கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே,
'தம்முடைய பராக்கிரமத்தினைக் காட்டும் நாளுக்காக ஆயத்தப்படும் ஆண்டவர், அதனை உடனிருந்து நிறைவேற்றத்தக்க, மனப்பூர்வமான, பரிசுத்த அலங்காரத்தினை அணிந்த, விடியற்காலத்துப் பனியைப் போல அமைதியாய் இறங்கி ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுடைய பணியை அழகாகச் செய்துமுடிக்க வல்ல யௌவன ஜனத்தினை (லழரபெ pநழிடந) எழுப்பிக்கொண்டிருக்கும் வேளையில் வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களை ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துகிறேன் (சங். 110:3). அதனை உணர்த்தும் வண்ணமே நான், நம்மைக்கொண்டு தேவனால் GENEXT ஆரம்பிக்கப்பட்ட (தூத்துக்குடி - சாயர்புரம், சிக்காரியா - பீஹார், லவோலா - மகாராஷ்டிரம்) நேரத்தில் பாடலாக எழுதி YOUTUBE-ல் வெளியிட்டேன்.
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
உந்தன் சேவைக்கென்று கிளம்புகிறதே
உம் பராக்கிரம நாட்கள் இதுவே
உம் யௌவன ஜனம் வெளிப்படுதே
சிலுவை நாதரின் இரத்தம் வீணாகிவிடக்கூடாதே
சிந்திய பரிசுத்த இரத்தம் போதுமே மீட்டிடவே
சிதறி நிற்கும் மாந்தரையும்
மீட்டிடவே இணைத்திடவே
சேனையாய் எழும்பப் போதிடுமே ...
இந்தப் பாடலை இன்று அநேகர் தங்களுடைய பாணியில் YOUTUBE-ல் பயன்படுத்துவதனைக் கண்டு உள்ளத்தில் உவகைகொள்ளுகிறேன். செயல்படத்துடிப்போரை தேவன் எழுப்பிக்கொண்டுவருகிறார்.
அடுத்தாற்போல், திண்டிவனத்தில் (4 Km - புதிய பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து) இன்னுமொரு பயிற்சி சாலையை உருவாக்கிவருகிறோம். சென்னையிலிருந்து - திருச்சி வரை உள்ள சபைகளுக்கும், பாண்டிச்சேரிப் பகுதியின் சபைகளுக்கும் பிரயோஜனமாக இது அமையும். கர்நாடகத்தில் மற்றவரின் துணையோடு ஒன்று ஆரம்பிக்கப்பட வழி திறந்துள்ளது.
தேவனுடைய நேரத்தில் தேவனோடு இணைந்து செயல்படுவோராக நம்மை தேவ ஆவியானவர் மாற்றி, வேகமாக உபயோகிப்பாராக.
ஆனால், இன்றைய தமிழ் பேசும் ஆவிக்குரிய சபைதனில் நடப்பவை நம்மை அதிரச்செய்கின்றன. செயல்படவேண்டியவரில் பலர் திசைதிருப்பப்பட்டுள்ளனர். பெரிய கட்டிடங்களை எழுப்பி MEGA - சபைகளை உருவாக்கும் தீவிரம் தேவ திட்டமே அல்ல என்று என்னால் அடித்துச்சொல்ல முடியும். அதனைச் செய்வதனை, அதற்கு உபயோகப்படும் மனித சக்தியும் (Human power), பணச் செலவும் (Monetary resources), மக்களின் பிரயாண நேரமும், வாராவாரம் குடும்பமாக வந்துபோகும் செலவுத் தொகையும், நேரமும் தேவ இராஜ்யத்தின் சொத்தில் வீணாகச் செலவழிக்கப்படுகிறது. இதற்குக் காரணமானவர்கள் யாவரும் அவருடைய பராக்கிரமத்தின் நாளில் கணக்குக்கொடுக்கவேண்டுமே. தலைவர்களே! இதனை உணர்ந்தது உண்டோ?
சீனாவினை நாம் சீக்கிரத்தில் எல்லா நிலையிலும் முந்திவிடுவோம் என்கிறார் நம்முடைய பாரதப் பிரதமர். ஆனால், எல்லா வரியும் (TAX) சீனாவைக் காட்டிலும் நம் நாட்டில் 2 மடங்கு விதிக்கப்படுகிறது. சீனா எல்லாத் துறைகளிலும் முந்தியே நிற்கிறது. கூடவே, லஞ்சம் இல்லாமல் இருப்பதால், ரோடுகள் பளிங்கு போலவும், பாலங்களும், போக்குவரத்துத் துறையும் மற்றும் உபயோகிக்கும் அத்தனை உபகரணங்களும் எந்த நாட்டையும் மிஞ்சும் விதத்திலேயே சீனாவில் உள்ளது. (பீஹாரில் ஒரே மாதத்தில் 13 பாலங்கள் விழுந்தன).
நிச்சயம் நாம் சீனாவை எப்பொழுதோ முந்திவிட்டது உண்மை. ஜனத்தொகையில் 70% 35 வயதிற்குக் கீழ் என்ற உண்மை, நம் நாட்டினை இளம் நாடாக உலகம் பார்ப்பதற்கு (Young Country) ஏற்றதாக அமைந்துள்ளது. ஆனால், அந்த இளைஞர்களைக் குறித்தக் கவலைதான் அரசாங்கத்திற்கு அதிகம் இல்லை. ஆனால், பரிதாபம் என்னவென்றால், உப்பாக, ஒளியாகத் திகழவேண்டிய தேவ சபைக்கும் கவலை இல்லை.
புலம்பல் புத்தகத்தின் 4-ம் அதிகாரம், இளைஞர்கள் (Young People) ஒளியிழந்து (புல. 4:1), பொன்பாண்டங்களாய் இருக்கவேண்டியவர்கள் மண்பாண்டங்களாக மதிப்பிழந்துக் காணப்படும் காட்சியைக் காட்டுகிறது (புல. 4:2). தாகத்தால் (தாகம் தீர்க்கப்படாததால்) (யோவா. 4:13,14), பசியால் (சரியான ஆவிக்குரிய ஆகாரம் தராததால்), கொழுமையான பதார்த்தங்களை உண்ணவேண்டியவர்கள் (சங். 4:7; ஆமோஸ் 8:11; புல. 4:4,5), இரட்சிப்பின் வஸ்திரம் தரித்திருக்கவேண்டியவர்கள் (ஏசா. 61:10), குப்பையான (உலக மேன்மைகள் பிலி. 3:7) மேடுகளை அணைத்துக்கொண்டு அலைகிறார்களே (புல. 4:5). கற்பை இழந்து அல்லது சூறையாடப்பட்ட நிலையில், கற்பனைகளை மறந்ததினால் துப்புரவு, பரிசுத்தம், அர்ப்பணம் என்பவைகளை உடையவர்களாயிருக்கத் தெரிந்துகொள்ளப்பட்ட இளைய தலைமுறை, இப்பொழுது கறைபட்டு (உலகத்தால், உறவால்) (2 பேது. 3:14; யாக். 1:27; எபே. 4:19), பட்ட மரத்திற்கு ஒப்பாய் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றே புலம்புகிறான் தீர்க்கன் எரேமியா (புல. 4:7,8).
சுற்றியுள்ள, நெருங்கி அவர்கள் இருதயத்தினை ஆக்கிரமித்துள்ள Social மீடியாவின் கொடூரமும், மொபைல் போனில் வரும் அசுத்தங்களும், காதல் பாடல்களைப் போல சினிமா பாணியில் வரும் ஆவிக்குரிய உலகு என்று அழைத்துக்கொள்கிற உலகின் இசையை மையப்படுத்தி மாம்ச உணர்வைத் தூண்டிவிடும் பாடல் இசைகளும், வார்த்தைகளும், காதுகளை ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கத்தக்கதாக 24 மணி நேர இசையின் மயக்கம், நடக்கும்போதும், படுக்கும்போதும், வேலை செய்யும் போதும், படிக்கும் போதும் சுற்றியிருப்போரைக் குறித்துக் கரிசனையோ, கவலையோ கொள்ளாமல் செய்துவிடுகிறதே!!
கூடவே, அனைத்துப் பாடல்களையும் வீடியோ எடுத்து, சினிமாவைக் காட்டிலும் கவர்ச்சியான இடங்களில் பாடல்களுக்கு நடிக்கும் நடிகர்களாக பிரசங்கிகள், வாலிபர்கள், இளம் பெண்களின் நடனமும் (choreography என்ற பெயரில்), ஆயிரமாயிரமாயிரமான நடிகர்களையே உருவாக்கியிருக்கிறது. இதனைக் கண்ட அநேக போதகர்களும் பாடல் எழுதுகிறோம் என்ற பெயரில். இதனைத்தான் தரிசனத்திலும், நாட்டிலும் கண்ட எரேமியா, பகைவர்களால் சூழ்ந்திருப்பதாகக் கூறுகின்றான் (புல. 4:10-12).
முதியவரையோ, தேவ சமூகத்தில் நின்று போராடி ஜெபிக்கும் தேவ மனிதர்களையோ அவர்கள் மதிக்காமல், வாய்க்கு வந்தபடி பேசி, ஏளனமாகச் சிரித்து, அதனை YouTube-ல் பதிவிட்டு, உலகத்தில் தங்களுடைய பரிகாசக் கும்பலின் எண்ணிக்கையைப் பெருக்கும் வண்ணம் அந்தச் செய்திகளுக்குத் தலைப்புகளைத் தந்து, சத்தியத்தினைக் கேலிக்கூத்தாக மாற்றுவார்கள் என்பதனை அறிந்தே எரேமியா தீர்க்கமாக எழுதுகிறான் (புல. 4:16). நம்பிக்கை ஒன்றும் இல்லாமல் (சாதாரணமாகத் தற்கொலை செய்துகொள்ளுதல்) (புல. 4:17) வாழ்கிறார்கள்.
இதிலே, அபிஷேகம் பண்ணப்பட்டவனும் தப்பவில்லை (புல. 4:20). ஆனால், தேவனோ, அவர்களுடைய அக்கிரமத்தினை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார் (புல. 4:22). நியாயத்தீர்ப்பினைக் குறித்த ஒரு தேவ பயமே இல்லாத சந்ததியாக இதனை மாற்றுவதற்கு உதவினவர்கள் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீர்கள்.
புலம்பல் 4:13-ல், திட்டமாக இன்றைய ஆவிக்குரிய உலகின் நிலமையே அன்றைக்கும் காணப்பட்டது என்பதனைக் காணலாம்.
'அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் (prophets) பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் (pastors) அக்கிரமங்களினாலும் இப்படியாயிற்று" (புல. 4:13).
முடிவு என்னவாயிற்று? திக்கற்றவர்களாக மாற்றப்பட்டு (பரம) தகப்பன் இல்லாதவர்களானார்கள் (புல. 5:3). உதடுகளினால் 'அப்பா அப்பா" என்றழைக்கிறார்கள்; ஆனால், அவருக்குக் கொடுக்கவேண்டிய கனம் கொடுக்கப்படவில்லை (மல். 1:6). தங்கள் நடுவில் இருக்கிறார் என்கிறார்கள்; அவரோ, வெளியே தள்ளப்பட்டு, கதவைத் திறவுங்கள் என்று ஏக்கக் குரலில் கெஞ்சி நிற்கிறார் (மத். 15:8; வெளி. 3:20).
குத்தாட்டம் ஆடச் சொல்லிக்கொடுத்து, Steps-ஐ சினிமா நடிகர்கள் பாணியிலே தாங்கள் கற்றதினைக் கக்கி, அவர்களின் வாந்தியை வாலிபர்களைச் சாப்பிடவைத்து மகிழ்கிறார்கள். இந்த ஆட்டம்தான் (பேயாட்டம்) வாலிபர்களை இழுப்பதாகக் கூறி, தாங்கள் ஏமாந்ததோடு மற்றவர்களை வஞ்சனையாய் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்; முடிவு, இளைப்பாறுதல் இல்லை (புல. 5:5). இலவசமாகத் தாகத்தைத் தீர்த்து, பசியைப் போக்கிக்கொள்ள அழைப்பு வருவதனை அறியக்கூடாமல் (ஏசா. 55:1), பணத்தினை சிற்றின்பங்களுக்காகச் செலவிட்டு (ஏசா. 55:2) வேதனைக்குள்ளாகிறது இளைய சமுதாயம்.
அடிமைப்பட்டு (ஆபாசப்படங்களுக்கு, pornography, addictions, drugs-களுக்கு) (புல. 5:6), பணங்கொடுத்து வாங்கின உல்லாசங்களுக்குத் தங்களைத் தத்தம்செய்துள்ளனர் (புல. 5:7). அடிமையிலும் கேவலமான நிலை. சத்துரு பெலம் பொருந்தியவனாகத் தோற்றமளிக்கிறான் (புல. 5:8). தேவனைத் தரிசித்தவன் சிங்கம்போலிருப்பான். நீதியாய் வாழ்கிறவனுக்குப் பயமில்லை (நீதி. 28:1). ஆனால், கள்ளத்தீர்க்கதரிசிகளாலும், போதகர்களாலும் மோசம்போக்கப்பட்டவர்கள், சத்துருவை கோலியாத்தாகத்தானே பார்ப்பார்கள்; ராஜா சவுலைப் போலவே (1 சாமு. 17:33; புல. 5:8).
உண்மையான ஆனந்த துதி ஒலி (எரே. 30:19) கேட்கக்கூடாதபடி, சத்துருவினிடத்தில் சிறைபட்டுக் கிடக்கிறார்கள் (புல. 5:14). கிரீடமாகிய அபிஷேகத்தினை இழந்து புலம்புகிறார்கள் (லேவி. 21:12).
பெண்களை எளிதாகக் கற்பழிக்கும் காட்சி ஆலயத்திலும், கூட்டங்களின் மறைவிடங்களிலும், கள்ளப் போதகர்களாலும், வேசித்தன ஆவியினைச் சுமந்து திரியும் வேட்டை நாய்களாலும் நடந்தேறுகிறது (புல. 5:11).
திராட்சத்தோட்டத்தினைக் கெடுக்கும் குழிநரிகளும், சிறுநரிகளும் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதனைக் கெடுத்துப்போடச் சுற்றித்திரிகின்றன (உன். 2:15; புல. 5:18). இதினிமித்தமே, ஓர் அவலக்குரல் ஒலிக்கிறது. 'பூர்வக்காலத்திலிருந்தது போல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்." (புல. 5:21)
இந்த நிலை மாற, இன்று போதகர்களும், மேய்ப்பர்களும், தீர்க்கதரிசி என்று தன்னை அழைத்துச்கொள்பவரும் மனந்திரும்பிக் கதறவேண்டியது. 'ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது புலம்பினால்தான்" (யோவேல் 2:17) விடுதலை உண்டு (யோவேல் 2:18).
ஜாய்ஸ் மேயர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட போதகர்கள் கருத்தரங்கத்தில் நானும் ஓர் செய்தியாளன். அப்போது, இந்தத் தலைமுறையினரை பழக்குவிக்க நான் போதகர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம், ஒரு மனிதனுக்கு டிரைவிங், கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பது போன்று செயல்படுங்கள் என்று கூறி, முதலாவது அவரை பக்கத்தில் வைத்து நீங்கள் செய்வதனை கவனிக்கச் செய்யுங்கள். பின்னர் ஸ்டெரிங்கை அவர் இயக்க, நீங்கள் accelerator-ல் (முடுக்கி) கால் வைத்து, பிரேக்கையும் இப்போது அவர் காலில் கொடுத்துவிடுங்கள். மூன்றாவதாக, நீங்கள் அருகில் அமர்ந்து ஸ்டெரிங்கைப் பிடித்து அவரை accelerator, brake முதலானவைகளை இயக்கவையுங்கள். நான்காவதாக, முழுவதும் அவரை இயக்கச் செய்து நீங்கள் பார்த்து ரசியுங்கள். கடைசியாக, பின் சீட்டில் அமர்ந்து நீங்கள் காரில் செல்லமுடியும் என்று விளக்கிக்கொண்டிருந்தேன்.
கூட்ட முடிவில் போதகர் ஸ்டான்லி வாசு, 'அண்ணன், நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்; ஆனால், காரை இயக்க அவரை அமர்த்திவிட்டு, இறங்கி பின் சீட்டில் அமரப்போகும்போது, கற்றுக்கொண்டவன் காரையே தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறான்" என்றாரே பார்க்கவேண்டும்.
இந்த பயத்தில்தான் அநேகர் இளைஞரை உபயோகிக்கவோ, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவே மறுக்கின்றனர். தங்களைப் பாதுகாப்பற்ற நிலையிலேயே (insecured) பார்க்கின்றனர். 'போனால் போகட்டும் போடா" என்று சொல்ல முடியவில்லை.
முதிர்ச்சி அடையாத இளந் தலைமுறையினை நம்பமுடியாதுதான் (immatured). அதனைத்தான் பவுல், 'எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்" (கொலோ. 1:28,29) என்று தன்னுடைய ஊழியத்தினைக் குறித்து விளக்குகிறார். இரண்டு வார்த்தைகளை கவனியுங்கள், 'கிறிஸ்துவையே அறிவித்து" 'எனக்குள்ளே கிரியை நடப்பிக்கிற அவருடைய பலம்".
ஆனால், இவை இரண்டும் இன்றும் அநேக ஊழியங்களில் காணப்படுவதில்லையே. தங்களையே உயர்த்தி தங்கள் மேன்மைகளையே எடுத்துரைத்து, தாங்கள் ஜெபித்ததினால் உண்டான காரியங்களை ஜோடித்துச் சொல்லி, ஆடுவதற்கு எப்படி Step வைக்கவேண்டும் எப்படி உடலை வளைக்கவேண்டும் என்று கற்றுக்கொடுத்து, அலங்கார மற்றும ஆடம்பர உடை அணிந்து, மொட்டை அடித்து அல்லது முடிந்தால் தலையின் முடி அலங்காரத்தையும் மாற்றி மாற்றி, உடை அலங்காரத்தை சினிமா கதாநாயகர்களைப் போல உடுத்தி, முடிதனை நன்றாக வளர்த்து அதனை நடனமாடச் செய்து டிரம் அடித்து, வாத்தியங்களில் குரங்குதனை ஆட்டுவிக்கும் இசைதனை வாசித்து, வர்ண விளக்குகளையும், நடமாடும் வெளிச்சத்தினையும் காண்பித்து, பாடல் பாடுவோரையோ, பிரசங்கிப்பவரையோ மாத்திரம் பார்க்கச் செய்யும் Search Light போட்டு, இடையிடையே விசில் சத்தத்தினைக் கேட்டு ரசித்து, தேவ வார்த்தையின் ஓரங்களை மாத்திரம் பிடித்து வியாக்கியானம் தந்தால் இளைய தலைமுறை 'தறுதலை"யாகத்தானேப் போகும். அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து காரைக் (ஊழியத்தினைக்) கொடுத்தால், அது இரண்டகம் பண்ணி, துரோகம் செய்து, குழிவெட்டி புதைத்து, பொய்களை வாரியிறைத்து, தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னை பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் என்ற பட்டப்பெயரைப் பெற்று (எபி. 10:29),
இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழுந்து நூதனமானப் போதனைகளைப் போதிக்கும் போதகனாகி, பிசாசின் கண்ணியில் விழுந்து நிந்திப்பதனைத் தொழிலாகக் கொண்டு (1 தீமோ. 3:6,7),
எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாதிருக்கிற பெண்பிள்ளைகளை வசப்படுத்தி (2 தீமோ. 3:7).
அந்த 'கிடாரியால் உழுது" (சிம்சோனை அவள் மனைவி அலட்டி, விடுகதையின் பொருளைக் கண்டறிந்தது போல, நல்லவர்களையும் பேதைகளையும் கெடுத்துப்போடுகிறார்கள் (நியா. 14:18).
விழிப்பாயிருக்கிறவர்களோ தேவ பெலத்தினைச் சார்ந்து, அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்கின்றனர்.
இதனை மனதில் கொண்டுதான் நான் கீழ்கண்ட பாடலை எழுதினேன். (மார்ச் மாதத்தில் Youtube-ல் வெளியானது).
தேவை தேவை தேவை
தேசத்தில் தேவனைக் காண்பிக்கும் மனிதர்கள்
தேவை தேவை தேவை
உம்மோடு உறவாட உள்ளம் துடிக்குதையா
உலகின் உறவைவிட மனமும் மறுக்குதையா
1. கபடமும் கற்பனையும் செய்யும் வேதனையும்
கல்வாரியில் அனைத்தையும் சிலுவையில் அறைந்திடனும்
.......... உம்மோடு
2. நாட்டிலும் சபையிலும் நடக்கும் அசிங்கமெல்லாம்
கல்மனம் உடைக்கும் கல்வாரியால் அழிந்து தொலைந்திடுமே
.......... உம்மோடு
3. சுயத்தை சிலுவையில் அறைந்தோர் தேவை இன்று
சுற்றாரும் உற்றாரும் உலகமும் இயேசுவைக் கண்டிடனும்
.......... உம்மோடு
4. தேடிடும் உம் கண்கள் என் மேல் படுகிறதே
தேய்ந்த உம் கால்கள் என் உள்ளத்தை முழுதும் நொறுக்கிடுதே
.......... உம்மோடு
உம்மோடு நடந்திட இதயம் துடிக்குதையா
உலகத்தின் இழுப்பும் தானாய் மறையுதையா
உம்மைக் காண்பிக்க இதோ வந்தோமையா
சபையைக் கெடுத்து, இளைஞரை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கும் தேவ ஊழியரே, valentine day (பிப்ரவரி 14-ம் நாள்) உன் தோழனோடோ தோழியோடோ (boy friend or girl friend) கூட்டத்தில் வந்து மகிழ்ந்திரு என்று கூவி கூவி அழைக்கும் அலப்பறைகளே, வாலிபரைக் கண்டுகொள்ளாமல் வந்தால் வா அல்லது போனால் போ என்று கூலிக்கு மாரடிக்கும் போதகர்களே! வாலிபச் செல்வங்களின் திறமைதனைக் கண்டுகொள்ளாத பிஷப்மார்களே, வாலிப ஊழியத்தில் ஈடுபட்டிருந்தாலும் வாலிபருக்குப் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க மனமற்ற முதியவர்களே!! ஆண்டவரின் இதயத் துடிப்புதனை அறியக்கூடாமல் கொள்கைகளில் மயங்கித் திரியும் மதிகேடானக் கூட்டமே, ஆதி அன்பினை இழந்து, ஆயினும் பழைய அனுபவங்களைச் சொல்லி, அதிலே மக்களை மயக்கிவைத்திருக்கும் வேடதாரிகளே, பணம் ஒன்றே குறி என்று வாழும் பலவிதக் கமிட்டியாரே, சொல்வதனையே மறுபடி மறுபடிச் சொல்லி, வெவ்வேறு இசை மயக்கத்தில் மாய்ந்துபோகும் பாடகரே, நடனப் பயிற்சி தரும் கோமாளிகளே, தாங்கள் ஒன்றும் செய்யாதிருந்தும் திருத்துகிறோம் என்ற பெயரில் உண்மையைத் திரிப்பவர்களே வருகின்ற ஆவிக்குரிய யுத்தத்தையோ, ஆபத்துகளையோ, பெருமழையையோ, பெரும் சூறாவளிக் காற்றையோ, பெரும் வெள்ளத்தையோ உணராதிருக்கிற குரைக்கமாட்டாத ஊமையானதும், குருடானதுமான நாய்கள் என்று ஏசாயா அழைக்கிறாரே (ஏசா. 42:18) அப்படிப்பட்டவர்களே,
என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பின தூதனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்? (ஏசா. 42:18,19). தேவன் உங்களைக் குறித்து இப்படிச் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாயிருங்கள்.
நீ அநேகக் காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய். அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதேபோகிறான் (ஏசா. 42:20) என்ற அங்கலாய்ப்பு உங்கள் செவிகளைத் திறக்காதோ!!
'அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவாரே." (ஏசா. 42:21)
'தன் நேசர் மேல் சாய்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?" என்று தேவனை சொல்லுகிறதை என் காதுகள் கேட்கிறது (உன். 8:5).
கூடவே,
'உன் குமாரரைக் கொடுங்கையில் ஏந்திக்கொண்டு வருவார்கள். உன் குமாரத்திகள் தோளின் மேல் எடுத்துக்கொண்டுவரப்படுவார்கள்...
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும் அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்...
எனக்குக் காத்திருப்பவர்கள் வெட்கப்படுவதில்லை...
பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளைப் பறிக்கக்கூடுமோ? ...
என்றாலும், இதோ பராக்கிரமனால் சிறைப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.... (ஏசா. 49:22-25)
என்ற வாக்குத்தத்தங்கள், (இன்றைக்குச் சொல்லப்படும் வருட, மாத, தினசரி வாக்குத்தத்தங்கள் போல் அல்ல) வானத்திலிருந்து பூமியின் மேல் 'காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்ற முழக்கத் தொனியோடு முழங்குவதனை என் காதுகள் கேட்கிறது (அப். 22:9)
வருகைதனை எதிர்நோக்கிடும்
திரளான கூட்டத்திலே
பிறக்கும் சந்ததியும்
மேல் நோக்கிக் காத்திருக்க
உன்னதப் பெலத்தினால்
நிறைந்த சேனை
எழும்பிடுதே முழங்கிடுமே
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்