கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கி, பகலுக்குப் பகல் வார்த்தையைப் பொழியவும், இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கும்படிச் செய்தவருமாகிய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகள்.
தேவன் மனிதனோடு பேசுவது மாத்திரமல்ல, தானே தன்னுடைய விரல்களினால் எழுதிக்காட்டுபவர். யாத். 31:18-ன்படி, 'தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்". அவைகளை மோசே இஸ்ரவேல் புத்திரரின் அருவருப்பான ஆட்டத்தினைக் கண்டு உடைத்துப்போட்டா
லும், மீண்டும் அவைகளை எழுதிக்கொடுத்தார் (யாத். 34:1; உபா. 9:10). அவைகள் தேவ ஜனங்கள் வாழும் வகையைக் கண்டுகொள்வதற்கு உதவியாகத்தரப்பட்டது.
லும், மீண்டும் அவைகளை எழுதிக்கொடுத்தார் (யாத். 34:1; உபா. 9:10). அவைகள் தேவ ஜனங்கள் வாழும் வகையைக் கண்டுகொள்வதற்கு உதவியாகத்தரப்பட்டது.
அதேவிதமாக, தண்டனையாக அவர் பெல்ஷாத்சாரின் துணிகரமானக் காரியங்களை உணர்த்துவித்து, நியாயத்தீர்ப்பை எழுதிக் காட்டினார் (தானி. 5:5). அந்த எழுத்துகளை அநேகரால் வாசிக்கக்கூட இயலவில்லை. அது SMS-ஐப் போன்றது. அதின் அர்த்தத்தினை வரம் பெற்றவனும், வயதானாலும் தேவனோடு நெருக்கமாய் வாழ்ந்தவனுமாகிய தானியேல் விளக்கிச் சொன்னபோது, அதன்படியே நடக்கவும் செய்தது (தானி. 5 அதி).
சில வேளைகளில், அவர் தம் வார்த்தைகளை தீர்க்கன் ஒருவனின் வாயில் போட்டு, அதனை அவனுடைய உதவியாளனைக் கொண்டு எழுதிக் கொடுத்தார்.
'கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்". (எரே. 30:1,2)
மாம்சத்தில் வெளிப்பட்ட நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், மக்களுக்கு விளக்கிக் கூற தரையில் எழுதினார் என்றே வாசிக்கிறோம் (யோவான் 8:8).
வெளிப்படுத்தின விசேஷத்தில், 'நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது" (வெளி. 1:19) என்று Dictate பண்ணுகிறதையும், பின்னர் 7 சபைகளுக்கும் செய்தியினை அனுப்ப யோவானுக்கு DICTATE பண்ணுவதனையும் காண்கிறோம் (வெளி. 2:1, 8, 12, 18; 3:1, 7, 14). அது எல்லா சபைகளிலும் வாசிக்கப்படவேண்டும் என்பதனை உணர்த்தும் வண்ணம், 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது" என்றும் கட்டளையிடுகிறார் (வெளி. 2:7, 11, 17, 29; 3:6, 13, 22).
இவைகள் நமக்கு உணர்த்தும் காரியங்கள், அந்த வகையறுத்தலும், செய்தியும் இன்றைய சபைகளுக்கும் பொருந்தும் அல்லவா! அதே எண்ணத்தில், ஆண்டவர் இன்றைக்கு உள்ள சபைகளுக்கு எழுதுவார் என்றால், அந்தக் கடிதம் எப்படி இருக்கும்? என்று மனதில் சிந்தித்தவனாகவும், ஆவியில் ஏவப்பட்டவனாகவும், மிகுந்த பாரத்தோடு எனக்குத் தோன்றிய வண்ணம் எழுத முற்பட்டேன்; அவைகள் சிலருக்கு ஏளனமாகத் தோன்றலாம். ஆனால், அவை இந்நாட்களின் நிலமையை உணர்த்துவிக்கப் பலம் பெற்றவை என்பதனை அறிந்தவனாக (ஒருவேளை இதனை அதிகப் பிரசங்கித்தனம் என்று சிலர் அழைக்கலாம்) இந்த மடலை சமர்ப்பிக்கிறேன்.
தேவன், 'அவருடைய வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் நம்மைப் பட்சித்தது" (யோவான் 2:17) என்று நம்மையும் குறித்து சொல்லவைப்பாராக.
1. குளிர்ந்து வெறுமனே அசதியோடு இயங்கும் சபை (Cold & Liturgical Churches)
நீ ஆரம்பித்தது நன்றாய் இருந்தது; நானும் அதில் மகிழ்ந்தேன். ஆனால், இன்றோ 'குளிர்ந்த ஆவியோடு என்னை ஆராதிப்பதும், ஏனோ தானோ என்று என் சமுகத்திற்கு வருவதனையும் மிகுந்த வேதனை அடைகிறேன்". விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே தேவபயத்தோடு நடப்பதனைக் காண்கிறேன்; அவர்கள் தங்கள் சுதந்தரத்தினைப் பெற்றுக்கொள்வார்கள். தங்களுக்குக் கிடைத்தக் கொஞ்ச வெளிச்சத்திலாகிலும் எனக்குப் பயப்படும் பயத்தோடு நடந்தார்களே!
2. பாரம்பரியமும் பழமையான மரபு வழிபாடும் செய்யும் சபை (Traditional and Orthodox Churches)
பழைய ஏற்பாட்டில் நிழலாகச் சொல்லப்பட்டவைகளை அறிந்து ஆராய்ந்த நீ, அதனை ஆவிக்குரிய வெளிச்சத்தில் காணத் தவறிவிட்டாய். அது உன்னை வேஷங்களைப் போடவைத்து, பலவித வண்ண வண்ண உடைகளை நேர்த்தியாய், வேளைக்கு வேளை மாற்றினால்தான் பக்தி என்ற தவறான எண்ணத்தில் நீ வாழ்கிறாய். அவைகளை நான் வெறுக்கிறேன். நீ வாழும் இந்திய தேசத்திற்கும் அவை ஒவ்வாதவைகள். ஏனெனில், இங்கே மதக் குருவை 'தியாகத்தோடு வாழ்பவனாகக் காணவே மக்கள் விரும்புகிறார்கள். எனவே, உன்னுடைய வேத (பழைய ஏற்பாடு) அறிவே அவர்களுக்கு இடறலாகப் போய்விட்டதே!
மாய்மாலத்தை வெறுக்கும் நான் அதற்குரிய தண்டனைகளை என்னுடைய வீட்டிலேயே துவக்கப்போகிறேன்; எனவே, மனந்திரும்பு.
உன்னிலும் (விசேஷமாகக் கற்காதவர்கள்) இதுதான் தேவனை நெருங்கிச்சேர வழி என்று நினைத்துவிட்டார்கள்; அதற்கு, அவர்கள் பொறுப்பல்ல. எனவே, அவர்களுக்குரிய சிறிய பங்கை நான் வரும்போது என்னிடத்தில் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
3. பெயரளவில் ஆவிக்குரிய சபைகள் (So-called Spiritual Churches)
ஆவியில் களிகூர்ந்துதான் ஆரம்பித்தாய்; ஆனால், பின்னர் உன்னுடைய உள்ளான அசுத்தங்களை மறைக்கவே அதை உடுப்பாக்கிக்கொண்டாய். உன் ஆவியின் பெலன் வீணாக்கப்படுவதோடு, அர்த்தமற்றதாகிவருகிறதே. இதை நீ அறியாமல் இருப்பது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. கூடவே, உன்னுடைய சந்ததியில் அநேகர் 'மறுபடியும் பிறக்கவில்லை". நீயோ அவர்களை உயர்தலங்களில் சபையில் உலாவச் செய்திருக்கிறாய்.
உன்னைக் குறித்து நான் வைத்திருந்த தீர்மானங்கள் எல்லாவற்றிலும், நீயே மண்ணைப் போட்டுக்கொண்டாய். ஆயினும், உன்னை உயிர்ப்பிக்கவேண்டும் என்றே நான் பிரயாசப்படுகிறேன். அதற்காக ஆவியின் பின்மாரி நாட்களில் நீயும் ஆசீர்வதிக்கப்படலாம்.
4. சுவிசேஷ சபை (Evangelistic Church)
சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இந்நேரம் வரைக்கும் அதற்கு உடன்பட்டது மாத்திரமல்லாமல், மற்றவர்களுக்கும் அதனைப் பகிரவேண்டும் என்று நீ வாஞ்சிக்கிறாய்.
ஆனால், சுவிசேஷ பூரணத்தை அனுபவிக்கும் ஆவல் உன்னிடத்தில் இல்லாததனைக் கண்டு எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. புறஜாதியாரைக் கீழ்ப்படியப்பண்ணும் தேவ ஆவியின் பெலத்தையும், வரங்களையும் நீ வாஞ்சிக்கவேயில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு.
சுவிசேஷத்தினைப் பரப்ப நான்; வைத்திருக்கும் இந்த முறையினை நீ அறிந்தால் எத்தனை நலமாயிருக்கும். ஆயினும், சுவிசேஷ விசேஷத்தில், நீ மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவேண்டியதை அறிந்திருப்பதனை நினைத்து, உன் நாமம் ஜீவபுஸ்தகத்தில் உள்ளது என்ற சந்தோஷம் உனக்கு எப்போதும் உண்டு.
5. ரோமன் கத்தோலிக்கச் சபை (Roman Catholic Church)
உன்னுடைய சமூகச் சேவைகள் உன்னைப் பெருமைகொள்ளச் செய்திருக்கிறதையும், அதின் நிமித்தம் நான் இடையிடையே உன்னை உயிர்ப்பித்து கண்களைத் திறக்க முயன்றும், நீயோ, 'எனக்கு ஒரு குறைவும் இல்லை" என்றும், 'யாரும் எனக்குப் போதிக்கவேண்டியது இல்லை" என்றும் இறுமாப்படைந்தது எனக்கு வேதனை அளிக்கிறது.

உனக்கு வைத்திருக்கும் ஆக்கினையை நீ அறிந்தால் நலமாயிருக்கும்.
6. பொழுது போக்கிற்கான சபை (Entertaining Church)
சபை என்ற பெயரில் மக்களைக் கூட்டி, உல்லாசமான வார்த்தைகளையும் இச்சகமான வார்த்தைகளையும் பேசுவதே உன் கிரியை. சபை கூடிவருவதில் உன் நோக்கமே வேறு. வாலிபர்களைச் சேர்க்கவே இப்படிச் செய்கிறேன் என்று நீ என் வார்த்தைகளைத் திரித்துக் கூறி, அநேகரை கேட்டுக்கு நேராக வேகமாக நடத்திச் சென்றுகொண்டிருக்கிறாய்.
உன்னை சபை என்றே நான் ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என் நாமத்தினை நீ வீணாய் உபயோகிக்கிறாய்; அதற்குரிய பலனை நீ அடைந்தே தீர்வாய்.
7. உள்ளான பார்வை மாத்திரம் கொண்ட சபை (Inward Looking Church)
எந்த வேலையும், கவலையும் உனக்கு உன்னைப் பற்றியதே. சபைக் கட்டிடத்தினை எப்படி அலங்கரிக்கவேண்டும் என்பதே உன் சொப்பனம். மக்களின் காணிக்கையை விரயமாக்கி, உனக்குப் பெயர் உண்டாக்கவேண்டும் என்பதிலே உன் கவனம் யாவும் அடங்கும்.
ஆராதனை செய்கிறாய்; ஆனால், உன் தற்பெருமையைத்தான் ஸ்தோத்திரபலி என்ற பெயரில் கக்கிக்கொண்டிருக்கிறாய். இதனால், உனக்குள்ளே ஏராளமான குழுக்கள் தோன்றி, ஒருவருக்கொருவர் தாக்கி அழிவதே உனக்குக் கிடைத்த பரிசு.
ஆயினும், உன்னில் சிலர் இருதயத்தில் மிகுந்த வேதனைகொண்டு, என் சமுகத்தில் அழுது புலம்புவதனையும் என்னால் கேட்கமுடிகிறது. அவர்கள் நிமித்தம் உன்னை அதிகமாய் சிட்சிக்கவில்லை; ஆயினும், எதுவரை பொறுமையாய் இருப்பேன். உன் மக்களும், செல்வமும், கிருபைகளும் மூலையில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. என் நோக்கத்தைக் குறித்து உனக்குக் கவலையில்லையோ!

8. சமூக சேவையை மாத்திரம் கொண்ட சபை (Active in Social Work)
உன் கிரியைகள் உன்னை இரட்சிக்காது. ஆனால், நீயோ அது உனக்குப் போதும் என்றும், புறஜாதியாரைப் போன்று பாவம், புண்ணியம் என்ற வார்த்தைகளைக் குறித்து நீ தெளிவற்றும் இருக்கிறாய், பாவமும் செய்கிறாய். அதைவிட அதிகமாக, புண்ணியம் செய்தால் பரலோகம் சென்றுவிடுவேன் என்பதே உன் எண்ணம். இதற்குக் காரணம், என் வசனங்களை ஒழுங்காக நீ படிக்கவில்லை. அதின் வெளிச்சத்தினை நீ நாடவும், என் நாமத்தை அறிந்து அதினால் கிடைக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் நீ விரும்பவில்லையே!
உனக்கும் புறமார்க்கத்தவர்களுக்கும் வித்தியாசமில்லை. உன்னையும், உன்னுடைய தர்மங்களையும் அவர்கள் பாராட்டவேண்டும் என்பதே உன் பிரதான நோக்கமாயிருக்கிறதே.
என் வேதத்தினை அந்நிய காரியமாக எண்ணாதே! அது உன்னை ஒரு நாளில் நியாயந்தீர்க்கும். 'ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்" (1கொரி. 16:22) என்பதனை மறவாதே.
9. பணமே பிரதானம் என்று வாழும் சபை (Money-centered and Backslidden Church)
'ஐசுவரியமும் கனமும் என்னால் வருகிறது என்று நீ அறிந்தபோதிலும், இறுமாப்படைந்து, நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்து, சகலவித நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாய்த் தருகிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தினால் எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொள்ளுவேன் என்று கூறி, பிரசங்கத்தை எல்லாம் அதைச் சுற்றியே தயாரித்து ஜனங்களுக்குத் தந்தாய். நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நண்பரைச் சேர்த்து, நன்மை செய்து, நற்கிரியைகளையும் இணைத்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தவறி, உன்னை ஐசுவரியவானாகக் காண்பிக்க, கடனையாகிலும் வாங்கியோ, மாதத்தவணையிலாவது பொருள்களை வாங்கிக் குவித்தோ, அவைகளால் ஆளப்பட்டு, சிக்குண்டு கிடக்கிறாய். அதுவும், உன் கண்களுக்கு மறைக்கப்பட்டிருப்பதால், உன்னை நான் தொடும்படிக்கும், நீ விடுதலையாகிவிடும்படிக்கும் என்னிடத்தில் ஓடிவந்துவிடு.
10. பெரிய பட்ஜெட்டையும், தவறான இலக்கையும் கொண்ட சபை (Church with Big Budget and Infrastructure)
ஜனத்தினைப் பிழிந்து, நான் கட்டளையிடாததை நான் சொன்னேன் என்று கூறி, உன் விருப்பங்களை நிறைவேற்ற, அதற்கேற்ற வசனங்களைத் தேடிக் கண்டுபிடித்து (அரைகுறையாக), சாலொமோன் செய்ததுபோல, கண்ணீரோடு கர்த்தரை சேவிக்க ஜனத்தை ஏவிவிட்டாய் என்று நான் உன்மேல் குற்றம் சுமத்துகிறேன்.
என் காலத்தில் அதை செய்துமுடிக்கவேண்டும் என்று கமிட்டியார் கூடி உனக்குத் தவறானவைகளைச் செய்யத் தூண்டினபோது, அதுவே உன் கனவாகவும் இருந்தபடியால், அவர்கள் ஆலோசனைக்கு இணங்கி நடந்தாய் அல்லவா!
உன்னையும், உன்னைச் சார்ந்தவர்களையும் பூமிக்கடுத்தவைகளை அல்ல, மேலானவைகளையே அதிகம் நாடவைக்கவேண்டும் என்ற சிந்தை மாறி, இன்று உன் நேரமும், பெலனும், யுக்திகளும் அதற்காகவே செலவிடப்படுவதினால், என் பாதம் அமரும் பாக்கியத்தினை நீ இழந்தாய்.
திரும்பி வா. நாம் இணைந்து மக்களைக் கட்டுவோம். கட்டிடம் தேவைதான்; ஆனால், நான் விரும்பும் விதத்தில் அது அமையவேண்டும்.
சுவிசேஷம் சொல்லவே உனக்கும் உன் ஜனத்துக்கும் நேரம் இல்லாதபடிச் செய்த உன் பொல்லாத செய்கையை நான் வெறுக்கிறேன். நீயோ, 'கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்" என்று உன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாயே.
11. துர் உபதேச சபை (Cult Church)
தாங்கள் சொல்லுவதும், சாதிப்பதும் என்ன என்றே தெரியாதவர்கள் உன்னிலிருந்து எழும்பி, ஓர் சத்தியத்திற்கு எல்லாவற்றிலும் மேலாக முக்கியத்துவம் தந்து, தங்களையே தேறினவர்களாகக் காண்பித்து, மற்றவர்களைக் குறித்தத் தவறான எண்ணங்களை மக்கள் மனதில் பதியவிட்டு, தனிக் குழுவாகி, தனிச் சபையாகி, தன்னிச்சையாய் நடந்து, அதனைப் பரப்புவதனையே தலையாயக் கடமையாக்கிக்கொண்டார்களே!
அவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும் என்பதுதானே என் ஊழியக்காரன் கொடுத்த ஆலோசனை. அரிபிளவுபோல அது பரவுமே. அதிசீக்கிரமாக முளைக்கும் களைகளுக்கு நீரை வார்த்ததுபோல, நேரம், பணம், ஈர்ப்பு அனைத்தையும் அந்த கொள்கையைப் பரப்புவதற்கே என்று காண்பித்து, அநேகரை நீதி பாதையினின்று திசைதிருப்புவதில் வெற்றியும் கண்டு, முடிவில் அழிவைச் சந்திக்க நீ பயப்படாமற்போனதென்ன? உருவின பட்டயத்தை உடையவர் நான் என்று அறியமாட்டாயோ! வைராக்கியம் பாராட்டும் நீ, என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து அல்லவோ மேன்மை பாராட்டியிருக்கவேண்டும்; மாறாக, வெறிகொண்டவனைப்போல நடந்துகொள்கிறாயே! என் பட்டயம் யுத்தம் செய்யவேண்டுமோ!
12. உயர் நிலையிலேயே வைத்துக்கொள்ள முயற்சிக்கும் சபை
( Status Keeping Church)
ஏராளமான உந்துவிக்கும் பிரசங்கங்கள் (motivational talk); ஆனால், அவை வேதத்திலிருந்து புறப்படுகிறவைகள் அல்ல; மாறாக, உலக ஞானத்தில் இருந்து புறப்படுகிறவை.
சாதக முறை (Positive approach) பிரசங்கங்கள், வேதத்திலிருந்துதான்; ஆனால், வேதம் சொல்லும் 'கருப்பொருளைப்" புரிந்துகொள்ளாதபடி கண்சொருகிப்போனதினால், தன் தவற்றைப் புரிந்துகொள்ளக்கூடாதது.
அனைவரையும் நன்றாக உடுத்திக்கொண்டு வரச்செய்து, ஏழைகளை அற்பமாக எண்ணி, வேறு ஒரு இனத்தார் என்று காண்பிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி, அப்படிப்பட்டவர்களை மாத்திரம் கனம்பண்ணி, வெறும் பந்தாக்களாகவே வாழ்கிற மக்களால் அதே மனதுடையவர்களை மதித்து, கவுரவப்படுத்தி, மனிதர் புகழ்பாடி, தேவனையும் கூடவே வம்புக்கு இழுத்து, யார் பெரியவன் என்பதில் கவனமாய் இருக்கிற இந்த கேடுகெட்ட சபையை நான் புறக்கணிக்கிறேன்.
13. சமூகக் கூடுகை சபை (‘Social Gathering’ Church)
தேவனைச் சந்திக்கவோ, தேவ வார்த்தையைக் கேட்கவோ விருப்பமற்று, தெரிந்தவர்களைச் சந்திக்க, சம்பந்தம் கொள்ள, நேரத்தைப் போக்கடிக்க, fellowship என்ற பெயரில் வம்பளக்க, நவீனக் காரியங்களையும் மற்றும் புதுப் புதுப் பொருட்களையும் அறிமுகப்படுத்த உபயோகப்படும் பிளாட்பாரமாகவே சபை என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சபையா நீ?

என்னைத் தேடுபவர்களுக்கும், தேடாதவர்களுக்கும் வித்தியாசத்தை காண்பிக்கும் நாள் அதிசீக்கிரம், ஜாக்கிரதை!!
14. கதாநாயக வழிபாட்டுச் சபை (Hero Worship Church)
தேவன் அமரவேண்டிய இடத்தில் மனிதன் உட்கார்ந்து, அவனுடைய ஆவியே அநேகரை கட்டிப்போட நீ உன்னை ஒப்புக்கொடுத்தாய்.
அவனா உங்களுக்காக சிலுவையில் அறையுண்டு இரத்தம் சிந்தினான்? பாவமில்லாத மாசற்ற இரத்தம் சிந்தி உன்னை மீட்டவர் நான் அல்லவோ! மனிதனை மதிக்கவேண்டும்; ஆனால், தொழுகையோ, துதிபாடலோ அவனுக்குரியது அல்லவே! என் வார்த்தைகளைத் தள்ளி, அவனுடைய கற்பனைகளையே உபதேசிக்கக் கற்றுக்கொண்டு, தனிமனித வழிபாடு எப்படி சரி என்கிறாய்?
புல்லுக்கு ஒப்பானவனும், புகைக்குச் சமானமான அவனையா பற்றிக்கொள்கிறாய்? அவன் வாக்குத்தானே உன்னை வழிகாட்டுகிறது. உன் கண்களைத் திருப்பு.
உன்னை என்னிடத்தில் வழிநடத்தத் தவறிவிட்ட அவனும், அவனைப் பின்பற்றும் நீயும் ஒருமிக்க விழுவீர்களே! நாசியில் சுவாசமுள்ள மனிதன் உன்னை கறளைச்செடியாய் மாற்றிவிடுவேன்; கொண்டல் காற்றுப் பறக்கடிப்பதுபோல உங்களைப் பறக்கடிப்பேன்; கவனம்.
15. பின்மாறிப்போன சபை (Backslidden Church)
ஒருகாலத்தில் பிரகாசிக்கப்பட்டிருந்த உன்னை இப்படி மாற்றிக்கொள்ளச் செய்தது எது? யார்? உலக சிநேகமா? சுகபோகமா? கள்ளத் தொடர்புகளா?
ஆவிக்குரிய விபச்சாரம் என்பது என்னையும், உலகத்தையும் நேசிப்பதினால் என்பதனை, நான் இந்த பூமியில் இருந்த நாட்களில் உரக்கச் சொன்னேன் என்பதனை நினைத்துப் பார்.
ஓடி ஓடி களைத்துவிட்டாயோ! அல்லது யாரையாவது பார்த்து இடறிவிட்டாயோ! உலகமும் அதின் இச்சைகளும் அழிந்துபோகுமோ! ஜெபக்குறைவும், தேவ அன்பின் மேல் சந்தேகமும், தேவ பிள்ளைகளோடுள்ள ஐக்கியக் குறைச்சலும், இரகசியப் பாவமும், அறிக்கைசெய்து விட்டுவிடக்கூடாத உறவுகளும், தகாத சம்பாஷனைகளில் ஏற்பட்டக் களிப்பும், பாவத்தின் மேல் வெறுப்பைத் தராத கிருபையின் செய்கைகளும் உன்னை இந்த நிலையிலே வைத்துவிட்டதோ!
ஆரம்ப நாட்களை நினைத்துப் பார்; மீண்டும் தூசியை விட்டு எழும்பு; மரித்தோரை விட்டு உன் படுக்கையை மாற்று; ஆரோக்கியமான சூழ்நிலைக்கு உன்னை விட்டுக்கொடு; காலையில் தரப்படும் கிருபையை வாஞ்சித்து காத்திருந்து பெற்றுக்கொள்; உனக்கு இன்னமும் வேலை இருக்கிறது.
16. தனிப்படுத்திக்கொண்ட சபை (Secluded Church)
இயேசுவாகிய என் சரீரத்தினைக் குறித்த விளக்கமே தெரியாமல், தாங்கள் மாத்திரம்தான் பிரித்து எடுக்கப்பட்டவர்கள் என்றும், உலகத்தால் கறைபடாதபடிக் காக்கிறவர்கள் என்றும் தம்பட்டம் அடித்தே நீ உன்னைக் கெடுத்துக்கொண்டாய்.
மற்றவர்களை அணுகவோ அல்லது சுவிசேஷத்தினைச் சுமந்து செல்ல ஜனங்களை (விசுவாசிகளை) ஊக்கப்படுத்தவோ நீ பேசுவதேயில்லை. “GROW While you Go” என்ற தத்துவம் உனக்குத் தெரியாத புதிர்.
உள்ளேயே அநேக அசுத்தங்கள் இருந்தும், வெளி உலகுக்கு அவைகள் வந்துவிடக்கூடாது என்பதில்தான் உன் கவனம். ஆவியில் நிறைந்துத் துள்ளினால், நீ ஆவியின் நிறைவைப் பெற்றிருக்கிறாய் என்று நினைத்து உன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய். உனக்குள்ளும் அநேக பரிசுத்தவான்கள் உண்டு; ஆனால், பணக்காரியங்களைக் குறித்து, அதனை பல காரியங்களுக்குப் பயன்படுத்தி, பரலோகத்தை மகிழச்செய்ய நீ தவறிவிட்டாய். மாறாக, உன்னுடைய காணிக்கைகளை நீயே சாப்பிட்டு ஏப்பம்போடுகிறாய்.
வருகையைக் குறித்துப் பேசும் உனக்கு, இந்த இராஜ்யத்தின் சுவிசேஷம் கடைசி மனிதனை அடைந்தால் மாத்திரமே சாத்தானுடைய இராஜ்யத்திற்கு முடிவு உண்டாகும் என்பது ஏன் விளங்கவில்லை?
உன் எக்காளத்தினை வாயிலே வை, ஊது, எச்சரி. எழுந்து சென்று எல்லாரையும் அறியப்படாத மக்களுக்கு நற்செய்தி சொல்லச் செய்திடு.
17. அனலற்ற பிரசங்கங்களால் நிறைந்த பிரசங்க பீடங்களைக் கொண்ட சபை (DRY Church)
உயிர் தந்த நான் சொன்ன வார்த்தைகள், கேட்கும் மனிதனை அனல்கொள்ளச் செய்யும். ஆனால், உன்னுடைய வேத அறிவும் பிரசங்கக் குறிப்புகளும் அபாரம்; ஆனால், அவைகள் ஜீவனில்லாமல் பிரசங்கிக்கப்படுவதால் (ஏனெனில் நீ ஆவியானவரின் அபிஷேகத்தினை நம்புகிறதில்லை. அவருடைய அருட்கொடைகளையும் கேலிசெய்கிறாய்), உன்னைக் கேட்பவர்கள் தூங்கிவிழுகிறார்கள். சபை கூடிவருதலுக்குத் தவறாமல் வருகிறார்கள், போகும்போது இன்னும் வறண்டுபோய்த் திரும்புகிறார்கள்; இதிலேயும் நீ உணர்வடைவதில்லை.
உன் ஜனங்கள் அறிவில் தேறினவர்கள்; ஆனால், அன்பில் பாஸ் (pயளள) மார்க் தானும் வாங்கவில்லை. என்னே! அன்பற்ற அவர்கள் ஆத்தும பாரம் கொள்வது எப்படி?
'உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்" என்றான் என் தாசன் தாவீது. உன்னில் அந்த உற்சாக ஆவியில்லாமல்போனதால், நீ சந்திக்கிற மக்களையும் அது கவருவதில்லை. எதுவரைக்கும் இது இப்படி இருக்கும்? வறண்ட நிலத்தில் ஆறுகளையும் தண்ணீரையும் ஊற்றுகிற நான் உன்னை ஆனந்த தைலத்தால் நிரப்பத் துடிக்கிறேன். கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் பாரேன்.
18. உந்தும் சக்திகள் (ஆனால் அது உலகத்தின் முறை) கொண்ட சபை) (Church with using Positive Thoughts)
வியாபார முறையினை நீ கற்றதனைக் காட்டிலும், என்னுடைய சத்திய வேதம் காட்டும் சத்தானவைகளைப் போதித்து, சிட்சித்து, சீர்படுத்தி, பலப்படுத்தி, ஸ்திரப்படுத்த உன்னுடையவர்களை நீ பயிற்சிப்பித்திருந்தால் எப்பொழுதோ உன் ஜனங்கள் ஆவிக்குரியவர்கள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். மாறாக, இன்றோ, குறைதனைச் சுட்டிக்காட்டுதலை விரும்பாமல், அழுக்கோடும், அவல நிலையோடும், தன்னிச்சையாகத் திரியவும், தனக்கானவைகளையேச் சிந்திக்கவும் ஆரம்பித்து, தன்னை சமுதாயத்திலும், சங்கத்திலும், வேலை ஸ்தலங்களிலும் உயர்த்திக்கொள்வதனையே வாஞ்சித்து, என் வேதத்தினைப் படிப்பதனைக் காட்டிலும் வல்லுநர்களின் புத்தகங்களையே அதிகம் விரும்பிப் படித்து, (Success stories) வெற்றி தரும் வாழ்வு போன்ற உலக வெற்றியையோ, வியாபார வெற்றியையோ போதிக்கும் புத்தகங்களுக்கு அடிமையாய்ப் போனார்கள்.
நான் எழுதிக்கொடுத்தவைகள் ஞானமுள்ளவைகள் என்றும், பேதையையும் அது ஞானி ஆக்கும் என்பதும் உனக்கு அந்நியக் காரியமாகிவிட்டதோ?
ஜனங்கள் அதினால் உற்சாகம் அடையக் காரணம், அவர்கள் மண்ணுக்குரியவைகள் மேல் மிகுந்த நாட்டம் உடையவர்கள். நீ போடும் தீனி அவர்களுக்கு Boost - ஐக் கொடுக்கிறது. நீயும் உன் போதனைகளும் பதருக்குச் சமம். என் வார்த்தைகளோ கோதுமை மணிகளுக்குச் சமம். என் வார்த்தைக்குத் திரும்பு (Back to the Bible); அதுவே உன்னை நியாயம்தீர்க்கும் என்பதனை மறவாதே.
19. ஜெபித்து ஒழுங்கோடு முன்னேறும் சபை
(Praying & Systematically Progressing Church)
நான் பூவுலகில் இருந்தபோது, என் ஜெப நேரத்தினைத் திருட சூழ்நிலைகளுக்கோ (கெத்சமெனேயிலும்), வேலை களைப்புக்கோ (ஊழியம் செய்துமுடித்து, ஜனங்களை போஷித்த பின்னரோ) ஒருபோதும் விடவில்லை. கற்றுக்கொடுங்கள் என்று என்னுடன் நடந்தவர்களே கேட்டார்களே!
என் உறவு பிதாவிடத்தில் இல்லாமல் போனால், என் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும் அல்லவா! என் ஊழியம் தேவ உறவில் நடந்தது; அதனை என்னுடைய அப்போஸ்தலர்களும் அறிந்து அப்படியே செயல்பட்டனர்.
இந்த இரகசியத்தினை நீ புரிந்துகொண்டு முயற்சிக்கிறாய்; உன்னை வாழ்த்துகிறேன். ஆயினும், உன் ஜெபத்தினை நான் கேட்டு, கிரியைசெய்வதனை உற்றுநோக்கி, அதோடு காணாதவர்களத் தேடும் பணியினை நிறைவேற்றுவதில் நீ தீவிரம் காட்டவில்லையே என்று உன் பேரில் எனக்குக் குறைவுண்டு.
கிளிப்பிள்ளைப் போல மாறிவிட்ட உன் ஜெபத்தினை மாற்றி, ஆவியின் உந்துதலால், பாரப்படுத்தப்படும் காரியங்களுக்காகப் போராடவும், ஆவி மண்டலங்களை அசைக்கத்தக்கதாக ஆவிகளைப் பகுத்தறியவும் கவனம் செலுத்து. அதுதான் ஆகாய மண்டலத்தில் உன் ஜெபங்களுக்குத் தடை வராதபடிக்கு உன்னைக் காத்து, உனக்கு உத்தரவைக் கொண்டுவரும். வரும் உத்தரவுகளை துரிதப்படுத்த நீ ஜெபிக்கவேண்டியதில்லை, அதனை மிகாவேலும், காபிரியேலும் பார்த்துக்கொள்வார்கள்.
இடைவிடா ஜெபம் உன்னிலிருந்து எழும்பிக்கொண்டேயிருக்கட்டும். உன் ஜெப பலிபீடம் விறகில்லாமல் அணைந்துபோகவிடாதே! அது ஜெபமாநாடுகளுக்குப் போவதால் நடப்பதில்லை; மாறாக, உன் உறவின் வலிமை என்னோடு இருப்பதனையேச் சார்ந்தது.
20. மிஷனரி தரிசனமுள்ள சபை (Mission-Minded Church)
என்னுடைய கடைசிக் கட்டளையை நிறைவேற்றுவதை தலைமேல் கொண்டு, அதனை நிறைவேற்றத் தேவைப்படும் தியாகம், ஜெபம், சபையில் அனைவரையும் அதில் ஈடுபடுத்த முயற்சி, அனைவரும் சேர்ந்துதான் இதனை நிறைவேற்றமுடியும் என்ற அசையா நம்பிக்கையே உனக்கு அஸ்திபாரமாக உள்ளதனைக் கண்டு நான் களிகூருகிறேன்.
என்னுடைய சித்தமும், இதய ஏக்கமும், அனைவரும் தேவனுடைய சத்தியத்தினை அறியவேண்டும் என்பதனை நான் என் சீஷர்களுக்கு வெளிப்படுத்தினேன். அதுவே அவர்கள் அனைவரும் இரத்தசாட்சிகளாக மரிக்கும் வரை கொண்டுசென்றது.
தூரப்பார்வையும், தூய்மையும், தூய ஆவியானவரின் நிறைவும், வழிநடத்தலும், இன்னும் என்னத்தை இழக்கலாம் தேவப் பணிக்காக என்ற நினைவுகளும், உன்னை நுகர்வோர் மனப்பான்மை (Consumerism mentality). பொருட்களை மற்றும் சேவைகளை அதிக அளவில் வாங்குவதனை நோக்கமாகக் கொண்ட ஒருமன நிலையில் இருந்து நீ விடுதலையாக்கப்பட்டிருக்கிறாய். ஆதலால், உலகின் விளம்பரங்கள் உன்னைக் கவர்ந்திழுப்பதுமில்லை, கவலைகொள்ளச் செய்வதுமில்லை, கடன்காரனாக மாற்றுவதும் இல்லை.
இதனால், என்னையேச் சார்ந்து வாழும் வாழ்வும், முன்னேற்றமும், வாழ்வின் நோக்கமும் உனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகிறது. அதனைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன்.
இது உன்னை உபத்திரவத்திலும், அவமானத்திலும், வறுமையிலும், கேலி கிண்டலிலும் தள்ளும் என்பதனை உணர்ந்தும், கலங்காமல் உன் அர்ப்பணத்தையும், என்னுடைய இதயத் துடிப்பை நிறைவேற்றவேண்டி நீ எதையும் சகிக்க நினைப்பதனையும் நினைத்து உன்னைக் குறித்துப் பெருமையடைகிறேன்.
சிலுவையை மேன்மை பாராட்டும் மக்களை நீ உருவாக்கிவருகிறாய். தனக்கு இலாபமாயிருப்பவைகளை, கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவின் சபைக்காகவும் குப்பை என்று எண்ணுகிறவர்களையும், இரத்தம் சிந்தியாகிலும் இந்தியா இயேசுவைக் காணவேண்டும் என்ற வாலிப ஆண் மற்றும் பெண் அனைவரையும் நீ முறையாகப் பயிற்றுவிக்கிறாய். ஏழைகளுக்குப் படிப்புச் சொல்லித்தந்து, பணித்தளத்திற்குச் செல்ல அவர்களை உந்துவிக்கிறாய். சிறுவர்களுக்குப் பால வயதிலேயே மிஷனரிகளின் வாழ்க்கையைச் சொல்லித் தந்து, இயேசுவுக்காய் நீ என்ன செய்கிறாய்? என்று அவர்களைப் பார்த்து கேட்கிறாய்.
உன் கண்ணீரின் ஜெபமும், இடைவிடாப் பிரயாசமும், தியாகமும் என்னையே 'திகைக்கவைக்கும் அளவிற்கு" (அன்றைக்கு விசுவாசத்தினை கானானியப் பெண்ணின் இடத்தில் கண்டபோதும், நூற்றுக்கு அதிபதியின் பதிலைக் கண்டு பாராட்டினபோதும்) உயர்ந்து நிற்கிறாய். உன் சந்ததியாரோடும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் நீ உரையாற்றும்போது, அது பெரும் தாக்கத்தினை உண்டாக்கியுள்ளது. அதுதானே நான் சென்ற பாதை. என்னைத் தொடர்ச்சியாகப் பின்பற்றிவிடு, இறுதிவரை.......
பாழும் உலகில் பற்பலச் சபைகள்
பாசத்திற்கு ஏங்கி நிற்போரைத் தேற்றவில்லை
கொஞ்ச பெலன் இருந்தும் புறப்படப்பண்ணும் சபை உண்டு
கெஞ்சும் ஜெபம் செய்து சபை நடுவில் நான்
பெருமை சேர்க்கிறோம் எனக் கூவி
பெருமையை இழக்கப்பண்ணும் சாட்சியைக் கூவினர்
உலகின் இன்பமும் இழுப்பும் சபையை விடவில்லை
உலக இரட்சகர் இந்தியாவில் விலைபோகவில்லையோ
கூட்டம் ஒன்று உண்டு கூரையைப் பிரிக்க
கூச்சமில்லாமல் இயேசுவிடம் கொண்டு சேர்க்க
எழும்புகிறது உலர்ந்த எலும்புகள் சேனையாய்
எதற்கும் பயப்படா தேவ சேனை ஒன்று
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்