கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருப்பவரும் (1தீமோ. 1:17), நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத். 28:20) என்று இராஜ்யத்தின் பணியில் நம்மை உற்சாகப்படுத்துகிறவரும், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25) என்று வாக்களித்தவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக! (1தீமோ. 6:16)
பிரியமானவர்களே! இன்றைய நாட்களில், அநேக விசுவாசிகளுக்கும் கூட்டத்தாருக்கும் உயிர்த்தெழுதலைக் குறித்த தெளிவு இல்லை. 'ஆண்டவர் மரணத்திலிருந்து எழுந்தார்" என்பதனைப் பண்டிகையாக நாம் கொண்டாடுகிறவர்கள்; என்றாலும், கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு நாம் கொடுப்பதில்லை. கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைதான் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்; ஆனாலும், என்ன காரணத்தினாலோ, கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுத்து, விசேஷப் பாடல்கள் மற்றும் பவனி என்றெல்லாம் வைத்திருக்கிறோம்; வீடு வீடாகச் சென்று பாடல்களைப் பாடுகிறோம், புத்தாடைகளை வாங்குகிறோம், பலகாரங்கள் செய்து மற்றவர்களுக்கும் கொடுக்கிறோம். கிறிஸ்மஸ் என்று சொன்னாலே, சபைகளிலேயும் நாட்டிலேயும் ஒரு குதூகலம் உண்டாகிவிடுகின்றது. துபாய் போன்ற நாடுகளில், செப்டம்பர் மாதத்திலேயே கடைகளை அலங்கரிக்கத் தொடங்கிவிடுவார்கள்;அமெரிக்காவிலே முன்னதாகவே நட்சத்திரங்கள் தொங்கவிடப்பட்டுவிடும். ஆனால், சபைகளிலே கிறிஸ்மஸ் கொண்டாடினதாக புதிய ஏற்பாட்டில் எங்கும் காணப்படவில்லை.
கிறிஸ்து பிறப்பின் பண்டிகைக்கு நான் விரோதி அல்ல; ஏனெனில், சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு வட இந்தியாவில் நாங்கள் அதை உபயோகப்படுத்திவருகின்றோம். உலக மக்கள் அனைவரும் அறிந்திருக்கின்றபடியினாலே, நற்செய்தியைச் சொல்லுவதற்கு அது நல்லதோர் நாள். அரசு உயர் அதிகாரிகளையும், மந்திரிமார்களையும் கூட விழாக்களுக்கு அழைத்து, நற்செய்தியினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். கிறிஸ்மஸ் அன்று, இப்படிப்பட்ட நோக்கத்தோடு செய்யப்படும் காரியங்களுக்கு நான் விரோதி அல்ல. என்றபோதிலும், அப்போஸ்தல நடபடிகளிலோ அல்லது அதற்குப் பிறகு எழுதப்பட்ட நிருபங்களிலேயோ, கிறிஸ்மஸ் கொண்டாடினார்கள் என்றோ, இயேசுவுக்குப் பிறந்தநாள் கொண்டாடினார்கள் என்றோ எங்கும் எழுதப்படவில்லையே! என்ற கேள்வி எனக்கு உண்டு. அப்படியானால், எப்படியோ உலகத்தின் வழிபாடுகளுக்கு நம்மை விட்டு கொடுத்துவிட்டோம் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. நாம் கொண்டாடியிருக்க வேண்டியது கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையையே!
ஏன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? இந்த உலகத்தில், மரித்து உயிரோடு எழுந்தவர் இயேசு ஒருவர் மாத்திரமே. பெரிய பெரிய தலைவர்கள் மண்ணுக்குள் போய்விட்டார்கள், இதிகாச நாயகர்களும் போய்விட்டார்கள்; சித்தர்களும் செத்து மண்ணுக்குள் போய்விட்டார்கள். இயேசுவும் மண்ணுக்குள் சென்றார்; ஆனால், மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினார். அவருடைய கல்லறை மாத்திரமே இன்றும் காலியாக இருக்கிறது, திறந்திருக்கிறது.
வேதத்தின் பார்வையில், மரணம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். உலகத்தின் எல்லா மதங்களும், மார்க்கங்களும், கொள்கையாளர்களும், மற்ற அனைவரும், ஏன்? கிறிஸ்து இல்லை என்று சொல்லுகிற நாஸ்திகனும் கூட மரணத்தை விலக்க முடியாது என்பதை நன்கு அறிவார்கள். தீவிர கம்யூனிசவாதியாக இருந்தாலும், பெரியதோர் கலாச்சாரப் புரட்சியை சீனாவிலே கொண்டுவந்த மாசேதுங் மற்றும் ரஷ்யாவை ஆண்ட லெனின் போன்றவர்களானாலும் மண்ணுக்கடியிலேயே இருக்கிறார்கள். கம்யூனிசம் ரஷ்யாவில் வீழ்ந்தபோது, 'உனது சத்துவமும் மற்றும் தத்துவமும் எங்களை மாற்றவில்லை, எங்கள் நாட்டை மாற்றவில்லை" என்ற வெறுப்பில், மக்கள் லெனின் சிலையை கீழே தள்ளினார்கள்.
கம்யூனிசம் வீழ்ந்தபோது, மாஸ்கோ நன்றாயிருந்தது; ஆனால், சைபீரியாவோ தண்டனை கொடுக்கிற இடமாகக் காட்சியளித்தது. கைதிகளே அங்கு அனுப்பப்பட்டார்கள்; எட்டு மாதங்கள் வெறும் பனியை மாத்திரமே நாம் காணமுடியும். அங்கு இருக்கும் 'பைகால்" என்ற ஏரி, பல மைல்கள் நீளமானது, சிங்கப்பூர் மற்றும் இலங்கை தேசங்களைக் காட்டிலும் பெரியது. குளிர் காலங்களில், மேலே ஜீப் ஓட்டக்கூடிய அளவிற்கு அதன் தண்ணீர் உறைந்து காணப்படும்; அதை நான் பார்த்திருக்கிறேன். அங்குள்ள ஜனங்களின் நிலை மிகவும் மோசமானதாகக் காட்சியளித்தது. ஊழியத்திற்காக ஒருமுறை நான் அங்கு சென்று, ஒரு பெரிய ஹோட்டலில் தங்கியிருந்தேன். மங்கோலியாவிலிருந்து ரஷ்யாவிற்கு பயணித்ததாhல் இரவில் எதுவும் என்னால் சாப்பிடமுடியவில்லை. எனவே, காலையில் எழுந்து ஓர் உணவகத்திற்குச் சென்றேன், அங்கே இரண்டு பேர் மாத்திரமே இருந்தார்கள்; எனக்கு ரஷ்ய மொழி தெரியாது, ஹோட்டல்காரருக்கோ ஆங்கிலம் தெரியாது; நான் 'bread" என்று கேட்டபோது, அவன் என்னை மேலும் கீழும் பார்த்தான், அவனுக்குப் புரியவில்லை. முட்டையை உடைப்பதைப் போல செய்கைக் காட்டி ஒரு ஆம்ளேட் கேட்டேன் அதுவும் அவனுக்குப் புரியவில்லை. கடைசியாக, அங்கே யாரோ சாப்பிட்டுப் போட்ட ஒரு ரொட்டித் துண்டை காண்பித்து, இது வேண்டும் எனக் கேட்டபோது, 'இது மிகவும் விலை அதிகம்" என்று சொன்னான்; ஆம், அது நமது ஊரைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக விலையாயிருந்தது. கம்யூனிசம் விழுந்தபோது, ரொட்டி வாங்குவதற்குக்கூட ஜனங்கள் வரிசையில் நிற்கவேண்டியதாயிற்று. லெனின் கொள்கைகளைக் கொண்டிருந்த ரஷ்யா இப்படிதான் காணப்பட்டது, இன்றும் அநேகக் காரியங்கள் அப்படியே காணப்படுகின்றன; அந்த லெனின் அழிந்துபோனார்.
எனது மகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலச் சென்றிருந்தபோது, ராஸ்தவ்கான் என்ற பிரபலமான ஒரு பட்டணத்தில்தான் அவள் பயிலும் பல்கலைக்கழகம் காணப்பட்டது. அவள் அங்கு சென்றபின், மூன்று நாட்களாக தொலைபேசியில் எங்களைத் தொடர்புகொள்ளவே இல்லை. மூன்று நாட்களுக்குப் பின், அழுதவளாக, 'அப்பா, இந்த யுனிவர்சிட்டியில், ஆண்களும் பெண்களுமாக எழுபத்தைந்து பேர் ஒரே அறையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறோம்; அத்துடன், கழிவறைகளில் கதவுகளே இல்லை" என்று போனில் சொன்னாள். மகளே, 'உன்னை ஆண்டவர் கதவு இல்லாத டாய்லெட் இருக்கிற ஊருக்குக் கொண்டுசென்றிருக்கிறார்"; ஆனால், என்னையோ, 'சுவரே இல்லாத டாய்லெட் இருக்கிற ஊருக்குக் கொண்டுசென்றார்" என்று சொன்னேன். ஆம், கம்யூனிசம் மற்றும் மாசேதுங் கொள்கைகள் அனைத்தும் மண்ணுக்குள் போய்விட்டன; ஆனால், இயேசு கிறிஸ்துவோ இன்றும் உயிரோடு இருக்கிறார். ஆனால், 'உயிர்த்தெழுதல்" என்பதோ கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆணி வேர். எனவே, கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள் (1கொரி. 15:17) என்று எழுதுகின்றார் பவுல்.
பெத்தானியாவில் குடியிருந்த லாசரு வியாதியாயிருந்தபோது, 'ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்" என்று சொல்ல, அவனுடைய சகோதரிகள் அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள் (யோவான் 11:3). ஆயினும், அதனைக் கேள்விப்பட்ட இயேசு, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தாமதித்தார் (யோவான் 11:6). நான்கு நாட்கள் கழித்து அவர் பெத்தானியாவுக்கு வரும்போது, 'நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்" என்று சொன்னபோது, அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள் (யோவான் 11:11,12). மரித்துப்போயிருந்த லாசருவை, 'நித்திரையடைந்தவன்" என்று சொல்லுகின்றார் இயேசு. என்றபோதிலும், இயேசுவின் வார்த்தைகளை சீஷர்களோ புரிந்துகொள்ளவில்லை. மூன்று வருடங்கள் இயேசுவோடுகூட இருந்தபோதிலும், பயிற்சி பெற்றபோதிலும், அவரது வார்த்தைகளை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
சீஷர்கள் அநேக நேரங்களில் இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளத் தவறினார்கள், 'பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்று இயேசு சொன்னபோது, 'நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார்" என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணினார்கள் (மத். 16:6,7). இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல், 'தரிசனம் கண்டேன், தரிசனம் கண்டேன்" என்று சொல்லிக்கொள்வோர் இந்நாட்களிலும் அநேகர் உண்டு. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லுகின்றார் (யோவான் 11:14). அவரது வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும், அவர் நம்மை நேசிக்கிறார். இயேசு சொன்ன உவமையில், 'உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்" (லூக். 15:32) என்று தகப்பனிடத்தில் திரும்பி வந்த இளையகுமாரனைக் குறித்து தகப்பன் சொன்னதை வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே! நாம் மரித்தவர்களா? அல்லது நித்திரையாயிருப்பவர்களா? பாவத்தில் வாழும் மனிதர்களே மரித்தவர்கள்; எனவே, 'அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்" (எபே. 2:1) என்று எழுதுகின்றார் பவுல்.
கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள், உயிரோடு எழுந்தவர்கள்; அவர்களுக்குள் ஜீவன் வந்துவிட்டது, கிறிஸ்து இல்லாமல் வாழுவோர் பிரதமமந்திரியானாலும், முக்கியமந்திரியானாலும் நடைபிணங்களே! 'குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" (1யோவான் 5:12); இதுவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தவருமான ஆண்டவரின் வார்த்தைகள். இதனாலேயே நாம் சுவிசேஷம் சொல்லுகின்றோம். சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கானக் காரணம் இதுவே. எனவே, உயிர்தெழுதலின் செய்தியை சீஷர்கள் அன்றைய நாட்களில் முழங்கினார்கள். அச்செய்தி, 'இயேசு உயிர்த்தெழுந்தார்" என்ற செய்தி அன்றைய அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் ஆபத்தானதாகக் காணப்பட்டது; அன்னா காய்பாவுக்கு அக்கினியைப் பற்றவைத்ததுபோலவும், அணுகுண்டைப் போட்டதுபோலவும் இருந்தது. பிரியமானவர்களே! இன்றைக்கு, சபை இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பறைசாற்றுமானால், இந்த தேசம் அசைந்துதான் ஆகும்.
'உயிர்த்தெழுதல்" என்ற வார்த்தையை, பழைய ஏற்பாட்டில் தேடினால் கிடைக்காது; அது புதிய ஏற்பாட்டின் புதிய செய்தி; நித்திய ஜீவனை நமக்குத் தருகிறதற்காகவே. ஏன் நாம் இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களை எடுத்துச் சொல்லுகின்றோம்? இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது (யோவான் 20:31). வேதம் நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருப்பதற்கானக் காரணம், ஒவ்வொரு மாதமும் ஒரு வாக்குத்தத்தத்தைப் பார்த்து, அதையே சுற்றிவருவதற்கு அல்ல; தினம் ஒரு வாக்குத்தத்தம், வாரம் ஒரு வாக்குத்தத்தம், மாதம் ஒரு வாக்குத்தத்தம், வருடம் ஒரு வாக்குத்தத்தம் இருந்தால் போதும், என்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் இன்றைய நாட்களில் உண்டு. இதுவே வேதம் நமது கரங்களில் கொடுக்கப்பட்டிருப்பதற்கானக் காரணம். பிரியமானவர்களே! நித்திய ஜீவனுக்கு நேராக நம்மை வழிநடத்தும் 'உயிர்த்தெழுதல்" என்ற பெரிய நற்செய்தியை நாம் நமது கரங்களில் வைத்திருக்கிறோம்; அது சாதாரணமானச் செய்தி அல்ல. எனவே, நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை; அந்த ஜீவனுக்கு முடிவில்லை. ஆகையினாலேயே, தெருத் தெருவாக, மூலை மூலையாக, ராஜ்யங்களுக்கு எல்லா மொழிகளிலேயும் சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லுகின்றோம். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவான் 10:10) என்று சொல்லுபவர் நமது இயேசு. இதனைப் புரிந்துகொள்ளும்படியாகவே, 'மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்" (ரோமர் 1:5) என்று எழுதுகிறார் பவுல். 'உயிர்த்தெழுதல்" இயேசுவை 'ஜீவிக்கிறவர்" என்றும் 'தேவனுடைய குமாரன்" என்றும் நிரூபிக்கிறது.
இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சொல்லுவதை இஸ்லாமிய சகோதரர்கள் மறுதலிப்பார்கள்; அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே என்று அவர்கள் சொல்லலாம். நாம் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சொல்லுவதற்குக் காரணம், அவருடைய உயிர்த்தெழுதலே.
ஒருமுறை கூட்டங்களை நடத்துவதற்காகவும், அதற்கான ஆயத்தப் பணிகளைப் பார்வையிடவும் ஒரு இடத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இடத்தின் அருகில், அநேக இஸ்லாமியர்கள் வசிக்கின்றார்கள். அப்போது, அங்கு ஏழு வயது நிரம்பிய ஒரு சிறுவன் வந்தான். அவனது தலையில் எண்ணெய் இல்லை, சட்டை போடவில்லை, கால்சட்டை மட்டுமே போட்டிருந்தான். அவன் என்னிடத்தில், 'நான் பாட்டு பாடி, டான்ஸ் ஆடட்டுமா?" என்று கேட்டான். தொடர்ந்து, சமாரிய ஸ்திரீயினிடத்தில் இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க" என்று அவள் சொன்னதுபோல, அந்தச் சிறுவன் என்னிடத்தில், 'அங்கிள், நாங்க இயேசுவை தீர்க்கதரிசி என்று சொல்லுகிறோம்; நீங்க தேவனுடைய குமாரன் என்று சொல்லுகிறீர்கள்" என்று சொன்னான். அத்தோடு அவன் நிறுத்தவில்லை, என்னுடைய அப்பா, ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டே சென்றுவிட்டார் என்று தனது குடும்ப வரலாற்றை முழுவதுமாகச் சொல்லத் தொடங்கினான்; எனக்கோ, சமாரிய ஸ்திரீதான் ஞாபகம் வந்தது. 'நீ எப்படி டான்ஸ் ஆடுவாய்?" என்று நான் அவனிடத்தில் கேட்டபோது, 'ஷாருக்கான் மாதிரி ஆடுவேன்" என்று சொன்னான். ஷாருக்கான் தெரியும்; ஆனால், சாவை வென்ற இயேசு தெரியாது.
பிரியமானவர்களே! இயேசுவின் உயிர்த்தெழுந்த செய்தியின் வல்லமையும், அதன் நிரூபணமும் நமக்குத் தெரிந்திருக்கவேண்டிய செய்தியல்லவா! எனவே, இயேசு உயிரோடு எழுந்ததும், உயிர்த்தெழுந்த செய்தி பிரசங்கிக்கப்படாதபடி, அன்றைய நாட்களில் இருந்த ஆசாரியரும், அன்னா காய்பாவும், எதிரிகளும் பிலாத்துவினிடத்தில் வந்து, 'ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும்" என்று சொல்லுகின்றார்கள்.
சிலுவையில் அறையவேண்டும் என்று சொன்னீர்கள் அறைந்துவிட்டேன்; கையையும் கழுவிவிட்டேன்; ஆனால், திரும்பவும் வந்து நிற்கிறார்களே என்று எண்ணிய பிலாத்து அவர்களை நோக்கி, உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான். இதைக் கேட்டதும், அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள் (மத்தேயு 27:63-66). இயேசு உயிர்த்தெழுந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் அவ்வளவு வைராக்கியமாயிருந்தார்கள். இயேசு உயிரோடெழுந்துவிட்டால், அவர்களுடைய உபதேசம் வீணாகிவிடும், மனிதர்களின் வாழ்க்கை மாறிவிடும், அந்தச் செய்தி நித்திய ஜீவனைக் காட்டிவிடும் என்பதினால், அது நடைபெறாதபடிக்கு அவர்கள் கவனமாயிருந்தார்கள். இன்றைய நாட்களிலும், 'இயேசு உயிரோடிருக்கிறார்" என்ற செய்தியை சொல்லக்கூடாதபடிக்கே கூட்டங்களுக்குத் தடை விதிக்கிறார்கள்.
வட இந்தியாவில் 53 வருடங்களாக மிஷனரியாக வாழுகிறேன், துப்பாக்கிகளையும், மிரட்டல்களையும் நாங்கள் பார்த்தவர்கள்தான்; காரணம், 'இயேசு உயிரோடிருக்கிறார்". இதனை அவர்கள் சொல்லமுடியாது. அவர்களது தெய்வங்கள் எதுவும் உயிரோடு இல்லையே! எனவேதான், அன்றைக்கே, இயேசுவின் கல்லறையை முத்திரையிட்டு, காவலர்களை நிறுத்தி பாதுகாத்தார்கள்.
என்றபோதிலும், 'இயேசு உயிர்த்தெழுந்தார்" என்ற செய்தியைக் கேட்ட ஸ்திரீகள் கல்லறையை விட்டுப் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்து, மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்தார்கள் (மத். 28:11,12). உயிர்த்தெழுதலை மறைக்க அன்றைக்கே லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், உயிர்த்தெழுதலின் செய்தி அவர்களுக்கு வெடி வைப்பதைப் போன்றது. எனவே, உயிர்த்தெழுந்த இயேசுவை பிரசங்கித்த அப்போஸ்தலரைப் பிடித்து அவமானப்படுத்தி, அடித்து, அவருடைய நாமத்தையும் சொல்லக்கூடாது என்றும் அவரது உயிர்த்தெழுதலையும் அறிவிக்கக்கூடாது என்றும் அவர்களை பயமுறுத்தினார்கள். ஆனால், அவர்களோ புறப்பட்டுப் போய் எருசலேம் எங்கிலும் சுவிசேஷத்தை அறிவித்தார்கள்; நாமும் இதனையே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவோடு நாம் நடப்போமென்றால், இந்த தைரியம் நமக்கும் வந்துவிடும்.
ஜனங்கள் இயேசுவோடு நடக்காததினாலேயே, வாராவாரம், 'பயப்படாதே, பயப்படாதே" என்று போதகர் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறது. இயேசுவோடு நடப்போருக்கு பயம் இல்லையே! ஒருமுறை, சசராம் என்ற ஊரில் ஒரு கூட்டத்தில் நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, எனது சட்டையைப் பிடித்துக்கொண்டு இரண்டுபேர் இழுத்துக்கொண்டு சென்றார்கள். 'உனது தலை நாளைக்கு இருக்காது" என்று சொன்னான். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், 'எதற்காக உங்க தலையைக் கேட்கிறான், தமிழ்நாட்டு ஆளு தலையை" என்று என்னிடத்தில் கேட்டபோது, 'அவன் தலைக்குள் இல்லாத ஒன்று, எனது தலைக்குள் இருக்கிறது; அதைக் கேட்கிறான்" என்று பதில் சொன்னேன் நான்.
அதுமாத்திரமல்ல, 'நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்" (மத். 28:13) என்று பொய் சொல்லவும் கற்றுக்கொடுக்கிறார்கள். பொய் சொல்லக் கற்றுக்கொடுப்பது யார்? அந்த நாளின் பிரதான ஆசாரியன் அதாவது அன்றைய நாளின் போப். பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பிரகடனப்படுத்துவதில், இன்றைய கிறிஸ்தவம் தோற்றுவிட்டது. மேலும், இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்று சொல்லுகின்றார்கள் (மத். 28:14). இன்றைய நாளில், மந்திரி இருக்கிறார் நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் என்று சொல்லுவதைப் போல. அவ்வாறே, சேவகர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது (மத். 28:15). இவை அனைத்தும், உயிர்த்தெழுதலின் செய்தியை உலகத்திற்கு மறைப்பதற்காகவே.
இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு இறுதி இராப்போஜனம் எடுத்தவனும், 'ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்" (1யோவான் 1:1) என்று எழுதினவனுமாகிய யோவான், தனது 92-வது வயதில், பத்மு தீவில் ரோம அரசாங்கத்தினால் அடைக்கப்பட்டிருந்தான். மற்ற சீஷர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு தேசத்தில் இரத்தசாட்சிகளாகக் கொன்றுவிட்டனர். ஆனால், யோவானை கொதிக்கிற எண்ணெய் இருக்கும் கொப்பரையில் போட்டபோதோ, அவன் அங்கேயும் எழுந்து நின்று, 'தேவன் அன்பாகவே இருக்கிறார்" என்று பிரசங்கம் பண்ணினான். அவனைக் கொல்ல முடியாததினால், பத்மு என்ற தீவில் கல்லுடைக்கும்படியாகப் போட்டது ரோம அரசாங்கம். ஒரு கைதி மற்ற கைதியைப் பார்க்க முடியாத அளவிற்கு, பகலின் பயங்கரமான வெயிலிலும் மற்றும் இரவின் பயங்கரமான குளிரிலும் கற்களை உடைக்கும்படியாக அவனை அங்கே வைத்திருந்தார்கள்.
பத்மு தீவில் இருந்த அவனுக்கு, வருங் காலங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று விரும்பிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, அவனுடைய கண்களைத் திறந்து, அவனுக்குள் காட்சியளித்துச் சொன்ன முதல் வார்த்தை, 'மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்" (வெளி 1:18) என்பதே. மார்பில் இருந்தவனுக்கே, க~;டத்தில், பாடுகளில், பிரச்சனைகளில், உபத்திரவங்களில், கைதியாய் இருந்தவனுக்கே உற்சாகமூட்டக்கூடிய செய்தி 'உயிரோடிருக்கிறேன்" என்பதே.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவா 10:10) என்றார் இயேசு. திருடனாகிய சாத்தான், சொத்துக்களை, பிள்ளைகளை, சமாதானத்தை, சுகத்தை, சௌக்கியத்தை, ஆரோக்கியத்தைத் திருடவும் அழிக்கவுமே வருகிறான்; ஆனால், உயிர்த்தெழுந்த ஆண்டவரோ, நமக்கு ஜீவனைக் கொடுக்கிறவர். இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, ஏழை மனுவுருவை எடுத்தவராக நம்மைத் தேடிவந்தார். நமக்கு ஜீவன் கொடுப்பதற்காகத் தனது ஜீவனையே கொடுத்தவரை நாம் தள்ளிவிடக்கூடாதே! ஒருவேளை, பிறப்பினால் ஒரு பாரம்பரியக் கிறிஸ்தவனாக நீ வாழ்ந்துகொண்டிருக்கலாம். தாய் தகப்பனுக்காக, ஏதோ ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை நீ வாழ்ந்துகொண்டிருக்கலாம், மற்றவர்கள் உன்னை 'விசுவாசி" என்று பெயரிட்டு அழைக்கலாம்; என்றபோதிலும், குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஏற்றுக்கொள்ளவே இன்றும் நம்மை அவர் வருந்தி அழைக்கிறார். அவர் நமக்காகச் செய்துமுடித்துவிட்ட காரியங்களை உள்ளான மனதோடு ஏற்றுக்கொண்டு, வாயினால் அறிக்கை செய்வோம்.
ஏழை மனுவுருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே
கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு
இந்த இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்குத் தடையாயிருப்பவைகளைத் தள்ளிவிட்டு, பாவங்களைத் தள்ளிவிட்டு, ஜீவாதிபதியை நோக்கி ஓடிவருவோமென்றால், வாழ்க்கையில் அவரை ஏற்றுக்கொள்வோமானால், மற்றவர்களுக்கும் அவரை அறிவிப்போமானால், நம்மையும் மற்றவர்களையும் நித்திய ஜீவனின் சுதந்தரவாளிகளாக மாற்றிக்கொள்ள முடியும்.
உயிர்த்தெழுதல் ஆணி வேராயிராவிட்டால்
நம் விசுவாசம் அது வீணாயிருந்திருக்கும்
உபத்திரவத்திலும் உற்சாகத்தின் செய்தியதுதான்
நம்மை அனுதினம் அவருடன் வாழவைக்கும்
பாவத்தில் வாழ்பவர் உயிரிருந்தும் மரித்தோரே
மரணபய மிருந்தாலும் மறுவுலகவர்க் கில்லையே
நியாயத்தீர்ப்பு நாளிலே உயிரோடவரெழுந்தாலும்
நீதிபதி தீர்ப்பிலே பாதாளத்தில் கிடப்பாரே
பரிசுத்தம் ஆனோர்க்கு மரணமும் நித்திரையே
பாடுகளும், பிரச்சனையும் பாடலாயவர் வாயினிலே
பாதாளமும் வேதாளமும் கையாள முடியாதே
பரிகரிக்கப்படும் சத்துரு மரணம் அவர் வாழ்க்கையிலே
திறவுகோல்களை இனி திருடன் பறிக்க இயலாதே
திரும்ப அவர் வருவதையும் தடுக்க இனி முடியாதே
உயிர்த்தெழுந்த கிறிஸ்து பலமாய் ரூபிக்கப்பட்டவர்
பரமவாசலைத் திறந்தார் பிதாவுடன் நமைச் சோக்கவே
சத்தமிட்டுச் சொல்வோரை சத்துருவும் எதிர்ப்பர்
சங்கிலியால் கட்டி சித்திரவதையுங் கொடுப்பர் - ஆனால்
சத்தியம் அடக்காது சத்துருவின் கொடுமையால்
சத்தமிடு தெருவில் சித்தமதை முடித்திடவே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்