அன்பின் மடல் May 2022

May 2022


 கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 


மன்னிப்பதில் வள்ளலும், தயை பெருத்தவரும், தமக்குப் பயப்படும்படிக்கு மன்னிப்பை ஏராளமாய் வைத்திருக்கிறவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள் (சங். 130:4). லெந்து நாட்களில் இதனை நாம் அதிகமாக தியானித்திருப்பதற்கு வாய்ப்புகள் ஏராளமாய் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். 

பேதுரு ஆண்டவரிடத்தில், 'ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டபோது, இயேசு பிரதியுத்தரமாக, 'ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்' என்று சொன்ன வசனங்கள் நம் முன் பளிச்சிடலாம். (மத். 18:21,22)

இதனை விளக்கும் லூக்கா 17:3,4 சொல்வதனையும் கவனிப்பது நல்லது. உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.  உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்;  அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.

இந்த வசனங்கள் நமக்கு மன்னிக்கிறவரை மாத்திரமல்ல, மன்னிப்புக் கேட்பவரையும் புரிந்துகொள்ள உதவுகிறதல்லவா! 'மனந்திரும்பிய இளையகுமாரனின் உவமையில், இயேசு தந்தையின் அன்பினை நன்றாகக் காண்பித்துத் தருகிறார் (லூக். 15:11-32). தந்தையின் ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆதங்கம் அனைத்தும் இளையமகன் திரும்பி வரும்போது வெளிப்படுகின்றது. எத்தனை நாள் தூக்கத்தை இழந்திருப்பார், பசியை பொருட்படுத்தாதிருந்திருப்பார், எண்ணமெல்லாம் இளைய மகனைக் குறித்தேதானே இருந்திருக்கவேண்டும். 

ஆகையினால்தான், அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு (உருமாறியிருந்தவனை, அழுக்காய், கந்தலாடை அணிந்து, பன்றிக் கூட்டத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த கோலத்திலும் அடையாளம் கண்டுகொண்டு) மனதுருகி, ஓடி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ் செய்தான் (லூக். 15:20). இளைய குமாரனின் நடையிலேயே அவனுடைய பாவ உணர்வினை புரிந்துகொள்ளுகிறான் தகப்பன். தொங்கப்போட்டத் தலையை வைத்தே தகப்பனால் நிதானிக்க முடிந்திருந்திருந்தது. 'பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல' என்ற மனந்திரும்புதலின் ஆழமான கதறல் வார்த்தைகள் (வச. 21) அவனை மன்னிப்புக்குப் பாத்திரவானாக மாற்றிற்றே. 

வேதம் முழுவதும் உள்ள பல சம்பவங்கள், மன்னிப்பு வேண்டி நிற்போரையும், மன்னிப்பு அருளினவர்களையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதே. இந்த மடலில் அவைகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, மன்னிக்கிறவரின் மாட்சிமையையும், மன்னிப்புக் கோருவோரின் மனநிலையையும் காண்பித்தால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்குப் பிரயோஜனமாக இருக்கும் என்ற நோக்கில் இந்த செய்தியினைப் பகிர்ந்துகொள்ளுகிறேன். தேவன் நம்முடைய நிலையினையும் நமக்கு எடுத்துரைப்பாராக. 

வேதத்தில் முதலாவது இதனை யோசேப்பின் வாழ்விலும், அவனுடைய சகோதரர்கள் நடந்துகொண்ட விதத்திலும் காணலாம். 'தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னார்கள். (ஆதி. 50:15-17)

என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார் (ஆதி. 45:5,7) என்று யோசேப்பு முன்னமே அவர்களுக்குத் தேவனுடைய செயலை விளக்கியிருந்தபோதிலும், யாக்கோபு மரித்த பின்னர் பயம் அவர்களை மேற்கொள்ளுகிறது. 

இங்கே அவர்கள் காண்பித்தது எல்லாம் 'வாழ்வின் பயத்தினை' அடிப்படையாகக் கொண்டதாகவே தெரிகிறது அல்லவா! (ஆதி. 50:15). தேவ கிரியையை வியந்து, தங்களின் தப்பிதங்களையும்கூட தேவன் நேர்த்தியாக மாற்றிவிட்டாரே என்று அவரை புகழ்ந்து, அதனை அடையாளம் கண்டுகொண்ட தங்கள் இளைய சகோதரனின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டோம் என அறிக்கையிட மறந்து, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள் யோசேப்பின் சகோதரர்கள். தங்களை தேவனுடைய ஊழியக்காரர்கள் எனவும் (ஆதி. 50:16), தகப்பனுடைய கடைசி கட்டளை (தகப்பன் மரிக்கும்போது யோசேப்பும் அருகில் இருந்தானே) என்பது போன்றதுமான பிரமையை அவர்கள் உருவாக்கவேண்டியதில்லையே. யோசேப்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அதுமாத்திரமல்ல, அவன் பாராட்டின உபகாரத்தினையும் கொஞ்சமும் அவர்கள் அறியவில்லையே! அறிந்திருந்தால், அங்கீகாரம் கொண்ட வார்த்தைகள் அல்லவா அவர்கள் வாயிலிருந்து புறப்பட்டிருக்கும். அநேக வேளைகளில் எதிர்கால பயத்தின் நிமித்தமே தேவனுடைய பெயரையும், தகப்பனுடைய பெயரில் உள்ள மரியாதையையும் உபயோகப்படுத்தியே மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். மன்னிக்கிறவரைக் குறித்த அறிவே, அவர்களுக்கு பாதுகாப்பு என்பதனை உணரத் தவறுகிறார்கள். மன்னிப்புத் தருபவர் தயாபரர் என்கிற நினைவுதான் அவரிடத்தில் நம்மை உந்தித்தள்ளவேண்டுமே தவிர, மற்ற எந்தக் காரியமும் குறைவுள்ளதே. 

தகப்பனின் தயாபரமே இளையகுமாரனை வீட்டிற்குத் திரும்பி வரச்செய்தது. (லூக். 15:17-19)

அடுத்த ஒரு உதாரணத்தைப் பாருங்கள். தாவீது தன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, அப்சலோமுக்குத் தப்பி ஓடும் வேளையில், சீமேயு என்னும் சவுலின் குடும்பத்தினைச் சேர்ந்தவன், தாவீதை தூஷிக்கிறான். 'இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ' எனச் சொல்லி, கற்களையும் வீசி எறிகிறான். தாவீதின் உடன் இருந்தவர்கள் அவனை கொன்றுபோட உத்தரவு கேட்டபோது, தாவீது அவர்களைத் தடுத்துவிட்டான். (2 சாமு. 16:5-13)

பின்னால் தாவீது தன் அரண்மனைக்கு திரும்பிவரும்போது, சீமேயி தாழ விழுந்து ராஜாவை நோக்கி, 'என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக. உமது அடியானாகிய நான் பாவஞ் செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன்' என்றான் (2 சாமு. 19:18-20). உடனிருந்தவர்கள் மீண்டும் அவனைக் கொன்றுபோட உத்தரவு கேட்கின்றனர். ஆனாhல், தாவீது பெருந்தன்மையோடு அவனைத் தப்புவிக்கிறான். (2 சாமு. 19:23)

சந்தர்ப்பவாதியாகத்தான் சீமேயி செயல்படுகின்றான் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லையே. அவன் மேலோட்டமாகத்தான் இதனைச் செய்தான் என்று அறிந்திருந்த தாவீது, தன் குமாரன் சாலொமோன் இராஜாவானபோது, 'பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன். ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய்' என்றான். (1 இராஜா. 2:8,9)

இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளக் கூடுமே; சந்தர்ப்பவாதியாக, தப்பித்துக்கொள்ளவே அவன் மன்னிப்புக் கேட்கிறான். பின்னர் ஓர் சிறிய மீறுதல் அவனுடைய உயிரை வாங்கப் போதுமானதாக மாறிவிட்டதே (1 இராஜா. 2:36-46). சாலொமோன் சொல்லுவதைக் கேளுங்கள், 'உன் மனதுக்குத் தெரிந்திருக்கிற பொல்லாப்பு' (1 இராஜா. 2:44). மனதிலே சுத்தமில்லை; ஆனால், தப்பித்துக்கொள்வதற்காக மாத்திரமே மன்னிப்புக் கேட்கிறான். 

யோவான் ஸ்நானனும்,  மனம் திரும்பாமல் வெறும் வருங்கோபத்திற்குத் தப்பிக்கொள்ள வகைதேடி ஞாஸ்நானம் பெற ஓடிவந்தவர்களைப் பார்த்து, இப்படித்தானே கண்டித்தான் (லூக். 3:6-9). உண்மையான மனந்திரும்புதல் இல்லாமல், கடமுறைக்காகவும், தப்பித்துக்கொள்ளவேண்டுமே என்ற ஆசையினாலும் உந்தப்படும் மனந்திரும்புதல் நித்திய பலனைத் தருவதில்லை. உள்ளான மனிதனில் காணப்படுபவையே நிரந்தரம் அல்லவா! 

ராஜாவாகிய சவுலின் விஷயத்திலும், அவனுடைய மன்னிப்பு கேட்கும் பாவனையும் உள்ளான உணர்த்துதலின் விளைவாக நேர்ந்தது அல்ல! சாமுவேல் தீர்க்கன் வந்து அவனுடைய கீழ்ப்படியாமை என்னும் பாவத்தினை எடுத்துக் காட்டி,  அதனால் ஏற்படும் விளைவை காண்பித்தபோது, 'நான் கர்த்தருடைய கட்டளையையும், உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினால் பாவஞ்செய்தேன்' என்று அறிக்கையிட்ட வார்த்தைகளோடு, 'ஜனங்களுக்குப் பயந்து அவர்கள் சொல்லக் கேட்டுவிட்டதினால் அப்படி நடந்தது' என்கிறான் (1 சாமு. 15:24). தேவனுடைய தீர்ப்பில் மாற்றமில்லை என்று தீர்க்கதரிசி கூறினபோது, 'நான் பாவஞ்செய்தேன் இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாக நீர் என்னை கனம்பண்ணி நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு என்னோடேகூடத் திரும்பி வாரும்' என்றே கூறுகின்றான். 

மன்னிப்பு கேட்பதின் நோக்கம், தான் 'கனத்தை இழந்துவிடக்கூடாது' என்பதே. தேவனோடு உறவை புதுப்பித்துக்கொள்ள விருப்பம் இல்லாமல், உம்முடைய ஆண்டவர் என்றே சொல்லுகிறான் (1 சாமு. 15:30). மேலோட்டமாக தான் தவறு செய்தேன் என்று சொல்லும் அவன், ஜனங்கள் மேல் பழியைப் போட்டதும் (அதுதானே ஆதாமின் சுபாவம், ஆரோனின் வழி (ஆதி. 3:12, யாத். 32:22)), அந்தஸ்து குறைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்ததும், மன்னிப்பினால் உண்டாகும் மாட்சியை அவனுக்குத் தரவில்லையே. 

அநேகர் மன்னிப்பு கேட்பதுபோலத் தோன்றினாலும், உள் நோக்கம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது அல்ல; மாறாக, வெளி உலகுக்கு தன்னை வேறு விதமாகக் காண்பிக்கவேண்டும் என்பதில் குறியாக இருப்பதே! மன்னிக்கப்படுவதினால் உண்டாகும் சந்தோஷம், உள்ளான நிம்மதி, விடுதலை, சமாதானம் போன்ற விலைமதிப்பில்லாதவைகளையும், அநேகர் சந்தோஷப்படுவதற்கு அது காரணமாக அமைவதனையும் (இளைய குமாரனின் வாழ்வில் நடைபெற்றது போல) அனுபவிக்க உள்ளான மன மாறுதலே முக்கியமான காரணம் என்பதை மறுக்கமுடியாது அல்லவா!

மனாசே என்னும் யூதாவின் ராஜா, தகப்பனாகிய எசேக்கியா ராஜாவின் வழியை விட்டு, பிள்ளைகளையும் தீக்கடக்கப்பண்ணி, விக்கிரகக் கோவில்களையும், தோப்புவிக்கிரகத்தையும் எருசலேம் தேவாலயத்திலும் நிறுவினதனைக் கண்ட கர்த்தர் அவனை அசீரியா ராஜாவுக்கு சிறையாக்குகின்றார் (2 நாளா. 33:11). இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி அவன் விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனை திரும்ப எருசலேமிலுள்ள தன் ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார். கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். (2 நாளா. 33:11,12)

அவனுக்கு விடுதலை கிடைத்தது; ஆனால், மனாசே சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும், எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார் (2 இராஜா. 24:4). யூதாவை அழிக்கும்படி பாபிலோன் இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை தேவன் அனுமதித்தார். 

செய்த தவறுதல்களை உணர்ந்த மனாசே திரும்பி வந்தபோது, செய்தவைகளை சீர்பொருந்தப்பண்ணியிருக்கவேண்டுமே. அவன் அதனை செய்யாததால்தான் அப்படி நடந்தது. சகேயு மனந்திரும்பியபோது, 'நான் யாரிடத்திலாகிலும் அநியாயமாய் வாங்கினதை நாலத்தனையாய் திரும்பத் தருவேன்' என்ற சாட்சியல்லவோ அவனை ஆபிரகாமின் குமாரன் என்று அழைக்கப்பட வழிவகுத்தது. (லூக். 19:8,9)

பேதுருவின் மனந்திரும்புதல் மனங்கசந்து அழுதபோது  வெளிப்பட்டது; அங்கே வார்த்தைகள் இல்லை, ஆனால் அது வெளியரங்கமான செய்கையாயிருந்தது (லூக். 22:61,62). பவுல் மனந்திரும்பியபோது, நியாயப்பிரமானத்தின்படி குற்றஞ்சாட்டப்படக்கூடாதிருந்தபோதும், 'தன்னை பாவிகளில் பிரதான பாவி' என்று அடையாளம் காட்டிக்கொள்ளத் தயக்கம் காட்டவில்லையே (பிலி. 3:6, 1 தீமோ. 1:13,15). உண்மையான மனந்திரும்புதல் உள்ளான மனிதனில் ஏற்படும் உணர்வுள்ள இருதயத்தின் கிரியையை வெளிப்படுத்துமே. 

மேற்கண்ட காரியங்களை மனதில் கொண்டு நான் மன்னிப்பு கேட்கும் விதத்தினை நான்காகப் பிரிக்கிறேன். தமிழ்நாட்டில் சொல்லுவார்கள், 'அவனுடைய வாக்குறுதிகளை தண்ணீரில்தான் எழுதவேண்டும்' என்று. அதனைப் போலவே, அநேகர் கேட்கும் மன்னிப்புகளில்,

சிலரின் காரியம் தண்ணீரில் எழுதப்பட்டது போலவும் 

சிலரின் காரியம் நெருப்பில் எழுதப்பட்டது போலவும்

சிலரின் காரியம் மணலில் எழுதப்பட்டது போலவும்

சிலரின் காரியம் கற்பாறையில் எழுதப்பட்டது போலவும் காணப்படும்.

தண்ணீரில் எழுதப்பட்டது போல, சிலரின் மன்னிப்புக் கேட்கும் தன்மை உடனடியாக ஏனோ தானோ என்ற விதத்தில் இருக்கும்.

நெருப்பில் எழுதப்பட்டது போல, சிலரின் மன்னிப்பு கேட்கும் தன்மை கொஞ்சமும் அர்த்தமற்றவைகளாக இருக்கும்.

மணலில் எழுதப்பட்டது போல தோன்றுபவை, சில நாட்கள் நிற்கலாம்; ஆனால், காற்றும் மழையும் அதனை அழித்துப்போடுவதுபோல சூழ்நிலைகள் மாற, மன்னிப்பு கேட்டதும் மறக்கப்பட்டுப்போகும். 

ஆனால், கற்பாறை போன்ற உறுதியாக, உள்ளமாற, உணர்ந்து கேட்கப்படும் மன்னிப்பு நிரந்தரமாக இருப்பதோடு, சூழ்நிலைக்குத்தக்கதாக மாறுவது இல்லை. ஏனெனில், அது வெறும் உணர்ச்சிப் பெருக்கால் உண்டானது அல்ல (emotional) மனஸ்தாபப்பட்டு அதனால் உண்டான சேதங்களை உணர்ந்து, அதனைச் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆழமாக இருதயத்தில் பதித்துவைக்கப்படுபவை. 

எனவே, மன்னிக்கிறவரின் தயவு எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் மன்னிப்பு கேட்பவரின் மனநிலையும். நாம் பெறும் மன்னிப்பு இத்தனை ஆழமாக இருக்குமானால், அதனுடைய பலனும் நிலைத்திருக்கும். அதனை அழிக்க எந்த சக்தியாலும் முடிவதில்லை, இந்த அனுபவங்களை தேவன் நமக்குத் தருவாராக; அதுவே நம் வாழ்வை சிறக்கப்பண்ணும். 


மன்னித்துக்கொள்ளும் ஆண்டவரே என்பது 

மந்திரச் சொற்களைப் போல மாறாதிருப்பதாக

மன்னவரின் மாண்புமிகு வாக்குகளை, உறுதிகளை

மறக்காமல் காத்து செயல்பட மறக்காதிருப்போமாக


ஏனோ தானோ என்ற உதட்டளவின் அறிக்கைதனை 

ஏற்காதே விண் உலக இராஜ்யம்

ஏற்பட்ட எதிர்கால பயம் போக்க மாத்திரம்

ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பம் நிலைக்காதே


உள்ளான மனிதனில் உணர்வு பொங்க

உண்டாகும் மனந்திரும்புதலின் வெளித் தோற்றம்

உண்மையான, நிலையான சந்தோஷத்தின் திறவுகோல் அல்லவா

உணர்வோம், உறுதியாய் நிற்போம் சந்நிதியில்


கனம் தேடி மாத்திரம் தேவனை தேடினார் சிலர்

ஜனம் சொல்லச் செய்தேன் என்றார் மற்றவர்

மனம் கசந்த மாந்தரின் கண்ணீர் மறக்குமா மாற்றத்தை

குணம் மாற கூடுமே குதூகலமும் கொண்டாட்டமும் 


தெளிவான மனந்திரும்புதலைக் கண்டிடுவோம் வாழ்வில்

தெருவெங்கும் மணம் வீசும் அதின் வாசனை

தேசமும் அறிந்திடும் தேவனைத் தேடிடும்

தேடுவோரும் பெருகுவார் தெருக்கள் தோறும்




அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்