April 2026

 

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, 

சத்திய வசனத்தினால் நம்மை ஜநிப்பித்தவரும் (யாக். 1:18), சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பவரும் (ஏசா. 66:2), வசனத்தை அனுப்பி நம்மை குணமாக்குகிறவர் மாத்திரமல்ல, அழிவுக்கும் நம்மைத் தப்புவிக்கிறவரும் (சங். 107:20), வசனத்தினால் நமது வாழ்க்கையைச் சுத்தம்பண்ணுகிறவரும் (சங். 119:9), சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவரும் (எபி. 1:3), தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை நமது கரங்களில் கொடுத்தவருமாகிய (எபே. 6:17) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  

இன்றைக்கு தேவ மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடக்கவேண்டிய அவசியமுண்டு. அநேக காரியங்கள் ஆவிக்குரியவை போலக் காட்சி அளிக்கலாம்; ஆனால், அவைகள் ஆராய்ந்து அறியவேண்டியவை என்பதனை மறக்க இயலாது. 

ஏவாளை வஞ்சித்த வஞ்சகன் சாத்தான். அவளைப் பார்த்து, 'நீங்கள் தேவன் விலக்கின கனியைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள்.... தேவர்களைப்போல் இருப்பீர்கள்" என்றும் கூறினபோது (ஆதி 3:5), அது அவர்களுடைய ஆவிக்குரிய நிலைதனை உயர்த்தும் என்றுதானே அவள் நினைத்திருக்கவேண்டும். நாம் உண்டாக்கப்பட்டதே 'அவர் சாயலில்தானே" என்பதனை அவள் ஒரு கணம் யோசித்திருந்தால், அவனுடைய வஞ்சக யோசனைக்குக் கீழ்ப்படிந்திருக்கமாட்டாளே. தேவனை நித்தமும் நேருக்கு நேர் சந்திக்கும் பாக்கியத்தினை விட இன்னமும் கண் திறக்கப்பட்டு எனக்கு நிகழப்போவது என்ன? என்று கேட்டிருந்தால் விழுகை ஏற்பட்டிருக்காதே.

பிரபல ஊழியர் ஒருவர் தன்னுடைய கூட்டத்தில், இனி இயேசு சரீரப் பிரகாரமாகத் தோன்றுவார் எனக் கூறினபோது, ஜனங்கள் 'அல்லேலூயா" என்று ஆர்ப்பரித்தனர். கேட்பதற்கு அது ஆவிக்குரிய பெரிய அனுபவம் போலக் காணப்பட்டது. ஆனால், கேட்ட ஜனங்கள் 'நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்" (2கொரி 5:16) என்பதனை மறந்துவிட்டனரே. 

அதே ஊழியர் என்னுடைய ஊழியத்தினை எதிர்க்கிறவர்கள் சபிக்கப்படுவார்கள். அவர்களை கர்த்தரின் நாமத்தில் சபிக்கிறேன் என்று முழங்கினார். (அநேக கேள்விக்குரிய காரியங்களை அவருடைய ஊழியத்தில் காணலாம் அதனை வசன ஆதாரத்தில் எதிர்ப்பவர்களைத்தான் அவர் அப்படிச் சபித்தார்). அதனைக் கேட்ட ஜனங்கள் பயந்தார்கள், நடுங்கினார்கள், ஆமேன் என்று அலறினார்கள்; ஆனால் ஊழியரும், அவரைக் கேட்ட  ஜனங்களும், 

'நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து ஆசீர்வதியுங்கள்" என்ற அன்புக் கட்டளைதனை (1பேது 3:9), பிசாசையும் சபிக்க அதிகாரமில்லை என்பதனை (யூதா 9) மறந்துபோய்விட்டார்கள் அல்லவா!

இதற்குக் காரணம் என்ன? தேவ வார்த்தைதனை புறக்கணித்த ஏவாளைப் போல தேவ வார்த்தையைக் காட்டிலும் தோற்றத்தின்படி ஆவிக்குரியதாய் தோன்றியவற்றினை ஏற்றுக்கொண்டதே.

இயேசுவை கவனியுங்கள்; பிசாசு அவரிடம் 'நீர் தேவனுடைய குமாரனேயானால் தேவாலயத்து உப்பரிக்கையின் மேலிருந்து தாழக் குதியும், ஏனெனில் உம்மைக் காக்கும்படிக்கு தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும் உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்றும் எழுதியிருக்கிறது" என்று சொன்னான். வேத வாக்கியங்களை இணைத்து ஆவிக்குரிய தோரணையில் பேசுகிறான். ஆனால், அவனுடைய உள்ளான எண்ணங்களை அறிந்த நம் ஆண்டவர், தான் தேவ குமாரன் என்று சில நாட்களுக்கு முன் பிதா கொடுத்த அறிக்கைதனை  நன்றாக அறிந்தவராய், தன்னைச் சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பதனைப் புரிந்தவராய் அவனை மடங்கடித்தார். நான் இப்படிச் (குதித்து) செய்துதான் தேவகுமாரன் என்பதனை நரூபிக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் என்னைக் குறித்து சொன்ன சாட்சி வசனமே போதும் என்பதனை தெளிவாக்குகிறார்.

இன்றைக்கு அநேக ஊழியங்களில் காணப்படும் வேதனை இதுதான். வேத வசனங்களில் தங்களுக்குச் சாதகமானவைகளை மாத்திரம் தெரிந்தெடுத்து அதனை ஆதாரமாகக் கொண்டு உபதேசங்களையும், ஊழிய முறைகளையும் தெரிந்துகொள்ளும்போது சத்துரு இதனை தனக்குச் சாதகமாக மாற்றி இவர்களை உபயோகிக்க ஆரம்பித்துவிடுகிறான். வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை" அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள் பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும், இதோ இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும். இடுக்கத்தால் இருளடைந்து அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள் (ஏசா 8:20,22) என்பதுதானே தேவனின் நீதி. 

கிழட்டு தீர்க்கதரிசியின் பொய் வாக்கினை துடிப்பான வைராக்கியமான இளம் தீர்க்கதரிசி அடையாளம் காண முடியாமற்போனதற்கும் காரணம் இதுவல்லவோ! போன வழியாய் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று அவன் கூறியதில் தெளிவு இருந்தது. அது கட்டளை எனவும் அறிந்திருந்தான் (1இராஜா 13:9), ஆனால் எனக்கு ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று பொய் சொன்ன கிழட்டு தீர்க்கதரிசியின் வார்த்தையில் காணப்பட்ட கபடமான 'தூதன் சொன்னான்" என்ற வார்த்தையை சோதித்திருந்தானேயானால் தன் ஜீவனை இழக்க நேரிட்டிருக்காதே! (1இராஜா 13:18,24). இன்றைக்கும் அநேக ஊழியர்கள் தேவ வார்த்தையை மீறி தூதன் சொன்னான் என்றே கூறி ஜனத்தினை திருப்பிவிட்டிருப்பது நாம் அறிந்ததே. பார்வைக்கு ஆவிக்குரிய கோலம் போட்ட அனைத்து திட்டங்களும், ஆலோசனைகளும், ஊழியங்களும் இந்த வகையைச் சார்ந்ததே; விழிப்பாயிருப்போம். 

சில வேளைகளில் கர்த்தரின் வார்த்தைக்குக் காத்திராமல், நம்முடைய அனுபவங்களை மாத்திரம் சார்ந்து, நம்முடைய கருத்தினை வெளிப்படுத்தி ஆலோசனை சொல்லவும் சோதனை உண்டாகலாம். நாத்தான் தீர்க்கன் செய்தது அதுதானே, 'தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும் கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம் பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறது" என்றார். அப்பொழுது நாத்தான் இராஜாவை நோக்கி 'நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்hம் செய்யும், கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே"என்றான் (2சாமு 7:2,3). ஆனால், அது அவனுடைய அனுபவத்தையும், எண்ணத்தையும் சார்ந்ததே. தேவன் இடைப்பட்டு தம்முடைய திட்டத்தைத் தெளிவாக்குகிறார். இந்த ஆபத்தினையும் அடையாளம் கொண்டு செயல்படுவது நல்லது.

அனுதாபம், பற்று இவைகளும் சில வேளைகளில் ஆவிக்குரிய உடையினைத் தரித்து நம்மைச் சந்திக்கலாம். பவுலின் வாழ்வினை உற்றுப் பாருங்கள். அகபு தீர்க்கன் மூலம் பவுல் எருசலேமில் கட்டப்பட்டு புறஜாதிகள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாரென்று தீர்க்கதரிசனம் உண்டாகிறது. அதனைக் கேட்டவர்கள் பவுலின் மேல் கொண்ட பாசத்தின் மிகுதியினால், எருசலேமுக்குப் போகவேண்டாமென வேண்டி, கெஞ்சி நிற்கின்றனர் (அப் 21:10-12). ஆனால் பட்டணங்கள் தோறும் ஆவியானவர் சொல்கிறதனை தெளிவாகக் கேட்டு தனக்குள் உறுதியான தீர்மானமாக, 'அவைகளில் ஒன்றையும் குறித்துக் கவலைப்படேன், என் பிராணனையும் நான் அருமையாக எண்ணன். என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோட முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்" என்ற முழக்கம் இன்றைக்கும் கேட்கப்பட்டால் நலமாயிருக்குமே. அனுதாபம், பாசம், பற்று சொந்த பந்தமல்ல தேவ வார்த்தையின் நிறைவேறுதலே நமக்கு முக்கியம் என்பதனை வாழ்ந்து காட்ட தேவ மனிதர்கள் தேவை. 

ஆபத்தினைச் சந்திக்கும் வேளைகளில் ஆவிக்குரிய கவசம் அணிந்த ஆலோசனைகள்  ஆபிரகாமிடத்திலிருந்து சாராளுக்கு வந்ததுபோல வரலாம். 'உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும் நீ உன்னை சகோதரி என்று சொல்" என்ற ஆலோசனை (ஆதி 12:13).தேவன் எகிப்திலும் கேராரிலும் அவனைக் காப்பாற்ற இடைப்பட்டிருக்காவிடில் இந்த தேசத்தாரை அழிவுக்கு நேராக வழிநடத்தியிருக்குமே (ஆதி 12:17, 20:9). என்னைக் காத்துக்கொள்ள, நான் மேற்கொள்ளும் ஆவிக்குரிய வேஷம் என்னைச் சுற்றியிருப்போரின் அழிவுக்குக் காரணமாக மாறிவிட்டால் அது எத்தனை பெரிய துக்ககரமானது. என் மூலம் ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டுமே ஒழிய, என் மூலம் அவர்கள் அழிக்கப்பட்டுவிடக்கூடாதே. 

    சத்துருவினிடத்தில் கூலி பெற்றிருந்த செமாயா என்பவன் நெகேமியாவை நோக்கி, 'நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய் தேவாலயத்தின் கதவுகளை பூட்டுவோம் வாரும், உம்மைக் கொன்றுபோட வருவார்கள். இரவிலே உம்மைக் கொன்று போட வருவார்கள்" என்றான் (நெகே 6:10). எத்தனையான ஆவிக்குரிய முலாம் பூசப்பட்ட பொய், ஆனால் ஜெபத்தினால் தேவனோடு ஒன்றிப் போய்விட்டவனும், தேவ காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தவனும், தேவனுக்குப் பயந்து நன்மை செய்பவனுமாகிய நெகேமியாவை அது அசைக்கவோ, ஏமாற்றவோ முடியவில்லை. மாறாக அவன் சொல்வதனைப் பாருங்கள்! என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய் பதுங்குவானோ? என்ற இடி முழக்கக்  குரல் (நெகே 6:11). அந்தப் பொய்யை அடையாளம் கண்டுகொள்ள நேரம் எடுக்கவில்லை. 

வெளி வேத்தில் மேன்மை பாராட்ட விரும்பும் ஒரு கூட்டம் எப்போதும் உண்டு; அது இருதயத்தில் அல்ல. அது தங்களையே மெச்சிக்கொள்ளும், தங்களுக்கே புகழ் தேடும். அதற்காக யாரையும் பலிகொடுக்கவும் தயங்காது (2கொரி 5:12). வெளித்தோற்றத்தின்படி மாத்திரம் பார்த்து ஏமாந்து போகாமல் தேவன் நம்மைக் காப்பாராக (2கொரி 10:7). பொல்லாங்கானதாகத் தோற்றமளிக்கிறவைகள் அநேக வேளைகளில் ஆவிக்குரிய தோற்றம் போலக் காட்சி தர ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இது கடைசி காலம் கன்னியாக வாழவேண்டிய சபைதனை கறைப்படுத்திவிட சத்துருவாகிய சாத்தான் பலவித சாகசங்களை கையாளும் வேளையிது (2கொரி 11:3).

கவனமாக வாழ்வோம் கர்த்தரின் ஆலோசனையாம் கர்த்தரின் வார்த்தைதனை நன்கறிவோம். காலத்தின் கோலத்தினைப் புரிந்துகொள்வோம். கருத்தாய் ஜீவிப்போம், கிருபைதனைச் சார்ந்த வாழ்வு பெற்றிடுவோம், கண்களில் தெளிவு உண்டாக்கும் கர்த்தரின் நியாயங்களால் எச்சரிக்கப்பட்டவர்களாய் வாழ்வோம் (சங் 19:8-11). எல்லா ஆவிகளையும் நம்பாமல் அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறிவோம் (1யோவா 4:1). தேவனால் உண்டானவைகள் தேவ வார்த்தையால் முத்தரிக்கப்பட்டு தேவனால் அங்கீகாரம் பெற்றிருக்கும். கலப்பு அதிலே காணப்படாது. தேவனால் உண்டானவைகள் அல்லாமல் தேவ நாமத்தைத் தரித்துக் கொள்பவை அந்திக்கிறிஸ்துவின் அடைக்கலத்தால் உண்டானவை என்பதனை மறந்துவிடாதீர்கள்.  

பல வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய பாடல் வரிகள்...

வேதமே எந்தன் வெளிச்சமே

வழிகாட்டியும் அதுவே

இரவுல் பகலும் தியானிப்பேன்

இடறிடேன் என்றென்றுமே

பிழைப்பது தேவ வார்த்தையினால்

மாத்திரம் என்றறிவேன்

குழந்தையைப் போல வாஞ்சிப்பேன்

பதறிடேன் என்றென்றுமே

இன்று அநேகருடைய வாழ்விலும், ஊழியத்திலும் வேதத்தின் முக்கியத்துவம் அசட்டை செய்யப்படுவதனையும், மறக்கப்படுவதனையும் காணுங்கால் உள்ளம் வேதனை அடைகிறது. வேத புத்தகம் மந்திர புத்தகம் போல் மட்டுமே பாவிக்கப்படுவதனையும் கண்டு மனம் புழுங்குகிறது.

'நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்" (ஓசி 4:6) என்று தேவன் கூறாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. 

'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன், அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்" (ஓசியா 8:12) என்று அங்கலாய்க்கும் தேவனைக் கண்டவர்கள் எத்தனை பேர், மற்ற மதங்களைப் போல நம் கையில் தேவன் அருளிய புத்தகமாகிய வேதம், ஏதோ ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், சடங்குகளில், விழாக்களில் ஓதுவதற்கு அருளப்பட்டது அல்ல. 

மாறாக அன்றாடக வாழ்வில் அதனை ருசித்து அவருக்குள் தேறினவனாக மாறி, நற்கிரியைகளைச் செய்யத் தகுதி பெற்றவர்களாகி, தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றுவதற்காகவே தரப்பட்டுள்ளது (2தீமோ 3:16,17) என்பதனை நாம் மறக்கலாகாது.

ஆயிரம் ஸ்தோத்திரபலிகளைச் சொன்னால் போதும் என்ற நிலைக்கு இன்று அநேகர் மாற்றப்பட்டிருப்பது நமது அவல நிலையையே சுட்டிக்காட்டுகிறது. வேதத்தினை ஆராய்ந்து அறியவும், தேடி வாசிக்கவும் (ஏசா 34:16) இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாகக் கற்றுக்கொள்வதும் (2தீமோ 3:15) அதன் அடிப்படையில் மற்றவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதும் நம்முடைய கடமைகளில் ஒன்றாகும்

அநேக நேரங்களில் வேதம் புறக்கணிக்கப்பட்டு, ஜெபங்கள் மணிக் கணக்கில் ஏறெடுக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பரலோகத்தை நோக்கி தான் செய்யப்படுகிறது. தன்னுடைய செவிதனை வேதத்திற்கு விலக்கும் எந்த ஜெபமும் பரலோகம் அங்கிகரிக்காதவை என்பதனை அறியுங்கால் அந்த பிரயாசம் எத்தனை வீணாக செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை (நீதி 28:9).வேதத்தினை தியானித்து தன் வாழ்வினை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தேவ சமூகத்தில் சேரும்போது, நம் வாயில் வார்த்தை பிறக்கும் முன்னமே தேவன் பதில் அளிக்கிறார் என்ற உண்மையினை அறிந்தவர்கள் எத்தனை பேர்?

அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன். அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் (ஏசா 65:24) என்ற வாக்கு அவரின் இராஜ்யத்தின் பிள்ளைகளுக்குச் சொந்தமல்லவா!

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசா 8:20) என்பது மாறாத பிரமாணம். 

அநேகர் வேதத்தினைக் கேட்க விரும்பாததற்குக் காரணம், அது அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற தடை செய்துவிடும் என்பது. அழுதாகிலும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்பதும், யாராகிலும் ஜெபித்தாகிலும் வாங்கித் தந்துவிடுவார்கள் என்பதும் போன்ற விநோத எண்ணங்களை உள்ளடக்கி வாழ்வதாலேயே சிலர் கர்த்தருக்குக் காணிக்கைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாமென தப்புக்கணக்குப் போடுகின்றனர். அவரோ நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன், பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே என்கிறார் (சங் 50:12). சிட்சையை பகைத்து என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய் என்பதே அவர் சொல்லும் குற்றச்சாட்டு (சங் 50:17).

இன்னொரு கொடுமை இந்த நாட்களில் நடக்கிறது; அது என்ன? வேத வாக்கியங்களை தப்பாகப் புரிந்துகொண்டதனால் உண்டாகும் பிரசங்கங்கள் (மாற் 12:24). பரலோகத்தில் அநேகர் வீடு அற்றவர்களாய் திரிவார்கள் என்றார் ஒரு பிரபல தமிழ் பிரசங்கியார். தாவீது தன் மடியில் குளிருக்காகக் கொடுக்கப்பட்ட அபிஷாகை அறியவில்லை, காரணம் உணர்த்துதலின் ஆவியால் நிறைந்திருந்தார் என்றார் பிரபல தொலைக்காட்சிப் பிரசங்கியார். நீ கோடி கோடியாய் பணம் பெறுவது தேவ நோக்கம் என்றார் தீர்க்கதரிசி என்று ழைத்துக்கொள்ளும் பிரபல ஊழியர் ஒருவர். பவுலுக்கு திருமணத்திற்கு வெளியே பெற்ற ஒரு குமாரன் இருந்தான், அவன்தான் சரீரத்தில் முள்ளாய் விளங்கினான் என்றார் தன்னை பெரிதான வெளிப்பாடுள்ளவனைப் போல காண்பிக்க விரும்பும் மற்றும் ஒரு ஊழியர். ரெபேக்காள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டினாள், ஆகையால் நீ எனக்கு மட்டுமல்லாமல் நான் ஏறும் வாகனத்திற்கும் பெட்ரோல் ஊற்று என்றார் ஒரு பழம் பெரும் போதகர். தசக பாகம் உன் ஆசாரியன் கையில் மாத்திரமே தரப்படவேண்டும் என்றார் பழைய உடன்படிக்கையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள விரும்பும் ஒரு போதகர். அசீரியனைக் குறித்து தேவன் குறிப்பிடும் வரிகளான 'இதோ திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்" (ஏசா 28:2) என்பதனை பரிசுத்த ஆவி என்று போதிக்கும் பிரபல உலகப் புகழ் ஊழியர் ஒருவரும் உண்டு. ஏதேனில் பாய்ந்த முதலாம் ஆறு பைசோன் ஆவிலா தேசம் முழுவதும் சுற்றி ஓடும் என்பதனை 'ஆவியில்லா" தேசம் என்று ஆராய்ச்சி செய்து வெளிப்பாடு பெற்றதுபோல பேசும் வேதாகமக் கல்லூரி பேராசிரியரும் இதில் அடங்குவர். எத்தனை எத்தனை அபத்தங்கள் ஆவிக்குரிய உலகில் இதனையும் கேட்டு 'அல்லேலூயா" என்று ஆர்ப்பரிப்பவர்களும் உண்டு. இவரைப்போல பேசுபவர்கள் இல்லை என புகழ் பாடுவோரும் உண்டு. ஆசாரியர் உதடுகளில் வேதத்தை தேடுவார்கள் என்பதை மறக்கலாகாது (மல் 2:7). 

என் ஜனம் அறிவில்லாமற் சங்காரமாகிறார்கள் என்று தேவன் உரைப்பது (ஓசி 4:6) இதனைத்தானோ?

இன்று கிறிஸ்துவை அறியாதோர் நம்மிடத்தில் ஓடி வருவதற்கு வேதம் உயர்த்தப்படவேண்டுமே. எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி வருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (ஏசா 2:2,3) என்பது வாக்குத்தத்தம் அல்லவா!

வேதம் போற்றப்படாத, மதிக்கப்படாத, விரும்பப்படாத இடங்களில் தீர்க்கதரிசிகளுக்கு தரிசனம் கிடைப்பதில்லை என்பதனை மறக்கலாகாது (புல 2:9). நீதி 29:18 - ஆம் வசனமும் இதனைத்தான் வலியுறுத்துகிறது. தரிசனமற்ற அநேகருடைய வாழ்வுக்குக் காரணம் வேதம் போதிக்கும், உணர்த்துவிக்கும், உந்தித்தள்ளும் உண்மைதனையும், முழு வேதாகமம் அருளும் விளக்கத்தினையும் அவர்கள் காணக்கூடாதபடி கண் சொருகி இருப்பதினாலேயே, தரிசனம் அற்ற ஒரு வாழ்க்கையில் உத்வேகம் காணப்படாமல், உள் நோக்கத்தின் அடிப்படையில் சுயலாபம் தேடும் காரியங்கள் அதிகமாகக் காணப்பட ஏதுவாகும். அதுவும் தேவன் தராத தரிசனங்கள் ஜனத்தினை வேறு திசைக்கு கொண்போய்விடுமே!

எனவே வேதத்தின் அறிவைப் பெருக்குவோம், நேசிப்போம், அது என் மனமகிழ்ச்சி என்று முழங்குவோம், ஆராய்ந்து காலத்தினையும் புரிந்துகொண்ட வாழ்விற்கு ஒப்புக்கொடுப்போம். கடமைதனை செய்ய கர்த்தரின் பெலத்தினையும் பெற்றுக்கொள்வோம். வருங்கால சந்ததிக்கும் கற்றுத் தருவோம் நாமும் கற்றுத் தேறுவோம். நாம் தேறுகிறது மற்றவர்களுக்கு விளங்குவதாக (1தீமோ 4:15) அது தேசத்தினை அசைக்கப் போதுமான பெலனுள்ளது. 

தேவன் அருளிய வேதம் நம் இருதயத்தில் இருந்தால் நம்முடைய நடைகள் பிசகுவதில்லை (சங் 37:31).

அவருடைய வசனம் நம்மை நிரப்பினால் அவருடைய சித்தத்தினை அறிந்துகொள்வதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும் மிகவும் எளிதாகிவிடும் (சங் 40:8).

தேவ வார்த்தைகளைக் கற்று அதில் நடக்க முயற்சி செய்வோர் கறையற்ற பழுதற்ற வாழ்க்கை வாழ்வதனை அனுதினமும் அனுபவிப்பார்கள் (சங் 119:1).

வேதத்தினை நேசித்து அதன்படி நடக்க ஒப்புக்கொடுத்தோர் மாயையான வழிகளுக்குத் தங்களை ஒப்புக்கொடாமல், ஏமாற்றும் பாதைகளில் நடவாமல் காப்பாற்றப்படுவார்கள் (சங் 119:29).

தேவ வார்த்தைகள் நமக்கு மனமகிழ்ச்சியானால், நாம் அமிழ்ந்து மாண்டு போகாமல், அது துக்கத்தினாலேயோ, உபத்திரவத்தினாலேயோ ஏற்பட்டாலும் காக்கப்படுவர் (சங் 119:92).

தெளிந்த புத்தியும் நல் உணர்வும் கொண்ட வாழ்க்கைதனை வாழச் சிறந்த வழி வேதத்தினை இதயத்தில் காத்துக்கொள்வதே (சங் 119:34). வீண் சிந்தைக்கும் பேச்சுக்கும் நம்மை விலக்கி இருமனம் கொண்ட வாழ்வில் இருந்து தற்காக்க வேத வார்த்தைகளுக்கே வல்லமை உண்டு (சங் 119:113).

என்னை பெரியவனாக்கி முதியோர்களையும் விட ஞானமுள்ளவனாக மாற்ற உதவுவது வேத தியானமே (சங் 119:99.100).

அடுக்கிக்கொண்டே போகலாம் இலையுதிரா வாழ்வு, செய்யும் காரியங்களில் வெற்றி, எத்திசையிலும் பயனுள்ள வாழ்வு, புத்தியுள்ள மேன்மையான வாழ்வு, தேவ பிரசன்னத்தை ஏந்திச் செல்லும் பாத்திரமாக மாற்றப்படும் பாக்கியம் (சங் 1:4; யோசுவா 1:7,8).

எனவே கர்த்தாவே உம் வேதத்தின் அதிசயங்களை நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் எனக் கெஞ்சுவோம் (சங் 119:18). 


ஆவிக்குரிய முலாம் பூசி ஆவிக்குரியவர்களையும் மூடராக்கி

ஆணையிலிருந்து விலகச்செய்து ஆண்டவருக்கும் தூரமாக்கி

சாயலில் இருப்போரையும் சடுதியாய் வந்து வஞ்சித்துவிடுவான்

சத்துருவின் தந்திரமிது சந்ததி நாம் எச்சரிக்கையோடிருப்போம் 


அனுபவம் அனுதாபமென ஆடைகள் பல போர்த்திக்கொண்டு

அனுப்பப்பட்டோரின் வாழ்க்கையில் அவர்களாகப் புகுந்துகொண்டு

இளைய தீர்க்கரின் பயணத்தை இவர்களாகவே இடைமறிக்கும்

கிழவர்கள் வார்த்தைகளுக்கும் நாம் கவனமாயிருக்கவேண்டுமே!


சத்தியத்தை மறைத்துவிட்டு சாதகமாயதைச் சாய்துக்கொண்டு

சத்துருவுக்குச் சகோதரராய் சத்தியத்திற்கோ துரோகிதராய்

சந்தியில் செய்தி சொல்லி ஆத்துமாக்களின் உயிர்க் கொல்லியாய்

சுற்றுவோரின் சுருக்கு மடியில் சிக்கிக்கொண்டால் பரிதாபமே!


கன்னிகையாம் சபை தினம் கறைபடாமல் காக்கப்படட்டும்

வார்த்தையாம் ஆயுதம் வாளாய் நம் கையிலிருக்கட்டும் 

ஒளியாம் வேதம் ஒவ்வொரு நாளும் உயர்த்தப்படட்டும்

வழிகள் பிசகாதிருக்க இதயம் அதால் நிறைந்திருக்கட்டும்


பிதாவுக்குப் பிரியமாயிருக்க நம்மைப் பயிற்றுவிப்பது அதுதானே

கறையற்ற வாழ்வுக்கு நம்மை வழிநடத்துவதும் அதுதானே 

மாயையான வாழ்க்கைக்கும் அதுதான் நம்மை விலக்கிக் காக்கும்

மறுவுலக வாழ்விற்கும் அதுதான் நம்மை வழிநடத்திச் செல்லும்



                                                                       அன்பரின் அறுவடைப் பணியில்

                                                                   அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்