February 2022
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
தடைகளை உடைத்தெறியும் நம் சேனைகளின் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள். தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா 2:13) என்பதனை நாம் அறிந்தவர்கள் அல்லவா!
ஆயினும், அநேக வேளைகளில் தடைகளைக் கண்டு நாம் தயங்கி நிற்பதும், அல்லது பின்வாங்கிப் போவதும் நமக்கு வழக்கமாகிவிடுகின்றதே. தடைகள் எங்கிருந்து வருகிறது? என்பதனையும், அவைகளை மேற்கொள்ள நம்முடைய பங்கு என்ன? என்பதனையும் அறிந்தால் நலமாயிருக்குமே.
எதிர்ப்புகள் அல்லது உயிருக்கே பிரச்சனை என்கிற அளவில் தடைகளை இயேசு தம்முடைய ஊழியத்தில் சந்தித்தபோது, நடந்த சம்பவத்தினை சற்றே தியானிப்போம். அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள் (யோவா. 11:7,8). தோமாவும் கூட 'அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்' என்றே முன்னால் இருக்கும் எதிர்ப்பினை அளவிடுகிறான். (யோவா. 11:16)
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இயேசு கிடைக்கும் அவகாசத்தினைப் பார்க்கிறார். 'பகலுக்குப் பன்னிரெண்டு மணி நேரம் இருக்கிறதே' (யோவா. 11:9); பாதிதான் இருள், மீதி செயல்படக்கூடிய நேரம் இருக்கிறதே என்று கூறி, தடையை எண்ணாமல் தன்னுடைய பயணத்தினை தொடர்கிறாரே. இன்றைக்கும், தடையைக் காண்கிறதோடு, அதனைக் கடக்க வல்ல வாய்ப்பினையையும் பார்க்கும் கண்கள் நமக்கு தேவைப்படுகிறது!
இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாக மாறுவதற்கு, இந்த கண்ணோட்டம் இன்றைக்கு அதிகம் தேவையல்லவா! (யோவா. 11:45)
சில நேரங்களில், தடைகளை உடைத்தெறிய வேண்டியிருக்கும், சில வேளைகளில் அவைகளை தாண்டிச் செல்லவேண்டியிருக்கும், சில வேளைகளில் அதனையே படிகளாக மாற்றவேண்டியிருக்குமே.
தாவீதின் பராக்கிரமசாலிகளைக் குறித்துச் சொல்லுகிற வேதம்,
2 சாமு. 23-ம் அதிகாரத்தில், பெலிஸ்தியரின் தாணையம் பெத்லகேமிலே உள்ளது, அதின் ஒலிமுக வாசலில் உள்ள கிணற்றின் நீரை தாவீது வாஞ்சிக்கிறான் என்பதை அவர்களிடத்தில் வெளிப்படுத்துகிறதைக் காண்கிறோம். 'தடைகளை மாத்திரம் பார்த்து தயங்கி நிற்கவில்லை பராக்கிரமசாலிகளான மூவர்; மாறாக, தாணையத்தில் துணிந்து போய், தாங்கள் நேசிக்கிற தலைவனின் வாஞ்சையை, தாகத்தைத் தீர்க்கவேண்டும் என்ற நோக்கில், உயிரையும் துட்;சமாக எண்ணி அங்கே போய் அதனைக் கொண்டுவந்தார்களே (2 சாமு. 23:16). தடைகளை உடைத்து முன்னேற காரணமாயிருந்தது தலைவன்மேல் உள்ள அன்புப் பெருக்கம் அல்லவா! நேசம் எதனையும் செய்யத் துடிக்கும் என்பதோடு, ஆபத்தினையும் தகர்த்தெறிய பெலன் கொண்டது என்பது எத்தனைத் தெளிவு.
இன்றைக்கும், நேசரின் ஊழியத்தில், அவர்மேல் உள்ள பாசமே நம்மை தடைகளை உடைத்தெறியத்தக்க பராக்கிரமசாலிகளாக மாற்ற வல்லது. எனவேதான், பேதுருவுக்கு பொறுப்புகளைக் கொடுக்க முற்பட்ட இயேசுவும், அவனுடைய தகுதியாய் பார்க்க எண்ணியது, அவனுடைய நேசத்தினையே. (யோவா. 21:15-17)
நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிதாயிருக்கிறதே. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாதே. வெள்ளங்களும் அதனை தணிக்க முடியாதே. அது எத்தனை பெரிய வெகுமதியையும் அசட்டைபண்ணுமே (உன். 8:6,7). நேசம் சாக்குப் போக்குச் சொல்ல அறியாது, ஆபத்தினையும் அற்பமாய் எண்ணுமே.
கல்வாரி அன்பினை அனுபவித்து, அதின் நீளம், அகலம், உயரத்தினைக் காண மற்ற பரிசுத்தவான்களோடு பிரயாசப்படுகிற சின்னக் கூட்டமே, அன்பரின் தாகத்தினைத் தீர்க்கத் துணிவுகொள்ளும் (எபே. 4:18,19). தேவ மக்கள் கூடிவரும்போது, அவரின் அன்பு அதிகம் பேசப்பட்டால் அல்லது தியானிக்கப்பட்டால், இது இலகுவானது.
'இவ்வித அன்பையே எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன்
கல்வாரியே கல்வாரியே
கல்மனம் உருக்கிடும் கல்வாரியே'
என்பது அல்லவோ பரிசுத்தவான்களின் கீதம்.
அணைக்கும் கரங்களிலே ஆணிகளா? சுவாமி
நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா
அதுதான் நம்மை ஆத்துமாக்களை நேசிக்கிறவர்களாக மாற்றும். இல்லையேல் வெறும் மதச் சடங்காகவே ஊழியம் இருக்கும்.
தேவன் நம்மேல் வைத்த அன்புதானே தம்முடைய செல்லக்குமாரனை நமக்காகப் பாடுகளுக்குட்படுத்தி, நொறுக்கி, சிறுமைப்படுத்தி, உலகின் அனைத்து பாவத்தையும் அவர்மேல் சுமத்தி, தம்முடைய முகத்தை மறைத்து, பாவ நிவாரணப் பலியாக மாற்றிவைக்க ஒப்புக்கொடுக்கச் செய்தது (ஏசா. 53:3-10). அதனை தியானிக்கும் தியானம் நம்மில் ஏதோ லெந்து காலங்களுக்கு உரியதாக எண்ணிவிடாமல், அனுதின தியானமாகட்டும், அது நம்மை இயக்குவிக்கட்டும்.
பவுலைப் பாருங்கள், அகபு என்னும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவைகளைக் கேட்ட அன்புமிகு மக்களின் கண்ணீரையும் பொருட்படுத்தாமல், இயேசுவுக்காக மரிக்கவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன் என்று முழங்கச் செய்வதோடு, தடையாய் தோன்றுகிற அன்பு நெஞ்சங்களின் அழுகையை உடைத்தெறிகிறதே (அப். 21:10-14). பட்டணங்கள்தோறும் அது ஓங்கி உரைக்கப்பட்டது என்றாலும், கட்டுகளும் உபத்திரவங்களும் தடைகளாகப் பார்க்கப்படவில்லையே. அது அர்ப்பணத்திற்கு அடையாளமாய் மாத்திரமல்ல, அதன் ஆழத்தினையும் நமக்கு விளங்கப்பண்ணுகிறதே. (அப். 20:22-24)
கட்டுவித்த ஆவியானவரே, தம்முடைய தாசனை ஆயத்தப்படுத்தி அழைத்துச்; செல்லுகிறார் (அப். 20:23). உயிருக்கு ஆபத்து என்பதுவும் சந்தோஷத்திற்கு ஏதுவாக மாறிவிட்டதே. (வச. 24)
தடைகள் பெருகுவதனைக் காணக் காண, நம்மில் நேசரின் மேல் உள்ள அன்பைப் பெருக்குவோம். அவரின் அன்பை விட்டு நம்மைப் பிரிக்க எந்த சக்திக்கும் இடம் இல்லை என்பதனை உலகுக்கு உணர்த்துவோம். இதுவே அதற்குரிய நேரம். (ரோமர் 8:38,39)
சில வேளைகளில், நம்மை நேசிக்கிற மனிதர்களின் வெறித்தனமான வைராக்கியமும், தேவனின் கிரியையை தடைசெய்ய ஏவும் என்பதும் நாம் அறியவேண்டியது. அது நம்முடைய பெற்றோராகவோ, உடன் பிறந்தோராகவோ, சிநேகிதராகவோ இருக்க நேரிடலாம். அளவு கடந்த பாசத்தின் பிணைப்பு தேவ கிரியையைத் தடை செய்ய ஏவலாம். இதனையும் அடையாளம் கண்டுகொண்டால்தான் நாம் அதனை உடைக்கும் பெலனைப் பெற்றுக்கொள்வோம்.
மோசே வேலைப் பளுவின் நிமித்தம், தொல்லைகள் நிமித்தம், தத்தளிக்கும்போது, தேவன் அவனுக்கு உதவும்படியாக ஒன்றை செய்ய வாக்குக் கொடுக்கிறார். 'கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே. அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படிச் செய். அப்போது நான் இறங்கி வந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடே கூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள் மேலும் வைப்பேன்' என்றார். (எண். 11:10,11)
மோசே அதனை ஏற்றுக்கொண்டு, செயல்படுத்தத் திட்டம் செய்தபோது, 2 பேர் ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள். ஆனால், தேவனோ தம்முடைய திட்டத்தில் பின்வாங்காமல், அதனை செயல்படுத்துகிறார். அதனைக் கண்ட யோசுவா, மோசேயின் பேரில் வைத்திருக்கும் வைராக்கியத்தின் நிமித்தம், அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி மோசேயிடம் வேண்டிநிற்கிறான். 'அவர்களைத் தடுத்து நிறுத்தும்' என்கிறான் யோசுவா. அதனைக் கேட்ட மோசேயின் மாறுத்தரவை கவனியுங்கள். 'நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ?' (எண். 11:28,29) என்றே கூறுகின்றான். மோசேயின் வாஞ்சை, 'எல்லாரும் அப்படிப்பட்ட அனுபவங்களைப் பெறவேண்டும்' என்பதே. பரந்த உள்ளம் கொண்டவன் அவன். பாவம் செய்த ஜனங்களை தேவன் அழிக்க நினைத்தபோது, 'என் பேரையும் ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடும்' என்று அலறி ஜெபிக்கிறவன் அவன் (யாத். 32:33). தேவ கிரியை அனைவரிடத்திலும் வெளிப்படவேண்டும் என்ற துடிப்பு, உண்மையான அன்பு ஜனங்கள் பேரில் உள்ளபடியால், தான் வெறித்தனமாக நேசிக்கப்படுவதையும் வெறுத்துத் தள்ளுகிறான்.
தேவ திட்டத்தின் நிறைவேறுதல்தான் முக்கியம் என கருதுகிறவனுக்கு, தன்னைக் குறித்த கவலை அதிகம் இருக்காதே. சுயத்திற்கு மரிக்காதவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாகத்தான் தெரியும். சிலுவையில் அறையுண்டவர்களுக்கு இது எளிது. கிறிஸ்துவை சிலுவையில் கண்டால், தடைகளை உடைக்கப் பெலன் பெருகும், சிலுவையில் அவரோடு அடிக்கப்பட்டிருந்தால், தடைகளை அடையாளம் காணக் கண்கள் திறக்கும்.
வேலையின் விசாலத்தினை அறிந்தவனின் ஓட்டம் வித்தியாசமானதுதானே (ரோமர் 15:20-22). அறியப்படாத பிரதேசத்தின் விசாலத்தினை அறிந்ததினால், ரோம சபையில் சென்று சிறிது திருப்தியடைந்த பின்னர் (ரோமர் 15:24), இளைப்பாறுதல் அடைந்த பின்னர் (ரோமர் 15:30), வாஞ்சிக்கும் வாஞ்சைதானும் அற்றவனாக மாறிப்போனதினால்தான் தன் பிரயாணத்தைத் தடுத்து நிறுத்துகிறான். தன்னை மறந்த வாழ்க்கை, தன் வசதிகளை இழந்த வாழ்வு, தனக்கே சில தடைகளை விதித்துக்கொள்ளுகிறது. இதுவும் கவனிக்கத்தக்கது.
தேவ பணிக்கு கூடாரத்தின் இடம் பெரிதாகவேண்டுமே, திரைகள் விரிவாகவேண்டுமே, கயிறுகள் நீளமாகவேண்டுமே, முளைகள் உறுதிப்படவேண்டுமே. தடை என்று தட்டிக் கழிக்கும் காலம் அல்ல இது (ஏசா. 54:2). தேவன் பேரில் வைக்கும் அன்பும், தன்னை மறந்த வாழ்வும், தன்னுடையவர்களைக் குறித்த பாரமுமே இதனை சாதிக்க வல்லது.
இன்றைய ஆராதனைகள், சுய திருப்திக்காகச் செய்யப்படுவதாக மாறிவிட்டதனை அது மாற்ற வல்லது. அன்பரின் விருப்பமே அவருடையவரின் இலக்காகும்.
இன்றைய பிரசங்கங்கள், சுய தேவையை சந்திக்கவே முக்கியத்துவம் பெற்றுவிட்டன. தேவ தேவையை நினைப்பூட்ட அவரின் அன்பில் திளைப்பதே ஒளஷதமாகும்.
இன்றைய பாடல்கள், இசையையும் இயக்கத்தையும் (உடல் அசைவுகள்) சார்ந்ததாக மாறிவிட்டன. இருதயம் நொறுங்கி வழிந்த வார்த்தைகளாக மாற எதிர்பார்ப்போம்.
இன்றைய கணக்கீடு, எத்தனை பேர் என்னைப் பின்பற்றுகிறார்கள் என்பதிலேயே கவனத்தைத் திருப்பிவிட்டன. எத்தனை பேர் கிறிஸ்துவின் மந்தையில் சேர்ந்தனர் என்பதுவே ஏக்கமாகட்டும்.
இன்றைய அலங்காரம், எழுச்சியூட்டுவதனையே முக்கியப்படுத்தி விட்டன. அப்படி எழுப்புவோர் தேவ பணிக்காய் இதற்கு முக்கியம் தரமாட்டாரே.
இன்றைய உறவுகள், இறைப்பணியின் எல்லையைப் பெருக்க உபயோகப்பட்டால் எத்தனை நலமாயிருக்கும்.
தடைகள் என்று சொல்லித் தயக்கம் காட்டாதே
இடையில் வாய்ப்புகளும் கூடவே உண்டே
அடைய வேண்டிய இலக்கு முன் தெரிகிறதே
நடையை மாற்றிக்கொள்ள வேண்டுமோ?
விடை அதற்கு அன்பு பெருக்கமே
படையே வந்தாலும் அழிக்காதே அதை
மடை திறந்தாற்போல் நில்லாமலே
தடைகளை உடைத்தே பாயுதே சிநேகம்
கடைநிலை விசுவாசியும் கலந்துகொள்ள
சாடையாய் எவரும் நிற்கலாகாதே
சோடையாய்ப் போக அனுமதியுமில்லையே
விடை நீதான் தோழா நானிலம் சொல்ல
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
