தன்னோடு இதே பயணத்தில் இருப்பவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதில் அதிக நாட்டம் செலுத்துவதற்கு முற்பட்டோர், சங்கடத்திலும், மனக்குழப்பத்திலும் விழவே ஏதுவாகும்.
வேதத்தில் இந்த உண்மை உரக்கக் கூறப்படுவதனை நாம் ஆங்காங்கே காணலாம். அதில் சிலவற்றையும் தியானித்தால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கு உதவியாக இருக்கும் என்ற நினைவில் இந்த மடலை எழுதுகிறேன். இதனை சரியான கோணத்தில் புரிந்துகொள்ள தேவன் உதவுவார் என்று நம்புகிறேன்.
தன்னை மறுதலித்து, அறியேன்; என்று அறிக்கை செய்ததோடு அல்லாமல், சபிக்கவும் சத்தியம் பண்ணவும்; துணிந்தவனாகிறான் பேதுரு (மாற்கு 14:71). முன்னமே எச்சரிக்கப்பட்டிருந்தும் (மாற்கு 14:30), சத்துரு வருகிறான் என எச்சரிப்புப் பெற்றும் (லூக்கா 22:31-32), ஜெபிக்கும்படியாக அவனை அவர் கெத்செமனேக்கு அழைத்துச் சென்று ஆயத்தப்படுத்த முயற்சி செய்தபோதிலும், பேதுருவினால் நிற்கமுடியாமல் போயிற்று; தோற்றுப் போன நிலையிலேயே நிற்கிறான்.
இரவிலேயே தன்னை அடையாளம் கண்டுகொண்டவர்கள், பகலிலேயும் அடையாளம் கண்டுகொள்ள நேரிடும் என்ற பயத்தினால், கதவுகளை அடைத்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் பேதுரு காணப்படுகிறான் (யோவான் 20:19). அவர் உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி அவனுக்குச் சொல்லப்பட்டபோது, கல்லறை திறந்திருக்கிறதையும், பிரேதச் சீலைகள் சுற்றி வைக்கப்பட்டிருப்பதனையும் கண்ணாரக் கண்ட பின்னரும் (யோவான் 20:6-7), பயம் அவனை அடைத்துப்போட்டிருந்தது.
தான் உயிர்த்தெழுந்ததனை பேதுருவுக்கு பிரத்தியேகமாகச் சொல்லும்படி, இயேசு ஸ்திரிகளுக்குக் கட்டளையிட்டிருந்தார் (மாற்கு 16:7). தன்னைக் குறித்து கர்த்தருக்கு ஒரு விசேஷ நோக்கம் இருக்கிறது என்பதனை உணர்த்த இதுவே பெரிய சான்று அல்லவா! பரலோகத்தின் திறவுகோல் அவனுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தபடியால் (மத்தேயு 16:19), அநேகர் தேவனுடைய நன்மைகளைப் பெறுவதற்கு (லூக்கா 11:13, மத்தேயு 7:11) அவனை உபயோகப்படுத்த தேவன் திட்டம் வைத்திருக்கிறார், வாக்கு செய்துள்ளார், அவருடைய அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதவைகள் (ரோமர் 11:29) என்பது அப்போது பேதுருவுக்கு விளங்கவில்லை. தோல்வியும், பயமும் அவனைக் கவ்விக்கொள்ள, 'முடிந்தது' என்ற எண்ணமே அவனை முடக்கிப் போட்டிருந்தது. ஆயினும் மீட்பர் தேடி வருகிறார். அவன் பெலப்பட்டால்தான் உடன் ஊழியர்களைப் பெலப்படுத்த முடியும் என்பதனை முன்னமே சொன்னதை நிறைவேற்றும் வண்ணம் (லூக்கா 22:32), மூடிய கதவையும் மீறி இயேசு வருகிறார். (யோவான் 20:19)
இவைகளை அனுபவித்த பின்னரும், அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று விளங்கவில்லை. ஆதலால் சிலரைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கடற்கரைக்குச் சென்று மீன்பிடிக்க முயற்சி செய்தபோது, அங்கேயும் வெற்றி காணாமல் வெறுங்கையோடு நிற்கிறான். (யோவான் 21:2-3)
ஆனால், அன்பர் இயேசு அவனை விடுவதாக இல்லை, தோல்வி மேல் தோல்வி காண்கிறான் என்பது உண்மையாயினும், அவனைக் குறித்து அவருடைய திட்டம் நிறைவேற வேண்டுமே. அவனுடைய பொறுப்புகளைச் சுட்டிக் காட்டவும், அதற்குரிய அடிப்படையான ஆண்டவரின் பேரில் வைக்கும் அன்பினை அவர் எதிர்பார்க்கிறார் என்பதனை உணர்த்துவிக்கவும், இறுதி நாட்களில் எப்படி நடக்கும் என்பதனை போதிக்கவும் மற்றும் எச்சரிக்கவும் முனைந்தவராய், அத்தனை பேர் அங்கே இருந்தாலும், குறிப்பாக பேதுருவை நோக்கியே கேள்விகள் தொடுக்கப்படுகிறது (யோவான் 21:15-19). காரியங்கள் எப்படி நடந்தாலும், சூழ்நிலைகள் மாறினாலும், என்னைப் பின்பற்றி வர மறந்துவிடாதே என்பதே அவரின் ஆலோசனை. (யோவான் 21:19)
இதன் மத்தியில், பேதுரு தன் நண்பனுக்கு என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்பதிலே கவனத்தைச் செலுத்த முயற்சித்தபோது (யோவான் 21:21), இயேசு அதைக் குறித்து விளக்கம் தராமல், அதைக் குறித்து கரிசனை கொண்டு என்னைப் பின்பற்றி வருவதனை விட்டுவிடாதே என்பது போல், அவனை கொஞ்சம் மிருதுவாகக் கண்டிக்கிறதை நாம் காண்கிறோம்.
உலக வழக்கத்தில், எனக்கு என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை அறிய முற்படுவதனைக் காட்டிலும், மற்றவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதிலேயே மனிதர்கள் கவனம் செலுத்த முற்படுவதினால் தேவனைப் பின்பற்றத் தவறிவிடுகின்றனர் அல்லவா! மற்றவர்களைக் குறித்து இப்படிப்பட்ட அறிவைப் பெற்றுக்கொள்ள விழையும்போது, ஒப்பிட்டுப் பார்க்க அது நம்மை வழி நடத்தி, நம்முடைய வாழ்வின் நோக்கத்தினை சிதைத்துவிடக்கூடுமே.
ஒப்புமை பொறாமையைக் கொண்டு வர போதுமான வல்லமையுடையது. தனக்குக் குறிக்கப்பட்டதனை நிறைவேற்ற பெலனையும், கிருபையையும் போதுமான அளவு பெற்றுக்கொள்ள முயலாமல், தீய நோக்கங்களோடு, மற்றவர்களை மட்டம் தட்டிவிடவே முயலுகின்றது.
தேவன் தன்னையும், தன் காணிக்கைகளையும் அங்கீகரிக்கவில்லை என்ற காரணம், காயீனை தன் தம்பி ஆபேலின் பலிபீடத்தினை உற்றுப்பார்க்க வைத்தது. அவனும் அவனுடைய காணிக்கைகளும் அங்கீகாரம் பெற்றதனைக் கண்ட அவன், எரிச்சலினால் நிறைவதனை வேதம் நமக்கு சுட்டிக் காட்டுகிறதில்;லையா? (ஆதி. 4:4-5)
காரணத்தைக் கண்டறிய கர்த்தரிடத்தில் சேராமல் இருந்த காயீனுக்கு, ஆண்டவர் காரணத்தினை விளக்கிக் கூறுகிறார் (ஆதி. 4:6); ஆனால், அவனுக்கோ அதனைக் கேட்க விருப்பமில்லை.
ஒப்புமை பொறாமையோடு இணைந்து எரிச்சலைப் பிறப்பிக்கிறது. எரிச்சல் வளர்ந்து, இன்னலை விளைவிக்கத் தயங்க மாட்டேன் என்கிறது. கனிவுள்ளத்தினையோ, கரிசனையையோ, மென்மையையோ இல்லாமல் ஆக்கிவிடுகிறது. அகங்காரம், அலட்சியம், தன்னயம் என்று பல உப பொருட்களையும் பெருக்கிவிடுகிறது. (ஆதி. 4:9-15)
முடிவு நிலையற்றவாழ்வு (ஆதி. 4:14), நித்திய கஷ்டம். சிங்கம் நரியோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை, யானை எலியோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை, முதலை தவளையோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை. கழுகு ஊர்க் குருவியோடு தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது இல்லை. எந்த மனுஷனும் தன்னைத் தானே சோதித்தறிந்து... நம்மை நாமே நிதானித்து அறியவே (1 கொரி. 11:28-31) வேதம் நம்மை அறைகூவி அழைக்கிறது.
ராஜாவாகிய சவுலுக்கு நிகழ்ந்ததும் இதுதானே! 'தாவீதுக்கு பதினாயிரம், எனக்கோ ஆயிரம் என்றுதானே புகைந்தான்' (1 சாமு. 18:8). ஸ்திரீகள் வரவேற்பு பாடலாகிய வாழ்த்துப் பாடல் பாடின சத்தம் மிகுந்த எரிச்சலையே அவனுக்குள் கொண்டு வந்தது. வரவேற்க வந்தவர்கள் சவுலுக்குதான் எதிர்கொண்டு வந்;தனர். (1 சாமு. 18:6)
கோலியாத்தை வீழ்த்தினவன் தன்னை தௌ;ளுப்பூச்சி என்றே அழைக்கிறான்; அதற்கு வெட்கப்படவில்;லை (1 சாமு. 24:14 26:20). கவுதாரி என்றும், செத்த நாய் என்றும் தன்னை அழைக்க அவன் அஞ்சவில்லை;அது தாவீது.
அடுத்தவனுக்கு என்ன கொடுக்கப்படுகிறது என்ற பார்வை, எந்த மனிதனையும் திசை திருப்பவைத்திடும் என்பதற்கு சவுல் நல்ல உதாரணம். அவனுடைய தெரிந்துகொள்ளுதலையும், கொடுக்கப்பட்ட அதிகாரங்களையும் மறக்கச் செய்துவிடும்.
சிறுபிள்ளைகளுக்கான ஒரு அழகிய பாடல்.
f I were a butterfly
I’d thank you Lord for giving me wings
And if I were a robin in a tree
I’d thank you Lord that I could sing
And if I were a fish in the sea
I’d wiggle my tail and I’d giggle with glee
But I just thank you, Father for making me ‘me’
Cause you gave me a heart
And gave me a smile
You gave me Jesus
And made me your child
And I just thank you for making me ‘me’
துதிப்பது ஆனந்தமே!
யோசேப்புக்கு பல வர்ண ஆடையை யாக்கோபு தந்தபோது, அவனுடைய சகோதரருக்கு அவன் மேல் பொறாமையும் பகையுமே உண்டாயிற்று (ஆதி. 37:3-4). எங்களுக்குக் கிடைக்கவில்லை, அவனுக்கு மாத்திரம்? என்ற கேள்வி எத்தனையாய் அவர்களை மாற்றிவிட்டது!
சிலருக்கு மற்றவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தால் பொறுக்க முடிவதில்லை; சிலருக்கு மற்றவர்களுக்கு அன்பும் அன்பளிப்பும் கிடைத்தால் பொறுக்க முடிவதில்லை; அடுத்தவருக்கு அரவணைப்பு கிடைத்தால், பச்சக் குழந்தையும் மருளுகிறதே!
மனந்திரும்பிய இளையகுமாரன் உவமையில், மூத்த குமாரனின் குறைபாடு 'அழித்தவனுக்கு கன்றுக் குட்டி, அருகிலிருந்தவனுக்கு ஆட்டுக் குட்டி தானும் இல்லையே' என்ற ஆதங்கம் தானே!
(லூக்கா 15:29,30)
நீர் அறிமுகப்படுத்தின இயேசு 'அவர் அதிகமான பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்' என்று கூறின போது, யோவான் ஸ்நானன், 'பரத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்' என்றுதானே பதிலளித்தான் (யோவான் 3:26,27). இந்த உண்மையை அறிந்தாலே, நம்மிலே தெய்வீகக் குணங்கள் வெளிப்படுமே!
பதினோராம் மணி வேளையில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கு கூலி கொடுத்தபோதுதான், அதிகாலையில் வேலைக்கு வந்தவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. நாங்கள் அதிகம் கஷ்டப்பட்டோமே என்று முறுமுறுத்தார்கள் (மத்தேயு 20:9-12). தங்களுக்கு குறைத்துக் கொடுக்கப்படவில்லை என்பதனைப் புரிய கஷ்டப்பட்டார்கள். எஜமானனின் தயாளக் குணத்தை புரிந்து கொள்ள முடியாமல் வன்கண்ணர்களாக மாறிப்போனார்கள் (மத்தேயு. 20:15). மற்றவர்கள் கூலி பெறும்வரை அவர்களுக்கு வேதனை இல்லை.
ஆனால், பவுல் அப்போஸ்தலனைப் பாருங்கள் நீதியின் கீரிடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. 'நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்' என்றதோடு நிறுத்தாமல், 'அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்' என்கிறார். (2 தீமோ. 4:8)
நான் அதிகம் கஷ்டப்பட்டேனே (1 கொரி. 15:10) என்று எழுதும் போது, அவர்கள் எல்லாரிலும் கஷ்டப்பட்டதனைக் குறிப்பிடுகிறார்; ஒரு பட்டியலையும் இரண்டாம் நிருபத்தில் தருகிறார்.
'நான் அதிகமாய் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிக்கப்பட்டவன், அதிகமாய் காவலில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அடிபட்டவன். யூதர்களால் ஒன்றுக் குறைய நாற்பது அடியாக ஐந்துதரம் அடிக்கப்பட்டேன்.
மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்திலிருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
அநேகந்தரம் பிரயாணம் பண்ணினேன், ஆறுகளால் வந்த மோசங்களிலும். கள்ளர்களால் வந்த மோசங்களிலும் என் சொந்த ஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலேயும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்திலுண்டான மோசங்களிலும் சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும் கள்ளச் சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும், பிரயாசத்திலும், வருத்ததிலும், அநேக முறைகள் விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேக முறை உபவாசத்திலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்'. (2 கொரி. 11:23-27)
ஆகையால், எனக்கு ஒரு விசேஷ கிரீடம் கொடுக்கப்படவேண்டும், மற்றவர்களுக்குக் கொடுக்கப்படாத ஒன்று என்று சொல்லாமல், தேவ பிரசன்னத்தை எதிர்நோக்குகிற யாவருக்கும் என்கிறார்.
'என் வசனத்தைக் கேட்கிறவர்கள், இந்த கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப் போலாகும்படி தேவனை வேண்டிக் கொள்ளுகிறேன்' என்கிறார் (அப். 26:29); என்னே அவரது விருப்பம்! நம்மிலேயும் அப்படிப்பட்ட வாஞ்சையே மேலோங்கியிருப்பதாக!
மற்றவரின் காரியங்களையே உற்று உற்றுப் பார்த்து வாழ்வது, ஆண்டவரைப் பூரணமாகப் பின்பற்ற தடையாக மாறிவிடக்கூடாது என்பதனை இயேசு பேதுருவுக்கு உணர்த்துவிக்கிறார். பொறுப்புகளைத் தந்த அவரே அதனை அழுத்திச் சொல்கிறார். நம் பொறுப்புகளை நிறைவேற்ற, அவரை பின்பற்றவே விரும்பி ஓட தேவன் நமக்கு உதவி செய்வாராக.
ஒப்பிட்டுப் பார்த்து ஓரம் போய்விடாதே
ஒப்பிட்டுப் பார்த்தால் காய்மகாரம் வந்திடுமே
மற்றவருக்கு அதிக அன்பு, அரவணைப்பு, அங்கீகாரம்
சற்று அவர் உயர்ந்ததினால் உனக்கென்ன அகங்காரம்
பாடுகள் பல பட்டும் பாராட்டு இல்லையோ
பாடுவார் விண் தூதர் பரலோக வாசலில் உன்னைக் கண்டு
சோர்ந்திடாதே அவரை பின்பற்றிச் செல்ல
சேர்ந்திடுவாய் ஜீவ கீரிடம் பெற்றோரோடு
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்