அன்பின் மடல் April 2022

April 2022

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,  


'சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல' என்று சொன்னதாடு நிறுத்திக்கொள்ளாமல், 'தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்' (லூக்கா 6:40) என்று அவரைப் போலாகவேண்டிய ஆவலையும், பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் (1 யோவான் 3:2) என்ற விசுவாசத்தையும் நமக்குள் விதைத்திருக்கின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையே மாதிரியாகக் கொண்டு, அவரது அடிச்சுவடுகளையே பின்பற்றி அனுதினமும் வாழும்படியாக அழைக்கப்பட்டவர்கள் நாம். இதனையே அப்போஸ்தலனாகிய பேதுரு தனது நிருபத்தில், 'இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்' (1 பேதுரு 2:21) என்று எழுதுகின்றார். 

உலகத்தின் இரட்சகராக இயேசு கிறிஸ்து பிதாவினால் அனுப்பப்பட்டார் என்பதையும், பாவிகளுக்காக சிலுவையில் அவர் பலியானார் என்பதையும் நாம் முழு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளுகின்றோம். அவரது பாடுகளைக் குறித்த பாடல்களைப் பாடுகின்றோம், அவரது பாடுகளைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் சத்தியங்களைத் தியானிக்கின்றோம்; அதுமாத்திரமல்ல, அவரது சிலுவை மரணத்தின் மூலமாகவே இவ்வுலகத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், பாவமான வாழ்க்கையிலிருந்தும் நாம் விடுதலையடைந்திருக்கின்றோம் என்பதையும் அறிந்திருக்கின்றோம். என்றபோதிலும், பாடுகளின்போது அவரிடத்தில் பிரதிபலித்த குணாதிசயங்களும் மற்றும் கிரியைகளும் நம்முடைய வாழ்க்கைக்கு மாதிரியாகவும், பாடங்களாகவும் இன்றும் மாறி நிற்கின்றன என்பதையும் கூடவே நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்; இதனையே, பேதுரு தனது நிருபத்தில் 'தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்' என்று சுட்டிக்காட்டுகின்றார். பிரியமானவர்களே! பாடுகளை நாம் சந்திக்கும்போது, வாழ்க்கையில் துன்பங்களை நாம் எதிர்கொள்ளும்போது அவரிடத்தில் காணப்பட்ட அடிச்சுவடுகள் நம்மிடத்தில்; காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டியதும், அவைகளை நம்முடைய வாழ்க்கையில் மற்றும் ஊழியத்தின் பாதைகளில் அப்பியாசப்படுத்தவேண்டியதும் இன்றைய நாட்களில் அவசியமானது.  

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாடுகள் அவரது ஊழியத்தைத் தடுத்து நிறுத்தவில்லை; ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தை அவரிடத்திலிருந்து குறைத்துவிடவில்லை; அவரது மனநிலையிலும் மற்றும் குணநிலையிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை;ஜனங்களிடமிருந்து அவரை ஒதுங்கி வாழச் செய்துவிடவில்லை; மேலும், பிதாவின் சித்தத்திலிருந்து ஒருபோதும் அவரை பின்னடையச் செய்துவிடவில்லை.  பாடுகளின் மத்தியிலும் பிதா தன்னிடத்தில் ஒப்புவித்தப் பணியினை தொய்வின்றி தொடர்ந்து அவர் நிறைவேற்றிக்கொண்டேயிருந்தார் (The service of Jesus during suffering). நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம்நாளில் நிறைவடைவேன் (லூக். 13:32) என்று இவ்வுலகத்தில் தனக்கு இருக்கும் ஊழியத்தின் இறுதி நாட்களைக் குறித்து உறுதியாகக் கூறினார் இயேசு கிறிஸ்து. பாடுகளைச் சந்திக்கும் நேரத்தில் நம்மிடத்திலும் இத்தகைய பெலன் வேண்டுமே!

'பாடுபடுகிற வேளையிலே, அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்' (1 பேதுரு 2:22,23) என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து பேதுரு எழுதுகின்றார். அப்படிப்பட்ட மாதிரியைத்தானே நாமும் பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கின்றோம்.    

அவர் பாடுபட்டபோது, மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும் அந்தக்கேடு அடைந்திருந்தது (ஏசா. 52:14). அவருடைய முகத்திலே துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள் (மத். 26:67). அவரது தலையிலே முள்முடியை தரிப்பித்தார்கள், பரியாசம்பண்ணினார்கள்; வாரினால் அடிக்கப்பட்டதினால் அவரது சரீரம் கிழிக்கப்பட்டது, அவரது முதுகு உழப்பட்ட நிலம்போலக் காட்சியளித்தது. கைகளும் மற்றும் கால்களும் ஆணிகளால் அடிக்கப்பட்ட நிலையிலேயே சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தார் அவர். இயேசு கிறிஸ்துவின் இத்தகைய கல்வாரிப் பாடுகளையும் மற்றும் அன்பினையும் தியானிக்கும்போது, நம்முடைய உள்ளமும் உருகக்கூடும்; என்றபோதிலும், அத்தகைய வேதனைகளின் மத்தியிலும், அவர் தன்னைக் குறித்து எண்ணாமல், பிதாவினிடத்தில் பெற்ற ஊழியத்தினை நிறைவேற்றுவதிலேயே கரிசனையாயிருந்தாரே! 

நன்றாக, சுகமாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, கர்த்தருக்காக ஊழியம் செய்வது எளிதானது; ஆனால், வாழ்க்கையில் பாடுகள் நம்மை நெருக்கும்போதும், துன்பங்களும் துக்கங்களும் நம்மை சூழ்ந்திருக்கும்போதும், பாதைகளில் வேதனைகள் நம்மை வருத்தும்போதும் பிதாவினிடத்தில் பெற்ற ஊழியத்தை கிறிஸ்துவைப் போல நம்மால் நிறைவேற்ற முடிகின்றதா? அப்படிப்பட்ட கடினமான நேரங்களிலும், நம்மைக் குறித்து சிந்தியாமல், மற்றவர்கள் மீது கரிசனை கொள்ள முடிகின்றதா? அநேக நேரங்களில், நமக்கு வரும் ஆபத்துகளைக் குறித்தே நாம் கலக்கமடைந்துகொண்டிருக்கின்றோம், கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்; அவைகளிலிருந்து தப்பிச் செல்ல வழிகளைத் தேடுகின்றோம், அநேக பிரயாசங்களை எடுக்கின்றோம்; என்றாலும், அத்தகைய தருணங்களிலும், நம்மைக் குறித்து கவலைகொள்ளாமல், 'நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது' (யோவான் 4:34)

என்று இயேசு கிறிஸ்துவைப் போல நம்மால் கூற முடிகின்றதா? மற்றவர்களின் வாழ்க்கையைக் குறித்தும், எதிர்காலத்தைக் குறித்தும் நம்மால் சிந்திக்க முடிகின்றதா? உபத்திரவங்களின் மத்தியில், மற்றவர்களைக் குறித்த அக்கறையும், பொறுப்பும் நம்மிடத்தில் காணப்படுகின்றதா? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  

வேதனைகளைச் சகித்தவராக, சிலுவையில் இயேசு கிறிஸ்து தொங்கிக்கொண்டிருந்த நேரத்திலும், சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளனின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுத்தாரே. அவன் ஒரு கள்ளன், சமுதாயத்தில் பல தீமைகளைச் செய்த மனிதன், குற்றவாளியாப் பிடிக்கப்பட்டு நியாயப்படி தண்டனையை அனுபவிக்கிறவன். என்றபோதிலும், சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தபோது, அவனது மனநிலையிலே மாற்றம் உண்டானது. தன்னோடுகூட சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தபோது (லூக்கா 23:39), அவனோ உள்ளத்தில் உணர்வடைந்தவனாக, 'நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்;குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டதோடு (லூக். 23:41), இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றும் அவன் வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுதலுக்கு செவிகொடுத்த இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (லூக்கா 23:42,43) என்று உத்திரவாதத்துடன் கூடிய உத்தரவினை அளித்தாரே. 

மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக் 15:7) என்று இயேசு கிறிஸ்து போதித்ததோடு மாத்திரமல்லாமல், பாடுகளின் மத்தியிலும் அதனை நிறைவேற்றி பரலோகத்தை சந்தோஷப்படுத்தினாரே.

அதுமாத்திரமல்ல, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.  பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் (யோவான் 19:26,27) என்று வாசிக்கின்றோமே.  

தலையில் முட்கிரீடம், கால்களும் மற்றும் கரங்களும் ஆணிகளால் துளைக்கப்பட்டு, சரீரம் முழுவமும் இரத்தம் வடிந்தோடிக்கொண்டிருக்கும் நிலை, மகனின் இத்தகைய காட்சியைக் கண்ட தாயாகிய மரியாள், வாயடைத்துப் போனவளாகவும், பேசுவதற்குப் பெலனற்றவளாகவும் சிலுவையின் அருகே நின்றுகொண்டிருக்கின்றாள். மனதிலே துக்கம் மிகுந்தவளாக, மகனோடு எதுவும் பேசமுடியாதவளாக காட்சியளித்த மரியாளின் மீது இயேசு கிறிஸ்து கரிசனை கொண்டவராக, தனது ஊழியத்தினை நிறைவேற்றினாரே.  

சிலுவையில் அறைய்பட்டிருந்த கள்ளன், இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொண்டான்; ஆனால், மரியாளுக்கோ கேட்பதற்குக் கூட பெலனில்லை. இன்றைய நாட்களிலும், நம்மை சந்திக்கின்ற, நம்மிடத்தில் கேட்கின்ற மனிதர்களுக்கு மாத்திரமல்ல, கேட்கும் சக்தியையே இழந்தவர்களாக, பெலனற்ற நிலையில், வாழ்க்கையில் சோர்ந்துபோனவர்களாகக் காணப்படும் மனிதர்களுக்கும் ஊழியம் செய்ய நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது.  

அநேக நேரங்களில் பாடுகளையும், துக்கங்களையும் சந்திக்கும்போது, நாம் அவைகளையே பார்த்துக்கொண்டிருக்கின்றோம்; நமக்கு நேரிடுகின்றவைகளையே பெரிதாக நினைத்து புலம்பிக்கொண்டிருக்கின்றோம். மற்றவர்களைக் குறித்து சிந்திக்கவும், அவர்களது வாழ்க்கையைக் குறித்து கவலை கொள்ளவும் தவறிவிடுகின்றோம். சிலுவையின் காரியங்களை அறிந்திருந்தும், கிறிஸ்துவைப் போல செயலாற்றவும், அவரது மாதிரியினைப் பின்பற்றவும் மனதற்றவர்களாகவே காணப்படுகின்றோம். புத்தியில்லாத காலத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே (கலா 3:1) என்று கலாத்தியருக்கு பவுல் எழுதுகின்றாரே. ஆம், பிரியமானவர்களே,  கிறிஸ்துவின் பாடுகளை அறிந்த நாமும், கிறிஸ்துவைப் போல பாடுகளின் மத்தியிலும் பணிசெய்ய நம்மை அர்ப்பணிப்போம். 

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமினிடத்திலும் இத்தகைய மாதிரியான வாழ்க்கையினை நாம் காணமுடிகின்றதே. கேராரிலே ஆபிரகாம் தங்கியிருந்தபோது, ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். ஆனால், தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே (ஆதி. 20:2,3) என்று அவனை எச்சரித்தார். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே (ஆதி. 20:9) என்று சொல்லி, ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தபோதிலும், ஆபிரகாமின் மனைவியாகிய சாராளிமிமித்தம், கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தார் (ஆதி. 20:14,17). அவர்கள் ஆபிரகாமினிடத்தில் வேண்டிக்கொள்ளும்படியாகக் கேட்கவேயில்லை. அபிமெலேக்கு கேட்காதபோதிலும், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார் (ஆதி 20:18). 

பிள்ளையற்றவனாகவே ஆபிரகாம் அப்போது காணப்படுகின்றான்; தன்னுடைய தேவை அதிகமாயிருந்தபோதிலும், பிறருக்காக ஜெபிப்பதிலும், சேவை செய்வதிலும் ஆபிரகாம் ஒருபோதும் பின்வாங்கினதில்லை. எனக்கே இன்னும் குழந்தை இல்லை, இத்தனை வருடங்களாகக் காத்துக்கொண்டேயிருக்கின்றேன்; எனது சரீரம் மரித்துக்கொண்டேயிருக்கின்றது, மனைவியாகிய சாராளுக்கும் வயதாகிக்கொண்டேபோகின்றது என்று தன்னைக் குறித்தும், தனது குடும்பத்தைக் குறித்தும் சிந்தித்தவனாக, ஆபிரகாம் வந்துவிடவில்லை. தெய்வபயம் இல்லாத தேசம்தான்; என்றபோதிலும், ஆபிரகாம் அபிமெலேக்கின் வீட்டாருக்காக தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான். இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பினைக் காணாத ஆபிரகாம் இப்படிச் செய்திருப்பானென்றால், கல்வாரியின் அன்பினைக் கண்டு ருசித்திருக்கும் நாம் எத்தனை அதிகமாகச் செய்யவேண்டும். 

யோசேப்பின் வாழ்க்கையிலும் இது வெளிப்படுகின்றதே. கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்துவிடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொண்டவன் யோசேப்பு. பாவம் செய்யும்படியான வாய்ப்புகள் வந்தபோதிலும், பரிசுத்தமாகத் தன்னைக் காத்துக்கொள்வதற்காக இருக்கும் இடத்தினை விட்டே ஓடுகின்றான், தவறு செய்யாதிருந்தபோதிலும் அநியாயமாய்த் தண்டிக்கப்படுகின்றான், சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றான்; என்றபோதிலும், பிறருக்காகப் பணிசெய்வதிலிருந்து அவன் ஒருபோதும் பின்வாங்கவேயில்லையே. 

எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாயிருந்தவனும், சுயம்பாகியுமாயிருந்தவர்கள், குற்றம் செய்து, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறைச்சாலையிலிருந்த யோசேப்பின் வசத்தில் அவர்கள் ஒப்புவிக்கப்பட்டார்கள். சிறைச்சாலையிலிருக்கும்போது அவர்கள் இரண்டுபேரும் வௌ;வேறு பொருள்கொண்ட சொப்பனத்தைக் கண்டதினால், காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான் (ஆதி 40:6,7). தனது துக்கமான நிலையிலும், தவறு செய்யாதபோதிலும் நான் தண்டிக்கப்படுகின்றேனே என்று தன்னைக் குறித்தே அவன் நினைத்துக்கொண்டிருக்கவில்லை, தனது நிலைமையை நினைத்து சிறையிலே அவன் அழுதுகொண்டேயிருக்கவுமில்லை; மாறாக, பிறரது துக்கங்களை விசாரிக்கிறவனாகக் காணப்பட்டான் யோசேப்பு.   யோசேப்பைப் போன்ற இத்தகைய மனநிலை நம்முடைய வாழ்க்கையிலும் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றாரே. 

யோபுவின் வாழ்க்கையும் இதைத்தானே நமக்குக் கற்றுக்கொடுக்கின்றது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களோடு வேதனையான நிலையில் காணப்படுகின்றான் யோபு. ஆஸ்திகள், ஆடு மாடுகள் மற்றும் வேலைக்காரர்கள் அனைத்தையும் இழந்தவனாக, பிள்ளைகள் அனைவரையும் ஒரே நாளிலே பறிகொடுத்தவனாக, ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்டார்ந்திருந்தான் யோபு. என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள் என்றும், என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது, என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன் என்று அவன் சொல்லும் வார்த்தைகள் அவனது பாடுகளின் உச்ச நிலையினையே நமக்கு பிரதிபலித்துக்காட்டுகின்றது. 

'நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும்' என்று மனைவி ஒருபுறம் சொல்ல, ஆறுதல் சொல்லும்படியாக வந்த யோபுவின் நண்பர்களும், அவனை துக்கப்படுத்தும்படியான வார்த்தைகளையே பேசுகின்றனர். எனவே, யோபு அவர்களை நோக்கி: நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை (யோபு 19:1-3) என்று கூறுகின்றான். 

இத்தகைய துன்பமான சூழ்நிலையிலும், யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தான். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் (யோபு 42:10). ஆறுதல் சொல்வதுபோல நம் அருகே வந்து, ஆணிகளால் காயப்படுத்துவது போன்ற வார்த்தைகளைப் பேசும்,  யோபுவின் நண்பர்களைப் போன்ற மனிதர்கள் இன்றைக்கும் உண்டல்லவா. இப்படிப்பட்ட நிலையிலும், யோபுவைப் போல அவர்களுக்காக ஜெபிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். 

மக்கெதோனியா நாட்டு சபையினர், மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.  மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்;. தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள் (2 கொரி. 8:2-5) என்று பவுல் எழுதுகின்றாரே; இத்தகைய மனநிலை நம்மையும் ஆட்கொள்ளட்டும். 

பிரியமானவர்களே, பாடுகளின் மத்தியிலும், வேதனைகளின் மத்தியிலும் தேவனையே பிரதிபலிப்போம். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று (ரோமர் 8:18) என்ற சிந்தையுடன், கிறிஸ்து காண்பித்துச் சென்ற மாதிரியினைப் பின்பற்றினவர்களாக, ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மைச் சுற்றியிருக்கும் ஜனங்களுக்கு பணி செய்ய நம்மை அர்ப்பணிப்போம். 


வேதனையின் நேரத்திலும் தேவனையே பிரதிபலிப்போம்

தேடுகின்ற மனிதர்களின் தேவைதனை நிறைவாக்குவோம்

பாடுகளையே பராமல் பார்வையினை விரிவாக்குவோம்

பெலனிழந்து நிற்போருக்கும் பரனிடம் பரிந்துபேசுவோம்


பாடுகளையே பார்ப்போருக்குப் பாதைகள் திறப்பதில்லை

பாடுகளிலும் பயணிப்போரைப் பாதைகள் தடுப்பதில்லை


இக்காலத்துப் பாடுகள் எல்லாம் தற்காலிகமானவைகளே

இனிவரும் மகிமைக்கு அவைகள் ஒப்பானவைகளல்லவே

தன்னையே பார்க்கிறவன் வாசலுக்குள் வாழ்க்கையை மூடுகின்றான்

திறந்த வாசலைப் பார்க்கிறவன் வாய்ப்புகளைத் தேடி ஓடுகின்றான்


  தேவைகளையே பார்த்துப் பார்த்து தேசத்தினை மறந்த மனிதர்

திறக்கப்பட்டக் கதவுகளைக் கண்டும் நுழையாமல் விலகியே செல்வர்


வறுமையிலும் அவருக்காய் வாரியிறைக்கும் மனிதர்கள்

குறைவிலிருந்தாலும் நிறைவாய் கூடவே கர்த்தர் இருப்பார்

உபத்திரவங்கள் வந்தாலும் ஊழியங்கள் தொடரட்டும்

உத்தமரின் சுவரிசேஷம் உலகெங்கிலும் பரவட்டும்



அன்பரின் அறுவடைப் பணியில்

அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்