January 2022
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
நம்மை அழைக்கிறவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவருடைய மேலான நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துகள் (1 தெச. 5:24). அந்த அழைப்பு நம்மை குற்றமற்றவர்களாக தம்முடைய பிதாவின் முன் நிறுத்துவதற்காகவே என்பது (1 தெச. 5:23) தெளிவு. கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தாரே. (எபே. 5:27)
எனவே, இந்த வருடம் முழுவதும் நம்முடைய செய்கைகளிலும், எண்ணங்களிலும், அதனை அவர் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை தேவன் உண்டாக்கவும், நம்மை ஆட்கொள்ளவும், அவருடைய பலத்தில் நிற்கவும் அவரே நமக்கு உதவுவாராக.
கடந்த வருடம் இடுக்கமானதும், இன்னல்களும் அத்துடன் இழப்புகளும் நிறைந்ததும், தெளிவற்ற சூழ்நிலைகளால் நிறைந்ததும் மற்றும் தடுமாற்றங்கள் நிறைந்ததுமாக இருந்ததே. உலகத்தினையே உலுக்கிய தீமைகள், அதன் பக்கவிளைவாக உண்டான ஒழுக்கச் சீர்குலைவுகள், பொருளாதாரப் பற்றாக்குறைகள், உறவுகளிலே ஏற்பட்ட விரிசல்கள் எத்தனை! எத்தனை!! ஊழியத்தினையும் அது வெகுவாகப் பாதித்தது அல்லவா! எனவே, ஈடுகட்டவேண்டிய வழிகளைக் காணும் வண்ணமும், தேவனுடைய வழிநடத்துதல்களை அறியும் வண்ணமும், அவர் பாதத்திலே தங்கி தரித்தபோது, வரும் வருடம் அப். 16-ம் அதிகாரம் திரும்பவும் நடக்கவுள்ளது என்று எனக்குள்ளே தொனிக்கும் தொனியை அறிந்ததினால், இந்த மடலை அதன் அடிப்படையிலேயே எழுதுகிறேன்.
வாக்குத்தத்தங்களைச் சார்ந்த செய்திகளையே சபைகளிலேயும், பத்திரிக்கைகளிலேயும், சமூக வலைதளங்களிலேயும் கேட்கின்ற நமக்கு, இது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆயினும், தேவ ஊழியத்தில் இணைக்கப்பட்டிருக்கிற நமக்கு இதுவே பெலனாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த வருடம், தேவ ஆவியானவரை சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கும், அவரின் முறைகளை அறிந்துகொண்டவர்களுக்கும், துல்லியமாகப் புரிந்துகொள்ள ஒப்புக்கொடுத்தவர்களுக்கும், கீழ்ப்படிதலுக்குத் தத்தம் செய்தவர்களுக்கும், புதியவைகளை அனுபவிக்கவும், புதிய இடங்களில் பிரயோஜனப்படுவதற்கும், புதிய உறவுகளில் குதூகலிக்கச் செய்வதற்கும் போதுமான சந்தர்ப்பங்களால் நிறைந்திருக்கும்.
பவுலும், அவனைச் சார்ந்தவர்களும், தாங்கள் முன்னே செய்துவந்த முறைகளின்படியும், முன்னே நடந்த பாதைகளிலேயும் மீண்டும் நடக்க முயன்று, தாங்கள் ஸ்தாபித்த சபைகளையே திடப்படுத்த விரும்பி செயல்படத் துடிக்கின்றனர். ஆனால், தேவனோ அவர்களை புதிய வழிகளிலே நடத்தவும், புதிய பிரதேசங்களைச் சுதந்தரிக்கவும் விரும்பி தடைசெய்து நிற்கிறார்.
(அப். 16:6,7)
சின்ன ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சுவிசேஷம் செல்லவேண்டுமே என்ற ஆவியானவரின் ஆதங்கம் செயல்படுத்தப்பட, ஆவியானவரின் வழிநடத்துதலைத் துல்லியமாகப் புரிந்துகொண்டோரால்தான் கூடும். கதவுகளைத் திறக்க வல்லவரே, பூட்டவும் செய்கிறார் என்பதனை (வெளி. 3:7) புரிந்துகொண்டோர் எத்தனை பேர்?
'கர்த்தரோடிசைந்தே நடந்தேன்
கிருபை சமாதானம் ஈந்தார்
இதுவரை வழிகாட்டி நடத்தினார்
இன்னமும் காத்துக்கொள்வார்' - எனக்கேன் இனி பயமேன்...
என்ற சகோதரி சாராள் நௌரோஜியின் பாடல் வரிகள் இதனை உணர்த்தப் போதுமானவை. எனவே, கர்த்தரோடிசைந்து நடக்கவும், ஆவியானவரின் அசைவினைப் புரிந்துகொள்ளவும் ஏற்ற இருதயத்தினை தேவன் தந்து, கீழ்ப்படிகிற மனநிலையினை உருவாக்கி செயலாற்ற தேவன் நம்மை அழைக்கிறார். என்னை ஆண்டவர் பெத்தேல் போகச் சொல்கிறார், எரிகோ மட்டும் போக அனுப்புகிறார், யோர்தானுக்கு அனுப்புகிறார்
(2 இராஜா. 2:2,4,6) என்ற வழிநடத்துதலை தேவன் தர விரும்புகிறாரே. எலியாவின் அபிஷேகத்திற்காக வாஞ்சையாய் ஜெபிப்போர் உண்டு;ஆனால், எலியாவை வழிநடத்தினபோது கீழ்ப்படிந்த எலியாவின் காரியங்களை அறிந்து, வாஞ்சித்து செயல்படுவோர் சிலரே! இந்த வருடம் ஆவியானவரின் செயல்பாட்டினைப் புரிந்துகொண்டவர்கள் எழும்பும் வருடமாக இருக்கும்; அதிலே இணைந்துகொள்ள தேவன் உங்களை வழிநடத்துவாராக.
புதிய பூமி, புதிய முறைகள், புதிய சூழ்நிலை பவுலுக்கும் மற்றும் அவனைச் சார்ந்தவர்களுக்கும். இதற்கு முன் யூத ஜெப ஆலயங்களில் சென்று முதலாவது பிரசங்கித்து, அவர்களில் விசுவாசியானவர்களை
வைத்து சபையை ஆரம்பித்த அவர்களுக்கு, இப்போது யூத ஜெப ஆலயம் இல்லாத பிலிப்பு பட்டணம் ஒரு சவால். ஒன்றுமே அறியாதவர்கள் மத்தியில் ஆற்றினருகே ஜெபக்கூட்டமொன்றுதான் ஆரம்ப நிலை. மேலே கூரையில்லை, வரும் சந்தர்ப்பத்தினை உபயோகிப்பதே பதில், தானாகக் கூடினக் கூட்டம்; அது கூட்டப்பட்ட கூட்டமல்ல.
(அப். 16:13)
தேவன் எப்படி கிரியை செய்வார் என்பதனை அறியாத நிலை; ஆனால், வழிநடத்தினவர் வழியை திறக்க, ஒரு முக்கிய நபரின் (லீதியாள்) இதயத்தை திறக்க வல்லவர் என்பது கொஞ்சமாகத்தான் புரிகிறது. தேவன் ஆயத்தம்பண்ணிவைத்துள்ள அவள் வீடு, சபை கூடும் ஸ்தலமாக மாற, லீதியாளின் குடும்பத்திலும் கிரியை செய்கிறார் ஆண்டவர். இயல்பான நிலையில் தங்கவும் உறைவிடம் இலவசம், ஊழியத்திற்கும் தடையில்லை; என்னே ஆண்டவரின் வழிநடத்துதல்! இப்படிப்பட்ட காரியங்களை தேவன் இவ்வாண்டு செய்து, இனந் தெரியாத மக்கள் மத்தியில் தேவ கிருபையைக் காணும் ஆண்டு என்று நான் தைரியமாகச் சொல்லுவேன். ஆனால், அது அவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவோருக்கே உரியது; வெளிச்சம் பெற்றவர்களுக்குச் சொந்தம். மக்கெதோனியாவின் 'எங்களுக்கு உதவி செய்யுங்கள்' என்ற அழைப்புக்குச் செவிகொடுத்தோருக்குச் சொந்தம். தனித்து புதிய பிரதேசங்களையும் ஆண்டவருக்குச் சொந்தமாக்கத் துடிப்போருக்கு உரியது. தேவன் இருதயங்களைத் திறக்கும் வரை, ஜெபத்தில் காத்திருப்போருக்குக் கிடைக்கும் பாக்கியம். (அப். 16:13)
வசதியான குடும்பம் கிடைத்தது என்று பவுலும், அவனைச் சார்ந்தவர்களும் திருப்தியாகி நின்றுவிடவில்லை; மாறாக, இன்னமும் மீன்கள் (ஆத்துமாக்கள்) கிடைக்கக்கூடிய ஜெபம் பண்ணுகிற இடத்திற்கு விரைகிறார்கள். (அப். 16:16)
வியாபாரச் சந்தைவெளியில் இப்போது ஊழியம் (அப். 16:19). இந்த வருடத்தில் சந்தைவெளி ஊழியங்களின் (market place evangelism) விரிவாக்கத்தினை நாம் அனுபவிக்க ஆயத்தமாகவேண்டிய கட்டாயம் உண்டாகும். மிகுந்த ஆதாயத்தினை உண்டாக்கிக்கொண்டிருக்கிறவர்கள் மத்தியில், தேவன் கிரியையைத் தொடர்கிறார். அது கலவரங்களை வரவழைக்க நேரிடலாம்; ஆனால், கலங்கிடவேண்டாம்; ஏனெனில், அதுவே அதிகாரிகளை அசைக்க தேவன் உண்டாக்கும் வகை.
பிசாசுக்கும், மனிதருக்கும் அடிமையாக்கி, மனிதர்களைக் கட்டிவைக்க விரும்பும் திரள் கூட்டம் இந்த நாட்களில் பெருகிவருகிறது. அதனை அரசாங்கச் சட்டங்களோடு இணைத்து, அதனை தங்கள் புயபலத்தினால் சாதித்தும் வருகிறது. அப்படி அடைக்கப்பட்ட மக்களை விடுவிக்கும்போது, உபத்திரவங்கள், பாடுகள், அடி உதைகள், ஏன் சிறைச்சாலையும் கிடைப்பது இன்றைக்கு அல்ல, ஆண்டவரின் பிள்ளைகளுக்கும் தேவ சபைக்கும் அன்றிலிருந்தே உண்டானவை. 'ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாத முறைமைகள'; என்றுதான் அவர்கள் விடுதலை ஊழியத்திற்கு விரோதமாகக் குரல் எழுப்பினர். (அப். 16:21)
போராட்டங்களைச் சந்தித்த பவுலும் சீலாவும், அது அனைத்து சிறைக் கைதிகளை விடுவிக்கும் ஊழியமாக மாற்றப்பட ஏதுவாக, ஜெபத்தினால், துதியினால் செய்து முடித்தார்கள் (அப். 16:27). அனைவருடைய கட்டுகளும் கழன்றுபோயின; சிறைக் கதவும் திறந்துவிட்டதே, அஸ்திபாரங்கள் அசைந்ததே, கதவு திறந்தும் ஒரு கைதியும் தப்பி ஓடவில்லையே. இன்றைக்கும் இப்படிப்பட்ட காரியங்களை தேவன் நடப்பிக்கப்போகிறார்.
ஆனால், அதனை நடப்பிக்கும் செயல் நம்முடைய நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும். 'அடைக்கப்பட்டாலும் அமைதியாக இருக்க முடியாது' என்பதனை சபை காண்பிக்க, அதற்கு பெலன் வேண்டும்; துணிச்சலும், தேவ தைரியமும் தேவை.
ஒரு அடிமைப் பெண்ணை விடுதலையாக்கினதினால் வேதனை உண்டானது. ஆனால், அதனையே அப்போஸ்தலர்கள் அநேகருக்கு விடுதலை உண்டாக்கத்தக்கதாக மாற்றிவிட்டனரே. வேதனையில் கீதம் பிறப்பது அரிது; ஆனால், தேவ சத்தம் கேட்டு கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் வேதனையிலும் சாதனை படைக்கின்றனர்.
திட்டமிட்ட உபத்திரவங்கள் பெருகிவரும் இந்நாட்களில், தேவ ஊழியரும், தேவ பிள்ளைகளும் இப்படிப்பட்ட மனநிலையில் வாழவேண்டியது இன்றைய நாட்களின் தேவையாகலாம். அவைகள் நிறைவேறும்போது, ஆதி அப்போஸ்தலர் காலத்தில் நடந்த காரியங்கள் மீண்டும் நடைபெறுவதனை யாரும் தடுக்க முடியாது.
ரோம சிறைச்சாலை அதிகாரியையும் அவனுடைய குடும்பத்தாரையும் சுவிசேஷத்தினால் தொடுவது என்பது எளிதல்ல. ஆனால், தேவன் அதனை எத்தனை நேர்த்தியாய் செய்துவிட்டார் பாருங்கள். கர்த்தரின் வழிகள் எத்தனை அதிசயமானவைகள்.
மேல்மட்ட மனிதர்களைச் சந்திக்கும் பணியில் திருச்சபை இன்னும் பின்தங்கியே காணப்படுகின்றதனை தேவன் மாற்றவேண்டிய அவசியம் உண்டல்லவா! அதற்கான விலைக்கிரயத்தினையும் அனுபவித்தாகவேண்டுமோ! ஆவியானவரின் அதிசயமான கிரியைகளைக் காண வாஞ்சிப்போம், ஜெபிப்போம், இந்த ஆண்டில் அதனை அவர் நடப்பிப்பார் என விசுவாசிப்போம். பரந்த பாரத நாட்டில் இது நடந்துதான் ஆகவேண்டும். சுவிசேஷ நற்செய்தி அனைத்து மூலைகளையும் சென்றடைய எல்லா வகையிலும் கர்த்தரின் ஆவியானவர் கிரியை செய்ய வேண்டுமே. பலத்தினாலுமல்ல, பராக்கிரமத்தினாலும் அல்லவே! ஆவியினாலேயே ஆகும்.
இன்னும் ஒரு ஆண்டு நம்முன்
இன்னல்கள் தீருமோ? இடர்கள் களையுமோ?
இன்ப நாட்கள் வருமோ? என்ற ஏக்கம்
இனி வேண்டாம் அவர் செல்கிறார் முன்னே
சத்திய ஆவியானவரின் துணை கொண்டு
சந்து சந்தாக சுவிசேஷம் எடுத்துச் சென்று
சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி
சந்திப்போம் பெரியோரையும் சிறியோரையும்
ஆட்கொண்டோரே அனுப்பிடுவார்
ஆற்றல்கள் தந்திடுவார் அதிசயம் நடக்க
ஆறாக பாய்ந்து செல்வோம் செழிப்பாக்க
ஆயத்தமானோர் அணி அணியாக
தடையாய் தோன்றுபவை தகர்க்கப்பட
தம்பிரானைத் துதித்துப் பாடுவோம் நாளும்
தப்பாமல் துணை நிற்பார் தயவு காண
தந்திடுவார் அறுவடை வான் அளவாய்
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D அகஸ்டின் ஜெபக்குமார்
